Saturday, 12 July 2008

நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு எதிர்ப்பு


நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு எதிர்ப்பு.
கருணாநிதி

தமிழக கட்சிகளுடன் இணைந்து முதல்வர் கருணாநிதி போராட்டத்துக்கு ஆதரவு குரல் கொடுக்க வேண்டும். பா.நடேசன்
__________________________________
நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு எதிர்ப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட
நளினி முருகனை விடுதலை செய்யக் கூடாது என்பதே தமிழக
அரசின் நிலைப்பாடு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தனது கணவர் முருகன் மற்றும் இருவருடன், நளினிக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினிக்கு பெண் குழந்தை பிறந்த பிறகு, அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என ராஜீவ் காந்தியின் மனைவியான காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்தார். அந்த அடிப்படையில், அவரது தண்டனை குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், நளினி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். வழக்கமாக ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்படுவார்கள். ஆனால், தான் ஏற்கனவே 17 ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்ட நிலையில், நன்னடத்தை அடிப்படையில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று
மனுவில் கோரியுள்ளார்.
ஆனால், அவரை விடுதலை செய்யக் கூடாது என்றும், இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்
என்றும் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அந்த மனு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மாசிலாமணி ஆஜரானார். மத்திய, மாநில அரசுகள் நளினியை விடுதலை
செய்யக்கூடும் என சுப்ரமணியன் சுவாமி கூறுவது சரியல்ல. நளினியை விடுதலை செய்யக் கூடாது என்பதுதான் தமிழக அரசின்
நிலைப்பாடும் கூட. இந்த வழக்கின் பிரதான மனு மீதான விசாரணை வரும்போது தமிழக அரசு இந்தக் கருத்தைத்தான்
வலியுறுத்தும். எனவே, சுப்ரமணியன் சுவாமியின் மனு தேவையற்றது என்று மாசிலாமணி குறிப்பிட்டார்.
இதையடுத்து, விசாரணை முடிவடைந்து, சுப்ரமணியன் சுவாமி மனு மீதான தீர்ப்பை, நீதிபதி நாகமுத்து ஒத்திவைத்தார்.

தமிழக கட்சிகளுடன் இணைந்து முதல்வர் கருணாநிதி போராட்டத்துக்கு ஆதரவு குரல் கொடுக்க வேண்டும் - நடேசன் கோரிக்கை
வீரகேசரி நாளேடு 7/4/2008 10:02:02 PM -
தமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி குரல் கொடுக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே நடேசன் இவ்வாறு கூறியுள்ளார். இந்த பேட்டியின் விபரம் வருமாறு:
கேள்வி: புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. புலிகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்திப்பதாகச் சொல்லப்படுகிறதே?
பதில்: புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பொய்யான செய்திகளை சிங்கள அரசு தொடர்ந்து பரப்பி வருகிறது. இதில் உண்மை ஏதும் இல்லை. மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாற்றில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் இன்னுயிர்களைத் தேசத்தின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்துள்ளார்கள். கடந்த முப்பது வருடங்களில் பல தளபதிகள் வீரமரணம் அடைந்துள்ளனர். புதிய தளபதிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இது விடுதலைப் போராட்ட வரலாறுகளில் சாதாரண விடயம்.
கேள்வி: இந்திய அரசு சிறிலங்கா இராணுவத்துக்கு ராடார்கள் வழங்குவதும், வானோடிகளுக்கு பயிற்சி அளிப்பதுமாகத் தொடர்ந்து உதவி செய்கிறதே?
பதில்: இலங்கைத் தீவில் சிங்கள இராணுவம் தமிழ் மக்களை தொடர்ச்சியாகக் கொன்றொழித்து வருகிறது. அவ்வாறான ஒரு அரசுக்கு இந்தியா இராணுவ உதவி செய்வது எமக்கு வேதனை அளிக்கிறது. சிங்கள அரசு இன்னும் அதிகளவில் தமிழர்களைக் கொல்வதற்கே இத்தகைய நடவடிக்கைகள் உதவும். இதை இந்திய அரசு விளங்கிக் கொண்டு இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என உலகில் உள்ள எட்டுக் கோடி தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு மருந்துப் பொருட்கள், பெற்றோல், வோக்கி டோக்கி கடத்தியதாகத் தமிழகத்தில் பலர் கைது செய்யப்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகளால் புலிகள் முடக்கப்படுகிறார்களா?
பதில்: அத்தகைய கடத்தல் விவகாரங்களுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இது ஒரு விசமப் பிரசாரம். தமிழீழ ஆதரவாளர்களைப் பயமுறுத்த சொல்லப்படும் பொய்யான பிரசாரங்கள்.
கேள்வி: தமிழக மீனவர்களுக்கு சிறிலங்கா இராணுவம் நிரந்தர அச்சுறுத்தலாகிவிட்டது. சில சமயங்களில் மீனவர்களை விடுதலைப் புலிகள்தான் தாக்குவதாகச் சொல்லப்படுகிறதே?
பதில்: இது எமது போராட்டத்துக்கு எதிரான சக்திகளால் பரப்பப்படும் கட்டுக்கதைகள். தமிழக மீனவர்கள் எமது உடன்பிறப்புக்கள். நாம் என்ன விலை கொடுத்தாவது எமது உடன்பிறப்புக்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்.
கேள்வி: ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் அணுகு முறை எப்படி இருக்கிறது?
பதில்: கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழுணர்வு மிக்கவர். ஈழத்தமிழர் மீது கரிசனை உடையவர். தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்ற வகையில் ஈழத் தமிழரின் துன்பநிலை கண்டு கொதித்துப் போயிருக்கிறார். கலைஞரின் சொந்த உணர்வு தி.மு.க. என்ற பேரியக்கத்தின் உணர்வாகி, மற்ற தமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக, ஈழத்தமிழரின் எதிரிகள் திகைப்படையும் அளவுக்கு எழுச்சி அடைய வேண்டும் என விரும்புகிறோம்

No comments: