Friday 1 May, 2009

போதிக்க வந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் போட்ட குண்டை எண்ணிப் பார்க்கவேண்டும்- ராஜபக்சே

''எமக்குப் போதிப்பதற்காக வந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் எவ்வாறு குண்டுவீச்சு இடம்பெற்றது என்பதைப் பார்க்க வேண்டும்''-மகிந்த.

'புத்திசாலி' மேட்டுக்குடித் தமிழர்கள், 'மோட்டுச் சிங்களவன்' சொல்வதைக் கேட்க வேண்டும். ENB
0000000000000000000000000000000000000000000000000
"எமக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்": மேற்குலகிற்கு மகிந்த சாட்டையடி [வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 06:29 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] புதினம்
ஈராக் எவ்வாறு குண்டு வீச்சுக்குள்ளானது என்பதை நாம் பார்த்தோம். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவீச்சையும் நாம் பார்த்தோம். எமக்குப் போதிப்பதற்காக வந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் எவ்வாறு குண்டுவீச்சு இடம்பெற்றது என்பதைப் பார்க்க வேண்டும்" என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார். சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள எம்பிலிப்பிட்டியவில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மகிந்த இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
"உலகில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிச் சேவைகளும் இப்போது எமது நாட்டின் மீதே கவனத்தைத் திருப்பியுள்ளன. செய்மதி தொழில்நுட்பத்தின் உதவியுடன் வன்னி நிலைமைகளை உலகம் முழுவதும் பார்க்கக்கூடியதாகவிருக்கின்றது. இதனைப் பார்ப்பதற்கு சிறப்பு அவதானிகளை அனுப்பிவைக்க வேண்டிய தேவை என்ன இருக்கின்றது? இதனை ஆராய்வதற்கு சிறப்புப் பிரதிநிதிகள் எதற்காக? உலகம் முழுவதற்குமே அங்கு என்ன நடைபெறுகின்றது என்பது தெரியும்.
ஆனால், இதில் ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அனைத்துலக இராஜதந்திரிகள் பலர் இவை எதனையும் தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள். இவ்வாறு கண்மூடித்தனமாக இருப்பது அனைத்துலக அனர்த்தம் ஒன்றுக்கு இட்டுச் செல்வதாக அமையும் என்பதையிட்டு உலகத்துக்கு நான் எச்சரிக்க விரும்புகின்றேன்.
எமது படையினர் தாய்மார்களையும், சிறுவர்களையும் எவ்வாறு மீட்டு வந்தார்கள் என்பதை புதுமாத்தளனில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வயதானவர்களை படையினர் தூக்கி வந்தார்கள். இவை அனைத்தையும் பார்வையிட்ட பின்னர் கூட அனைத்துலக சக்திகள் சில எம்மீது குற்றச்சாட்டைச் சுமத்துகின்றன.
உலகம் இவை அனைத்தையும் பார்க்க வேண்டும். இவற்றையிட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் இதனை நாம் மனிதாபிமான நடவடிக்கை எனக் குறிப்பிடுகின்றோம். இது மற்றொரு நாட்டுடன் நாம் செய்யும் ஒரு போர் அல்ல.
ஈராக் எவ்வாறு குண்டுவீச்சுக்குள்ளானது என்பதை நாம் பார்த்தோம். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவீச்சையும் நாம் பார்த்தோம். எமக்குப் போதிப்பதற்காக வந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் எவ்வாறு குண்டுவீச்சு இடம்பெற்றது என்பதைப் பார்க்க வேண்டும்" என மகிந்த தனது உரையில் தெரிவித்தார்.

No comments: