Monday, 22 December 2008

கிளிநொச்சி: போர்க்களச் செய்திகள் (221208)

கிளிநொச்சியை நோக்கிய சிறிலங்கா படையினரின் 5 முனைமுன்நகர்வுகளில் 2 முனை முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 பேர் படுகாயம் [திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2008, 07:31 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மூன்று முனைகளில் முறியடிப்பு தாக்குதல்கள் தொடர்கின்றன. இதில் இதுவரை 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர்
படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
கிளிநொச்சியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் அதன் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள் ஊடாக மூன்று முனைகளிலும் குஞ்சுப்பரந்தன் பகுதியில் இரண்டு முனைகளிலும் இன்று திங்கட்கிழமை காலை 5:00 மணிக்கு செறிவான அட்லெறி, பல்குழல் வெடிகணை மற்றும் கனரக பீரங்கிகளின் கடும் சூட்டாதரவுடகளுடன் முன்நகர்வுத் தாக்குதலை சிறிலங்கா படையினரின் 57, 58 ஆம் டிவிசன்களின் படையினர் மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வு தாக்குதல்களுக்கு எதிராக தீவிர முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தி வருகின்றனர்.
கிளிநொச்சிக்கு தெற்காக இரணைமடுப் பகுதி நோக்கி சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு ஏற்கனவே முறியடிக்கப்பட்டு விட்டது.
கிளிநொச்சிக்கு மேற்கில் உருத்திரபுரம் பகுதி ஊடாக படையினர் மேற்கொண்ட முன்நகர்வும் முறியடிக்கப்பட்டு விட்டது.
மேலும் மூன்று முனைகளில் படையினரின் நகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்றைய முறியடிப்புத் தாக்குதல்களில் படையினர் தரப்பில் இதுவரை 100 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமான காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்ட படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் களமுனையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட 2 கிலோ மீற்றர் முன்னரண் விடுதலைப் புலிகளால் மீட்பு: 60 படையினர் பலி; 150 பேர் காயம்; 10 உடலங்கள் மீட்பு [சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2008, 04:34 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் வல்வளைத்த 2 கிலோ மீற்றர் முன்னரண் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 10 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 6:30 நிமிடம் தொடக்கம் முற்பகல் 11:30 நிமிடம் வரை விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் மூலம் இந்த முன்னரண் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட முன்னரணே விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலினால் படையினர் பலத்த இழப்புக்களுடன் அவர்கள் கைப்பற்றியிருந்த அரண் பகுதியை கைவிட்டு ஓடினர்.
இதன் பின்னர் அந்த இரண்டு கிலோ மீற்றர் நீளமான முன்னரண் பகுதி விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.
இதில் சிறிலங்கா படைத்தரப்பில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 10 உடலங்கள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடைப்பட்ட களமுனையில் மேலும் பல படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் சிதறிக் கிடக்க காணப்படுகின்றன.
இந்த அதிரடித் தாக்குதலின் போது படையினருக்கு ஒத்துழைப்பாக வான்படையின் வானூர்திகள் செறிவான தாக்குதலை நடத்தின என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட 38 உடலங்கள் இரண்டு கட்டங்களாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இன்று எடுக்கப்பட்ட 10 உடலங்களும் நாளை கையளிக்கப்படும் என வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.

பரந்தன் சமரில் 200 படையினர் பலி; 53 பேரை காணவில்லை: பாதுகாப்பு இணையத்தளம் [திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2008, 09:05 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மற்றும் நீவில் பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வரும் உக்கிர மோதல்களில் 200-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 53 பேர் காணாமல் போய் உள்ளனர் என கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பரந்தன் மற்றும் நீவில் பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வரும் மோதல்களில் 200-க்கும் அதிகமான படையினர்கொல்லப்பட்டுள்ளனர். 53 படையினரின் உடலங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
பரந்தன் பகுதியில் உள்ள "எல்" வடிவ மண் அணையை உடைக்கும் முயற்சிகளை படைத்தரப்பு மேற்கொண்ட போதே இம்மோதல்கள் வெடித்திருந்தன.
சில பகுதிகளில் மண் அணைகளின் உயரம் 20 அடிகளாக உள்ளன. அங்கு விடுதலைப் புலிகள் கனரக இயந்திர துப்பாக்கிகளை நிறுவியுள்ளனர்.
மண் அணைகளுக்கு முன்பாக அகழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவை நீரால் நிரம்பியுள்ளன. செங்குத்தாக மேல் உயரும் மண் அணைகளை தாண்டுவது கடினமானது.
தொடர்ச்சியான மழை மேலதிக பாதிப்புக்களை படைத்தரப்புக்கு ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலை ஜனவரி மாதம் நடுப்பகுதி வரை தொடரலாம்.
மண் அணைகளை படையினர் அண்மிக்கும் வரை காத்திருக்கும் விடுதலைப் புலிகள் பின்னர் கனரக துப்பாக்கிகளை கொண்டு அவர்களை தாக்கி அழிக்கின்றனர்.
இந்நடவடிக்கைகளில் படையினரின் பல குழுக்கள் அழிவை சந்தித்துள்ளன. பரந்தன் மற்றும் நீவில் பகுதிகள் பரந்த வெளிகளை கொண்டது. எனவே அங்கு நகர்வது கடினமானது.
நாளாந்தம் இந்த மண் அணைகளை கைப்பற்றும் முயற்சியாக படைத்தரப்பு 10-15 தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. வான்படையும் நாளாந்தம் 10-15 வரையிலான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை, விடுதலைப் புலிகள் எவ்வாறு பெருமளவிலான பீரங்கி எறிகணைகளை பயன்படுத்துகின்றனர் என்பதற்கான விடை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் தொடர்ச்சியாக ஆயுத விநியோகங்களை பெற்று வருகின்றனர். அண்மையில் முல்லைத்தீவு கடற்பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுத கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடைபெற்ற வேளை அந்த கப்பலில் இருந்த கணிசமான ஆயுத தளபாடங்கள் இறக்கப்பட்டு விட்டது.
ஜெயரட்ன மலர்ச்சாலையில் படையினரின் 400 உடலங்கள்
அதேவேளை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நடைபெற்ற இரு நாள் மோதல்களில் கொல்லப்பட்ட 400 படையினரின் உடலங்கள் பொரளையில் உள்ள ஜெயரட்ன மலர்ச்சாலைக்கு கடந்த வியாழக்கிழமை (18.12.08) கொண்டு வரப்பட்டதாக கொழும்பு தகவல்களை ஆதாரம் காட்டி பாதுகாப்பு இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

மழையாய் பொழிந்த எறிகணைகளுடன் அலை அலையாய் தாக்கிய புலிகள்: சிறிலங்கா ஊடகங்கள் பிரமிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2008, 09:24 மு.ப ஈழம்] [பி.கெளரி]

கிளிநொச்சி மற்றும் கிளாலி களமுனைகளில் சிறிலங்கா படையினர் நடத்திய வல்வளைப்பு நடவடிக்கைகளை புலிகள் எதிர்கொண்டு தாக்குதல் நடத்தியதை சிறிலங்காவின் கொழும்பு ஊடகங்கள் மிகப் பிரம்மிப்புடன் செய்தியாக வெளியிட்டுள்ளன. "லக்பிம" வார ஏட்டில் வெளியான பாதுகாப்பு பத்தியில் இடம்பெற்றுள்ளதாவது:
சிறிலங்கா படையின் 53 மற்றும் 55 ஆவது படையணிகள் மிக உக்கிர மோதல்களை கடந்த வாரம் சந்தித்துள்ளன. பாதகமாக காலநிலையும், சதுப்பு நிலங்களும் காயமடைந்த படையினரை அகற்றுவதில் பாரிய நெருக்கடிகளை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தன.
கிளாலி - முகமாலை களமுனைகளில் உள்ள விடுதலைப் புலிகளின் பலம் தொடர்பாக படையினர் தவறான கணிப்பை கொண்டிருந்தனர். ஆனால் அங்கு விடுதலைப் புலிகளின் பலம் அதிகம். இரு படையணிகளும் அதிக இழப்புக்களை சந்தித்த பின்னர் பின்வாங்கியுள்ளன.
55 ஆவது படையணி ஏ-9 நெடுஞ்சாலை வழியாகவும், 53 ஆவது படையணி அதற்கு கிழக்குப் புறமாகவும் நகர்வுகளை மேற்கொண்டிருந்தன. படையினர் தமது ஆயுதங்களுடன் பனை மரக்குற்றிகளையும், மணல் சாக்குகளையும் மேலதிகமாக தமது தோள்களில் காவிச் சென்றனர். இது உடனடியாக காப்பரன்களை அமைப்பதற்கு உதவும்.
விடுதலைப் புலிகளின் முன்னணி அரண்களின் அமைவுப் புள்ளிகள் அவர்களின் மோட்டார் அணிகளுக்கு நன்கு பரீட்சயமானது என்பதனால் படையினர் புதிய காப்பரன்களை அமைக்க வேண்டிய தேவை இருந்தது.
இதனிடையே, 55 ஆவது படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் பிரசன்னா சில்வா தனது களமுனை அதிகாரிகளை முன்னணி அரண்களுக்கு சென்று விடுதலைப் புலிகளின் காப்பரண்களின் பலம் தொடர்பாக கண்காணிக்குமாறு பணித்திருந்தார். பிரசன்ன சில்வா முன்னர் சிறப்பு படையணியின் கட்டளைத் தளபதியாக பணியாற்றியிருந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்த்ததை விட அதிகளவான விடுதலைப் புலிகள் அங்கு பிரசன்னமாகி இருந்ததை களமுனை அதிகாரிகள் அவதானித்துள்ளனர். சதுப்பு நிலங்களின் ஊடாக காயமடையும் படையினரை அகற்றுவது கடினம் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். பகல் வேளையில் வெளியான பிரதேசத்தின் ஊடாக காயமடைந்த படையினரை அகற்றுவது மேலும் கடினமானது.
தொடக்க மோதல்களில் 55 ஆவது படையணியைச் சேர்ந்த நான்கு படையினர் காயமடைந்ததுடன் அதில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.
எனவே, நடவடிக்கையை தொடர்வதை 55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி விரும்பவில்லை. அவர்கள் தமது முன்னைய நிலைகளுக்கு திரும்பிவிட்டனர்.
ஆனால், 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் கமல் குணரட்ன நடவடிக்கையை தொடர்வதில் தீவிரமாக இருந்தார். கடுமையான சமர் மூண்டது. இழப்புக்கள் அதிகமாவதை அவதானித்த படையினர் பின்னர் பின்வாங்க முடிவு செய்தனர்.
வெளியான பிரதேசங்களின் ஊடாக பின்வாங்கிய போதே அதிக இழப்புக்களை படையினர் சந்தித்ததாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த படையினரை காப்பாற்ற முனைந்த சமயம் பல படையினர் கொல்லப்பட்டனர். இந்த சமரில் 26 படையினர் கொல்லப்பட்டதுடன், 89 படையினர் காயமடைந்திருந்தனர்.
அதேசமயம், காலை 6:00 மணியளவில் 57 மற்றும் 58 ஆவது படையணிகள் கிளிநொச்சி நோக்கிய நகர்வை ஆரம்பித்தன. விடுதலைப் புலிகளின் 12 கி.மீ நீளமான "எல்" வடிவ காப்பரணை கைப்பற்றுவதே அவர்களின் முதன்மையான நோக்கம்.
விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதலை நடத்தினர். சதுப்பு நிலங்களின் ஊடாக நகர்வது கடினம் என உணர்ந்த 58 ஆவது படையணி தனது நடவடிக்கையை கைவிட்டது.
எனினும் 57 ஆவது படையணி நடவடிக்கையை தொடர்ந்தது.
57 ஆவது படையணியின் மூன்று பிரிகேட்டுக்கள் இந்த நடவடிக்கையில் பங்குபற்றியிருந்தன. அடம்பனில் இருந்து 57-1 பிரிகேட் நகர்வை மேற்கொண்ட போது விடுதலைப் புலிகளின் எறிகணை தாக்குதல்கள் உக்கிரமாக இருந்தது. இராணுவம் வான்படையினரை உதவிக்கு அழைத்தது.
57-2 பிரிகேட் இரணைமடு பகுதியால் நகர்வை மேற்கொண்டது. 57-4 ஆவது பிரிகேட் இரணைமடுகுளம் பகுதி ஊடாக நகர்ந்தது.
விடுதலைப் புலிகள் அலை அலையாக வந்து தாக்கினார்கள். 12 ஆவது சிங்க றெஜிமென்ட அதிக சேதங்களை சந்தித்தது. இழப்புக்கள் அதிகமாவதை அவதானித்த படையினர் பின்வாங்க முடிவு செய்தனர்.
இதன் போது 17 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காணாமல் போயினர்.
இந்த சமரின் போது கோப்ரல் நமால் உடுவத்தையும் அவரது குழுவினரும் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். உடனடியாக அவர் சார்ஜனாக பதவி உயர்த்தப்பட்டிருந்தார். ஆனால் அவர் பின்னர் நடைபெற்ற சமரில் கொல்லப்பட்டு விட்டார்.
உக்கிரமான எதிர்ச்சமரை தொடர்ந்து 57-2 ஆவது பிரிகேட் தமது நிலைகளில் இருந்து பின்வாங்கியது. விடுதலைப் புலிகள் இந்த பகுதியில் மூர்க்கமாக தாக்குதலை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் இருந்து படையினரை பின்வாங்கவும் செய்துள்ளனர்.
காலநிலையும் படையினருக்கு சாதகமானது அல்ல. இறுதியான தகவல்களின் படி 80 படையினர் கொல்லப்பட்டதுடன், 250-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். விடுதலைப் புலிகள் படையினரின் 36 உடலங்களை கைப்பற்றியிருந்தனர். கொல்லப்பட்ட படையினரை அகற்றுவதில் படையினர் அதிக சிரமங்களை சந்தித்திருந்தனர்.
இதனிடையே, முல்லைத்தீவை தனிமைப்படுத்துவதே படையினரின் நோக்கம் என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது என்பது எதிர்வரும் மாதங்களில் தெரிந்துவிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டே ரைம்ஸ் வார ஏட்டில் எழுதப்பட்டுள்ளதாவது:
7 ஆயிரம் சிறிலங்கா படையினர் கடந்த செவ்வாய்கிழமை மேற்கொண்ட படை நடவடிக்கை நான்காவது ஈழப்போரில் மிகப்பெரும் எதிர்த்தாக்குதலை சந்தித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் படைத்தரப்பு மிகவும் அதிகளவு சூட்டுவலுவை பயன்படுத்தியிருந்தது. கிளிநொச்சியை கைப்பற்றுவது தான் படையினரின் பிரதான நோக்கம்.
ஐந்து முனைகளில் உக்கிர மோதல்கள் நடைபெற்றுள்ள போதும் உடகவியலாளர்கள் களமுனைகளுக்கு செல்ல முடியாததால் இழப்புக்கள் தொடர்பான உண்மையான தகவல்களை பெறமுடியாதுள்ளது.
படை வட்டாரங்களில் இருந்து தகவல்களை பெறுவதும் முன்னர் போன்று இலகுவானதல்ல. கடந்த வாரங்களாக படைத்துறை மற்றும் பாதுகாப்பு உயர் வட்டாரங்களில் கிளிநொச்சியை கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கை தொடர்பான பேச்சுக்களே அதிகம் இருந்தன.
இந்த நடவடிக்கை தொடர்பான கவனம் சிறிலங்காவில் மட்டுமல்லாது முழு உலகிலும் ஏற்பட்டிருந்தது. கிளிநொச்சி விரைவில் கைப்பற்றப்படலாம் எனவும் அது தொடர்பான தகவல்களை சேகரிக்கும் நோக்கத்துடன் வந்திருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போது, அவர்கள் கிளிநொச்சி சில நாட்களில் வீழ்ந்து விடும் என நம்பியிருந்தனர். தற்போது அவர்களில்
பலர் தமது நாடுகளுக்கு திரும்பி சென்றுவிட்டனர்.
கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 53 மற்றும் 55 ஆவது படையணிகள் முகமாலை களமுனையில் நகர்வை தொடங்கியிருந்தன.
53 ஆவது படையணி கிளாலி நோக்கியும், 55 ஆவது படையணி முகமாலை நோக்கியும் நகர்வை மேற்கொண்டிருந்தன.
பரந்தன் - பூநகரி வீதியில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த "எல்" வடிவ மண் அரணை கைப்பற்றும் நேக்கத்துடன் 58 ஆவது படையணி நகர்வை தொடங்கியிருந்தது. அங்கு கடுமையான மோதல்கள் தொடங்கின.
57 ஆவது படையணி கிளிநொச்சி நோக்கிய நகர்வில் ஈடுபட்டிருந்த போது அடம்பன் பகுதியில் உக்கிர மோதல்கள் ஆரம்பித்திருந்தன. கடும் மழை அந்த பிரதேசத்தை சேறும் சகதியுமாக மாற்றியிருந்தது.
இந்த பகுதியில் தான் அதிகளவான படையினர் காணாமல் போயிருந்தனர். எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது தொடர்பான தகவல்களை சில காரணங்களால் அறிய முடியாவில்லை.
வன்னிக்கு மேற்குப் புறமாக புதன்கிழமையே அதிக மோதல்கள் இடம்பெற்றிருந்தன.
திருமுறிகண்டி மற்றும் இரணைமடு பகுதிகளில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த மோதல்களில் இரு தரப்பும் கடும் இழப்புக்களை சந்தித்துள்ளன. படையினர் தமது முன்னரங்க நிலைகளை மாற்றி அமைத்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் அலை அலையாக வந்து தாக்கியதாகவும், சில இடங்களில் மிக அருகாமையில் நேரடி மோதல்கள் நடைபெற்றதாகவும், விடுதலைப் புலிகள் மோட்டார் எறிகணைகளை மழை போல பயன்படுத்தியதாகவும் தனது பெயரை குறிப்பிடாத படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே, விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தமது ஆயுத விநியோகத்தை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகளையும், மோட்டார் எறிகணைகளையும், ஏனைய ஆயுதங்களையும் தருவித்து வருவதாக படையினரின் புலனாய்வுதுறை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றுடன் ஆயுத கொள்வனவு தொடர்பாக அவர்கள் அண்மையில் பேச்சுக்களையும் நடத்தியுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.
இராணுவம் கடந்த மாதம் மேற்கொண்ட நகர்வுகளின் போது, ஒரு நகர்வில் கிளிநொச்சியை கைப்பற்றி விடுவார்கள் என பலர் நம்பினார்கள்.
கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற சமரில் மூன்று முக்கிய படையணிகள் பங்குபற்றியிருந்தன. அவர்களின் ஒரே நோக்கம் கிளிநொச்சி நோக்கியதே.
செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெரும் தோல்வியானது முல்லைத்தீவு அல்லது கிளிநொச்சி நோக்கிய நகர்வுகள் இந்த வருடத்திற்குள் நிறைவுபெறும் என்ற நம்பிக்கையை தகர்த்துள்ளது.
எனவே நாலாவது ஈழப்போர் 2009 ஆம் ஆண்டிற்கும் தொடரப்போகின்றது என அந்த ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட போர்முனைப் போராளிகளுடன் பொதுமக்கள் சந்திப்பு

[சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2008, 08:33 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

வட போர்முனைப் போராளிகளுக்கு கண்டாவளை கோட்ட தொழிற் சங்கங்களின் இணையம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இணைந்து உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். இந்நிகழ்வு கண்டாவளை கோட்ட போர் எழுச்சிக்குழு செயலாளர் சூரியப்பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் கருத்துரைகளை வட போர்முனைத் தளபதிகளில் ஒருவரான பெரியதம்பி, பொறுப்பாளர்களில் ஒருவரான மோகன் இரண்டு மாவீரர்களின் தந்தை சிறீதரன் ஆகியோர் நிகழ்த்த, சிறப்புரையினை கண்டாவைள கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன் நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, கண்டாவளை கோட்ட தொழிற்சங்க இணையம், மாதர் சங்கப் பிரதிநிதிகள், போர் எழுச்சிக் குழு, மாவீரர் செயற்பாட்டுக்குழு மற்றும் வணிகர்கள் உள்ளிட்டோரால் களமுனைப் போராளிகளுக்கு என கொண்டு செல்லப்பட்ட சமைத்த உணவும் உலருணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ கத்தரிக்காய் பச்சைமிளகாய் ஆயிரம் ரூபாவாக விற்பனை வீரகேசரி நாளேடு 12/19/2008 9:25:01 PM - யாழ்ப்பாணத்தில் முன்னர் ஒரு போதும் இல்லாத வகையில் மரக்கறிவகைகளின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. இதனால், மக்கள் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர்.
யாழ். மரக்கறிச்சந்தைகள் வெறிச்சோடிக்காணப்படுவதாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் மற்றும் பச்சைமிளகாய் என்பன தலா ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வடபகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று முட்டை ஒன்று 27 ரூபாவாகவும் கோழி இறைச்சி 700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வரும் அதேவேளை சீனிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோ சீனி தனியார் கடையிலே 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் 5 அங்கத்தவர்களைக் கொண்ட
குடும்பமொன்றுக்கு 1கிலோ சீனி 86 ரூபா என்ற அடிப்படையில் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்றே உருளைக்கிழங்கிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் குடும்பமொன்றுக்கு அரைக்கிலோ என்ற வீதத்தில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் வழங்கப்படுவதாகவும் வடபகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்.குடாநாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கடும் மழை காரணமாக விளைநிலங்கள், பயிர்ச்செய்கைகள் யாவும் அழிந்துபோயுள்ளன. குறிப்பாக புகையிலை, வாழை, வெங்காயம் என்பவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றினை மீள பயிர்செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை, கடுங்காற்று என்பவற்றால் பயிர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான மக்கள் தமது அன்றாட உணவுத்தேவையை சமாளிக்க முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். அரிசி, மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் மழை நீடித்தாலோ, கொழும்பில் இருந்தும் பொருட்கள் வந்து சேர தாமதமடைந்தாலோ நிலைமை மேலும் மோசமடையும் என வடபகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிவகைகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதன் காரணமாக மக்கள் இலைக்கறிவகைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான வீடுகளில் இரசமும் சோறுமே உணவாக உட்கொள்ளப்படுவதாகவும் மிகுந்த விசனம் தெரிவிக்கப்படுகிறது.

No comments: