Monday, 18 May 2009

படுகாயமடைந்த 25 ஆயிரம் தமிழர்கள் பராமரிப்பு இல்லாமல் பரிதாப மரணம்:


படுகாயமடைந்த 25 ஆயிரம் தமிழர்கள் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் பரிதாப மரணம்: களத்தில் இருந்து சூசை தகவல்
[ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 04:33 பி.ப ஈழம்] [பா.பார்த்தீபன்]
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இரண்டு சதுர கிலோ மீற்றர் பகுதியிலேயே தற்போது கடுமையான போர் நடைபெற்று வருவதாகவும் இப்பகுதியில் பெரும் தொகையான மக்கள் கொல்லப்பட்டு, உடலங்கள் குவியல் குவியலாகக் காணப்படுவதாகவும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை தெரிவித்திருக்கின்றார்.
வெளி இணைப்பு: கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை விடுத்த அவசர வேண்டுகோள்( N/A)
சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி தாக்குதலில் படுகாயமடைந்த சுமார் 25 ஆயிரம் பேர் மருத்துவப் பராமரிப்புக்கள் எதுவும் இல்லாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் மரணமடைந்திருப்பதாகவும் சூசை இன்று ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக ஊடகங்களுக்காக தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
படுகாயமடைந்த இந்த 25 ஆயிரம் பேரையும் இரட்டைவாய்க்கால் அல்லது வட்டுவாகல் பகுதி ஊடாக வெளியே கொண்டுவருவதற்கு அனைத்துலகப் பொறுப்பாளர் செ.பத்மநாதன் மூலமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் நாம் கோரிக்கை முன்வைத்தோம்.
ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுக்கொண்டோம். நாம் அவர்களை அனுப்பிவைக்கின்றோம் நீங்கள் பொறுப்பு எடுங்கள் எனக் கேட்டோம். இருந்தபோதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் சூசை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த 25 ஆயிரம் மக்களும் மருத்துவ சிகிச்சைகள் இல்லாமல் மரணமடைந்திருக்கின்றனர் எனவும் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சூசை தெரிவித்தார்.
சுமார் இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப்பரப்புக்குள் பெரும் தொகையான உடலங்கள் குவியலாகவும் சிதறுண்டும் காணப்படுகின்றது. ஏனையவர்கள் சிறிலங்கா படையினர் பயன்படுத்தும் கடுமையான ஆயுதங்களுக்கு அஞ்சி பதுங்குகுழிகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.
போர் நடைபெறும் பகுதியில் இருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கு கூட சிறிலங்கா படையினர் அனுமதிக்கின்றனர் இல்லை எனவும் குறிப்பிட்ட சூசை, அந்த மக்களை சுட்டுக்கொன்றுவிடுவதற்குத்தான் அவர்கள் முற்படுகின்றனர் எனவும் சூசை குற்றம் சாட்டினார்.
இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதையிட்டு எந்தவிதமான அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது. தற்போது படுகாயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களைவிட மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.
நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். இறுதிவரையில் நாம் அடிபணியப்போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொதுமக்களும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை குறிப்பிட்டார்.
அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை. நாங்கள் நேற்று முன்நாள் இரவு தொடக்கம் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். அந்த 25 ஆயிரம் மக்களையும் எடுக்கச்சொல்லி. காலத்தைத் தாமதித்தார்கள். தற்போது இன்னும் 20 ஆயிரம் மக்கள் வரையில் காயப்பட்டிருக்கின்றனர். அதனைவிட மற்றவர்கள் அனைவரும் பதுங்குகுழிகளுக்குள் இருக்கின்றனர். படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அனைவரும் பதுங்குகுழிகளுக்குள் இருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.
போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக ஆட்டிலறி தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றனர்" எனவும் சூசை தெரிவித்தார்.
இதேவேளையில் வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகளின்படி முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும் அங்கிருந்து வெளியேறவிடாது சிறிலங்கா படையினர் கடுமையான தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்கள் இப்போது இல்லை எனவும் அவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர் எனவும் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது சிறிலங்கா அரசாங்கம்.
இதனை வைத்துப் பார்க்கும்போது அங்குள்ள அனைவரையும் கொன்றொழிப்பதுதான் சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
போர்ப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேவருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் அறிவித்து வருகின்ற போதிலும், அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதமான சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல் தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் சரித்திரத்தில் இல்லாதளவுக்கு பாரிய மனிதப் பேரவலம் ஒன்று இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

No comments: