Thursday, 10 July 2008

ஈழ தேசத்தை நசுக்கத் துணை போகும் சிங்கள தேசம் சுதந்திரமாக வாழ முடியாது!

ஈழத்தமிழர்களின் பிரிந்துசெல்லும் உரிமையை அங்கீகரிக்கக் கோராத ஆளும்வர்க்க நலன்களுக்கு சேவகம் செய்யும் 'வேலை நிறுத்தங்களால்' சிங்கள தொழிலாள விவசாய வர்க்கங்களின்
நலன்களை காக்க முடியாது.
_______________________________
வேலை நிறுத்தம் வெற்றி—ஜேவிபி;

தோல்வி—அரசு BBC-Tamil
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவிற்கு முகம் கொடுக்கும் நோக்கில் அரச மற்றும் தனியார்துறை
ஊழியர்களுக்கு 5000 ரூபா மாதாந்த சம்பள அதிகரிப்பு
வழங்கப்படவேண்டும், தோட்டத்துறை ஊழியர்களுக்கு நாளாந்த சம்பளம்
500 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டும்
என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி எனப்படும்
ஜே.வி.பி வியாழக்கிழமை நாடுதழுவிய ரீதியில் நடத்திய ஒருநாள் அடையாள பொதுவேலை நிறுத்தம் 70 சதவீத வெற்றி
பெற்றதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது. அதேசமயம் இந்த வேலை நிறுத்தம் தோல்வியடைந்ததாக இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் போராட்டம் ஜே.வி.பியின் இந்த பொதுவேலை நிறுத்த அழைப்பிற்கு பிரதான எதிர்க்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கம்
இதனை முறியடிக்கும்படி தனது உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுத்திருந்தது.
தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பலபாகங்களிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் பல இடபெற்றிருக்கின்ற போதிலும்,
குறிப்பிடத்தக்க அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இடம்பெற்றதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
கொழும்பில் அநேகமாக போக்குவரத்து, பாடசாலை, வைத்தியசாலை, நீர்வழங்கல், மின்சாரம் மற்றும் சுகாதாரம் போன்ற அனைத்து
அத்தியாவசிய சேவைகளும் எவ்வித தடங்கலுமின்றி இடம்பெற்றிருந்தன. கொழும்பு வீதிகளில் வழமைக்கும் அதிகமான அளவில்
இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகள் சேவையிலீடுபடுத்தப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ரயில் சேவைகளும்
பெரும்பாலும் வழமைபோல் இடம்பெற்றன.
தொழிலாளர் ஊர்வலம்
பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் வருகையில் எவ்வித வீழ்ச்சியும் ஏற்படவில்லை என்றும், மாணவர்களின்
வருகையில் ஓரளவு வீழ்ச்சி அவதானிக்கப்பட்டதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலயில் மூத்த பணியாளர்கள், அதிகாரிகள் மட்டுமே பெருமளவில் வேலைக்கு சமூகமளிக்கவில்லை
என வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
வெளிமாவட்டங்களைப் பொறுத்தவரை சில இடங்களில் இந்தப் போராட்டம் ஒரளவிற்கு வெற்றியடைந்திருப்பதாகவும், சில
இடங்களில் தோல்வியில் முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப்
பேச்சாளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா இந்த போராட்டம் தோல்வியடைந்ததாக தெரிவித்தார். இது குறித்த செய்தி களையும்
செவ்விகளையும் நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

சிறிலங்காவில் இடையூறுகளுக்கு மத்தியில் வேலை நிறுத்தம் [வியாழக்கிழமை, 10 யூலை 2008, 05:33 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவில் 5,000 ரூபா சம்பள உயர்வுகோரி தொழிற்சங்கங்கள் இன்று வியாழக்கிழமை நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த
போராட்டம் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி. கட்சியின் ஏற்பாட்டில் அரசாங்க மற்றும் தனியார்துறை தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை
நடத்தின.
வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் பலவும் தமது ஆதவைத் தெரிவித்திருந்தன.
சிறிலங்காவின் சுகாதாரத்துறை, போக்குவரத்து துறை, தபால்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த வேலை
நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
"நாடு முழுவதும் ஒரு லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் முழுமையாகப் பங்கேற்றுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர்
மதிய உணவு இடைவேளையின் போது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தமது அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம்
செய்துள்ளனர்" என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிற்சங்கத் தலைவருமான லால்காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில்...
கொழும்பில் தபால்துறை பணியாளர்களும், சுகாதாரத்துறைப் பணியாளர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமது
முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 95 சதவீதமான தபால்துறை ஊழியர்கள் வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் உள்ள போக்குவரத்து துறையினருக்கு அரசாங்கம் கடுமையாக எச்சரிக்கை விடுத்ததால் அவர்கள் இன்று
வழக்கமான சேவைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதும் வெளிமாவட்டங்களில் போக்குவரத்து செயற்பாடுகள் மந்த
நிலையிலேயே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்பிற்கு வருகை தரும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் எண்ணிக்கை
மிகவும் குறைவாகவே இருந்தது. 65 சதவீதமான போக்குவரத்து துறை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்று
தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் அரசாங்கம் கொழும்பில் இன்றைய நாள் சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குரிய 240 பேருந்துகளை சேவையில்
ஈடுபடுத்தியிருந்தது.
பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் வரவு மிகக்குறைவாகவே காணப்பட்டதால் கல்விச் செயற்பாடுகளும் முடக்கமடைந்திருந்தன.
மலையகத்தில்...
மலையகத்தில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் 90 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மலையக தோட்டத் தொழிலாளர்கள் இன்றைய வேலையை புறக்கணித்ததால் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தோட்ட
நிர்வாகிகளே இன்றைய நாளில் வேலை இடம்பெறாதென அறிவித்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தோட்டத் தொழிலாளர்கள் தமது வேலைக்கு ஏற்ற சம்பளத்தை வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டத்தில்
ஈடுபட்டிருந்தனர். சில இடங்களில் தோட்ட நிர்வாகங்களிடம் தோட்டத்தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி மனுக்களையும்
கையளித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தால் மலையகப் பகுதிகளிலும் போக்குவரத்து மிகக்குறைவாகவே காணப்பட்டது. பாடசாலை மற்றும்
மருத்துவமனைகளுக்கும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வரவு குறைவாகவே இருந்தது.
வடக்கு - கிழக்கில்...
வடக்கு - கிழக்குப் பகுதிகளிலும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
வடக்கு - கிழக்குப் பகுதிகளில் போக்குவரத்து சேவைகள் செயலிழந்திருந்ததுடன் பாடசாலைகளும் இன்றைய நாள் பெருமளவில்
இயங்கவில்லை. அத்துடன் மருத்துவமனைகளிலும் பணியாளர்களின் வரவு மிகக் குறைவாகக் காணப்பட்டதுடன் அரச
அலுவலகங்களும் இயங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் முன் ஆர்ப்பாட்டம்…
இன்றைய வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் முன்பாக திரண்ட
தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அங்கே ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் அங்கிருந்து பேரணியாக லிப்டன் சுற்றுவட்டம் வரை நகர்ந்து
சம்பள அதிகரிப்பு குறித்த தமது கோசங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் சுமார் 1,000 தொழிற்சங்கவாதிகள் பங்குபற்றியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் புறக்கோட்டையில் உள்ள தொடருந்து நிலையத்திற்கு முன்பாக வீதியை மறித்து
ஆர்ப்பாட்டம் செய்வதற்கு திட்டமிட்டிருந்த போதும் இறுதி நேரத்தில் காவல்துறையினரின் கடும் எச்சரிக்கையையடுத்து அது
கைவிடப்பட்டது.
புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கான முன் அனுமதியை பெறாததால் அப்பகுதியில்
இன்றைய நாள் எந்த ஆர்ப்பாட்டமும் நடைபெறக்கூடாது என தெரிவித்த காவல்துறையினர், இதனை மீறி ஆர்ப்பாட்டத்தை
நடத்தினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
அத்துடன் புறக்கோட்டை தொடருந்து நிலையப் பகுதியில் கலகம் அடக்கும் காவல்துறையினரும் கலகம் அடக்கும்
வாகனங்களும் தயார்நிலையில் இருந்தன.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் புறக்கோட்டை தொடருந்து நிலையப்பகுதியில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தை இரத்துச்
செய்தனர்.
வேலை நிறுத்தப் போராட்டம் படுதோல்வி
வேலை நிறுத்தப் போராட்டம் படுதோல்வியில் முடிந்திருப்பதாகத் தெரிவித்துள்ள சிறிலங்கா அரசாங்கம், அரசியல் இலாபம் தேட
முனைந்தவர்களுக்கு கிடைத்த படுதோல்வியே இது என்றும் தெரிவித்துள்ளது.
"கொழும்பிலும் வெளிமாவட்டங்களிலும் அனைத்து துறைகளிலும் இன்றைய நாள் 80 சதவீதமான பணியாளர்கள் கடமைக்கு
சமூகமளித்துள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு வரலாற்றில் கிடைத்த பாரிய தோல்வி இதுவாகும்" என்று
நாடாளுமன்றத்தில் இன்றைய நாள் அமைச்சர் றஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு
[03 - July - 2008]
*சாடுகிறார் ரணில் எம்.ஏ.எம்.நிலாம்
ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், கடத்தல் முயற்சிகளுக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே
ஏற்கவேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கும் அதேவேளை, தாக்குதல், கொலைகளை
உடன்முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனவும் சிறப்புரிமைக் கலாசாரத்தை நிறுத்த வேண்டுமெனவும் சுதந்திர ஊடக அமைப்பின் தலைவர் சுனந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் நாமல் பெரேரா, மகேந்திர ரத்னவீர ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், கடத்தல் முயற்சியை கண்டித்து நேற்று புதன்கிழமை நண்பகல் கொள்ளுப்பிட்டியில் அலரிமாளிகைக்கு அருகில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்களின் ஆர்ப்பாட்டத்தின் போதே ரணில், சுனந்த ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது; ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை இந்த அரசு பதவிக்கு வந்தவுடன் ஆரம்பமாகியது. இன்று அது மிகவும் மோசமான
கட்டத்தை அடைந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட, தாக்கப்பட்ட, கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் விடயத்தில் அரசு இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
ஊடக சுதந்திரம் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களால் சத்தியத்தை எழுத முடியாத நிலை
உருவாகியுள்ளது. உண்மையைச் சொன்னால் 24 மணிநேரத்துக்குள் அந்த ஊடகவியலாளர் காணாமல்போய்விடுகிறார். இந்த நிலை எத்தனை காலத்துக்கு தொடரமுடியும்.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்கவேண்டும். இதனைத் தடுக்க அரசு துரித
நடவடிக்கை எடுக்கத் தவறினால் இவ்விவகாரத்தை சர்வதேச மட்டத்துக்குக் கொண்டு செல்லும் நிலைமை உருவாகலாம்.
மக்களை ஆத்திரமூட்டச் செய்யும் விதத்தில் அரசு செயற்பட்டால் அதன் பின்விளைவுகள் பாரதூரமானவையாக அமையலாம் எனவும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்தார்.
சுனந்த கருத்து
சுதந்திர ஊடக அமைப்பின் பிரதான அமைப்பாளர் சுனந்த தேசப்பிரிய கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
ஊடகவியலாளர்கள் மீது தொடுக்கப்படும் அடாவடித்தனங்களை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. இது ஊடகவியலாளர்களுக்கு பலத்த சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இதுவரையில் பல ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர். அரசு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறிவிட்டது.
நாம் அரசிடம் கேட்பது இரண்டு விடயங்களை மட்டுமே ஆகும். முதலாவது,
படுகொலைக் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்.
அடுத்தது,
சிறப்புரிமைக் கலாசாரத்தை நிறுத்திவிடுங்கள்.
இவை இரண்டும் செய்யப்படாத வரை ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு ஒருநாளும் கிடைக்கப்போவதில்லை.
ஊடகவியலாளர்களின் பொறுமை எல்லை மீறும் நிலைக்கு வந்துவிட்டது. எமது அடுத்த நடவடிக்கை எவ்வாறாக அமையும்
என்பதையிட்டு எம்மால் கூட சிந்திக்க முடியாதுள்ளது.
ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க அனைத்துச் சக்திகளும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தையும் சுனந்த தேசப்பிரிய வலியுறுத்தினார்.

No comments: