Tuesday, 25 November 2008

ஈழச்செய்திகள் 241108

குஞ்சுப்பரந்தன் நோக்கிய மும்முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 40 படையினர் பலி; 80 பேர் படுகாயம்; 8 உடலங்கள் மீட்பு
[திங்கட்கிழமை, 24 நவம்பர் 2008, 05:14 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
குஞ்சுப்பரந்தன் நோக்கிய சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் சிறிலங்கா படையினர் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 80-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் எட்டு உடலங்கள் உள்ளிட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:15 நிமிடமளவில் உருத்திரபுரம் பகுதி ஊடாக குஞ்சுப்பரந்தன் நோக்கி மும்முனைகளில் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.
இம்மும்முனை முன்நகர்வுகளுக்கு எதிராக பிற்பகல் 2:30 நிமிடம் வரை விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி படையினரின் நகர்வுகளை முறியடித்தனர்.
இதில் 40-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 80-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் எட்டு உடலங்களும் பெருமளவிலான படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, கொல்லப்பட்ட படையினரின் பல உடலங்கள் களமுனையில் சிதறிக் காணப்படுவதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுமாறு அழுத்தம் கொடுத்த மன்மோகன் சிங்
[ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2008, 01:02 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தேவையான அரசியல் தீர்வுத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசு பேச்சுகளை நடத்த வேண்டும் என மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கான தீர்வுத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாரில்லை எனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் பேச்சுக்களை தொடங்க வேண்டும் எனவும் மகிந்தவிடம் மன்மோகன் சிங்க் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விரைவில் அழைப்பதாக இந்தியப் பிரதமரிடம் மகிந்த தெரிவித்தார்.
எனினும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களை வெளியேற்றும் பொருட்டு நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல் ஒன்றினை நடத்துமாறு ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்று அரசில் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
*******************************************************
கருணாநிதி ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டி
கேள்வி: உடனடி தீர்வு, போர் நிறுத்தம்தான் என்றால் நோர்வே தூதுக்குழு தலையிட்டதுபோல் இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கப்படுமா?
பதில்: இப்பொழுது நோர்வே மாதிரி எல்லாம் ஆகாது. அப்படி பேச்சு எதுவும் இல்லை.கேள்வி: போர் நிறுத்தம் உண்டாபதில்: கிட்டத்தட்ட அவர் சொல்கிற மாதிரி 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிற ஒரு போராட்டம் இது. இது நான்கு நாட்களில் முடியாது. நாம் போர் நிறுத்தம் வேண்டும் என்று சொன்னது, பொதுமக்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றுவதற்காக தான்.இப்பொழுது சிறிலங்கா அரசு, நாங்கள் பொதுமக்களை நிச்சயமாக தாக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை அளித்திருக்கிறார்கள்.
***************************************************************
கருணாநிதியை தோற்கடித்த மகிந்த: கொழும்பு வார ஏடுகள் புகழாரம் [திங்கட்கிழமை, 24 நவம்பர் 2008, 10:27 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]
தமிழ்நாட்டின் அழுத்தங்களை முறியடித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்திய மத்திய அரசின் அனுசரணையுடன் போரை தொடர்ந்து முன்னெடுத்து வருவது தென்பகுதியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில, சிங்கள வார ஏடுகள் தமது மகிழ்சியை தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அந்த வார ஏடுகள் மேலும் தெரிவித்துள்ளதாவது: மகிந்த ராஜபக்ச கடந்த 17 ஆம் நாள் தனது 63 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்த பிறந்த நாள் அவருக்கு இரண்டு மகிழ்ச்சியான தகவல்களை கொண்டிருந்தன. ஒன்று பூநகரி பிரதேசத்தை படையினர் கைப்பற்றியது. இரண்டாவது தமிழ்நாட்டின் அழுத்தத்தை முறியடித்தது. போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறும், வான் தாக்குதல்களை நிறுத்துமாறும் தமிழக மக்களும் முதல்வர் கருணாநிதியும் மேற்கொண்ட அழுத்தங்களை மகிந்த வெற்றிகரமாக தோற்கடித்து போரை தொடர்ந்து மேற்கொண்டு வருவது தென்பகுதி ஊடகங்களில் பாரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடம்பெற்று வரும் போருக்கு இந்திய மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியதால் உற்சாகம் அடைந்த மகிந்த விடுதலைப் புலிகளை சரணடையுமாறு அறைகூவல் விடுத்துள்ளார் என அந்த ஏடுகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஆட்சி புரியும் இந்திய மத்திய அரசின் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் தமிழகம் ஏறத்தாழ 39 உறுப்பினர்களை கொண்டுள்ள போதும் அதன் வலிமையை புறந்தள்ளி சிறிலங்கா அரசு இந்திய மத்திய அரசை தனது பிடிக்குள் கொண்டு வந்துள்ளது பெரும் ஆச்சரியமானது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் நிறைகொண்ட வெடிமருந்துகள் வன்னியில் வீசப்பட்டுள்ளன: முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர [சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 09:26 மு.ப ஈழம்] [பி.கெளரி]
வன்னி மீது இதுவரையில் 14.4 மில்லியன் கிலோ நிறைகொண்ட வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் இது ஐப்பான் நாட்டில் உள்ள ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் நிறைக்கு ஒப்பானது எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
வன்னிப் பகுதி மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் 14.4 மில்லியன் கிலோ நிறைகொண்ட குண்டுகளை வீசியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச பெருமையாக கூறியுள்ளார்.
14.4 மில்லியன் கிலோ நிறைகொண்ட தற்போதைய நவீன வெடிமருந்தானது 18 கிலோ தொன் ரிஎன்ரி வெடிமருந்துக்கு இணையானது.
ஹிரோசிமாவில் அமெரிக்கா வீசிய அணுகுண்டின் நிறையான 13 தொடக்கம் 18 கிலோ தொன் ரிஎன்ரி வெடிமருந்துக்கு ஒப்பானது.
எனவே, ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் நிறைகொண்ட வெடிமருந்துகள் வன்னியில் வீசப்பட்டுள்ளன என்றார் அவர்.

சிறிலங்கா சட்டமா அதிபருடன் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு [வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008, 11:33 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் தென்பகுதி சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 1,200 வரையான தமிழ் அரசியல் கைதிகள் மீதான விசாரனைகளை துரிதப்படுத்தி விடுதலை செய்வது குறித்து சிறிலங்காவின் சட்டமா அதிபர் ரி.ஆர்.டி சில்வாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பிரதித்தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் ஆகியோரே சட்டமா அதிபர் ரி.ஆர்.டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கைதிகளை அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி அந்த மாவட்ட நீதிமன்றங்களின் ஊடாக விசாரணைகளை நடத்தி துரிதமாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சில கைதிகள் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் கூட ஆரம்பிக்கப்படவில்லை என்றும் வேறு சில கைதிகளுக்கு பத்து வருடங்களாக நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த சட்டமா அதிபர் ரி.ஆர்.டி சில்வா, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததாக கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, வெலிக்கடை சிறையிலிருந்த 74 தமிழ் அரசியல் கைதிகள் முன்னறிவித்தல் எதுவுமின்றி திடீரென கொழும்பில் உள்ள மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சமூக விரோத குற்றச்செயல் புரிந்த சிங்கள கைதிகளுடன் சேர்த்தே இந்த 74 தமிழ் அரசியல் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
தனியான பிரிவில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்படுவது வழமையாகும். ஆனால், மகசீன் சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்ட இந்த கைதிகள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி சிங்களக் கைதிகளுடன் நெருக்கமான சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக்குழுவிடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.
அநேகமான கைதிகள் வடக்கு-கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: