Sunday, 1 June 2008

ஈழம் சம்பூரில் இந்தியாவின் அனல் மின் நிலைய திட்டம்.

சம்பூர் அனல்மின் திட்டத்தின் பின்னணியில் பறிக்கப்பட்ட தமிழர் நிலங்களும் இந்தியாவின் இராஜதந்திரமும்: கொழும்பு ஊடகம்
[ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 08:41 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] புதினம் இணைய தளம்
தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடமான சம்பூரில் இந்தியா உதவியுடன் சிறிலங்கா அரசாங்கமானது அனல் மின் திட்டத்தை அமைப்பதன் பின்னணி குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. "லக்பிம" ஏட்டில் வெளியாகியுள்ள அக்கட்டுரையின் தமிழ் வடிவம்:
சம்பூர் அனல் மின் திட்டம் உத்தேசிக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் என்று சிறிலங்கா மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் பாரியளவிலான பொதுமக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் தேசிய அனல் மின்வலு கூட்டுத்தாபனத்தினால் சாத்திய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்தத் திட்டம் அமைக்கப்படவுள்ளதாகவும்,
எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை பூர்த்தி செய்ய முடியும் எனவும் கூறப்படுகின்றது.
2006 ஆம் ஆண்டு சிறிலங்காப் படைத்தரப்பிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் காரணமாக சம்பூர் பிரதேச மக்கள் அப்பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர்கள் தற்போது இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வருகின்றனர்.
சம்பூர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது.
சம்பூர் பிரதேச மக்கள் அச்சம் காரணமாக அப்பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளனர். வெளியேறிய பலரிடம் தங்களின் உடமைகளை உறுதிப்படுத்தக்கூடிய எவ்வித ஆவணங்களும் தற்போது கைவசம் இல்லை.
எனினும், இந்த குடும்பங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளினால் குடியமர்த்தப்பட்டவர்கள் என சிறிலங்கா அரச அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிரதேச மக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. எனினும் பல தலைமுறைகளாக அப் பிரதேசத்தில் அவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
இரண்டாம் இராஜசிங்க மன்னனினால் கோணஸ்வரத்திற்கு பதிலீடாக தம்பலகாமத்தில் ஓர் கோயில் அமைக்கப்பட்டதாகவும்,
கோயிலுக்கு தொண்டாற்றும் பணிகள் சம்பூர் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும்
டச்சு வரலாற்றுத் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பூர் ஓர் மிகச் சிறந்த விவசாய நிலம் என்று மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியத்தைச் சேர்ந்த ராஜன் கூல் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்நிலையத்தை அமைப்பதற்கு பொருத்தமான இடம் அதுவல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பிரதேச மக்களிடம் இது குறித்து எவ்வித கருத்தும் அறியப்படவில்லை.
இந்த நிலைமை அக் கிராம மக்களை எந்தளவுக்கு பாதிக்கும் என்பது பற்றி எவரும் கவலைப்படவில்லை.
எறிகணைத் தாக்குதல்களின் காரணமாக பிரதேச மக்கள் வெளியேறினர். அந்த சம்பவங்களில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது பற்றிக் கூட சிறிலங்கா அரசாங்கம் கவலைப்படவில்லை.
அந்தப் பிரதேச மக்களிடம் கருத்துக்கள் அறியப்பட்டிருக்க வேண்டும், அவர்களுக்கு நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டிக்க வேண்டும் என்றும் ராஜன் கூல் குறிப்பிட்டார்.
இந்த விடயங்களின் மூலம் சிறிலங்கா அரசாங்கத்தின் நேர்மைத்தன்மையின் நிலைமை எது என்பது தெளிவாக புலப்படுகின்றது.
அந்தப் பிரதேச மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படாது என அரசாங்கம் குறிப்பிடுகின்றது.
மறுபுறத்தில் அகதி முகாம்களில் தங்கியிருக்கும் பிரதேச மக்களிடம் வேறு இடங்களுக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவிக்கும் கையொப்பங்களை அரசாங்கம் தந்திரமாக பெற்றுக்கொள்கின்றது.
இதன் மூலமாக சம்பூர் மக்கள் வேறு இடங்களில் வசிப்பதனை நிராகரித்துள்ளமை தெளிவாக புலப்படுகின்றது.
ஏனெனில், மாற்றீடாக வழங்கப்படவுள்ள பிரதேசங்கள் மிகவும் மோசமான பயனற்ற பிரதேசங்களாக காணப்படுகின்றன.
சம்பூருக்கு மாற்றீடாக பரிந்துரைக்கப்பட்டுள்ள ரால்கீ- மகாவலி கங்கை பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் நீரில் மூழ்கிவிடும்.
மற்றைய தென்பகுதியில் வறட்சி நிலைமை காணப்படுகின்றது.
இந்தத் திட்டம் இந்தியாவின் மின் நிறுவனத்துக்கும் சிறிலங்கா மின்சார சபைக்கு இடையிலான கூட்டு முயற்சியாகும் என்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதரகத்தின் தகவல் அதிகாரி தினகர் அஸ்தான தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியங்களின் அடிப்படையில் மின் திட்டத்திற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சம்பூர் பிரதேசத்தில் மின்திட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசாங்க மின் நிறுவனம் பரிந்துரைக்கவில்லை என்று 2007 ஆம் ஆண்டில் இந்திய தூதரகப் பேச்சாளர் நக்மா மாலிக் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்பூர் பிரதேசத்தில் மின்நிலையம் அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
சம்பூரில் மின் நிலையத்தை அமைப்பதன் மூலம் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாரிய கப்பல்களின் மூலம் நிலக்கரியை இறக்குமதி செய்ய சம்பூர் மிகவும் உசிதமான இடமாக அமைந்துள்ளது,
பாரிய கப்பல்கள் போக்குவரத்து செய்யக்கூடியளவு ஆழ்கடல் பரப்பு காணப்படுகின்றது.
பிரதேச மக்கள் இடம் நகர்த்தப்பட்டமை தொடர்பாக வினவிய போது, இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறு எனினும், உயர் பாதுகாப்பு வலயங்களில் எவருக்கு தங்க அனுமதியில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இராணுவக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக சம்பூர் கருதப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சம்பூர் பிரதேசத்தை சிறிலங்கா இராணுவத்தினர் விடுவிப்பதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் பல்வேறு கனரக ஆயுதங்களை சம்பூர் பிரதேசத்தில் கொண்டு வந்ததாகத் தெரியவருகின்றது.
திருகோணமலை துறைமுகம், பிறீமா மா ஆலை உள்ளிட்ட மிக முக்கிய இலக்குகள் காணப்படுகின்றமையே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கின்றார்.
பொதுமக்களை சம்பூர் பிரதேசத்தில் குடியமர்த்தினால், படிப்படியாக விடுதலைப் புலிகளும் பிரவேசிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த மின்சாரத் திட்டத்தின் மூலம் பாரிய சூழல் பிரச்சினை உருவாகக் கூடும். மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் 20,000 ஏக்கரை ஒதுக்குவதன் மூலம் 16,000 மக்கள் இடம்பெயர வேண்டியேற்படும்.
இந்தப் பிரதேச மக்கள் அடையக்கூடிய பாதிப்புக்கள் குறித்து அரசாங்கம் எந்தவித கரிசனையும் காட்டவில்லை என ராஜன் கூல் தெரிவித்துள்ளார்.
சுமார் 50 அனல் மின் நிலையங்களை அமைக்கக் கூடியளவு நிலத்தை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.
சம்பூர் பிரதேச மக்களை இடம் நகர்த்த வேண்டிய அவசியம் எதுவுமில்லை.
மின்சாரத் திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் இராஜதந்திர காய் நகர்த்தல்களை இந்தியா மேற்கொள்வதாக இந்திய ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
பிராந்தியத்தின் அபிவிருத்தி மற்றும் இராஜதந்திர விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு இந்திய அரசாங்கத்தின் ஓர் தந்திரோபாயமாக மின்சாரத் திட்டம் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்தியாவில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்வலு பிரச்சினைக்கு தீர்வு காணும் முக்கிய உபாயமாகவே பிராந்தியத்தின் பல நாடுகளுடன் கூட்டு மின்சக்தி திட்டங்களை அமுல்படுத்த இந்தியா முனைப்பு காட்டி வருவதாக அந்த ஊடகவியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார் என்றார் அவர் என அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

ENB.com said...

நிரம்ப ஆராய வேண்டிய பிரச்சனை.