Wednesday 7 May, 2008

ஈழவிடுதலைப்போர், விஜயகாந்துக்கு வியாபாரம்!

செய்தியரங்கம் விஜயகாந்த் தமிழோசை

இலங்கைக்கான இந்திய ஆயுத உதவியை விஜயகாந்த் ஆதரிக்கிறார்
இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி அளிப்பதை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தார் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த்.
புதுதில்லியில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது, அரசியல் கூட்டணி உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகளைச் செய்து வருவதாகவும், அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகவும் விஜயகாந்திடம் சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ``தமிழர்களுக்கு எதிராகக் கொடுப்பதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள். அது வியாபார ரீதியாகக்கூட இருக்கலாம்’’ என்றார்.
``சீனாவையும், பாகிஸ்தானையும் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ள இலங்கை விரும்புகிறது. அது நடக்கக்கூடாது என்று இந்தியா கருதுகிறது. அதுதான் அங்கிருக்கும் சின்னச் சின்னப் பிரச்சினைகள். அதனால், அதுபற்றி நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார் விஜயகாந்த்.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

தமிழர்களுக்கெதிரான இலங்கையின் தாக்குதல்களுக்கு இந்திய அரசு வேண்டுமென்றே துணை நிற்கிறது

[06 - May - 2008] விசனம் தெரிவித்து வைகோ மன்மோகன் சிங்கிற்கு கடிதம்

தவறுக்கு மேல் தவறு செய்யும் இந்திய அரசை மனவேதனையோடு குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் பிரதமர்கள் பண்டிதர் ஜவஹர்லால் நேரு, திருமதி இந்திரா காந்தி ஆகியோரால் தொலைநோக்குப் பார்வையோடு உருவாக்கப்பட்ட இந்திய வெளியுறவுக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தவறுக்கு மேல் தவறு செய்யும் இந்திய அரசை மனவேதனையோடு குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆயுதங்கள் வாங்க இலங்கை அரசுக்கு இந்தியா நிதிக் கடன் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி நேற்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.
வைகோ எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு இந்தியா உதவி" என்ற தலைப்பில் 27 ஏப்ரல் 2008 திகதியிட்ட "எகனொமிக் ரைம்ஸ்" ஆங்கில நாளிதழில் வந்த, வேதனை தரக்கூடிய செய்தியை தங்களின் உடனடி கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
இலங்கையின் விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிட இந்தியா நிதி உதவி என்று சொல்லலாம். அரசியல் மற்றும் இராஜாங்க ரீதியாகவும் பிரிவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாக புதுடில்லி, இலங்கை அரசின் பாதுகாப்புத்துறைக்கு ஆயுதங்களும் இராணுவத் தளபாடங்களும் வாங்குவதற்காக 100 மில்லியன் டொலர் (400 கோடி) கடன் உதவி செய்ய ஏற்பாடு செய்து இருப்பதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவந்திருப்பதாக, சண்டே எகனொமிக் ரைம்ஸ் செய்தித் தாளில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்திய அரசு வரையறுத்து உள்ள குறைந்த அளவில் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை என்ற போதிலும், இந்திய அரசாங்கம் குறைந்தபட்ச வட்டியாக 2 சதவீதத்துக்கு ஷ்ரீலங்கா அரசுக்குக் கடன் தர முன்வந்துள்ளது. சாதாரணமாக இந்தியா, இங்கிலாந்தின் அனைத்து வங்கிகள் கட்டமைப்பு அளிக்கக்கூடிய வட்டி வீதத்தோடு 1-2 சதவீதம் சேர்த்து இலங்கை போன்று தகுதி படைத்த நாடுகளுக்கு கடன் வழங்குவதுதான் வழக்கம்.
இலங்கையில் தொடருந்து மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த மேலும் 100 மில்லியன் டொலர் கடன் வழங்க இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் முதலீடு மற்றும் வணிக மேம்பாட்டுப்பிரிவு இந்த விவகாரத்தை இந்நாள் வரை கையாண்டு வருகிறது. மேலே குறிப்பிடப்பட்ட இந்தச் செய்தியைக் கண்டதும் நான் பேரதிர்ச்சி அடைந்தேன். இந்திய அரசும் இந்தச் செய்தியை இதுவரையிலும் மறுக்கவில்லை. அதிர்ச்சி தரக்கூடிய இந்தச் செய்தியை தொடக்கத்தில் நான் முற்றிலும் நம்பவில்லை. ஆனால், இந்தச் செய்தி உண்மையானதுதான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து உறுதியானதும் நான் நடுங்கினேன்.
நான் தங்களிடம் நேரில் அளித்த கோரிக்கை மனுவில், இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதாக இலங்கை அரசின் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறிய செய்திகளைக் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், இந்தியா, இலங்கைக்கு எந்தவிதமான ஆயுதங்களும் வழங்கவில்லை என்று தாங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஓர் உண்மை ஆகும். இந்த உண்மை 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் நாள், பிரான்ஸ் அரசு ஏற்பாடு செய்திருந்த ஆழிப்பேரலை மறுவாழ்வு மையத்தின் தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றி வந்த 17 தமிழ் இளைஞர்கள் உச்சந்தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக உண்மை கண்டறியும் உயர்நிலைக் குழு அளித்த அறிக்கையின் மூலம் உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 5 மாணவர்கள் இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டதும் அந்தக் குழு உறுதி செய்து இருக்கிறது.
ஐ.நா. சபை, கொழும்பில் அலுவலகம் அமைக்க இலங்கை அனுமதி மறுத்ததும், மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் திருமதி லூயிஸ் ஆர்பர், இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அனுமதி அளிக்காததும், இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது என்பதை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தியது. இலங்கை அரசின் மனித உரிமை அத்துமீறல்களைக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐ.நா. சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா கடுமையாக எதிர்த்தது என்ற குற்றச்சாட்டை மிகுந்த கவலையோடு தெரிவிக்கிறேன்.
தாங்கள் எனக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக இந்தியா, இலங்கை அரசுக்கு நிதி உதவி செய்வதால், அதைக் கொண்டு சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்தும் ஆயுதங்களை வாங்கி, தங்கள் இராணுவத்தை பலப்படுத்திக்கொண்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது. அப்பாவித் தமிழர்களும் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தலையீட்டைத் தவிர்க்கின்ற வகையில் இந்தியா, இலங்கை அரசுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்த முயல்கிறது என்று வெளிவிவகாரத்துறை அமைச்சகம் முன்வைக்கும் வாதம் நியாயம் அற்றதும் பொருள் அற்றதும் ஆகும். இது தமிழ் இனத்தை அழிப்பதற்கு இலங்கை மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு துணை போகிற ஒரு துரோகச் செயலே தவிர, வேறொன்றும் இல்லை.
இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளாகி அங்கு வாழும் தமிழன் சிந்துகின்ற ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பதில் சொல்ல வேண்டும். குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்படும் என்று எனது முன்னைய கடிதங்களில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
இலங்கையில் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கும் தமிழர்களுக்கு தமிழக மக்கள் வழங்கிய மருந்துகளையும் உணவுப் பொருட்களையும் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதி மறுத்து வருவது பொறுத்துக்கொள்ள இயலாத, வேதனைக்குரிய ஒன்று. இந்திய அரசின் இந்த மனிதாபிமானமற்ற அணுகுமுறை. அனைத்துலக விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் எதிரானது மட்டும் அல்லாமல், ஜெனீவா ஒப்பந்தத்தின் கொள்கைகளுக்கும் மாறானது ஆகும். இலங்கையில் அவதியுறும் தமிழர்களுக்கு அளிக்க வேண்டிய உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்கும் தடை விதித்து விட்டு, இலங்கை அரசுக்குப் பெருமளவில் நிதி உதவியை கிட்டத்தட்ட அன்பளிப்பாகக் கொடுப்பதுபோல் அளித்து அவர்களது இராணுவத்தைப் பலப்படுத்த இந்தியா உதவுவது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.
பண்டிதர் ஜவஹர்லால் நேரு, திருமதி இந்திரா காந்தி ஆகியோரால் தொலைநோக்குப் பார்வையோடு உருவாக்கப்பட்ட இந்திய வெளியுறவுக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தவறுக்கு மேல் தவறு செய்யும் இந்திய அரசை மனவேதனையோடு குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை. இந்திய அரசாங்கம் வேண்டுமென்றே, தெரிந்தே இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொள்ளும் கொடூரத் தாக்குதல்களுக்குத் துணை போகிறது என்று குற்றம் சாட்டுகிறேன். இலங்கை மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் அமைச்சரவையில் அடங்கிய கட்சிகளுமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் பதில் கூற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இலங்கை அரசுக்கு நிதி, கடன் உதவி செய்ய இருக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அந்த நாட்டுக்கு அளிக்கும் எந்த உதவியையும் உடனடியாக நிறுத்துமாறும் பெருத்த மனவேதனையோடும் வருத்தத்தோடும் தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழருக்கு உணவு, மருந்து அனுப்பவிடாது தடுத்து நிறுத்தியது யார்?

வைகோ வீரகேசரி இணையம் 5/4/2008 11:43:48 PM

இலங்கைத் தமிழருக்கு உணவு மருந்துப் பொருட்களை அனுப்ப விடாது தடுத்து நிறுத்தியது யார் என்ற உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர்களின் உரிமையை விட்டுக் கொடுத்து தமிழக முதலமைச்சர் பச்சை துரோகம் இழைத்து விட்டதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டினார்.
மேதினத்தை முன்னிட்டு ஆவடியில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் சார்பில் நடந்த மாநாட்டில் உரையாற்றிய வைகோ மேலும் தெரிவித்ததாவது, தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த அண்ணாதுரை கோவை வ.உ.சி. பூங்காவில் நடத்திய அரசு விழாவில் மேதின விடுமுறையை அறிவித்தார். அதை மறைத்துவிட்டு முதல்வர் கருணாநிதி ஏதேதோ சாதனைகள் குறித்து தனது மேதின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர்களின் உரிமையை விட்டு கொடுத்து பச்சை துரோகம் செய்துள்ளார் கருணாநிதி. இலங்கையில் இரண்டாண்டுகளுக்கும்மேலாக தமிழர்கள் உண்ண உணவின்றி நோய்க்கு மருந்தின்றி வாடி உயிரிழந்து வருகின்றனர்.
அதற்காக நான் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தி செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக சேகரித்து வைத்துள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இலங்கை தமிழர்களுக்கு அனுப்பக் கோரினேன். உடனே அவரும் தனது செயலரை அழைத்து உத்தரவுகளை பிறப்பித்தார். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாகியும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பாமல் தடுத்து நிறுத்தியது யார்? விரைவில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

No comments: