Wednesday, 21 January 2009
திருகோணமலையில் அமெரிக்காவின் இராணுவ ஏவுகணைத்தளம்.
திருமலையில் அமெரிக்கா தளம் அமைக்க இலங்கை ஒருபோதுமே இடங்கொடாது - வெளிவிவகார அமைச்சர் அடியோடு மறுப்பு [21 ஜனவரி 2009, புதன்கிழமை 9:20 மு.ப இலங்கை] இலங்கையை சுற்றியுள்ள அயல் நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் அமெரிக்கா இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் பீரங்கித்தளம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை என்று இலங்கை அரசு நேற்று நாடாளுமன்றில் கூறியது. அப்படியானதொரு செயற்பாட்டுக்கு இலங்கை அரசு ஒருபோதும் அமெரிக்காவுக்கு இடங்கொடுக்காது என்றும் இலங்கை அரசு மேலும் கூறியது.இது தொடர்பாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுக்களை மறுத்து உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அரசின் சார்பில் மேற்கண்டவாறு கூறினார்.அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:-அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் பிராந்தியத்தின் கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் ஜெனட் உள்ளிட்ட குழுவினர் இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இம்மாதம் 13 ஆம் திகதி இலங்கை வந்தனர்.இலங்கையின் அயல் நாடுகள் மீது தாக்குதல் நடத்தும்நோக்கில் திருகோணமலை மாவட்டத்தில் பீரங்கித்தளம் ஒன்றை அமைக்கும் நோக்கில் தான் அந்தக் குழுவினர், இங்கு வந்தனர் என்று ஜே.வி.பியின் எம்.பி. அநுரமார திஸாநாயக்க இங்கு கூறினார். இந்தக் குற்றச்சாட்டை நாம் மறுக்கின்றோம். அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமிடையில் நீண்டகாலமாக நல்லதொரு உறவு நிலவி வருகின்றது. அந்த உறவைப் பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவில் இருந்து அதிகாரிகள் இலங்கைக்கு வருவதுண்டு.அதேபோல் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ரொபேர்ட் ஒ பிளேக்சிற்கும் இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்குமிடையில் ஒப்பந்தம் ஒன்றும் செய்து கொள்ளப்பட்டது.இது பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல. இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு வசதிகள் மற்றும் சேவைகள் போன்றவற்றை வழங்கும் ஒப்பந்தமுமே இது. இவ்வாறான ஒப்பந்தத்தை அமெரிக்கா 89 நாடுகளில் செய்துள்ளது. இது ஒரு ரகசிய ஒப்பந்தம் கிடையாது.அமெரிக்காவுடன் நாம் கொண்டிருக்கும் இந்த மாதிரியான உறவின் ஒரு பகுதியாகத்தான் மேஜர் ஜெனரல் ஜெனட்டின் விஜயமும் அமைந்துள்ளது. கிழக்கில் பாடசாலைகளைப் புனரமைப்பதற்கும் அங்கு மனிதாபிமான பணிகளுக்கு உதவி வழங்குவதற்காகவுமே ஜெனட் இங்கு வந்தார். ஆனால், இலங்கையின் அயல் நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் திருகோணமலையில் பீரங்கித்தளம் ஒன்றை அமைக்கும் நோக்கிலேயே ஜெனட்டின் விஜயம் அமைந்திருந்தது என்று ஜே.வி.பி. கூறுவதை நாம் ஏற்கமாட்டோம்.அமெரிக்காவுக்கு அப்படியானதொன்று தேவையில்லை. அப்படி தேவையிருந்தாலும் நாம் அதற்கு இடங்கொடுக்க மாட்டோம். நாம் அயல் நாடுகளுடன் நல்லுறவைப் பேணிவருகின்றோம். இந்த உறவுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் நாம் ஒருபோதும் செயற்பட மாட்டோம்.இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்காக நாம் அனைத்து நாடுகளுடனும் உறவைப் பேணத்தயார் - என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment