Saturday 30 August, 2008

நளினி:தமிழக அரசின் ''சண்டாள தர்மம்''

''சண்டாள தர்மம்''
நளினியை விடுதலை செய்யக் கூடாது: தமிழக அரசு
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 29, 2008
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரை விடுதலை செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தெரிவித்தது.
ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியும், அதேபோல ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரும் தங்களை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்து வருகிறார். இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மாநில அரசின் உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று மாநில அரசு கொள்கை அளவில் முடிவெடுத்துள்ளது.
குற்றவியல் நடைமுறை சட்டம் 435ன் படி சிபிஐ புலன் விசாரணை செய்த வழக்கில் மாநில அரசு தலையிட முடியாது. மேலும் நளினி உள்ளிட்ட 3 பேரும் தங்களை விடுதலை செய்யக்கோரி ஆலோசனை குழு முன்பு மனுத் தாக்கல் செய்திருந்தார்கள்.
இந்த விண்ணப்பங்களை ஆலோசனை குழு நிராகரித்து முடிவெடுத்துள்ளது. அந்த குழுவில் 7 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற மனுதாரரின் கூற்று தேவையற்ற ஒன்று. மூன்று பேர் இருந்தாலே போதுமானது.
மேலும், அவர்கள் 3 பேரின் மனுக்களை நிராகரித்த ஆலோசனை வாரியம், இதற்கு 3 காரணங்களை குறிப்பிட்டுள்ளது. முன்னாள் பிரதமரை கொலை செய்தது, திட்டமிட்டு கொடூரச் சம்பவத்தை நிகழ்த்தியது, விடுதலைப்புலிகள் மீதான உணர்வு இன்னும் குறையாமல் உள்ளது என்று ஆலோசனை வாரியம் கூறியுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
நளினியின் நன்னடத்தைக்காக அவருடைய சிறை தண்டனை காலத்தில் 545 நாட்களை சிறைத்துறை குறைத்துள்ளது. சிறையில் பட்டப்படிப்பை முடிக்கும் கைதிகளுக்கு தண்டனையை குறைக்கலாம். ஆனால் நளினி ஏற்கனவே பட்டப்படிப்பை முடித்திருப்பதால் தண்டனையை குறைக்க முடியாது.
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்கள் தண்டனையை குறைக்கலாம் என்பது நிர்வாக காரணமாக எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அது பொருந்தாது.
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோட்ஸே உச்சநீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்தார். அவர் ஆயுட்காலம் முடியும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நளினி 17 ஆண்டுகள் சிறையில் இருப்பதாகவும், தண்டனை காலத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கூறி உள்ளார். ஆனால் உண்மையில் அவர் 4 முறை சிறை விதிமுறைகளை மீறி உள்ளார்.
ஆயுள் தண்டனை காலமான 14 ஆண்டுகள் முடிந்தும் ஜெயிலில் உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதுக்கும் உரிய தண்டனையாகும்.
ஆகவே, நளினி உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் நீதிபதி நாகமுத்துவிடம் கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற நீதிபதி செப்டம்பர் 17ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நளினி தாக்கல் செய்துள்ள மனுவின் நகல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கில் சுப்பிரமணிய சாமிக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே அவருக்கு நகல் வழங்க இயலாது என்றார்.

No comments: