நமது தலைவர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள்.
_________________________
எந்த நாட்டுச் சட்டத்துக்கும் விரோதமாக நாம் திரளவில்லை என்ற செய்தியுடன் எமது உரிமையை ஓங்கி ஒலிப்போம்:
யோ.செ.யோகி
[சனிக்கிழமை, 05 யூலை 2008, 05:09 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
எந்த நாட்டுச் சட்டத்துக்கும் விரோதமாக நாம் திரளவில்லை என்ற செய்தியுடன் எமது உரிமையை ஓங்கி ஒலிக்கச் செய்வோம்
என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் கடந்த செவ்வாய்க்கிழமை (01.07.08) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய நேர்காணல்:
பொங்கு தமிழ் நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஒரு விடுதலைப்
போராட்டத்தில் பரப்புரை என்பது எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்தது? பொங்கு தமிழ் நிகழ்வு இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படினும்கூட உலகத்திலுள்ள
தமிழர்கள் ஒன்றுகூடி தங்களுடைய பலத்தை தாங்களே அறிந்துகொள்ளும் ஒரு நிகழ்வாக - ஒரு விடயத்தில் எவ்வளவு
தூரத்திற்கு ஒன்றுபட்டு நிற்கின்றோம் என்பதை அறிந்துகொள்ளும் நிகழ்வாக - இதனை பார்க்கமுடியும். அடுத்து, இவர்கள் தமது
பலத்தை உலகத்திற்கு அறிவிக்கும் நிகழ்வாகவும் இது பார்க்கப்படுகிறது.
பரப்புரையை மேற்கொள்பவர்கள் அதனை மீண்டும் மீண்டும் செய்யும்போதுதான் - அது அரசாக இருந்தாலும் சரி அல்லது நாட்டு
மக்களாக இருந்தாலும் சரி அல்லது பொதுவாக ஒரு நாடு குறித்த திட்டத்தை தொகுப்பவர்களாக இருந்தாலும் சரி - அவர்களது கவனத்தை ஈர்க்கின்றனர். நாங்கள் இத்தகைய பரப்புரையை தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது. இத்தகைய பரப்புரையை
மேற்கொள்ளும்போது - நாங்கள் ஒன்றுபட்டு, ஒருகுரலாக எழுந்து நிற்கிறோம் என்பதைக் காட்டுகின்றபோது - உலகம் நிச்சயமாக
அதனை கவனத்தில் கொள்ளும். உலகம் மட்டுமில்லை, எமது அயல்நாடுகளும் கவனத்தில் கொள்ளும்.
அதேநேரம், இத்தகைய பரப்புரைகள் தமிழீழத்தில் இருக்கும் மக்களுக்கு புத்தூக்கத்தை தருகின்ற ஒரு நிகழ்ச்சியாக, எங்களோடு
எங்கள் மக்களும் எங்களுக்கு பின்னால் - சிக்கல்களுக்கு மத்தியில் - ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்ற உணர்வைத் தருகின்ற ஒரு
நிகழ்ச்சியாக அமைகின்றது.
அந்தவகையில் இது ஒரு சிறப்பான நிகழ்ச்சி, பொதுவான நிகழ்ச்சி, எல்லோருக்கும் பொதுவாக தமிழ்மக்களுக்கு பயன்தரும்
நிகழ்ச்சி என்றே நாங்கள் பார்க்கின்றோம்.
பொங்கு தமிழ் நிகழ்வு முதன்முதலில் என்ன காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது?
எங்களுடைய தன்னுரிமைக்கான கோரிக்கையை முன்வைத்து, தமிழீழ விடுதலைப் புலிகள்தான் மக்களுடைய காவலர்கள்,
அவர்கள் ஒரு விடுதலை அமைப்பு என்பதை உலகம் முழுவதும் உணர்த்துவதற்காகவும் அதற்கும் அப்பால் இந்த மண்ணில்
மிகப்பெரியதொரு இனப்படுகொலை நடக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவும் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
உலகத்தைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் புலிகளை அது கொச்சைப்படுத்துவதை இன்று பார்க்கிறோம், தன்னுரிமையை
மறுத்து நிற்பதை பார்க்கின்றோம்.
நெல்சன் மண்டேலாவைக்கூட அண்மையில்தான் பயங்கரவாதப்பட்டியலில் இருந்து நீக்கினார்கள். இப்படியான செயற்பாடுகள்
வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதாகவே உள்ளன.
தமிழ் மக்கள் தன்னுரிமையை வேண்டுகிறார்களா இல்லையா என்பது குறித்து வேண்டுமானால் ஒரு கருத்துக்கணிப்பை நடத்திப்
பார்க்கட்டும். எழுந்தமானத்திற்கு பேசுவதைவிட்டு, விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் பேராளர்களா? இல்லையா என்பதை
ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி பார்க்கட்டும்.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் உரிமைக்காகத்தான் போராடுகிறோம். ஆகவே, தமிழீழ விடுதலைப் புலிகள்தான் எங்களுடைய
காவலர்கள் என்பதை நாங்கள் ஒன்றுபட்டு கூறும் ஒரு நிகழ்வாகத்தான் பொங்கு தமிழ் நிகழ்வை பார்க்க வேண்டும்.
களத்திலுள்ளவர்களின் பரப்புரைக்கான வீச்செல்லை மட்டுப்படுத்தப்பட்டுள்ளபோதும் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்களின்
பரப்புரைக்கான வீச்செல்லை சர்வதேச சமூகத்தை எட்டக்கூடிய வகையில் இருக்கின்றது. எனவே புலம்பெயர் தமிழ் மக்கள் தமது
இந்த வீச்செல்லையை எப்படி பாவிக்க வேண்டும்?
சிறிலங்கா அரசாங்கம் ஒரு திட்டத்தின் அடிப்படையில் இப்போது இயங்குவதாகத் தெரிகிறது. கிழக்கை முதலில் பிடிப்பது, அடுத்து
மன்னார் கரையோரங்களைக் கைப்பற்றுவது, பின்னர் பூநகரியைப் பிடிப்பது, அடுத்து சுண்டிக்குளத்திலிருந்து திருகோணமலை வரை
இடங்களைக் கைப்பற்றுவது என்ற திட்டமே அதுவாகும்.
அதன்பின்னர், இங்கே மக்களுக்கு அழிவுகள் ஏற்படும்போது அதற்காக குரல்கொடுக்கும் புலம்பெயர் தமிழ் மக்களை அடக்கி
ஒடுக்கி அவர்களது குரல் எழும்பாத வண்ணம் அவர்களை பயங்கரவாதிகள் எனக்கூறி பார்த்துக்கொள்ள வேண்டுமென்று
சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டதாகவும் அறிகின்றோம். தற்போது நடக்கின்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது அப்படித்தான்
தெரிகின்றது.
உலக மக்களைப் பொறுத்தவரை அந்தந்த நாடுகள் பேசுகின்ற மனித விழுமியங்களை அந்த மக்கள் அப்படியே ஒழுகி நிற்பார்கள்.
இங்கே இனப்படுகொலை நடக்கிறது, மனிதர்கள் உரிமைக்காகத்தான் போராடுகின்றார்கள், இந்த போராட்டம் நியாயமானதுதான்
என்று அந்த மக்களுக்கு தெரிகின்றபோது அவர்கள் அந்தந்த அரசுகளை நோக்கி கேள்விகளைக் கேட்பார்கள்.
ஈராக் மீது ஒரு பெரிய பரப்புரை செய்துகொண்டுதான் போர் தொடுக்கப்பட்டது. அதன்பின், உண்மை அம்பலமாக அந்த மக்கள்
பொய்யான பரப்புரைக்கு எதிராக நிற்கின்றனர். அந்தப்போருக்கு பின்னால் நின்ற பல தலைவர்கள் இன்று ஆட்சியை இழப்பதையும்
நாங்கள் பார்க்கின்றோம்.
ஆகவே, அத்தகைய மக்களை விழித்து - உண்மையில் நலனோம்பு நோக்கத்தில் செயற்படுகின்ற மனிதர்களை விழித்து - பலருக்கு
பல விடயங்கள் தெரியாமல் உள்ளது, அவர்களுக்கும் அவற்றை உணர்த்தும் விதமாக இப்படியான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தும்போது நிச்சயமாக உலக அரசுகள் அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்.
இன்னொரு வகையில் பார்த்தால், அடக்கப்படுகின்ற போது நாங்கள் அடங்கமாட்டோம், எழுவோம், மீண்டும் மீண்டும் எழுவோம்,
மிகப்பெரியளவில் எழுவோம் என்று நாங்கள் காட்டவேண்டும்.
உலக அரசுகளில் ஒரு போக்கு இருக்கிறது. ஜனநாயக முறைகளுக்கு ஊடாகப் போராடுகின்றவர்களை சட்டம் இதுதான் என்று
அடக்கப்பார்ப்பார்கள். இல்லையெனக்கூறி அதற்கு மேலும் அவர்கள் எழுந்தால் ஒரு பேச்சுவார்த்தை மூலம் அதற்கு ஒரு இணக்கம் காண்பார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அந்த வகையிலான ஒரு போக்கைத்தான் அவர்கள் கையாண்டு வந்தார்கள்.
இத்தகைய போராட்டங்களை அடக்குவதற்கு பல பரப்புரைகளைச் செய்வார்கள். ஆனால், அதையும் மீறி நாங்கள் பொங்கியெழுந்து
எங்கள் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவோமாக இருந்தால் அவர்கள் எங்கள் உணர்வுகளுக்கு நிச்சயம் மதிப்பளிக்கவே முனைவர்.
அதற்காக எங்களில் ஒருசிலர் சிறைக்குச் செல்ல வேண்டி வரலாம். துன்பப்பட வேண்டி வரலாம். ஆனால் அவற்றையெல்லாம்
பொருட்படுத்தாது நாங்கள் செயற்பட வேண்டும். அந்தந்த நாடுகளின் சட்டத்திற்கு முரணாக நாங்கள் போராட்டத்தை நடத்தவில்லை. அவர்களுடைய சட்டங்களுக்கு உட்பட்டு நியாயபூர்வமான கோரிக்கைகளைத்தான் எழுப்புகிறோம்.
எங்கள் மக்களுக்காக நாங்கள் குரல்கொடுப்பது பிழை என்று சொல்வார்களாக இருந்தால் அந்த நாட்டு மக்கள்கூட அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, இடர் வந்தாலும் - மிகப்பெரிய அளவில் சிக்கல் வந்தாலும் - பொங்கி எழுந்து தமிழர்கள் தங்கள் குரலை உலகம் முழுவதும் வெளிப்படுத்துவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து எங்கள் மீதான கவனத்தை
ஈர்ப்பதற்கு உதவும்.
அத்தகையதொரு நிலை களத்தில் உள்ளவர்களுக்கு ஒரு புத்தூக்கமாக இருக்கும்.
புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் மீது உலக நாடுகள் தற்போது சட்டரீதியாகக் கொடுக்கும் அழுத்தங்கள் மேற்படி திட்டத்தின் அடிப்படையில்தான் என்று கருதலாமா?
பொதுவான கோட்பாடு ஒன்றை அவர்கள் பரிசீலிக்கிறார்கள். அது எவ்வளவு தூரம் உண்மை என்று பார்க்க வேண்டும். அதாவது
இருதரப்பினர் சண்டையிட்டுக்கொண்டிருந்தால் ஒரு தரப்பை பலவீனப்படுத்திவிட்டு ஒரு தீர்வை முன்வைக்கும் - காலங்காலமான
- ஒரு போக்கை இன்றைக்கும் அனைத்துலக சமூகம் கொண்டிருக்கிறது.
இதனை அமைதிக்கான போர் (WAR FOR PEACE) என்று சொல்கிறார்கள். அதற்கான ஒரு சோதனைக் களமாகத்தான் சிறிலங்கா
தேசமும் தமிழீழமும் பார்க்கப்படுகிறது. எங்களைப் பொறுத்தவரை, எவ்வளவுதான் அழுத்தங்கள் வந்தாலும் தடைகள் வந்தாலும்
நாங்கள் போராடுவோம். நாங்கள் சந்திக்கும் அழுத்தத்தில் ஒருவீதமான அழுத்ததை சந்திப்பதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள்
தயாராக இருப்பார்களாயின் அவர்கள் எழுச்சி கொள்வார்கள்.
காந்தியை எடுத்துக்கொண்டால் அவருடைய போராட்டத்தில் அவரை சிறையில் அடைத்தார்கள். அவரைப்போன்று எத்தனை பேரை
சிறையில் அடைக்க முடியும். எத்தனை சட்டங்களைக் கொண்டுவர முடியும். அந்த சட்டங்களுக்குள்ளாகவே அவர்கள் பேசுகின்ற
மனித உரிமை மீறல்களுக்கு இருக்கின்ற விழுமியங்களை நாங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டிவிட முடியும்.
1958 ஆம் ஆண்டு நாங்கள் சிங்களம் கற்கமாட்டோம் என்றுகூறி கொள்கைக்காக வேலை இழந்தவர்களும் உள்ளனர்.
கொள்கைக்காக அவர்கள் நாட்டில் அவர்களது சட்டங்களுக்கு உட்பட்டு போராடுகின்றபோது அதைக் கண்டித்து சிறையில் அடைப்பார்களாக இருந்தால் - அந்த சிறை வாழ்வையும் ஒரு போராட்டமாகக் கைக்கொண்டு நாங்கள் போராடுவோமாக இருந்தால் - எங்கள் முயற்சி ஒரு கட்டத்திற்கு மேல் செல்லாது என்பதை அவர்கள் உணர்வார்கள். அந்த உணர்வு மூலம் அவர்களுக்கு நல்ல அறிவு பிறக்கும். எங்களுக்கும் நல்ல வாழ்வு பிறக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இத்தகைய அழுத்தங்களுக்கு ஊடாக அனைத்துலக சமூகத்திற்கு நாங்கள் தொடர்ச்சியாக கூறவேண்டிய விடயத்தை விரிவாகக்
கூறுங்கள்?
பரப்புரைகள் மூலமாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதன் மூலமாகவும், ஆர்ப்பாட்டங்களைச் செய்வதன்
மூலமாகவும், மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்குவதன் மூலமாகவும் நாங்கள் எமது விடயங்களை தெரியப்படுத்தலாம்.
அரசாங்கம் எத்தகைய அடக்குமுறையை எங்கள் மீது பயன்படுத்துகிறது, நாங்கள் கோருவதில் ஏதேனும் பிழைகளுண்டா? எங்கள்
போராட்டத்தில் உள்ள நியாயத்தைப் பாருங்கள் என்று நாங்கள் அனைத்துலக சமூகத்திற்கு அறிவூட்டலாம்.
கனடாவில் எங்களுடைய மக்கள் மிகவும் பலமாக இருக்கிறார்கள். சில இடங்களில் ஆட்சியை மாற்றக்கூடியளவுக்கு பலமாக
இருக்கிறார்கள். ஆகவே நாங்கள் அங்கே சரியான முறையில் செயற்படுவோமாக இருந்தால் - முனைந்து நின்று செயற்படுவோமாக இருந்தால் - அடிபணியமாட்டோம் என்ற எண்ணத்தை அந்நாட்டு அரசுக்கு உணர்த்துவோமாக இருந்தால் - நிச்சயமாக அவர்கள் மாறுவார்கள். அவர்கள் போக்கில் ஒரு மாற்றம் இருக்கிறது. எனினும், அதில் ஒரு தடுமாற்றம் இருக்கிறது.
முன்னரைப் போன்று அவர்கள் சில விடயங்களைச் செய்தாலும்கூட, தாங்கள் செய்வது சரியல்ல என்ற ஒரு தடுமாற்றத்திற்கு
அவர்கள் உள்ளாகியுள்ளனர். அப்படி தடுமாறுகின்றவர்களை சரியான வழிக்கு திருப்ப வேண்டிய பணி எங்களுக்கு இருக்கின்றது.
அதேநேரம், நாங்களும் தடுமாறக்கூடாது, பயந்துவிடக்கூடாது, அடங்கிவிடக்கூடாது.
தமிழீழ மண்ணில் ஏறத்தாழ 170 கிலோமீற்றர் கோட்டில் நாளாந்தம் சண்டையிடுகிறோம். நாளாந்தம் வீரச்சாவடைகிறோம்.
உலகமெல்லாம் வாழ்கின்ற எங்களுடைய தமிழ்மக்கள் விடுதலை பெற்று சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்குதான்
நாளாந்தம் இந்த வீரச்சாவுகள் இடம்பெறுகின்றன. அதை எங்களுடைய தமிழ்மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த வீரச்சாவுகளுக்கு ஊடாகவும் நாங்கள் உலகத்திற்கு அடிபணியாமல் எழுந்து நிற்கின்றோம் என்பதை உணர்ந்து, எங்கள் பின்னால் அணிதிரண்டு, உலக நாடுகள் போடுகின்ற இந்த அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நிற்பார்களானால் நிச்சயமாக நாங்கள் வெற்றிபெறுவோம்.
தமிழ்மக்கள் தொடர்ச்சியாக இத்தகைய போராட்டங்களிலும் பொங்குதமிழ் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டாலும் அனைத்துலக
சமூகம் அதை கரிசனையோடு பார்க்க தவறுவதாக ஒரு தோற்றப்பாடு உள்ளது. இந்நிலையில், அனைத்துலக சமூகம் எம்பக்கம்
திரும்புமென எதிர்பார்ப்பது சரியான எதிர்பார்ப்பாக இருக்குமா?
எங்களது போராட்டத்திற்கு ஊடாக ஒரு விடயத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேசியத் தலைவர் குறிப்பிடுவதைப் போல்,
நாங்கள் முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும். 1972 காலப்பகுதியில் அவர் போராட்டத்தை தொடங்கினாலும் 1983 வரை அது
ஒரு பெரிய போராட்ட வடிவத்தை எடுக்கவில்லை. எனினும், அதற்குப் பின்னர் ஒரு பெரிய போராட்ட வடிவம் வந்தது.
ஆட்லறிகளோடு ஒரு மரபுவழிப் படையாக கடற்படை, வான்படை கொண்டு வளர்ந்து நிற்போம் என்ற எண்ணத்தோடு இந்த
போராட்டம் தொடங்கப்படவுமில்லை, அப்போது அப்படி நாங்கள் நினைக்கவுமில்லை.
விடுதலையை வேண்டுகின்ற தமிழரசுக் கட்சியானாலும், கூட்டணிக் கட்சியானலும் சரி இங்கே என்ன புகையிலைதானே
இருக்கிறது, பொருளாதாரமா இருக்கிறது என்று ஒரு காலத்தில் கேட்டார்கள். இன்று உலகில் நாங்கள் மிகவும் பொருளாதார
வளம்மிக்க, பலம் உள்ள மக்களாக இருக்கிறோம். ஆகவே, சில விடயங்களை எதிர்வுகூற முடியாது.
"ஒப்பரேசன் லிபரேசன்" நடவடிக்கைக்கு பின்னர் நாங்கள் மிகப்பெரியதொரு வீழ்ச்சியைக் கண்டோம். மில்லர் போன்ற
கரும்புலிகளின் தாக்குதல்களினால் மீண்டும் நிமிர்ந்தோம். இந்தியப்படையும் வந்தது. அப்போது நாங்கள் பெரிய வீழ்ச்சியைக்
கண்டுவிட்டோம் என்று கூறினார்கள். நாங்கள் எழுந்தோம். "ஜெயசிக்குறு" காலப்பகுதியில் புலிகள் நாளை அழிந்துவிடுவார்கள்
என்று கூறினார்கள். ஆனாலும் நாங்கள் எழுந்தோம்.
நாங்கள் இவ்வளவு காலம் போராடி வருகின்ற போதெல்லாம் அனைத்துலக சமூகம் கண்டுகொள்ளவில்லை. ஆனால்,
"தீச்சுவாலை" நடவடிக்கைக்கு பின்னால் அனைத்துலக சமூகம் எமது போராட்டத்தைக் கண்டுகொண்டு ஒரு கூட்டாட்சிக்காவது
போகவேண்டும் என்ற முடிவுக்கு வந்ததை நாங்கள் மறுத்துவிட முடியாது.
ஆரம்ப நாட்களில் நாங்கள் போராடியபோது தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பணம் தருவார், இந்தியா எங்களுக்கு பயிற்சி தரும்
என்றோ நாங்கள் எண்ணவில்லை. இந்தியாவோடு போரிடும்போது எங்களுடைய பரம எதிரியான சிங்கள தேசம் எங்களோடு
பேசும், சிங்கள தேசம் எங்களுக்கு படைக்கலம் தரும் என்று எண்ணிக்கொண்டு போராடவில்லை.
நாங்கள் நினைத்ததெல்லாம் போராடிக்கொண்டே இருக்கவேண்டும். அது விடமுடியாத இலக்கு. போராடாவிட்டால் எங்களுக்கு
வாழ்வில்லை.
இந்த எண்ணத்தோடு புலம்பெயர் வாழ் தமிழ்மக்களும் பரப்புரையை நடத்தினால் அது இன்றோ அல்லது நாளையோ பயன்தரும்.
அதற்கு எங்களுடைய போராட்டமே சான்றாக நின்கின்றது. நாங்கள் தளர்ந்து போகவில்லை.
20 ஆயிரம் மாவீரர்களை இழந்திருக்கிறோம். மக்களை இழந்திருக்கிறோம். பெருமளவான சொத்துக்களை இழந்திருக்கிறோம்.
நண்பர்களை இழந்திருக்கிறோம். உறவினர்களை இழந்திருக்கிறோம். அப்படியிருந்தும் நாங்கள் தளர்ந்துபோனோமா? இல்லையே.
எங்களைப் பொறுத்தவரை எங்கள் மீது திணிக்கப்படுகின்ற எதனையும் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
எங்களுடைய விடுதலையை நோக்கி போராடுவோம், அதற்காக அனைவரும் வீரச்சாவடைவதற்கும் தயாராக உள்ளோம். அதுதான்
எங்களுடைய நிலைப்பாடு. இப்படியாக நாங்கள் போராடியபடியால்தான் பெரும் அழிவு என்று கூறப்பட்ட விடயங்களில் இருந்து
வென்று வந்திருக்கிறோம். அப்படியாகத்தான் எங்களது போராட்டம் விளங்குகிறது.
போராடுகின்றவன் நிச்சயமாக வெற்றிபெறுவான். அதற்கு காலம் கனியவேண்டும். அந்த காலம் எப்போது கனியும் என்பது வேறு
விடயம். அந்த கனிகின்ற காலத்திற்காக நாங்கள் போராடத்தான் வேண்டும். இல்லையேல் எதுவுமே நடக்காது.
எனவே, எங்களுடைய போராட்டத்தை ஒரு சான்றாகக் கொண்டு - நாளாந்தம் போராளிகள் செய்கின்ற தற்கொடைகளை, மக்கள்
செய்கின்ற ஒப்படைப்புகளை கருத்திற்கொண்டு - புலம்பெயர்வாழ் மக்கள் தளர்வடையாமல் உறுதியாக நின்று
போராடுவார்களாயின் அதற்கு நிச்சயமாக பலன் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடன்தான் நாங்கள் எங்கள்
வாழ்க்கையைத் தொடரவேண்டும்.
(புலம்பெயர்வாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவரது கேள்வி) பொங்குதமிழ் நிகழ்வுகளில் இளையோர் பங்குபற்றுவதன்
அவசியத்தை விளக்க முடியுமா?
அழகான தமிழ் பேசுவதற்காக முதலில் உங்களை பாராட்ட விரும்புகிறேன். புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மொழியில்
சிக்கல்படுவதை நாங்கள் அறிவோம். அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பினும் அவர் தமிழில் அழகாக அந்த கேள்வியைக்
கேட்டதற்காக அவரை நான் பாராட்ட விரும்புகிறேன்.
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த மொழி, இன்றும் வாழும் மொழி. அந்த மொழியை நாங்கள் மறந்துவிட்டு இருக்க
முடியாது. அந்த மொழியின் பெருமையை நாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒன்றை நாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
எங்கள் மொழிக்குதான் வேர் இருக்கின்றது. மற்ற மொழிகளுக்கு வேரில்லை.
எனவே, மொழியின் பெருமையறிந்து புலம்பெயர் வாழ் இளந்தலைமுறை அதனை கற்றறிந்து கொள்வது அவசியம். இனி
உங்களது கேள்விக்கான பதிலைக் கூறுகிறேன்.
50 ஆயிரம் ஆண்டுகள் அழிவின்றி வாழும் தமிழின் எழுச்சி, தமிழீழ தன்னிச்சைக்கான எழுச்சி, தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ்
மக்களின் காவலர்கள் என உலகிற்கு பறைசாற்றும் நிகழ்ச்சி, அதற்கு அப்பாற்பட்டு ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் தமிழினம்
ஒன்றுதிரண்டு தன்பலத்தை தான் உணர்ந்து உலகிற்கு அந்த பலத்தை அறியத்தரும் நிகழ்ச்சி. இப்படி பல்வேறு கோணங்களில்
அந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.
இத்தகைய நிகழ்ச்சி எதற்காக என்று உங்களது பெற்றோரை கேளுங்கள். அவர்கள் விளக்கம் தருவார்கள். அதனடிப்படையில் இந்த
போராட்டத்திற்கான நியாயத்தை, நீங்கள் அதற்கு அளிக்க வேண்டிய பங்களிப்பை வழங்க வேண்டும். ஏனெனில் உங்கள்
கைகளில்தான் இனிமேல் இந்த போராட்டம் இருக்கிறது. அடுத்த தலைமுறை என்று கூறப்படும் உங்களது கையில்தான் இந்த
போராட்டத்தின் வெற்றி இருக்கிறது.
நீங்கள் இருக்கும் நாட்டு மொழி உங்களுக்கு தெரியும், அந்த நாட்டினுடைய பண்பாடு தெரியும், அந்த மக்களோடு இலகுவாக
உங்களால் ஊடாட முடியும். எனவே உங்களுக்கு ஊடாக எங்களின் குரல் அந்த மக்களை இலகுவாகச் சென்றடையும். நீங்கள்
செல்லும் இடமெல்லாம் இந்த கருத்துக்களை விதைக்க முடியும். இளைய தலைமுறையான நீங்கள் எழுந்து நின்றால் அந்த நாடு
உங்களை எதுவுமே செய்யமுடியாது. ஏனெனில் நீங்கள் அந்த நாட்டிலே பிறந்தவர்கள், அந்த நாட்டில் வளர்ந்தவர்கள். 50 ஆயிரம்
ஆண்டுகளாக வாழும் மொழியின் சொந்தக்காரர்கள் நீங்கள்.
அந்த உணர்வோடு நீங்கள் எழுந்து நிற்பீர்களாக இருந்தால் -
உங்கள் கருத்துக்களை நீங்கள் சந்திப்பவர்களுக்கு பரப்பி நிற்பீர்களாக இருந்தால் -
போராட்டத்தின் நியாயத்தை புரிந்துகொண்டு ஒன்றுபட்டு நிற்பீர்களாக இருந்தால் -
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட இத்தகைய எழுச்சி என்பது நாங்கள் இந்த போராட்டத்தை வெற்றிகொள்ள
உதவும்.
பொங்குதமிழ் நிகழ்வுகளின் ஊடாக தேசியத் தலைமையும், போராளிகளும், தாயக மக்களும் எத்தகைய உத்வேகத்தை
பெற்றுக்கொள்ள முடியும்?
பல்வேறு நாடுகளில் இடம்பெறும் பொங்குதமிழ் நிகழ்வுகளில் பேசப்படும் விடயங்களை தாயத்தில் "புலிகளின்குரல்" ஊடாக
நாங்கள் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. பொங்குதமிழ் நிகழ்ச்சி என்பது புலம்பெயர் வாழ் மக்கள் வசிக்கும் நாடுகளில்
நடக்கின்ற எழுச்சி என்பதை நாங்கள் அறிந்து வைத்திருக்கின்றோம். அது எங்களுக்கு ஒரு புத்தூக்கமாகத்தான் இருக்கிறது.
நாங்கள் யாருமில்லாத ஏதிலிகள் போல் இல்லை, எங்களுக்கு பின்னால் ஒரு பெரிய ஆற்றல் இருக்கிறது. புலம்பெயர் வாழ் தமிழ்
மக்களுடைய பங்களிப்பு, அவர்களின் உதவிகள் ஊடாகத்தான் எங்களுடைய போராட்டம் இவ்வளவு தூரம் வளர்ந்து நிற்கிறது.
புலம்பெயர் வாழ் தமிழ்மக்களின் அரசியல் பணியின் ஊடாகத்தான் இந்த போராட்டத்தின் நியாயம் உலகம் முழுவதும் எடுத்துச்
செல்லப்படும்.
எனவே புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளே இருக்கின்ற பிரிவினைகளை விட்டுவிட்டு தமிழர்களுக்கான
தமிழீழ நாட்டை வன்பறித்து நிற்பவர்களை கலைப்பதற்கான பொருளாதார வளத்தையும், உணர்வு ரீதியான பலத்தையும்
ஒன்றுபட்டு நின்று தருகின்றபோது நாங்கள் எழுந்து நிற்போம்.
இங்கே உணர்வு என்பது முக்கியம். அத்தகைய உணர்வுக்கு ஊடாக நாங்கள் பெற்றுக்கொள்ளும் புத்தூக்கம் என்பதும் முக்கியம்.
அந்தவகையில் பொங்குதமிழ் எழுச்சி என்பது எங்களுக்கு ஒரு புத்தூகதூத்தை தருகின்றது. எங்கள் பின்னால் எங்கள் மக்கள்
அணிதிரண்டு நிற்கின்றார்கள் என்ற அந்த உணர்வைத் தருகின்றது.
சிறிய நிகழ்ச்சியானாலும் சரி, பெரிய நிகழ்ச்சியானாலும் சரி எங்கள் போராட்டத்தின் குரல் கேட்கிறது என்ற உணர்வைத்
தருகின்றது. எனவே நீங்கள் தொடர்ந்தும் போராட வேண்டும். எங்களுக்காக குரல்தர வேண்டும். அதை வெவ்வேறு வடிவில் நடத்த
வேண்டும். அதனூடாக எங்களுடைய தாயகம், தன்னுரிமை ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் சிலர் அரசியல் ரீதியான கருத்துக்களால் முரண்பட்டு விலகி நிற்கின்றனர். எனினும் இத்தகைய
பொங்கு தமிழ் நிகழ்வுகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்குமான நிகழ்வுகளாக நாங்கள் பார்க்க வேண்டுமா?
கோயில்களில் திருவிழா நடக்கும், பொங்கல் நடக்கும், ஒன்றுகூடல் நிகழ்வுகள் நடக்கும். இந்த நிகழ்வுகளில் அனைவரும் தங்கள்
வேறுபாடுகளை மறந்து ஒன்றுகூடி மகிழ்ந்து புத்தூக்கம் பெறுவதை நாங்கள் பார்க்கிறோம்.
அதுபோன்றே தமிழுக்காக, எங்கள் நாட்டுக்காக எழுப்பப்படும் பொங்குதமிழ் நிகழ்வுகளிலும் அனைவரும் தங்கள் வேறுபாடுகளை
மறந்து பங்கேற்க வேண்டும். இங்கு அவர் பெரிதா?, இவர் பெரிதா? என்பதல்ல முக்கியம். நாங்கள் எங்கள் நாட்டுக்காக ஒன்றுபட்டு
நின்று, ஒருமித்த குரலை எழுப்ப வேண்டும் என்ற உணர்வே முக்கியமானது.
நாங்கள் தனித்து நின்று எதனையும் செய்யமுடியாது என்பதை வரலாற்றில் பார்க்கிறோம். டக்ளஸ் தேவானந்தாவால் எதுவும்
செய்யமுடியாது, பிள்ளையானால் எதுவும் செய்ய முடியாது, ஆனந்தசங்கரி ஏதோ கதைத்துக்கொண்டிருந்து விட்டு இப்போது
அவரே டக்ளஸ் தேவானந்தாவைக் குறை கூறுகிறார்.
ராஜபக்சவுடன் சேர்ந்து அவர் எதுவும் தருவார் அதனை வாங்கிக்கொள்ளலாம் என்று இவர்கள் நினைக்கின்றனர். இப்படியான
பொய்மைக்குள் இருக்கும் ஒரு வாழ்வு எங்களுக்கு வேண்டாம். சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை, அவர்களிடம் கேட்டு
எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் தரப்போவதுமில்லை.
துட்டகைமுனுவின் தாயாரான விகாரமாதேவி தமிழனின் இரத்தத்தை குடித்துத்தான் கருவுற்றாள் என்று மகாவம்சம் கூறுகின்றது.
ஆகவே, தமிழனின் இரத்தத்தை குடித்து கருவுற்று எழுந்து இந்த மண்ணை ஆக்கிரமிக்க ஒருவர் வருவதே வரலாறாக உள்ளது.
அப்படியான மரபுக்குள்ளே ஊறி தமிழர்களை அழிக்க வேண்டும் என்று நிற்கும் சிங்கள தேசத்திடம் பேசியோ அல்லது
ஏதோவொரு முறையில் கேட்டோ எந்தவொரு உரிமையையும் பெற்றுவிட முடியாது என்பது எங்களுக்கு தெரிந்த விடயம். அதில்
நாங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி நம்பிக்கை வைத்தால்தான் இந்த போராட்டம் வெற்றிபெறும்.
ஆகவே இந்த சலசலப்பில் தயங்கி நிற்கின்றவர்கள் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒருமித்த குரலாக, ஒன்றுபட்டு நிற்கும்
குரலாக, வேறுபாடுகளை மறந்து நிற்பவர்களாக இந்த பொங்குதமிழ் நிகழ்வுகளில் குரல் எழுப்ப வேண்டும்.
இந்த மண்ணில் வீரச்சாவடைபவர்களுக்கு மதிப்பளித்து கரும்புலிகளாக வீரச்சாவடைபவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்புக்
கொடுத்து, இந்த போராட்டத்தில் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும், பல துன்பங்களைச் சந்தித்தும் ஒன்றுபட்டு நிற்கின்ற
மக்களுக்கு மதிப்பளித்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தமது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு ஒரு குரலாக பொங்குதமிழ்
நிகழ்வுகளில் குரலெழுப்ப வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாகும்.
புலம்பெயர் தமிழ்மக்கள் வாழும் பல நாடுகளில் புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாக உள்ளதால் புலம்பெயர் தமிழ்மக்கள்
நடத்தும் பொங்குதமிழ் நிகழ்வுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று
வலியுறுத்துவதை தவிர்க்கப்பார்க்கிறோம். இது ஒரு சரியான அணுகுமுறையா?
உலக நாடுகள் வேண்டுமென்றே சில வேலைகளைச் செய்யும். குறிப்பாக உலகத்தில் இருக்கின்ற தலைவர்களில்
மரியாதைக்குரிய தலைவரை அமெரிக்கா சில நாட்களுக்கு முன்னர்தான் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது ஒரு
வேடிக்கையான செய்தி.
திருமணம் செய்தால்தான் பைத்தியம் தீருமென்று சிலர் சொல்வார்கள். பைத்தியம் தீர்ந்தால்தான் திருமணம் செய்யலாம் என்று
சிலர் சொல்வார்கள். இப்படி சிலர் வாதப்பிரதிவாதங்களை வைத்துக்கொண்டு இருப்பார்கள். அதனால்தான் அவர்களை இந்த
பொங்குதமிழ் நிகழ்வின் ஊடாகச் சேர்க்கிறோம். எவருடன் பேசுவதென ஒரு கருத்துக்கணிப்பை வைத்தால் மக்கள் அதற்கு பதில்
கூறுவார்கள்.
உலக நாடுகள் தடைசெய்து விட்டன என்பதற்காக புலிகள் தமிழ்மக்களுடைய பேராளர்களாக இல்லை என்று ஆகிவிடாது.
உலக நாடுகள் தடைசெய்துவிட்டன என்பதற்காக புலிகளின் போராட்டம் நின்றுவிடப்போவதில்லை.
உலக நாடுகள் தடைசெய்துவிட்டன என்பதற்காக சிங்களவர்கள் புத்தராக மாறிவிடப்போவதில்லை.
உலக நாடுகள் தடைசெய்துவிட்டன என்பதற்காக நாங்கள் அடிபணிந்து அவர்கள் தருவதை பிச்சை எடுக்கவேண்டியதில்லை.
உலக நாடுகளில்தான் பிழை இருக்கிறது. உலக நாடுகள் கூறுகின்றமை சரிதானா என்பதை மக்களிடையேயான கருத்துக்
கணிப்பாக ஏன் நடத்தக்கூடாது என்று கேட்டால் அப்போது அந்த நாடுகள் சிக்கல்படும். உண்மை என்னவென்று தெரியும்.
தூங்குவதுபோல பலர் நடித்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களை விழித்தெழ வைப்பதற்கு அந்த நாட்டு மக்களாலும் அங்கு
வாழ்பவர்களாலும்தான் முடியும்.
ஈராக் மீது படையெடுக்கும்பேர்து பலரும் பல நியாயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஈராக் மீதான படையெடுப்பிற்கான
காரணம் பொய் என்று பலரும் கூறினர். அது பொய் என்பது ஈராக் மீது படையெடுத்த நாடுகளுக்கும் தெரியும். ஆனாலும்
படிப்படியாக அவர்கள் தமது இலக்கை அடையமுடியாமல்போனதன் ஊடாக - இழப்புகளின் ஊடாக - பல உண்மைச் செய்திகள்
வருகின்றபோது, மக்கள் விழித்தெழுகின்றபோது பொய் கூறியவர்கள் பொய்யர்களாகி ஆட்சியிலிருந்து அகற்றப்படுகின்ற சூழல்
வரும்.
ஆகவே, எங்களைப் பொறுத்தவரை அனைத்துலக நாடுகளுக்கு மீண்டும் மீண்டும் இடித்துரைக்க வேண்டிய தேவையிருக்கிறது.
அதேவேளையில் அனைத்துலக நாடுகளின் தலைவர்களை யார் தெரிவு செய்தார்களோ அவர்களுக்கு ஊடாக அந்தந்த நாடுகளின்
தலைவர்களுக்கு சில செய்திகளைச் சொல்ல வேண்டிய தேவையிருக்கிறது. அதற்காக காலம் எடுக்கலாம். சில வேளைகளில்
அதற்காக நாங்கள் உயர்ந்த அளவில் துன்பப்படவேண்டி வரலாம். ஆனால், நம்பிக்கையை கைவிடாது எமது முயற்சியைத் தொடர
வேண்டும்.
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ணிலும் சிட்னியிலும் எதிர்வரும் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ள
பொங்குதமிழ் நிகழ்வுகளின் ஊடாக அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் அவுஸ்திரேலிய அரசியல் கட்சிகளுக்கும் நாங்கள்
கூறவேண்டிய செய்தி என்ன?
புலம்பெயர்ந்து இடம்பெயர்ந்து ஏதிலிகளாக வந்த மக்களுக்கு அடைக்கலம் தந்ததற்காக, அந்த மக்களுக்கு வாழ்வு தந்தமைக்காக
அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறவேண்டும். அங்கே வாழ்கின்ற மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கான ஒரு
ஆட்சி இருப்பதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும். இந்த மண்ணில் நடப்பது போன்று ஒரு இனப்படுகொலை
நடக்காமல் இருப்பதற்கான அரசியல் யாப்புகளும், மக்கள் அமைப்புகளும் அங்கே இருப்பதற்கு அவர்களை நாங்கள் பாராட்ட
வேண்டும்.
ஆனால் எங்கள் மண்ணில் இவை இல்லை. நாங்கள் வாழ்வதற்கு முடியாமல் துன்பப்படுகிறோம். அழிவுறுகிறோம் என்பதை
அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லருக்கு எதிராக அவுஸ்திரேலியா எப்படிப் போராடியதோ -
ஹிட்லர் ஒரு பேரினவாதி, போராட்டத்தை தவிர வேறுவழியில்லை என்பதை உணர்ந்துகொண்டு கோடிக்கணக்கான மக்கள் அந்த
போராட்டத்திற்காக உயிர் தந்தார்களோ -
அந்த போராட்டத்தின் மூலம் ஹிட்லர் எப்படி அழிக்கப்பட்டானோ அது போல -
இங்கே இருக்கின்ற ராஜபக்சவும் ஒருவகையில் ஹிட்லரைப் போன்றவர்தான். பேரினவாதம் பேசிக்கொள்வார்கள். இந்த மண்ணில்
தமிழர்கள் இருக்கக்கூடாது என்று கூறுகின்றனர். மனித உரிமைகள் இங்கே மதிக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட ஹிட்லரை ஒத்த மனிதருக்கு பின்னாலே அவுஸ்திரேலிய அரசு நிற்கலாமா? நிற்கக்கூடாது. அதேவேளையில்
அவுஸ்திரேலிய அரசு மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறது, உலகின் விடுதலைப் போராட்டங்களை மதிக்கின்றது என்ற
நம்பிக்கையோடு -
உலகத்தின் திறமையான பண்பாடுகளைக் கொண்டு வளர்ந்து நிற்கும் ஒரு மேற்குலம் என்ற நம்பிக்கையோடு நாங்கள் எமது
குரலை வைக்கிறோம் என்றுகூற வேண்டும். நாங்கள் அவர்களின் சட்ட திட்டங்களை மீறவில்லை. அவர்கள் தருகின்ற ஜனநாயக
உரிமைக்குள் நின்றே எங்கள் மக்களுக்கான குரலை எழுப்புகின்றோம் என்பதையும் அவர்களுக்கு கூறவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக எது நடந்தாலும் எங்களுக்காக, எங்கள் மக்களின் விடுதலைக்காக, எங்கள் நாட்டின் விடுதலைக்காக
நாங்கள் போராடுவோம்.
சட்டங்களைக் கொண்டு எவ்வளவுதான் எங்கள்மீது அடக்குமுறை செய்தாலும் -
நியாயங்கள், உரிமைகள், முறைகளுக்காக போராடுகிறோம் என்று நீங்கள் கூறினீர்களோ அதேமுறைகளுக்காக நாங்களும்
போராடுவோம். அதற்காக நீங்கள் தண்டித்தால் நாங்கள் அந்த தண்டனையை ஏற்றுக்கொள்வோம். உங்கள் சட்டங்களுக்கு
இசைவாக தொடர்ந்தும் போராடுவோம்.
அந்த போராட்டத்தின் மூலம் எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தின் குரலை மீண்டும் மீண்டும் வைப்போம். தயவுசெய்து
நீங்கள் எங்களது குரலுக்கு மதிப்பளியுங்கள். எங்கள் போராட்ட உணர்வுக்கு மதிப்பளியுங்கள். தொன்மையான தமிழர்களின்
பண்பாட்டுக்கு மதிப்பளியுங்கள். உலகத்தின் மொழிகளுக்கெல்லாம் தாயான மொழி அழிவதை, அழிக்கப்படுவதை, அந்த பண்பாடு
சிதைக்கப்படுவதை பார்த்து நிற்கப் போகிறீர்களா என்று கேளுங்கள்.
அந்த வகையிலே அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்களது சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் பேசுகின்ற
விழுமியங்களுக்கு ஊடாக நாங்கள் குரல் எழுப்புவோம். சிலவேளைகளில் எங்களுக்கு தடைகள் வரலாம். சில வேளைகளில்
அவர்கள் எங்களை அடக்கக்கூடும். ஆனால் நாங்கள் எழுந்து நின்று குரல் கொடுப்போமாக இருந்தால் அவுஸ்திரேலியா வாழ்
மக்கள் இந்த உரிமைகள் நியாயமானவை என்பதை உணர்ந்து அந்த அரசுக்கு கூறுவார்கள். அவர்களாலே தெரிவு
செய்யப்படுகின்ற அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு செவி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
எனவே, தமிழீழ மக்களே உங்கள் பணி தொடரட்டும். நீங்கள் எங்களோடு நிற்கின்றீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் நிற்கிறோம்.
இந்த மண்ணின் விடுதலைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நாங்கள் எங்கள் மீது, எங்கள் விருப்பமின்றி
திணிக்கப்படுகின்ற எந்த தீர்வையும், ஆயிரமாயிரம் படை வந்தாலும் நாங்கள் அதற்கு அடிபணிந்தோ சரணடைந்தோ
விட்டுக்கொடுக்கப்போவதில்லை.
இந்த மண்ணின் விடுதலைக்காக ஒன்றுபட்டு போராடுவோம். அதற்காக குரல்கொடுப்போம். அந்த வகையில் இந்த பொங்குதமிழ்
நிகழ்ச்சி உரமூட்டும்.
தமிழக கட்சிகளுடன் இணைந்து முதல்வர் கருணாநிதி போராட்டத்துக்கு ஆதரவு குரல் கொடுக்க வேண்டும் - நடேசன் கோரிக்கை
வீரகேசரி நாளேடு 7/4/2008 10:02:02 PM -
தமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி குரல் கொடுக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்
பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே நடேசன் இவ்வாறு கூறியுள்ளார். இந்த
பேட்டியின் விபரம் வருமாறு:
கேள்வி: புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. புலிகள் தொடர்ந்து பின்னடைவைச்
சந்திப்பதாகச் சொல்லப்படுகிறதே?
பதில்: புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்காகப் பொய்யான செய்திகளை சிங்கள அரசு
தொடர்ந்து பரப்பி வருகிறது. இதில் உண்மை ஏதும் இல்லை. மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாற்றில்
இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தங்கள் இன்னுயிர்களைத் தேசத்தின் சுதந்திரத்துக்காக அர்ப்பணித்துள்ளார்கள். கடந்த
முப்பது வருடங்களில் பல தளபதிகள் வீரமரணம் அடைந்துள்ளனர். புதிய தளபதிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இது விடுதலைப்
போராட்ட வரலாறுகளில் சாதாரண விடயம்.
கேள்வி: இந்திய அரசு சிறிலங்கா இராணுவத்துக்கு ராடார்கள் வழங்குவதும், வானோடிகளுக்கு பயிற்சி அளிப்பதுமாகத் தொடர்ந்து
உதவி செய்கிறதே?
பதில்: இலங்கைத் தீவில் சிங்கள இராணுவம் தமிழ் மக்களை தொடர்ச்சியாகக் கொன்றொழித்து வருகிறது. அவ்வாறான ஒரு
அரசுக்கு இந்தியா இராணுவ உதவி செய்வது எமக்கு வேதனை அளிக்கிறது. சிங்கள அரசு இன்னும் அதிகளவில் தமிழர்களைக்
கொல்வதற்கே இத்தகைய நடவடிக்கைகள் உதவும். இதை இந்திய அரசு விளங்கிக் கொண்டு இராணுவ உதவிகளை நிறுத்த
வேண்டும் என உலகில் உள்ள எட்டுக் கோடி தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
கேள்வி: விடுதலைப் புலிகளுக்கு மருந்துப் பொருட்கள், பெற்றோல், வோக்கி டோக்கி கடத்தியதாகத் தமிழகத்தில் பலர் கைது
செய்யப்படுகிறார்கள். இந்த நடவடிக்கைகளால் புலிகள் முடக்கப்படுகிறார்களா?
பதில்: அத்தகைய கடத்தல் விவகாரங்களுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இது ஒரு விசமப்
பிரசாரம். தமிழீழ ஆதரவாளர்களைப் பயமுறுத்த சொல்லப்படும் பொய்யான பிரசாரங்கள்.
கேள்வி: தமிழக மீனவர்களுக்கு சிறிலங்கா இராணுவம் நிரந்தர அச்சுறுத்தலாகிவிட்டது. சில சமயங்களில் மீனவர்களை
விடுதலைப் புலிகள்தான் தாக்குவதாகச் சொல்லப்படுகிறதே?
பதில்: இது எமது போராட்டத்துக்கு எதிரான சக்திகளால் பரப்பப்படும் கட்டுக்கதைகள். தமிழக மீனவர்கள் எமது உடன்பிறப்புக்கள்.
நாம் என்ன விலை கொடுத்தாவது எமது உடன்பிறப்புக்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்.
கேள்வி: ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் அணுகு முறை எப்படி இருக்கிறது?
பதில்: கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழுணர்வு மிக்கவர். ஈழத்தமிழர் மீது கரிசனை உடையவர். தான் ஆடாவிட்டாலும் தசை
ஆடும் என்ற வகையில் ஈழத் தமிழரின் துன்பநிலை கண்டு கொதித்துப் போயிருக்கிறார். கலைஞரின் சொந்த உணர்வு தி.மு.க.
என்ற பேரியக்கத்தின் உணர்வாகி, மற்ற தமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து, எமது விடுதலைப் போராட்டத்திற்கு
ஆதரவாக, ஈழத்தமிழரின் எதிரிகள் திகைப்படையும் அளவுக்கு எழுச்சி அடைய வேண்டும் என விரும்புகிறோம்.
இந்திய நிலைப்பாடு குறித்த சந்தேகங்களும் கேள்விகளும்
அமிர்தஸன் 7/4/2008 3:37:50 PM -
தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி சமீபகாலமாக பலருடைய மனதில் அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலேசகர் அம்.கே. நாரயணன்
தலைமையிலான மூன்று பேர்கொண்ட இந்திய அதிகாரிகள் தலைமையிலான குழு கொழும்புக்கு வந்து சென்ற பின்னர்
சந்தேகங்கள் வலுவடைந்துள்ளன. அவ்வாறான சந்தேகங்களையும் கேள்விகளையும். இரண்டு வகைப்படுத்தலாம்.
ஒன்று நீதியான அரசியல் தீர்வுக்கு இந்தியா உதவிபுரியுமா? இரண்டாவது விடுதலை புலிகளை இராணுவ ரீதியில் பலவீனமடைய
செய்வதற்குரிய வகையில் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கப்போகின்றதா?
இந்தியாவினுடைய நடைமுறை அரசியலை அவதானிக்கும்போது இந்த இரு கேள்விளும் முக்கியத்துவம் பெறுகின்றது. 1991 ஆம்
ஆண்டின் பின்னர் தமிழர் விவகாரத்தில் இந்தியா ஒரு வகையான தலையிடா கொள்கையை பின்பற்றி வந்தது எனலாம்.
இந்தியாவினுடைய அரசியல் அதிகார சட்டமுறைமைகள் வெளியுறவு கொள்கைகள் என்பவற்றை அவதானிக்கும்போது இன
விடுதலை போராட்ட இயக்கம் ஒன்றிற்காக அல்லது ஒடுக்கப்படுகின்ற இனத்திற்காக பேசுகின்ற அல்லது ஆதரவு வழங்கக்கூடிய
பக்குவம்,இருக்கிறது.ஆனால் நடைமுறையில் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடிய நிலமையும் அங்கு உள்ளது.
அமரர் இந்திராகாந்தி பாக்கிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் பிரித்துக்கொடுத்தார் என்பது வேறு. அல்லது 1980களில் தமிழ்
இயக்கங்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்பட்டது ஆகவே விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா ஊக்கம் கொடுத்தது என
சிலர் நியாயப்படுத்தலாம். இந்தியாவின் அதிகாரமையங்களுக்கு உட்பட்ட அல்லது இந்திய பாதுகாப்பு துறையின் பிடிக்குள்
இணைத்துக்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள்தான் அவை. தனது நலனை மையப்படுத்திய தூரநோக்குடைய சிந்தனைகளுடன்
கூடிய செயற்பாட்டு திறன் கொண்ட சிறப்பு இந்திய அதிகாரமையத்துக்கு உண்டு.
இந்தியாவின் இந்த வரலாற்றை, அனுபவத்தை படிப்பினையாக கொண்டதுதான் தமிழத்தரப்பினுடைய சமகால அரசியல்
அணுகுமுறைகள் எனலாம். இருந்தாலும் இனநெருக்கடி தீர்வு விடயத்தில் இந்தியாவினுடைய ஆசீர்வாதம் தேவையென சில
மிதவாத தமிழ் அரசியல்வாதிகள் விரும்புகின்றனர், எதிர்பார்க்கின்றனர். பிரியங்கா நளினியை சந்தித்தவுடன் ராஜீவ்காந்தி கொலை
வழக்கிலிருந்து நளினி விடுதலை செய்யப்படவுள்ளார் என்ற எதிர்வுகூறல்களும் நம்பிக்கைகளும் அநாவசியமற்ற முறையில்
விதைக்கப்படுகின்றன.
நளினியை சந்தித்த பின்னர்தான் விடுலைப்புலிகள் மீதான தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அரசாங்கத்தினால்
நீடிக்கப்பட்டிருக்கின்றது. இந்தியா நீதியான முறையில் தமிழர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோருபவர்கள் அல்லது
இந்தியாவினுடைய ஆசீர்வாதத்தை எதிர்பார்ப்பவர்கள் இந்த தடை நீடிப்பு தொடர்பாக என்னத்தை உணர்ந்திருக்கின்றார்கள்?
அல்லது தடை நீடிப்பு மூலமாக இந்தியா தமிழ்த்தரப்புக்கு எதை உணர்த்தியிருக்கின்றது? கடந்தகால படிப்பினைகள்
அனுபவங்களிலிருந்து இதற்கான பதிலை எடுத்துக்கொள்ள முடியும்.
தமிழ்த்தேசியத்திற்கு சாதகமாக தமிழகத்திலும் புதுடில்லியிலும் எழக்கூடிய ஆதரவு உணர்வுகளை மட்டுப்படுத்தக்கூடிய அல்லது
அவ்வாறான சந்திப்புகள் மூலமாக தமிழர் விவகாரத்தில் நீதியாக செயற்படுவோம் என்பதை வெளிக்காட்டி அதன் ஊடாக
உணர்வாளர்களை தங்கள் பக்கம் திசை திருப்புகின்ற, நம்பவைக்கின்ற ஏற்பாட்டு முயற்சியாகத்தான் அதனை பார்க்க முடியும்.
தனது மகள் கனிமொழியை பயன்படுத்தி ஈழத்தமிழருக்கு ஆதரவாக மிகக் கடுமையாக பேசவைத்து வைக்கோ, பழ.நெடுமாறன்
ஆகியோருக்கு தமிழக மக்கள் வழங்கிய ஆதரவுகளை திராவிடமுன்னேற்றக்கழகத்திற்கு திசைதிருப்பிய கலைஞர் கருணாநிதியின்
நடவடிக்கை போன்றதுதான் பிரியங்கா நளினி சந்திப்பு. அதனைவிட வேறு எதுவும் அந்த சந்திப்பில் இல்லை.
இந்தியாவினுடைய கடந்த கால அனுபவம் என்பது அல்லது இந்தியாவினுடைய நிலைப்பாடானது தமிழ்த்தரப்புக்கு எந்த
வகையிலும் ஒருபோதும் சாத்தியமாகாது என்று தெரிந்தும் அவ்வாறு இந்தியாவினது ஆசீர்வாதத்தை வேண்டி நிற்பது அல்லது
கற்பனைகளை வளர்த்துக் கொள்வதில் பயன் இல்லை. அதேவேளை இந்தியா நீதியான முறையில் செயற்பட வேண்டும் என
கோருவதிலும் பல தர்ம சங்கடங்கள் உண்டு. குறிப்பாக இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கே அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட
நிலையில் ஈழத்தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை இந்தியாவினால் எப்படி வழங்க முடியும்?
தமிழ் மக்களுக்கு எதிரான மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றபோதும் அதற்கு நேரடியான
கண்டனங்களை தெரிவிக்க விரும்பாத இந்தியா ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக
வாக்களித்து தனது உள்ளார்ந்தத்தை வெளிக்காட்டியுள்ளது. தனது எதிரிநாடுகள் என்று தெரிந்தும் சீனா, பாக்கிஸ்தானிடம்
இலங்கை அரசாங்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்வது குறித்து இந்தியா மௌனமாகவே இருக்கின்றது. விடுதலை புலிகளை
இராணுவ ரீதியாக பலமிழக்கச் செய்யவேண்டும் என்பது இந்திய பிராந்திய நலன்.
ஏவ்வாறாயினும் கொள்வனவு செய்யப்படும் ஆயுதங்களை தனக்கு எதிராக திருப்பக்கூடிய சக்தி இலங்கை இராணுவத்திற்கு
இல்லை என்று இந்திய பாதுகாப்பு துறைக்கு நன்கு தெரியும். ஆகவே புலிகளை இராணுவ ரீதியில் பலம் இழக்க செய்வதற்கு
எந்த பேயிடம் இருந்தாவது இலங்கை ஆயுதங்களை கொள்வனவு செய்யட்டும் என்பது இந்தியாவினுடைய மற்றும் ஒரு
நிலைப்பாடு. எனவே இந்தியாவினுடைய நீதியான தலையீட்டை கோருவது அல்லது ஆசீர்வாதத்தை எதிர்பர்ப்பது அரசியல் ரீதியாக
ஏற்புடையதாகாது என்பதற்கு இவை உதாரணங்களாகும்.
தற்போதைய நிலையில் இருந்து புலிகள் இராணுவ ரீதியில் மேலும் பலமடையப்போகின்றார்கள் இராணுவ சமநிலை
மேலோங்கலாம் என்ற எதிர்பார்ப்பு பல மட்டங்களிலும் நிலவுகின்றதுபோல் தெரிகின்றது. புலிகள் இன்னமும் நிலப்பரப்பை
கைப்பற்றும் தாக்குதல் நடத்தவில்லை அவாகள் தற்பாதுகாப்பு தாகக்குதல்களையே நடத்துகின்றனர் என்று இராணுவ
ஆய்வாளர்கள் அவ்வப்போது கூறிவருகின்;றனர். இது இலங்கை பாதுகாப்பு தரப்புக்கும் நன்கு புரிந்திருக்கலாம்.
இலங்கை அரசாங்கம் புலிகளிடம் தோற்றுப்போனால் பயங்கரவாதம் சர்வதேசத்தை வெற்றி கொண்டமைக்கு சமனாகி விடும்
என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் கூறியமையானது புலிகளுக்கு எதிரான போரில் ஒட்டுமொத்த சர்வதேசத்தின்
உதவிகளை கோருவதற்கு ஒப்பானது. குறிப்பாக இந்தியாவின் உதவியை கோருவதுதான் அந்த வேண்டுகோள். இந்தியாவின்
முன்று உயர் அதிகாரிகளின் திடீர் விஜயமும் அதன் அடிப்படையில் அமைந்ததுதான் என்று யாரும் சந்தேகம் கொண்டாலும்
ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
No comments:
Post a Comment