Thursday, 12 June 2008
ஈழமண்ணில் பற்றியெரியும் படைத்தளங்கள்! பறிபோகும் எறிகணைகள்!! வெற்றி கொள்ளும் வேங்கைகள்!!!
ஈழமண்ணில் பற்றியெரியும் படைத்தளங்கள்! பறிபோகும் எறிகணைகள்!! வெற்றி கொள்ளும் வேங்கைகள்!!! - ENB_______
சேரன் கொமாண்டோ அணியினரால் மன்னார் கூட்டுப்படைத்தளம் தாக்கியழிப்பு: 10 படையினர் பலி- பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு
[புதன்கிழமை, 11 யூன் 2008, 05:31 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] செய்தி மூலம்: புதினம்
மன்னார்தீவுள் உள்ள எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையினரின் கூட்டுப்படைத்தளம், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் 10-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ராடார் உட்பட பெருமளவிலான போர்க்கலங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
[3 ஆம் இணைப்பு: மேலதிக ஆயுத விபரம், செய்தி விபரம், வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கை, படங்கள்]
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:
கடந்த மாதம் வீரச்சாவடைந்த கடற்புலிகளின் சிறப்பு இயந்திரப் பொறியியலாளரான லெப். கேணல் கடாபி நினைவாக கடற்புலிகளின் லெப். கேணல் சேரன் கொமாண்டோ அணியினரால் இன்று புதன்கிழமை அதிகாலை 2:08 மணிக்கு எருக்கலம்பிட்டி சிறிலங்கா கடற்படையின் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் தளம் 10 நிமிடத்துக்குள் கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணியினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.மன்னார் தீவின் நடுவில் பெரும் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் எருக்கலம்பிட்டி கடற்படைத்தளம் உள்ளது.
இதில் 10-க்கும் அதிகமான சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டனர். பெருமளவிலான படையினர் காயமடைந்துள்ளர். ஏனைய படையினர் தப்பியோடி விட்டனர்.
சிறிலங்கா கடற்படையின் கஜபா படைப்பிரிவின் ஏ கொம்பனி அணியினரே விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் கொமாண்டோ அணியினரால் தாக்கியழிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட ஆயுத விபரம்:
ராடார் முழுத்தொகுதி -01, 50 கலிபர் துப்பாக்கி - 01, 50 கலிபர் துப்பாக்கி சுடுகுழல் - 01, 50 கலிபர் ரவைப் பெட்டிகள் - 10, 50 கலிபர் ரவைகள் - 1,195 , 81 மில்லி மீற்றர் மோட்டார்கள் - 02, 81 மில்லிமீற்றர் எறிகணைகள் - 203, 81 மில்லிமீற்றர் பரா - 07, பிகே எல்எம்ஜி - 01, பிகேஎல்எம்ஜி ரவைகள் - 563 ,ஆர்பிஜி - 01, 60 மில்லி மீற்றர் மோட்டர்கள் - 02, 60 மில்லி மீற்றர் எறிகணைகள் - 65, 60 மில்லி மீற்றர் பரா வெளிச்சக்கூடுகள் - 12, ஆர்பிஜி எறிகணைகள் - 06, ஆர்பிஜி புறப்ளர் - 05, தொலைநோக்கி தொகுதி - 01, ஏகேஎல்எம்ஜி - 01, ஏகேஎல்எம்ஜி இணைப்பிகள் - 67, ஏகேஎல்எம்ஜி ரம் ரவைக்கூடுகள் - 08, ரி-56-2 ரக துப்பாக்கி - 01, ரவைக்கூடுகள் - 0, நடுத்தர ரவைகள் - 5,870, மின்னேற்றி - 01 ,மின்கலம் - 01, மின் சீராக்கி - 01ஜக்கற் ரவைக்கூடுதாங்கி - 01, கவச அணி - 01, நில அளவி - 01, செல்லிடப்பேசிகள் - 03, தொலைபேசி - 01,பை - 01சப்பாத்து - 2 இணைகள், கத்தி - 01
ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இத்தாக்குதலில் கடற்புலிகளின் லெப். கேணல் சேரன் கொமாண்டோ அணியினர் கடற்படைத்தள அழிப்புத்தாக்குதலில் ஈடுபட, வழிமறிப்புத்தாக்குதலை கடற்புலிகளின் லெப். கேணல் புனிதா படையணி, லெப். கேணல் எழில்கண்ணன் படையணி ஆகியன ஈடுபட்டன.
தாக்குதலில் ஈருட அணியை முழுமையாக கடற்புலிகளின் கட்டளைத்தளபதி விடுதலை வழிநடத்த, கடல் தாக்குதலை கட்டளைத்தளபதி இளங்கோ வழி நடத்தினார்.
சிறிலங்கா கடற்படைக்கு பெரும் அதிர்ச்சியையும் இழப்பையும் ஏற்படுத்திய இத்தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்றார் அவர்.
படங்கள்: விடுதலைப் புலிகள்
வவுனியாவில் முன்நகர்வு முறியடிப்பு: 19 படையினர் பலி-23 பேர் படுகாயம்
[வியாழக்கிழமை, 12 யூன் 2008, 06:11 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
வவுனியா மாவட்டம் குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறிகடிக்கப்பட்டுள்ளது. இதில் 19 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 23-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:
பின்தளங்களில் இருந்தான பல்குழல் வெடிகணை மற்றும் ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களின் சூட்டாதரவுடன் படையினர் நேற்று புதன்கிழமை காலை 6:00 மணியளவில் வவுனியா குஞ்சுக்குளம் பகுதி ஊடான முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம் முன்நகர்வுக்கு எதிராக நேற்று மாலை 6:30 மணி வரை விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர்.
இதில் 19 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 23-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்ட படையினரின் உடலங்களும் வெடிபொருட்களும் சூனியப் பிரதேசப் பகுதியில் காணப்படுகின்றன.
அவற்றை எடுக்க முயற்சிக்கும் படையினர் மீதும் விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்றார் அவர்.
சிறிலங்கா அரசு பொய்ப் பிரச்சாரத்தின் ஊடாக உலகை ஏமாற்றுகின்றது: பா.நடேசன்
[புதன்கிழமை, 11 யூன் 2008, 03:11 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
சிறிலங்கா அரசாங்கம் பொய்ப் பிரச்சாரத்தின் ஊடாக உலகை ஏமாற்றுகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். "புதினம்" இணையத்தளத்துக்கு பிரத்தியேகமாக அவர் அளித்த நேர்காணல்:
கேள்வி: களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருவதாகச் சிறிலங்கா பிரச்சாரம் செய்து வருகின்றது. உங்கள் தரப்பிலிருந்து தகவல்களை அதிகாரபூர்வமாகப் பெறுவதில் ஊடகங்கள் கடினப்படுகின்றன. உண்மையான களநிலைமையை விளக்க இயலுமா?
பதில்: பொய்யும் - புனைகதைகளும் தான் சிறிலங்கா அரசின் பரப்புரைப் போரின் முதுகெலும்பாக உள்ளன. போர் நடைபெறும் போது முதலில் சேதப்படுவது உண்மைதான் என்றொரு அனுபவ வாக்கியம் உண்டு. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை - அட்டூழியங்களை மறைப்பது போலவே போர்க்களத்தில் சிறிலங்காப் படைகள் சந்திக்கும் இழப்புகளையும் - தோல்விகளையும் சிங்கள அரசு மறைத்து வருகின்றது. அதேவேளை, புலிகளின் இழப்புக்களைப் பெருமளவு மிகைப்படுத்திக்கூறிப் பிரச்சாரம் செய்வதும் சிங்கள அரசின் வழமையாகி விட்டது.
முன்னர் "லங்காபுவத்" என்றொரு செய்தி நிறுவனத்தை இயக்கிய சிறிலங்கா அரசு செய்து வந்த படுமோசமான பொய்ப் பிரச்சாரத்தில் அந்தச் செய்தி நிறுவனம் கீர்த்தி இழந்து இறுதியில் காணாமல் போய்விட்டது. தமிழ் அகராதியில் பொய் என்பதற்கு ஒத்த சொல்லாக "லங்காபுவத்" என்று கூறுமளவுக்கு அந்தச் சிங்களச் சொல் திரிபடைந்து கிடக்கின்றது.
வன்னிப்போரில் புலிகள் சந்திக்கும் ஆள் இழப்புத் தொடர்பாகத் தற்போது இராணுவத்தரப்பு நாள்தோறும் வெளியிட்டு வரும் எண்ணிக்கை விபரத்தைக் கூட்டிக்கணக்கிட்டால், கற்பனைக் கணக்கு அம்பலமாகும். இந்த எண்ணிக்கைகள் தொடர்பாகக் கேலி பேசி - அரச தரப்பைக் கிண்டலடித்துக் கொழும்பின் இராணுவ ஆய்வாளர் ஒருவர் எழுதிய ஆய்வுக்கட்டுரை ஒன்றும் அண்மையில் வெளிவந்திருந்தது.
இராணுவச் செய்திகளில் மட்டுமல்ல அரசியல் விடயங்களிலும் சிங்கள அரசு நேர்மையற்ற வகையில் பொய்ச் செய்திகளையே வெளியிட்டு வருகின்றது. தமிழர் மீது மனித உரிமை மீறல்களைச் செய்யவில்லை. தமிழர்களை இன அழிப்புச் செய்யவில்லை என்றே சிங்களத் தலைவர்கள் கருத்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையே இல்லை என்றும் கூறுகின்றார்கள்.
சிங்கள அரசின் இத்தகைய பரப்புரையில் உண்மைகள் இல்லை என்று தெரிந்திருந்தும் சில உலக ஊடகங்கள் இந்தப் பொய்ச் செய்திகளை ஒலிபரப்புகின்றன என்பது வேதனையான உண்மையாகும்.
போர் தீவிரமாக நடைபெறுவதனால் தொடர்பாடல் வழிகள் சிரமத்திற்கு உள்ளாவதால் உலக ஊடகங்களுடன் நாம் உடனடியாகத் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. இதைச் சிங்கள அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றது.
இன்னொரு "ஜெயசிக்குறு" படுதோல்விக்கு தயாராகும் இராணுவம்
வன்னிப்போரின் இராணுவ நிலைமை சிங்களத் தரப்பு வெளியிடும் செய்திகள் போல் இருக்கவில்லை. இங்கே சிங்களப் படைகள் பாரிய ஆள் இழப்பைச் சந்தித்து வருகின்றன. அவர்களின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இங்கே போர் நடக்கவில்லை. படையினரின் நிகழ்ச்சி நிரல் வன்னிப் போர்க்களத்தில் முடக்கப்பட்டுள்ளது. புலிகளின் கரம் மேலோங்கி வருகின்றது. "ஜெயசிக்குறு" தோல்வி போன்று இன்னொரு பெரும் தோல்விக்குச் சிங்களப் படைகள் உள்ளாகப் போகின்றன.
கேள்வி: விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பால்ராஜ் இயற்கை மரணமடைந்தமை, விடுதலைப் புலிகளுக்குப் பாரிய பின்னடைவு என்று தென்னிலங்கைச் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் எழுதி வருகின்றன. பால்ராஜினது இழப்புப் புலிகளுக்குப் பின்னடைவுதானா?
பதில்: பிரிகேடியர் பால்ராஜ் எமது இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவர் எத்தனையோ சாதனைச் சண்டைகளுக்குத் தலைமையேற்று வெற்றிவாகை சூடிய சிறந்த தளபதி. எமது மக்களின் மனங்களில் இடம்பிடித்த ஒரு வீரத்தளபதி. அந்த சாதனைத் தளபதியின் சாவு எமது மக்களுக்குப் பெருத்த துயரை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை.
இழப்புக்கள் இயற்கையானதே, அதுவும் ஒரு விடுதலைப் போரில் இத்தகைய வீரர்களின் இழப்புக்கள் என்பதும் தவிர்க்க முடியாததே. பிரிகேடியர் பால்ராஜ் போன்று எத்தனையோ வீர நாயகர்களை நாம் இழந்திருக்கின்றோம்.
விழ, விழ எழுவோம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓர்ம வாக்கியம். தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவ ஆளுமையின் வீச்சாக இந்தச் சிறப்பு இயல்பு காணப்படுகின்றது. வீரத் தளபதிகள் வீழ்வதும் - வீரத் தளபதிகள் உருவாவதும் எமது விடுதலைப் போராட்டத்தின் யதார்த்தமாக இருந்து வருகின்றது.
தளபதி பால்ராஜின் இழப்பு எமது இனத்திற்குத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. ஆனால், அந்த இழப்புப் புலிகளுக்குப் பாரிய பின்னடைவைக் கொடுத்து விட்டது என்று கூறிச் சிங்களப் படைகளின் உளவுரணை உயர்த்தச் சிங்களத் தரப்பு முயல்கின்றது.
பெரும் தளபதிகளின் இழப்புக்களிற்குப் பின்பும் போராட்டம் பலம் பெற்றபடி வளர்ந்து வருகின்றது என்பதே எமது போராட்ட வரலாறு சொல்லும் உண்மையாகும்.
தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவ ஆற்றலாலும் - வழிகாட்டல் திறனாலும் போராளிகள் புடம் போடப்பட்டு - வீரர்களாக்கப்பட்டு - தளபதியாக்கப்பட்டு - இழப்புக்கள் ஈடு செய்யப்பட்டுப் போராட்டம் வளர்ந்தபடி உள்ளது.
கேள்வி: தென்தமிழீழப் பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத நிலை நீடிக்கின்றது. இத்தகைய ஒரு சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட காலப் பகுதியிலான இராணுவச் சமநிலை இன்னமும் நீடிக்கிறதா?
பதில்: போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது இருந்த கட்டுப்பாட்டு நிலத்தில் சில பகுதிகளைப் புலிகள் இயக்கம் இழந்துவிட்டது என்பது உண்மை. இதைப் புலிகளுக்கு ஏற்பட்ட தோல்வியாகவும் - இராணுவச் சமநிலையில் புலிகள் தாழ்ந்துவிட்டனர் என்றும் சிங்களப்படைத் தளபதிகள் தீர்ப்புக்கூற விரும்புகின்றனர்.
இராணுவச் சமநிலை: அன்றாடக் கணக்கெடுப்பு அல்ல
மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், இதில் உண்மையுள்ளது போல் தோன்றும். இரண்டாம் உலகப்போர் காலத்தில் கிட்லரின் நாசிப்படைகள் இந்தவிதமான நில ஆக்கிரமிப்பில் பெருவெற்றி கண்டிருந்தன. ஆயினும், ஸ்டாலின்கிராட் சமரில் அது அடைந்த தோல்வியுடன் எல்லாமே தலைகீழாக மாறின. போரிடும் இருதரப்பினர்க்கிடையே உள்ள இராணுவச் சமநிலை என்பதும் அன்றாடம் கணக்கிடப்படும் விவகாரமல்ல.
சிங்களப்படை தனது முழுப்பலத்தையும் ஒழுங்கு திரட்டி கிழக்கு மாகாணத்தின் நிலங்களை விழுங்கிய போது, புலிகள் முழுமையான மரபுச்சமரை அங்கே நடாத்தவில்லை என்பது உலகறிந்த உண்மை. இதற்குப் பல இராணுவக் காரணிகள் இருந்தன.
ஆனால், இப்போது வன்னியில் நீண்டபோர் அரங்கில் பாரிய சமர் ஒன்று நடைபெறுகின்றது. சிங்களப்படைகள் திட்டமிட்டது போன்று போர் நடைபெறவில்லை. வன்னிப் போர்க்களம் காட்சி மாற்றம் கண்டு வருகின்றது என்பது உண்மையே. சிங்களப் படைகளுக்குப் பாதகமான இந்தக் காட்சி மாற்றம் வெளித்தெரிய சில காலம் பிடிக்கலாம்.
ஜெயசிக்குறுச் சமர்க் காலத்திலும் இதே போன்றதொரு நிலையே காணப்பட்டது. நிலம் விழுங்கியபடி வன்னியின் மையப் பகுதி வரை சிங்களப்படை நுழைந்த போது பேரினவாதிகள் குதூகலமடைந்திருந்தனர். பின்னர் எல்லாமே தலைகீழாக மாறி தமிழினம் பெரு வெற்றி பெற்றது வரலாறாக உள்ளது. அந்த வரலாறு வன்னி மண்ணில் மீளவும் எழுதப்படும் என்பது திண்ணம்.
கேள்வி: பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் யூனியனில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உரையாற்றும் போது விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்குத் தயார் என்று கூறினார். ஆனால் கொழும்பில், சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க விடுதலைப் புலிகளுடன் இனி எந்த ஒரு பேச்சுக்கும் இடமில்லை என்றும் கூறினார். போரா? பேச்சா? புலிகளின் தெரிவு எது?
பதில்: இத்தகைய இரட்டைத் தன்மை என்பது சிங்கள ஆட்சியாளர்களின் வழமையாக இருந்து வருகின்றது. போரை விரும்பாத உலக சமூகத்திற்கு ஒரு முகம். பேரினவாதிகளின் உண்மை முகம் என்று இன்னொன்று இவற்றைப் பார்த்தும், கேட்டும் தமிழினத்திற்குப் பழக்கமாகி விட்டது.
போரா! சமாதானமா! என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் புலிகள் அல்ல. சிங்கள ஆட்சியாளர்களின் கைகளில் தான் அது உள்ளது.
தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்வு போர் வழியில் தான் உள்ளது என்பது சிங்கள அரசின் மாறா நிலைப்பாடு. எனினும், தேவை கருதி குறுகிய காலத்திற்குச் சமாதான வழியைப் பயன்படுத்துவது சிங்கள அரசின் ஒரு சுதந்திரம். (தந்திரம் என வாசிக்கவும் enb)
சமாதான வழியில் அரசியல் தீர்வுகாணும் எண்ணம் சிங்களத்திற்கு இல்லை என்பது தமிழரின் வரலாறு கூறும் பாடம். ஆனால், போர் மூலம் புலிகளை அழிக்க முடியாது என்பதும் உண்மை.
போரில் வெற்றி காண்பது என்பது தமிழ் மக்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வெற்றிக்காகச் சேர்ந்து உழைப்பது தமிழரின் வரலாற்றுக் கடமையாக உள்ளது.
கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமையிலிருந்தும் சிறிலங்கா நீக்கப்பட்டிருக்கின்றது. இதனூடாக அனைத்துலக சமூகமானது தமிழ் மக்களுக்கு ஆதரவாக நிற்கிறது என்று கருதலாமா?
பதில்: மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமையில் இருந்து சிறிலங்கா நீக்கப்பட்டுள்ளது அதற்கு அவமானத்தை விளைவித்துள்ளது. இதனால், ஒரு அரசுக்கு இருந்து வருகின்ற சட்டபூர்வமான தன்மை சிறிலங்காவிற்குக் கிடையாது என்ற அரசியல் உண்மையும் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை மூலம் உணர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த விதமான அரசுகளை "தோல்வியடைந்த அரசுகள்" மற்றும் "கெட்ட அரசுகள்" என்று வகைப்படுத்தி - தனிமைப்படுத்துவது உலகின் வழமை. இத்தகைய ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைக்குள் சிறிலங்கா அரசும் உட்படுத்தப்பட்டுள்ளது.
இது தமிழ் மக்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு விடயம் என்பதில் ஐயமில்லை. சிங்கள அரசிற்கு எதிரான இந்த அனைத்துலக முடிவு, தமிழ் மக்களுக்குக் கிடைத்த தார்மீக வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது.
ஒரு அரசியல் ஆதரவுத் தளத்திற்கு இத்தகைய தார்மீக வெற்றிகள் அடித்தளமாக இருக்கும்.
பல்வேறு நலன் சார்ந்தது அனைத்துலக ஆதரவு
ஒரு விடுதலைப் போராட்டத்திற்கான உலக நாடுகளின் ஆதரவு என்பது மனிதாபிமான விடயங்களில் மட்டும் கால் பதித்து நிற்கவில்லை. அது பல்வேறு நலன்களில் கால்பதித்துள்ளது.
ஆகவே, சிங்கள அரசிற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் இந்த முடிவு சிங்கள அரசை ஒரு இன அழிப்பு அரசாக - ஒரு ஒடுக்குமுறை அரசாக - ஒரு அநீதியான அரசாக அம்பலப்படுத்தியுள்ளது. இது தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஒரு அரசியல் வெற்றி என்று கூறலாம்.
கேள்வி: புலிகள் மீதான தடையை இந்திய அரசு அண்மையிலும் மேலதிகமாக இரண்டு ஆண்டுகள் நீடித்துள்ளதே?
பதில்: எமது இயக்கத்தின் மீது தடை விதிப்பதனால், சிங்களப் பேரினவாத அரசின் தமிழின விரோதப் போக்கை இந்திய அரசு உற்சாகப்படுத்துவதாகவே உள்ளது.
இது தமிழ்மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை அதிகரிப்பதோடு, இந்திய அரசின் மீது எமது மக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாக அமையும்.
வரலாற்று ரீதியாக இந்திய அரசு தனது உண்மையான நண்பன் யார் என்பதை உணரத் தவறி வருவதாகவே கருதுகின்றோம்.
கேள்வி: பிராந்திய வல்லரசு என்கிற வகையில் இந்தியா குறித்துச் சிறிது காலம் மௌனமாக இருந்தீர்கள். இந்தியாவும் தலையிடாக் கொள்கை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் இந்தியா பகிரங்கமாக சிறிலங்கா பக்கம் சாய, புலிகளும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தீர்கள். அப்படியானால் இப் பிராந்தியத்தில் புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீள ஒரு மோதலுக்கு வழியேற்படுத்துகின்றதா?
பதில்: புலிகளுக்கு எதிராகவும் - தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் ஒரு மறைமுகப் போரை இந்திய அரசு நடாத்தியே வருகின்றது. தமிழரை இன அழிப்பிற்குள்ளாக்கும் சிங்கள அரசுக்கு ஆயுத உதவிகள் புரிந்து தமிழின அழிப்பை ஊக்குவிக்கின்றது. தமிழ்நாட்டு மீனவர்களைத் தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே சிங்களக் கடற்படை கொன்று வருகின்றது. இதையும் இந்திய அரசு மௌனமாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசு கடைப்பிடித்து வரும் இந்தத் தமிழின விரோதப் போக்கைத் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் - மக்களும் புரிந்துகொண்டு - விழிப்படையும் வரை இந்திய அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகள் தொடரவே செய்யும்.
கேள்வி: தமிழக இன உணர்வாளர்களும் தமிழக மக்களும் ஈழ விடுதலைக்கான தங்களின் பங்கேற்பை - தார்மீக ஆதரவை வழங்கி வருகின்ற நிலையிலும் ஆதரவுச் சக்திகளுடன் புலம்பெயர் உறவுகள் தொடர்பாடல்களைக் காத்திரமாக ஏற்படுத்தினால் பரப்புரைகளில் வீச்சு ஏற்படுத்தலாம் என்று அங்குள்ள உணர்வாளர்கள் விசனப்படுவது தொடர்பில் தாங்கள் ஏதும் கூற விரும்புகின்றீர்களா?
பதில்: தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் - தமிழீழத் தமிழர்களுக்குமான உறவு எவராலும் பிரிக்க முடியாதது. தற்போதைய நிலையில் இந்த உறவு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பலம் சேர்ப்பதாக இருக்க வேண்டும். உலகத் தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றுவதாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் இருதரப்பினரும் இணைந்து செயற்பட்டுத் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உரம் சேர்க்க வேண்டும்.
கேள்வி: அனைத்துலகமானது, இன்று "உணவு நெருக்கடி"க்கு முகம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஏற்கெனவே பொருளாதாரத் தடைகளை எதிர்நோக்கியிருக்கும் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் அதன் தாக்கம் எத்தகையதாக இருக்கிறது?
பதில்: சிங்களத்தின் இன அழிப்புப் போருக்கு முகம் கொடுத்தபடி உணவு உற்பத்திப் போரிலும் புலிகள் இயக்கம் நீண்ட காலமாகவே ஈடுபட்டு வருகின்றது. இதனால் சிங்களத்தின் பொருளாதார மற்றும் உணவுத் தடைகளால் எமது மக்கள் பட்டினிச்சாவு என்ற நிலையை அடையாமல் பாதுகாப்பதில் நாம் பெருவெற்றி பெற்று வருகின்றோம். எமது மக்களின் தீவிர உழைப்பாலும் - முயற்சியாலும் உணவு நெருக்கடியை நாம் வெற்றிகரமாகச் சமாளித்து வருகின்றோம்.
கேள்வி: தென் தமிழீழத்தில் துணைப்படையினரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள பொம்மை நிர்வாகம் தொடர்பாக?
பதில்: பொம்மை நிர்வாகம் என்பதற்கிணங்கத் தமது எசமானர்களின் விருப்புக்களை நிறைவேற்ற இந்த பொம்மை நிர்வாகமும் முனைகின்றது. தமிழரின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க இந்தப் பொம்மை நிர்வாகத்தை மகிந்த அரசு பயன்படுத்த விரும்புகின்றது.
ஆயினும், அங்கு வாழும் தமிழரின் விடுதலை உணர்வை - தேசிய எழுச்சியை எந்தச் சக்திகளாலும் நசுக்க முடியாது. இத்தகைய பொம்மை நிர்வாகங்கள் தமிழ் மக்களுக்குப் பழக்கப்பட்டவையே. முன்னரும் சில தடவைகள் - சில பகுதிகளில் இந்தப் பொம்மை நிர்வாகம் இருந்து அழிந்துள்ளது.
எனவே, இது தொடர்பாக நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எமது விடுதலை அமைப்பின் படைப்பலம் அதிகரிக்கும் போது சூரியனைக் கண்ட பனிபோல இந்தப் பொம்மைகளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
கேள்வி: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடத்தப்படும் கிளைமோர்த் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து அனைத்துலகச் சமூகம், கருத்துக்கள் எதுவும் தெரிவிப்பதில்லை. ஆனால், சிறிலங்காப் பகுதிகளில் குண்டுவெடிப்புக்கள் நிகழும்போது அவர்கள் கருத்துத் தெரிவிப்பதற்கும் கண்டனம் தெரிவிப்பதற்கும் தயங்குவதில்லை. இது குறித்து நீங்கள் கருதுவது என்ன?
பதில்: இது ஒரு பாரபட்சமான நடவடிக்கை என்றுதான் கூறமுடியும். உலக ஊடகங்கள் இந்த விடயத்தில் தவறிழைக்கின்றன என்பது உண்மை. தமிழர் மீதான கொடுமைகள் மறைக்கப்படுவதால், அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் படுகொலைகளைச் செய்ய சிங்கள அரசு ஊக்குவிக்கப்படுகின்றது. தமிழரின் அவலங்களை உலகறியச் செய்விப்பதில், தமிழ் ஊடகங்கள் அதிகம் பிரதானமாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் ஊடகங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
கேள்வி: புலம்பெயர் நாடுகளில் நடைபெறவுள்ள பொங்குதமிழ் - 2008 நிகழ்வுகளில் புலம்பெயர் உறவுகளும் ஊடகங்களும் எவ்வகையான பங்களிப்புகளைச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்: தமிழரின் ஒற்றுமை ஓங்கியொலிக்கப் பாடுபட வேண்டும். தமிழரினது தேசியத் தலைமையை மேலும் மேலும் பலப்படுத்த வேண்டும். தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் தமிழ்மக்கள் ஒன்று திரண்டு - ஒரு கொடியின் கீழ் போராடுகின்றனர் என்ற உண்மையை உலகச் சமூகத்திற்கு உணர்த்திக்காட்ட வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் ஒருமித்த ஆதரவு புலிகள் இயக்கத்திற்கே என்ற யதார்த்தத்தையும் உலகறியச் செய்விக்க வேண்டும். இந்தப் பணியை ஒரு தேசியப் பணியாகக் கருதி ஊடகங்கள் செயற்பட வேண்டும்.
கேள்வி: ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து சிறிலங்கா வெளியேற்றப்பட பரப்புரை மூலம் பெரும்பங்கு வகித்த புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை எத்தகையதாக இருந்தால் தேச விடுதலைக்கு வலுவூட்டும்?
பதில்: ஒரு விடுதலைப் போராட்டத்திற்கான பரப்புரைப் பணி என்பது, இடைவிடாது விடுதலை கிட்டும் வரை செய்யப்பட வேண்டியது. இடையில் கிடைக்கும் வெற்றிகளை ஊக்கிகளாகக் கொண்டு மேலும் பரப்புரைப் பணியில் வேகம் காட்ட வேண்டும்.
தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் அரசியல் நியாயத்தையும் - சிங்கள அரசு புரியும் தமிழினப் படுகொலையையும் இடைவிடாது அனைத்துலக சமூகத்திற்கு உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும்.
அனைத்துலக உதவிகளைப் பெற்றுத் தமிழினத்தை அழிக்கும் சிங்களத்தின் தந்திரத்தை முறியடிக்கப் புலம்பெயர் தமிழர்கள் பாடுபட வேண்டும்.
அதேவேளை, தமிழரின் தேசிய அபிலாசையை உலகச் சமூகத்திற்கு உணர்த்த வேண்டும்.
தனியரசு ஒன்றுதான் தமிழ் - சிங்கள இனப் பிணக்கிற்கான சரியான - நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதையும் எடுத்துக் கூறவேண்டும்.
இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் உள்ளன, என்ற வரலாற்று உண்மையை உலகச் சமூகத்திற்கு எடுத்தியம்ப வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment