Monday, 2 June 2008

அதிகாரப்பகிர்வு: டக்ளஸ், ஆனந்தசங்கரி அடிமைகளுக்குள் சண்டை!

அதிகாரப்பகிர்வு: டக்ளஸ், ஆனந்தசங்கரி அடிமைகளுக்குள் சண்டை!

துணைப்படை டக்ளசின் நீண்டகால தமிழின விரோத நடவடிக்கைகள் என்ன?: பட்டியலை வெளியிட்டார் ஆனந்தசங்கரி
[ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 01:20 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] செய்தி மூலம்: புதினம்
சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் டக்ளஸ் குழுவின் நீண்டகால தமிழின விரோத நடவடிக்கைகள் என்ன என்பதனை சிறிலங்கா அரசாங்கத்தின் மற்றொரு ஆதரவாளரான வீ.ஆனந்தசங்கரி அம்பலப்படுத்தி பட்டியல் வெளியிட்டுள்ளார். தமிழர் தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் வடக்கு - கிழக்கைப் பிரித்த மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள இருவரும் சிங்களவரிடம் விசுவாசமாக இருந்தமைக்காக "அதிகாரம்" தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் மோதிக்கொண்டு வருகின்றனர்.
இம் மோதலின் ஒரு பகுதியாக டக்ளசின் தமிழின விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டு அவரிடம் அதிகாரத்தைக் கையளிக்காதீர்கள் என்றும் 75 வயதான தனியாளாக நிற்கின்ற தன்னிடமே அதிகாரத்தைக் கையளிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதங்களை வீ.ஆனந்தசங்கரி அனுப்பியுள்ளார்.
அதிகார வெறிக்காக தமிழர்களை விலை பேசும் இருவரின் உண்மை முகத்தை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆனந்தசங்கரி எழுதிய கடிதத்தை அப்படியே நாம் வெளியிடுகின்றோம்.
அக்கடிதங்கள்:
26.05.2008
மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள்
அலரி மாளிகை கொழும்பு-03
வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழு
பாகம் -01
கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழுவை அமைத்தமைக்கு தங்களுக்குரிய கௌரவத்தை கொடுத்து எனது கடும் ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறேன். அதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டிய உரிமையும், நாட்டின் நலன் கருதிய கடமைப்பாடும் எனக்குண்டு.
அவ்வாறு செய்வதற்கு நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் பல என்னிடம் உண்டு. எனது ஆட்சேபனை தாமதமாகியமைக்கு கிழக்கு மாகாண பிரச்சினைகளில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தமையும் எனது ஆட்சேபனைக்குரிய ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியின் முக்கிய உறுப்பினராகிய செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் படுகொலையும் காரணங்களாகும்.
எதிர்காலத்தில் மீண்டும் ஒரு போராட்டத்தை தொடர இடமளிக்காது எமது இனப்பிரச்சனைக்கு ஓர் நிரந்தர தீர்வே எமக்கு வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு மேல் ஒற்றையாட்சியின் கீழ் காண முடியாத ஓர் தீர்வு இத்தனை உயிரழிவுகளுக்கும், சொத்தழிவுகளுக்கும் பின் காண முடியும் என நான் திடமாக நம்பவில்லை.
இதன் காரணமாகவே நான் சமஷ்டி முறையிலான ஓர் தீர்வை ஆதரிப்பதோடு அதற்கு மாறாக இந்திய முறையிலான தீர்வை மட்டும் ஆதரித்து வருவது தாங்கள் அறிந்ததே.
கடந்த நான்கு ஆண்டுகளாக பல தரப்பட்டவர்களுடன் எனது பிரேரணையை விவாதித்த போது அதிகமானவர்களுக்கு அது ஏற்புடையதாக இருந்ததை அறிந்து கொண்டேன். இதைத் தவிர நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தையும், சமாதானத்தையும், சகஜ வாழ்க்கையையும் ஏற்படுத்துவதோடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் பல்லின மக்கள் மத்தியில் சமத்துவத்தையும், நல்லெண்ணத்தையும் ஏற்படுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்குண்டு.
நம் நாட்டின் முதல் தேவைகள் இவையே. இதுவே மக்களினதும், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும். ஆனால் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாடு வேறுபட்டதும், வட பகுதி மக்களுக்கு ஏற்புடையதல்ல என்பதோடு ஏனைய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வேறுபட்ட கருத்திருக்க முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும்.
மேலும் அவரும் அவரின் சகாக்களும் 1990 ம் ஆண்டு முற்பகுதியில் தீவகத்தை தம் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட காலத்திலிருந்து அவர்களின் செயற்பாடுகள் சர்வாதிகாரப் போக்குக் கொண்டிருந்தமையால் வட பகுதி மக்களை மீட்டெடுக்கும் பணியை அவர்களிடம் விட்டுவிட முடியாது.
மாற்றுக் கட்சியினரை தேர்தல் காலத்தில் ஆதரவு தேடும் உரிமையை மறுத்தும், பெருமளவில் ஆள் மாறாட்டம் செய்தும் பாராளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் புதிய ஓர் கலாச்சாரத்தை நம் நாட்டில் ஏற்படுத்தியவர்கள் அவர்களே. ஜனநாயக பாராம்பரியத்துக்கு அவர்கள் ஏற்படுத்திய பாதிப்பு விடுதலைப் புலிகளினால் ஏற்பட்டதிலும் பார்க்கக் கூடியதாகும்.
ஜனநாயக கோட்பாடுகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் மதிப்பு கொடுத்து வந்தது. பொதுஜன வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தின் காலத்தை 1983 ஆம் ஆண்டு அரசு நீடித்த போது தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த 17 பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் எவ்வாறு அதை ஆட்சேபித்து எமது பதவிகளைத் துறந்தோம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
உலக யுத்த காலம் தவிர்ந்த வேறு எந்தக் காலத்திலும், எந்த ஜனநாயக நாட்டிலும் இவ்வாறு செய்யும் வழக்கம் இல்லை. இவ்வாறு பதவி துறந்த எங்கள் 17 பேரையும் அரசியல் சாசனத்தில் ஆறாவது திருத்தத்தைக் கொண்டு வந்து வேண்டுமென்றே எம்மை பாராளுமன்றம் செல்ல விடாது தடுத்து, மிதவாதிகளிடமிருந்த தமிழ் மக்களின் தலைமையை பறித்தெடுத்து ஆயுதக் குழுக்களிடம் கையளித்தார் கௌரவ ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள்.
எதிர்கட்சியினர் 6 வருடங்களின் பின் மக்களிடம் ஆணை பெறும் உரிமையை மறுத்து நியாயமற்ற முறையில் மக்களின் புதிய ஆணையை பெறாது மேலும் 6 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். 6 ஆண்டுகள் மட்டும் ஆளும் மக்கள் ஆணை பெற்ற ஓர் கட்சி நியாயமற்ற முறையில் 12 ஆண்டுகள் ஆட்சி நடாத்தியது. நாடளாவிய ரீதியில் சுதந்திரமானதும், நியாயமானதுமான ஒரு தேர்தல் 1977 ஆம் ஆண்டின் பின் இன்று வரை இலங்கையில் நடைபெறவில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைய இந்த நிலைமை பெருமளவு உருவாக காரணமாக இருந்தது வடக்கு கிழக்கு என்பதோடு அதற்குப் பெரும் பங்களிப்புச் செய்தது கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களே.
இந்தக் குழுவினர் 1994ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டு 9 ஆசனங்களை பெற்றனர்.
அத்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட இக் குழுவைச் சேர்ந்த 13 வேட்பாளர்களும் 10 தேர்தல் தொகுதிகளில் மொத்தமாக பெற்ற வாக்குகள் 175 மட்டுமே.
ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் மட்டும் அவர்கள் மாற்றுக்கட்சியினர் எவரையும் நியமனத் திகதியிலிருந்தே அத்தொகுதியில் கால் வைக்க விடாது மிக மோசமான முறையில் ஆள் மாறாட்டம் செய்து 8,638 வாக்குகளை மட்டும் பெற்றிருந்தனர்.
இவர்கள் அத்தேர்தல் மாவட்டத்தில் 596,366 வாக்காளர்கள் இருந்தும் மிகப் பிழையான முறையில் மிகக்குறைந்த வாக்குகளை பெற்றபோது அரசு அரசியல் சாசனத்தையோ அன்றி தேர்தல் சட்டத்தையோ மாற்றம் செய்து பரிகாரம் செய்யும் என்று எதிர்பார்த்திருந்தேன்.
இதற்குரிய பரிகாரத்தை அரசு அன்று செய்திருந்தால் இன்று பொதுமக்களை அன்றி விடுதலைப் புலிகளை மட்டும் பாராராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் 22 த.தே.கூ உறுப்பினர்கள் தெரிவாகியிருக்க மாட்டார்கள். அடுத்தடுத்து ஆட்சியை கைப்பற்றிய கட்சிகள் இவ்வாறு தெரிவாகும் தமிழ் சிறுபான்மை கட்சி உறுப்பினர்களை தமது தேவைகளுக்கு உபயோகித்து ஆட்சியை பிடிக்க அல்லது நீடிக்க செய்தமை துரதிர்ஷ்டவசமானதே.
கடந்த காலத்தில் சில சுயநலமிக்க தலைவர்கள் நாட்டுப்பற்று இன்றி செய்த பாவத்தினாலேயே நம் முழு நாடும் இன்று இவ்வாறு அல்லல்படுகின்றது.
இந்த நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற த.வி.கூ ஆற்றிய பெரும் பங்களிப்பை முழு உலகும் மிகவும் பாராட்டியது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தத் தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் இப்போது இல்லை. அவர்களில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் மரணித்து விட்டனர். மற்றும் சிலர் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டனர்.
அத்தகைய பழைய தலைவர்களில் இன்றும் அரசியலில் ஈடுபாட்டுடன் இருக்கும் இருவரில் ஒருவர் த.வி.கூ. உருவாக்கிய நற்பெயரை அழித்துவிட்டு, என்னை மட்டும் தன்னந்தனியாக எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வைத்துவிட்டு, தான் மோசடி மூலம் பாராளுமன்றம் சென்று விட்டார்.
எம் தலைவர்கள் காட்டிய வழியிலிருந்து நான் தவறவில்லை.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் எதிர்நோக்கிய தர்ம சங்கடமான நிலைமையும் அவமானங்களும் சொல்லில் அடங்கா.
உலகளாவிய ரீதியில் பிரசுரமாகும் விடுதலைப் புலிகள் சார்பான பல கையடக்கப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் எனக்குக் கொடுத்து எழுதும் அடைமொழிகள் கீழத்தரமானவையும், அவதூறானவையுமாகும்.
அவர்கள் பாவிக்கும் வார்த்தைகள் என் மனதை மிகவும் புண்பட வைத்தன. நான் யாருக்கும் அடிவருடியாக செயல்பட்டவன் அல்ல.
கறுப்பை கறுப்பு என தயங்காது கூறுபவன். எப்போதும் நடுநிலைமையை வகிப்பவன். இருப்பினும் இத்தகைய அவமானங்களை சகிப்பதற்குக் காரணம் நான் என் நாட்டை மிகவும் நேசிப்பதோடு நாட்டுப்பற்றற்ற ஜனநாயக விரோத சக்திகளிடமிருந்து நாடு விடுதலை பெற வேண்டும் என்பதாலேயே.
பயங்கரவாதத்தை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் உங்கள் பணிக்கு எனது பூரண ஒத்துழைப்பு உண்டு.
அந்தப் பணிக்காக என் உயிரையும் தர நான் தயாராக உள்ளேன்.
ஆனால் வட பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் விடுதலைப் புலிகள் மட்டும்தான் என எண்ணாதீர்கள். கிழக்கு மாகாண மக்களைப் போல் வட பகுதி மக்களும் போதியளவு துன்பப்பட்டு விட்டார்கள். போதியளவு இழந்தும் விட்டார்கள்.
தொடர்ந்து நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழ்கின்றார்கள். அவர்கள் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியிலிருந்து நெருப்புக்குள் பாயும் நிலைமைக்கு தள்ளப்பட கூடாது. எதிர்வரும் ஜூலை 15 இல் எனக்கு 75 வயது பூர்த்தியாகி விடும்.
எனக்கு ஏதாவது நடக்கும் முன்பு நம் நாட்டில் வாழும் ஒவ்வொரு பகுதியினரும் அடிமைத்தனத்திலும், நிரந்தர பயபீதியிலும், பல ஆண்டு காலமாக அனுபவிக்கும் வேதனைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதே.
எனது எதிர்ப்பு விசேட செயலணிக் குழுவின் அமைப்புக்கும் அக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் ஆகிய இரண்டுக்குமே.
ஏற்கனவே அனுபவிக்கும் மந்திரி பதவியோடு இக்குழுவின் தலைவராக தங்களால் தெரிவு செய்யப்பட்ட கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் செயற்பாடுகள் பற்றி நான் பலதடவை தங்களுக்கு புகார் செய்துள்ளேன்.
அவரின் மந்திரி பதவி நாட்டுக்கு ஏற்கனவே பாதகமானதும், அரசுக்கு அவர் ஆற்றும் தொண்டுக்கு அப்பதவி மிகவும் போதுமானதுமாகும் ஏனைய இரு உறுப்பினர்கள் பற்றி அவர்களுக்கு வேலைப்பளு கூடிவிட்டது என்பதைத் தவிர வேறு எந்த எதிர்ப்பும் கிடையாது.
இக் குழுவில் பணியாற்ற போதிய நேரம் இருக்காது. இவ்விருவரும் முதல் கூட்டத்துக்கே சமூகம் கொடுக்காதமை இறுதியில் இதுவொரு தனி மனிதனின் அமைப்பாக விளங்கப் போகின்றது என்ற எனது சந்தேகத்தையும் ஈ.பி.டி.பி இயக்கத்தின் அண்மைக்கால வரலாறு அப்பாவி தமிழ் மக்களுக்கு மாறாக மீண்டும் அரங்கேறப்போகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
சந்தர்ப்பம் கிடைத்தால் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவாகள் என்ன செய்வார் என நானறியேன். வடக்கின் அபிவிருத்திக்கு பதிலாக தன் சொந்த நலனுக்காக இப் பதவியை பாவிக்க மாட்டார் என்று கூற முடியாது. சுயநலன் கருதி செயற்பட இவரைச் சுற்றி ஒரு கூட்டம் உண்டு. ஆனால் இவருடைய பணிக்கு பொது மக்களிடமிருந்து எதுவித ஒத்துழைப்பும் கிடைக்கப் போவதில்லை. தலைவர்களை மக்களே தெரிவு செய்ய வேண்டுமே அன்றி தலைவர்களை மக்கள் மீது திணிக்கக்கூடாது.
அவருடன் 1994ம் ஆண்டு தொடக்கம் 14 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து செயற்பட்டும், அமைச்சரவையில் இருவரும் அங்கத்துவம் வகித்த போதும் இவரைப் பற்றியோ இவரின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியோ நீங்கள் அறியாதிருப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. இவர் கட்டுப்படுத்தத் தவறிய இவர்களுடைய போராளிகளுடைய மகிழ்ச்சி தராத நடவடிக்கைகளை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய கடமைப்பாடு எனக்குண்டு.
2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகள் இவர்களை மிஞ்சி செயற்பட்டமையால் இவர்களுக்கு ஒரேயொரு ஆசனம் மட்டும் கிடைத்தது. ஈ.பி.டி.பி யினருக்கும் எங்களுக்கும் தேர்தல் பிரச்சாரம் செய்கின்ற உரிமை மறுக்கப்பட்டது.
ஈ.பி.டி.பி தமது கடந்த கால அனுபவங்களை வைத்து ஓர் ஆசனத்தை எப்படியோ வென்று விட்டது. அதற்கு முன்பு நடைபெற்ற 2001 பொதுத் தேர்தலில் பிரச்சாரத்துக்காக வேலணைக்குச் சென்ற த.வி.கூ. தொண்டர்களை ஈ.பி.டி.பி யினர் வழி மறித்து துவக்குகளாலும், ஆயுதங்களாலும் தாக்கினர்.
இரு தொண்டர்கள் ஸ்தலத்திலேயே வெட்டிக்கொல்லப்பட்டனர். மற்றும் அனேகர் படுகாயமுற்றனர். ஈ.பி.டி.பி யினர் என்னை எங்கே எங்கே எனக்கேட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
திரு.எஸ்.சோனாதிராஜா தலையில் வெட்டுக்காயமும், திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின காலும் முறிக்கப்பட்டது.
அதற்கு முன் 2000ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள தனது ஸ்ரீதர் தியேட்டர் காரியாலயத்தில் கௌரவ டக்ளஸ் தேவானந்தா இருந்து கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அதே வீதியில் அமைந்திருந்த எனது காரியாலயத்துக்கு ஆர்பாட்டம் செய்யுமாறு அனுப்பியிருந்தார்.
பலர் குடிபோதையில் இருந்தனர். எனக்கு எதிரான சுலோகங்களுடன், எனது கொடும்பாவியை எரித்து காரியாலய பெயர் பலகையையும் உடைத்து விட்டுச் சென்றனர்.
இவ்வாறான பயமுறுத்தல், பயமுறுத்தி சம்மதிக்க வைப்பதும் தேர்தல் குற்றங்களாகும். தேர்தல் சட்டத்துக்கும் முரணானதாகும். இருந்தும் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சர் என்ற காரணத்தினால் பொலிசாரும், இராணுவத்தினரும் எதுவும் செய்ய முடியாத நிலையில் செயலற்று நின்றனர். இப்பொழுது விசேட செயலணி குழு தலைவராக செயற்படும் இவ் வேளையில் அரச ஊழியர்கள் அனேகரை தன் தேர்தல் பிரச்சாரத்திற்கு உபயோகிப்பாரேயானால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் அரச ஊழியர்கள் முதல் நாள் மாலையிலிருந்தே இவருக்காக செயற்பட ஆரம்பித்து விட்டனர். ஈ.பி.டி.பி இனருக்கும் அவர்களிடம் பல விடயங்களை கற்றுக்கொண்ட விடுதலைப் புலிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை.
வெளிநாட்டு தூதுவர்களுக்கு 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் திகதி ஈ.பி.டி.பி யினரிடமிருந்து ஊர்காவற்துறை மக்களை விடுவிக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிய கடித்தின் ஒரு பகுதியை கீழே குறிப்பிடுகின்றேன்.
"இன்றைய நிலையில் நான் அறிந்த வரையில் ஒவ்வொருவரினதும் கடமை ஊர்காவற்துறை தொகுதி மக்களை குறிப்பாக நெடுந்தீவு மக்களை விடுவிப்பதே. 4100 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட ஊர்காவற்துறையின் ஒரு பகுதியாகிய நெடுந்தீவு இராணுவம், பொலிஸ், கடற்படை ஆகியோர்; கடமையாற்ற இல்லாத வேளையில் அரச சார்பான ஈ.பி.டி.பி என்ற இயக்கம் அப் பகுதி முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது.
கடந்த சில வருடங்களாக அப் பகுதி மக்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகி;ன்றனர். 1999ம் ஆண்டு நடந்தேறிய ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க க்கு வாக்களித்தவர்களை ஈ.பி.டி.பி யினர் கடுமையாக அடித்துத் துன்புறுத்தினர். உதவி அரசாங்க அதிபருடைய பெயர் தற்போது பிரதேச செயலளர் என மாற்றம் பெற்றுள்ளது.
அப் பகுதி அரசாங்க நிர்வாகத்துக்கு அவரே பொறுப்பாக இருந்தார். சில வருடங்களுக்கு முன்பு நெடுந்தீவில் கடமையாற்றிய பிரதேச செயலாளர் ஈ.பி.டி.பி யினரால் அடித்துக் கொல்லப்பட்டார். அரசு இன்றுவரைக்கும் அதற்கொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தக் குடும்பத்தினருக்கு எந்தவித நட்ட ஈடும் வழங்கவில்லை. அடித்துக் கொல்லப்பட்டவரின் பெயர் நிக்லஸ் ஆகும்"
இரு வருடங்களுக்கு முன்பு ஈ.பி.டி.பி யினர் சுருவில் என்ற இடத்தில் மற்றொரு இளைஞரை சுட்டுக்கொன்றனர்.
இது சம்பந்தமாக நான்கு ஈ.பி.டி.பி இனர் மீது ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சந்தேக பேர்வழிகள் நெடுந்தீவுக்கு தப்பிச் சென்ற வேளையில் நீதிபதியினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருநதது. பிடியாணையை அமுல்படுத்த முடியாதவேளை காரைநகர் கடற்படை அதிகாரியை நீதிபதி விசாரணை செய்தபோது தனக்கு நெடுந்தீவுக்கு போக அதிகாரம் இல்லையென ஆதாரத்தோடு கூறியிருந்தார்.
அந்த விடயம் அந்த நீதவானின் இடமாற்றத்தோடு முடிந்து விட்டது. ஜனாதிபதி அவர்களே தாங்கள் உட்பட எவரேனும் நெடுந்தீவுக்கு போவதாக இருப்பின் ஈ.பி.டி.பி யினருடைய அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.
ஊர்காவற்துறை தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் ஈ.பி.டி.பி யினருடைய ஆயுதம் தாங்கியோர் பல்வேறு முகாம்களை அமைந்திருந்தனர். அப்பகுதி அப்பாவி மக்கள் அவர்களின் அதிகாரத்துக்குட்பட்டே வாழ்கின்றனர். ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில் அப் பகுதியிலுள்ள கடற்படையினர் புலிகளிடமிருந்து ஈ.பி.டி.பி யினரை பாதுகாப்பதும் ஈ.பி.டி.பி யினரிடருந்து பொதுமக்களை பாதுகாப்பதும் அவர்களுடைய கடமையாக இருந்தது. இருப்பினும் ஈ.பி.டி.பி யினரின் அட்டகாசத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. இதில் வேடிக்கை என்னவெனில் நெடுந்தீவு உட்பட ஈ.பி.டி.பி யினருக்கு ஊர்காவற்துறையில் எந்த வேலையும் இருக்கவில்லை. அவர்களுடைய ஆயுதக்குழுவினர் அப்பாவி மக்களை மிரட்டுவதும், பீதியடையச் செய்வதிலுமே ஈடுபட்டிருந்திருந்தனர்.
அரசாங்கம் மக்களின் ஒரு பகுதியினரை ஒரு ஆயுதக்குழு ஏன் துன்புறுத்த அனுமதிக்கின்றது என கேள்வியை எழுப்பலாம். பதில் மிகவும் இலகுவானதே. ஊர்காவற்துறை தொகுதியில் இவ்வாறு பெற்ற வாக்குகளால்தான் 1994ம் ஆண்டுத் தேர்தலில் ஈ.பி.டி.பி இனர் 9 ஆசனங்களை கைப்பற்ற முடிந்தது. இன விகிதாசார அடிப்படையில் யாழ் தேர்தல் மாவட்டத்தின் 11 தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இந்த 11 தொகுதிகளில் ஊர்காவற்துறை தொகுதி ஈ.பி.டி.பி இன் முழு கட்டுப்பாட்டில் இருந்தது.
ஏனைய 10 தொகுதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகும். அதன் விளைவாக 10 தொகுதிகளில் வாக்கெடுப்பு நடைபெறவில்லை. ஊர்காவற்துறையை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈ.பி.டி.பி 10 ஆசனங்களில் 9 ஐ பெற்றுக்கொண்டது. இதற்கு அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் 10 தொகுதிகளிலும் மொத்தமாக 175 மட்டுமே. ஊர்காவற்துறை தொகுதியில் ஏறக்குறைய 9000 வாக்குகளை பெற்றனர். அதைக்கூட தேர்தல் மோசடி மூலம் பெற்றதாக கண்காணிப்புக்குழு கூறியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் முஸ்லீம் மக்களின் சில ஆயிரம் வாக்குகளால் ஸ்ரீ.ல.மு.கா ஒரு ஆசனத்தை பெற்றது.
இவ்விடயத்தை மீண்டும் பரிசீலிப்பதற்கு போதிய விடயங்களை தந்துள்ளதாக கருதுகிறேன். ஈ.பி.டி.பி இனர் முன்பு செயற்பட்டது போல் இனியும் செய்யமாட்டார்கள் என்று எத்தகைய உத்தரவாதத்தை அரசு கொடுக்கும் என வட பகுதி மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
முன்பு அவர்களிடமிருந்தது ஒரு மாவட்டம். இப்போது அவரிடம் கொடுக்கப்பட்டிருப்பது ஒரு மாகாணமாகும் மற்றும் அனேகரைப் போல் நானும் முற்று முழுதாக இப் பிரச்சினையை மறு பரிசீலனை செய்யவேண்டிய நிலை ஏற்படலாம்.
இந் நடவடிக்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. அதற்கு மாறாக இனப்பிரச்சினையை மேலும் விரிவடையச் செய்து பொது மக்களை விடுதலைப் புலிகளை நோக்கி விரட்டிவிடும் நிலை ஏற்படலாம் என கருதுகிறேன்.
எனது விளக்கத்தால் தாங்கள் திருப்தி அடையாதிருந்தால் மேலும் சில விடயங்களை இக் கடிதத்தின் இரண்டாம் பாகமாக விரைவில் அனுப்பி வைப்பேன்.
இப்படிக்கு
அன்புள்ள வீ. ஆனந்தசங்கரிதலைவர்- த.வி.கூ
பாகம் -02
27-05-2008
மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் அலரி மாளிகை கொழும்பு-03
வட மாகாணத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்ட விசேட செயலணி குழு
பாகம் -02
இக் கடிதத்திற்கும் இதற்கு முதற் பாகமாக என்னால் அனுப்பப்பட்ட நேற்றைய கடிதத்திற்கும் விளக்கம் தர கடமைப்பட்டுள்ளேன்.
விடயம் அவசரமானதும், முக்கியமானதுமானதும் ஆகையால் அதை படித்துப் பார்க்க சொற்ப நேரம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.
தனிப்பட்ட முறையில் எனக்கு கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது எதுவித விரோதமும் கிடையாது.
ஊர்காவற்துறை மக்களிடம் ஈ.பி.டி.பி போராளிகள் நடந்து கொண்ட கொடூரமான செயல்கள் இன்னும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை.
அவை மீண்டும் எதிர்காலத்தில் மக்கள் மீது பிரயோகிக்கப்பட மாட்டாது என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை. நயினாதீவு என அழைக்கப்படும் நாகதீப உட்பட ஊர்காவற்துறை தொகுதி 09 தீவுகளை உள்ளடக்கியதாகும். இக் கடிதம் வேறு இரு கடிதங்களின் சில முக்கிய பகுதிகளை மட்டும் கொண்டுள்ளது.
ஆனால் இத்துடன் இணைக்கபட்டுள்ள கடிதங்களை முழுதாகப் படித்து ஆராய்ந்து பார்ப்பீர்களேயானால் அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களை தலைவராக கொண்டு இயங்கும் விசேட செயலணி குழு எத்தகைய ஆபத்தான முடிவை எதிர்நோக்கும் என்பதை வெளிச்சமிட்டு காட்டுகின்றன.
அவ்விரு கடிதங்களும் நான் த.வி.கூ பாராளுமன்றகுழு தலைவராகவும், கட்சியின் சிரேஷ்ட உப தலைவராகவும் செயற்பட்ட காலத்தில் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அவர்களுக்கு கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் செயல்முறை பற்றி முறையிட்ட கடிதமாகும்.
இத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்ற அதன் பிரதி (19-02-2001) இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாக இருக்கும்.
"இத்தகைய சம்பவங்களை நாட்டின் எப்பகுதியிலும் ஏற்றுக்கொள்வார்களா?
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே இதை சிங்கள, முஸ்லீம் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?
இவ்வாறு செய்வதற்கு தமிழ் மக்களை மட்டும் ஏன் தெரிவு செய்தீர்கள்.
இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்குண்டு அல்லவா?
ஒரு கௌரவமான குடும்பத்தில் பிறந்த கண்ணியமான ஒரு பெண்மணியை இந்த நாட்டின் தலைவியாக பெற நாடு அதிர்ஷ்டம் பெற்றதாக மக்கள் கருதினர்.
தங்கள் கணவர் படுகொலை செய்யப்பட்டவேளை தாங்களும், தங்கள் பிள்ளைகளும் பட்ட துயரை நாமறிவோம். என்னைப் போன்ற பல மக்கள் உங்கள் துயரத்தில் பங்கு கொண்டனர்.
படுகொலை செய்யப்பட்ட உதவி அரசாங்க அதிபர் அவர்களின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஏற்பட்ட உணர்வு தாங்கள் கணவரை இழந்தவேளை ஏற்பட்ட உணர்வுக்கு வேறுபட்டதல்ல. ஒரேயொரு வித்தியாசம் உங்களுக்காக குரல் கொடுக்க பலர் இருந்தார்கள். அவர்களுக்காக பேச அநேகமாக நான் மட்டுமே.
உண்மையாகத்தான் கேட்கிறேன் ஜனாதிபதி அவர்களே உங்களின் ஆட்சிக்கு உட்பட்ட ஒருபகுதி மக்கள் மீது இழைக்கப்படுகின்ற கொடுமைகளை நீங்கள் அறிவீர்களா இல்லையா?.
நீங்கள் அறிவீர்கள் என பெருமளவில் மக்கள் நம்புகின்றார்கள். இவற்றை நீங்கள் அறிந்திருந்தால் ஜனாதிபதி அவர்களே இந்தக் கட்டத்திலேனும் தயவு செய்து தலையிடுங்கள்.
புத்த பகவானின் பேரால் தங்களுக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். ஈ.பி.டி.பி தலைவர் அவர்களை நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு மட்டுமல்ல வடகிழக்கு மக்களுக்கு முடிசூடா மன்னராக ஆக்கியுள்ளீர்கள்.
அவரே அரசாங்க அதிபரையும் பிரதேச செயலாளர்களையும் ஏனைய இலாகா தலைவர்களையும் யாழ்ப்பாணத்தில் நியமிக்கின்றார். அவரது சொற்படி நடக்காதவர்கள் புலி ஆதரவாளர்கள் என குறி சுடப்படுகின்றனர்.
விடுதலைப் புலிகளுடன் எதுவித தொடர்பும் இல்லையென ஒரு அரசாங்க ஊழியரையும் கூற முடியாது. யாழ்ப்பாணம், வன்னி ஆகிய பகுதிகள் 1990 ஆண்டிலிருந்து 1995 ம் ஆண்டுவரை விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. மிகத் திறமையான ஒரு பிரதேச செயலாளருக்கு பதவி நீடிப்பு மறுக்கப்பட்டுள்ளது. அந்த செயலாளர் மிகவும் சிறந்தவர் என பொது மக்கள் அபிப்பராயப்படுகின்றனர்.
நியமனங்கள், இடமாற்றங்கள் அத்தனையும் அவர் சொற்படியே நடக்கின்றது. திறமைக்கு அங்கே இடமில்லை. இரு வருடங்களுக்கு முன்பு ஆசியர் நியமனங்கள் ஸ்ரீதர் படமாளிகையில் இயங்கும் அவரது காரியாலயத்தில் வழங்கப்பட்டது. சுருங்கக் கூறின் எல்லா இலாகாக்களுக்கும் மந்திரியாக அவர் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் யாழ் ஒலி என்ற பிரிவு அவரை மேம்படுத்தியே பிரச்சாரங்கள் செய்தது. ஈ.பி.டி.பி இனருக்கென அரசாங்கம் ஒரு தனி அரசு அமைக்கின்றதா என மக்கள் கேட்கின்றார்கள்."
அக்கடிதத்தில் மேலும் கூறப்படுவதாவது:
"பாராளுமன்றத்துக்கு செல்லுகின்ற தார்மீக உரிமையற்ற ஒரு குழுவினர் சரியோ பிழையோ பாராளுமன்றம் புகுந்து விட்டனர்.
அத்துடன் அவர்கள் திருப்தி அடைந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக அக் குழுவினரின் தலைவரை அமைச்சர் பதவி வழங்கி தேர்தல் நடப்பதற்கு முன்பு பல்வேறு வேலைத் திட்டங்களுக்கென வரவு செலவுத் திட்டத்தில் ஒதுப்படாத பெரும் தொகையான பணத்தை எதுவித கணக்கு வழக்கின்றி யாழ்ப்பாணத்தில் செலவிட வைத்தீர்கள்.
கண்டபடி கேட்டதற்கெல்லாம் கொடுக்கப்பட்ட பெருந் தொகையான பணத்தில் ஒரு பகுதி தனியாரிடம் போய் சேர்ந்தது. இவ்வாறு செலவிடப்பட்ட பெருந் தொகையான பணம் வீடு வாசலை இழந்து, இடம்பெயர்ந்த மக்களுடைய புனர்வாழ்வுக்காக நல்ல உள்ளம் படைத்த பிற நாட்டவர்களால் தாராளமாக வழங்கப்பட்டதே அன்றி மனித உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்காத, ஜனநாயகத்துக்கு விரோதமாக செயற்படும் சமூக விரோத குழு ஒன்றுக்கு அதன் அரசியல் கட்சியை வளர்ப்பதற்கும், தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவிடுவதற்கும் அல்ல.
இத்தகைய குற்றங்களுக்கு பொறுப்பான அதே பேர்வழியை நீங்கள் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக்கியது மட்டுமல்லாமல் வட கிழக்கிற்கு இந்து சமய கலாச்சார அமைச்சுக்களையும் கையளித்துள்ளீர்கள்.
அபிவிருத்திக்கு பொறுப்பான ரான் அமைப்பும் அவரின் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.
பிற நாடுகளால் பெருந்தொகையாக அபிவிருத்திக்காக ரான் அமைப்புக்கு கொடுக்கப்பட்ட பணத்தை ரானில் கடமையாற்றும் சகல உத்தியோகத்தர்களையும் தானே நியமித்து செலவழித்துள்ளார்.
நன்கொடை வழங்கும் நாடுகளில் பணம் மரத்தில் பிடுங்குவதில்லை. பல்வேறு நாடுகளில் வாழும் மக்களின் தியாக உணர்வால் சேர்க்கப்பட்ட பணமே உதவி பணமாக வருகின்றது.
நாம் செலவிடும் ஒவ்வொரு சதத்தையும் நியாயப்படி செலவு செய்ய வேண்டுமேயொழிய பொது நலன் கருதாது தன்னலம் கருதும் ஒரு குழுவினரிடம் ஒப்படைக்க முடியாது.
அண்மையில் ஒரு பத்திரிகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் 400 குடும்பங்களின் புனர்வாழ்வுக்காக 22 மில்லியன் ரூபா ஒதுக்கியிருப்பதாக கூறப்பட்டது.
இதுவொரு நற்செய்தியாக இருந்தாலும் இப் பணத்தைப் பெற்றவர்கள் யார்? எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
கிடைத்த அறிக்கையின்படி நல்லூர், யாழ்ப்பாணம், வலி வடக்கு தெல்லிப்பளை, வலி மேற்கு சுன்னாகம், தீவுப்பகுதி வேலணை கிழக்கு, வலி தெற்கு உடுவில், பருத்தித்துறை ஆகிய பிரதேச சபைகளில் முறையே 110, 95, 69, 11, 04, 80, 33 ஆகிய எண்ணிக்கையானோர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் யாரால் என்ன அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்கள்? இப் பிரதேசங்களில் இவர்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டார்களா?
இன்னுமொரு அறிக்கையின்படி இடம்பெயர்ந்தோரை குடிமயர்த்த காணி வாங்கவும், கட்டிட பொருட்கள் வழங்கவும் ஒரு திட்டத்தை தயாரிக்கும்படி கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் அரசாங்க அதிபருக்கு கட்டளை பிறப்பித்திருந்தார்.
பார்வைக்கு அது நல்ல திட்டமாக இருந்தாலும் இத்திட்டம் மக்களின் பூர்வீக காணிகளை பறித்தெடுக்கின்ற ஒரு சூழ்ச்சியான திட்டமென அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.
இப்பொழுது உண்மை வெளியாகிவிட்டது. உயர் பாதுகாப்பு வலயத்தில் வாழ்ந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் இருந்து அகற்றி வேறு இடங்களில் குடியேற்றும் திட்டம் அம்பலமாகியது.
ஜனாதிபதி அவர்களே ஹொரகல காணி தங்களுக்கு எவ்வாறு முக்கியமோ அதே போல்தான் மக்களின் பூர்வீக காணிகள் அவர்களுக்கு முக்கியமாகும். ஆகவே இத் திட்டத்தை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.
இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் நண்பர்கள் வீடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் பல ஆண்டுகாலமாக பல கஷ்டங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பது என்றைக்கோ ஒரு நாள் தம்முடைய சொந்த நிலத்துக்கு போவோம் என்ற நம்பிக்கையே அன்றி வேறு இடத்தில் குடியேறுவதற்காக அல்ல. இதுதான் அரசின் நோக்கம் எனில் மக்கள் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கத் தேவையில்லை.
அரசும் யுத்தத்தை தொடருவதாக இருந்தாலும் அல்லது தமிழ் மக்களை அடக்கி வைத்திருக்கின்ற எண்ணமும் இருந்தாலே அன்றி உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே மக்களை குடியேற்ற வேண்டிய அவசியம் இல்லை.
விரைவாக யுத்தத்தை முடித்து அமைதியை ஏற்படுத்தி மக்கள் விரைவில் தங்கள் இடத்தில் குடியேறவும் வழி செய்வீர்கள் என நம்புகிறேன்.
பண மோசடி, தம் ஆதரவாளருக்கு விசேட சலுகை, எதிரிகளை கண்டித்தல் போன்றவையே ஈ.பி.டி.பி இனரால் கையாளப்படுகின்றன. ஆகவே நான் மிகவும் வன்மையாக வற்புறுத்தி கேட்பது பிற நாடுகள் நன்கொடையாக வழங்கும் பணத்தில் ஒரு சதமேனும் அமைச்சரால் தன் இஷ்டப்படியோ அன்றி தன்னால் தெரிவு செய்யப்பட்டவர் மூலமோ இஷ்டப்படி செலவழிப்பதை அனுமதிக்கக் கூடாது.
மேலும் பிற நாடுகளில் இருந்து வரும் பணம் சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆலோசனையோடு தெரிவு செய்யப்படும் திட்டங்களுக்கே செலவிடப்பட வேண்டும். ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்களை கொண்ட ஓர் ஆலோசனை குழுவை அமைக்கலாம் என ஆலோசனை கூற விரும்புகிறேன்.
என்னால் குறிப்பிடப்பட்ட இந்த விடயங்களை கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு ஊர்காவற்துறை தொகுதியில் வாழும் மக்களை குறிப்பாக நெடுந்தீவு மக்களை அவர்கள் படும் இன்னல்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்"
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அவர்களுக்கு 14-05-2001 இல் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்குழு சம்பந்தமாக எழுதப்பட்ட கடிதம் இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமாக இருப்பதால் அதன் சில பகுதிகளை கீழே குறிப்பிடுகிறேன்.
பிரதி இணைக்கபட்டுள்ளது.
"மோசடி மூலம் பாராளுமன்ற ஆசனங்களில் நான்கை பெற்ற ஈ.பி.டி.பி யின் தலைவரை யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமித்தமை எமக்கு விசனத்தைத் தருகிறது.
ஏனைய ஐந்து உறுப்பினர்களும் 54930 வாக்குகள் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவரை தெரிவு செய்கின்ற உரிமை உறுப்பினர்களிடம் விடப்பட்டிருக்க வேண்டும்.
ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் பிழையான வழியில் தாங்கள் தலைவரை தெரிவு செய்தது, தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய எம்மை குறிப்பாக என்னை அவமதிப்பது போலாகும். கடந்த பாராளுமன்றத்திலும் நீங்கள் அவரையே தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.
அக் கட்சியைச் சேர்ந்த 13 வேட்பாளர்களும் 10 தொகுதிகளில் எடுத்த வாக்குகள் 175 ஆக இருந்தும் அவர்களில் 9 பேர் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
ஊர்காவற்துறை தொகுதியில் அவர்களுக்குக் கிடைத்த 8000 வாக்குகள் கணக்கில் எடுத்திருக்க முடியாதவையாகும். ஏனெனில் அன்று தொட்டு இன்று வரை ஊர்காவற்துறை தொகுதி மக்கள் ஈ.பி.டி.பி இனரின் இரும்புப் பிடியில் அடிமைகளாக வாழ்கின்றார்கள்.
1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஈ.பி.டி.பி இனர் ஒரு மாற்றுக் கட்சி வேட்பாளரரையும் ஊர்காவற்துறை தொகுதிக்குள் போக அனுமதிக்கவில்லை.
நான் மிக ஆர்வத்துடன் ஜனாதிபதியாகிய உங்களை கேட்பது உங்களுக்கோ அல்லது உங்கள் அரசில் வேறு யாருக்குமோ சுதந்திரம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை உண்டா எனக் கேட்க விரும்புகின்றேன்.
வறுமைப்பட்ட எமது நாடு யுத்தத்தினால் மிக வறுமைபட்டுள்ளது. கடந்த வருடம் வேறு எந்த மாவட்டத்திலும் நடைபெறாத வகையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின் அவரை மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு தலைவராக தெரிவு செய்திருக்கிறீர்கள்.
இலங்கை சரித்திரத்தில் இது முன்பு நடைபெறாத ஒன்றாகும். யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய இரண்டு மணிநேர ஒரேயொரு கூட்டத்திற்கு திருகோணமலையிலிருந்து வடகிழக்கு மாகாண சபையின் பிரதான அதிகாரிகள் ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்டதால் இந்த அரசுக்கு ஏற்பட்ட செலவை எவ்வளவு என கணக்கிட முடியுமா? இக் கூட்டத்தை கூட்ட வேண்டிய மறைமுக நோக்கம் என்னவெனில் ஊழியர்கள் அனைவரும் அவர்களுக்கு தலை வணங்க வேண்டும் என்பதாலேயே. அவர்களுடைய எண்ணம் பிரயோசனம் அளித்தது. அவருக்காக அரச ஊழியர்கள் தேர்தலுக்கு முதல்நாள் இரவே தமது கடமைகளை செய்யத் துவங்கி விட்டார்கள். திக்கம் வடிச்சாலை அவர்கள் பொறுப்பேற்றிருந்தால் அவர்களின் முயற்சி மிகக் கூடுதலான பலனை தந்திருக்கும்.
யாழ்ப்பாணத்தில் ஏழை வரியிறுப்பாளரின் பணத்தாலும் வடகிழக்கின் தமிழ் பகுதிகளில் தமிழ் அலுவல்கள் அமைச்சர் என்ற பெயரிலும் நீங்கள் மேம்படுத்தி வரும் அக்குழுவினர் தங்களின் உதவியுடன் கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியுடன் திருப்தி அடைந்திருக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் அவர்களுக்கு பல பதவிகளை கொடுத்து செலவை கூட்டி வடக்கிலும் கிழக்கிலும் எல்லா விடயங்களிலும் தலையிட வாய்ப்பளித்தீர்கள். தற்போது அமைச்சர் தனது ஸ்ரீதர் படமாளிகை அலுவலகத்துக்கு முன்பாக உள்ள தனது அமைச்சில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை கூட்டுகிறார். பெருமளவில் அவரின் ஆயுதம் தாங்கிய போராளிகள் சூழ்ந்து நிற்கின்றனர். அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நான் 02-09-2001 ஆண்டு உங்களுக்கு அனுப்பிய ஆட்சேபனை கடிதத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன்.
முறைப்படி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எதிர்கால சந்ததியின் நன்மை கருதி ஜனநாயகத்தை பாதுகாக்க என் உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளேன். அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையெனத் தீர்மானித்துள்ளேன்.
ஈற்றில் ஊர்காவற்துறை தொகுதி மக்களை ஈ.பி.டி.பி யினரின் பிடியிலிருந்து விடுவிக்குமாறு வேண்டுகிறேன். அத்துடன் 12000 சீவல் தொழிலாளர்களுக்கு சொந்தமான திக்கம் வடிசாலையை துப்பாக்கி முனையில் எடுத்தனர். அதையும் திரும்ப கொடுக்கவும். அத்துடன் யாழ் மாநகரசபை நிர்வாகத்தில் கை வைக்க வேண்டாமென பணிக்கவும்".
ஜனாதிபதி அவர்களே மிக இக்கட்டான ஓர் காலத்தில் நாட்டின் தலைமை பதவியை வகிக்கின்றீர்கள் என்பதால் ஒவ்வொரு செயற்பாடும் மிகக் கவனத்துடன் நடைபெற வேண்டும். மனித உரிமை மீறல் விடயத்தில் கூட நீங்கள் ஏன் பழியை சுமக்க வேண்டும்?.
எனது கடிதத்தின் 1ம், 2ம் பாகங்களில் கொடுக்கப்பட்டுள்ள சில பகுதிகள் உண்மையை விளக்குகின்றன. கௌரவ டக்ளஸ் தேவானந்தா போதியளவு அதிகாரத்தையும் பல்வேறு சலுகைகளையும் அவருக்குரியவற்றுக்கு மேலதிகமாக அனுபவித்து விட்டார். தாங்கள் எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போகிறீர்கள் என சர்வதேச சமூகம் அவதானித்துக் கொண்டிருக்கும் போது மற்றவர்களுடைய தவறால் அரசு தனது நாணயத்தை இழக்கக் கூடாது என்பது என் ஆதங்கமாகும். எனது மக்களுக்கும் பொதுவாக என் நாட்டுக்கும் என் கடமையை செய்து விட்டேன் என்ற திருப்தியுடன் நான் போகிறேன். தங்கள் முயற்சிகள் அத்தனையும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இப்படிக்கு
அன்புள்ள வீ. ஆனந்தசங்கரி
தலைவர்- த.வி.கூ.


வீரகேசரி விரும்பித்தந்த பகுதி.

வடக்கு ஆலோசனை சபையை ஈ.பி.டி.பி.கைப்பற்றியுள்ள நிலையில் மஹிந்தவுக்கு சங்கரி வியாக்கியானக் கடிதம்!

வீரகேசரி இணையம் 6/2/2008 11:15:21 AM -

ஈ.பி.டி.பி.யின் நீண்டகால செயற்பாடுகளை விமர்சிக்கும் வகையில், அரசாங்கத்தின் மற்றொரு விசுவாசியான வீ.ஆனந்தசங்கரி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக தெரியவரும் அதேவேளை, அவரது பட்டியல் வெளியீடு,அதிகார போட்டியின் வெளிப்பாடாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து அரச தலைவர் ஜனாதிபதி மஹிந்தவுக்கு சங்கரி எழுதியுள்ள கடிதத்திலேயே பட்டியலிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட சில விபரங்களை தருகிறோம்:கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வட மாகாண நிர்வாக விசேட செயலணி குழுவை அமைத்தமைக்கு தங்களுக்குரிய கௌரவத்தை கொடுத்து எனது கடும் ஆட்சேபனயை தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன்.அதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டிய உரிமையும்,நாட்டு நலன் கருதிய நலன் கருதிய கடமைப்பாடும்
எனக்குண்டு.அவ்வாறு குறிப்பிடுவதற்கு நியாயப்படுத்தக்கூடிய காரணங்கள் பல என்னிடம் உண்டு.எனது ஆட்சேபனை தாமதமாகியமைக்கு கிழக்கு
மாகாண பிரச்சினைகளில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தமையும் எனது ஆட்சேபனைக்குரிய ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் கௌரவ டக்ளஸ்
தேவானந்தாவின் கட்சியின் முக்கிய உறுப்பினராகிய செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் படுகொலையும் காரணங்களாகும்.எதிர்காலத்தில்
மீண்டும் ஒரு போராட்டத்தை தொடர இடமளிக்காது எமது இனப்பிரச்சனைக்கு ஓர் நிரந்தர தீர்வே எமக்கு வேண்டும்.50 ஆண்டுகளுக்கு மேல் ஒற்றையாட்சியின் கீழ் காண முடியாத ஓர் தீர்வு இத்தனை உயிரழிவுகளுக்கும் சொத்தழிவுகளுக்கும் பின் காண முடியும் என நான் திடமாக நம்பவில்லை.
இதன் காரணமாகவே நான் சமஷ்டி முறையிலான ஓர் தீர்வை ஆதரிப்பதோடு அதற்கு மாறாக இந்திய முறையிலான தீர்வை மட்டும் ஆதரித்து வருவது தாங்கள் அறிந்ததே.
கடந்த நான்கு ஆண்டுகளாக பல தரப்பட்டவர்களுடன் எனது பிரேரணையை விவாதித்த போது அதிகமானவர்களுக்கு அது ஏற்புடையதாக இருந்ததை
அறிந்து கொண்டேன்.இதைத் தவிர நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தையும்,சமாதானத்தையும் சகஜ வாழ்க்கையையும் ஏற்படுத்துவதோடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் பல்லின மக்கள் மத்தியில் சமத்துவத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்குண்டு.நம் நாட்டின் முதல் தேவைகள் இவையே.
இதுவே மக்களினதும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புமாகும்.ஆனால் கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாடு வேறுபட்டதும்இ வட பகுதி
மக்களுக்கு ஏற்புடையதல்ல என்பதோடு ஏனைய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வேறுபட்ட கருத்திருக்க முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும்.
மேலும் அவரும் அவரின் சகாக்களும் 1990 ம் ஆண்டு முற்பகுதியில் தீவகத்தை தம் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட காலத்திலிருந்து அவர்களின் செயற்பாடுகள் சர்வாதிகாரப் போக்குக் கொண்டிருந்தமையால் வட பகுதி மக்களை மீட்டெடுக்கும் பணியை அவர்களிடம் விட்டுவிட முடியாது.மாற்றுக் கட்சியினரை தேர்தல் காலத்தில் ஆதரவு தேடும் உரிமையை மறுத்தும் பெருமளவில் ஆள் மாறாட்டம் செய்தும் பாராளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் புதிய ஓர் கலாச்சாரத்தை நம் நாட்டில் ஏற்படுத்தியவர்கள் அவர்களே.ஜனநாயக பாராம்பரியத்துக்கு அவர்கள் ஏற்படுத்திய பாதிப்பு விடுதலைப் புலிகளினால் ஏற்பட்டதிலும் பார்க்கக் கூடியதாகும்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: