Monday 11 May, 2009

லண்டனில் தமிழரின் சட்டமறுப்புப் போராட்டம்

லண்டனில் ஈழத்தமிழர்களின் சட்டமறுப்பு ஆர்ப்பாட்டம். ENB
புலம்பெயர் நாடெங்கும் நிகழும் ஈழத்தமிழர்களின் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு பொருந்தக்கூடிய ஒரு பொது விமர்சனம்
(பாகம்-1 குறிப்பு: இப் போராட்ட கள அறிக்கை தயாரிக்கப்பட்ட திகதி April-10-2009 என்பதை நினைவில் கொண்டு படிக்கவும்.)
1) இவ் ஆர்ப்பாட்டம் தற்போது-April-10-2009 அன்று- தொடர்ந்து 10 வது நாளாக இடம்பெற்றுக்கொண்டிருப்பது இங்கிலாந்துப் பாராளமன்றத்துக்கு முன்னால் அமைந்துள்ள திடலாகும்.எனினும் இரு வாரங்கள் முன்னால் லண்டன் நகரின் பிரதான சாலைகளை வழிமறித்து நடத்திய சாலை மறிப்புப் போராட்டத்துடன் இந்த எழுச்சி ஆரம்பமானது.இதனால் லண்டன் நகரம் ஸ்தம்பிதம் அடைந்தது.
2) லண்டன் நகர காவல்துறை கவனயீனமாக இருந்த நேரத்தில் ஈழத்தமிழர்களால் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்து உருவெடுத்து போராடும் மக்கள் மீது பாய்ந்து நையப்புடைத்தது.தமிழ்ப் பெண்களை ஆண் பொலிசார் கைதொட்டு இழுத்து வீதியில் இருந்து வெளியே வீசினர். தமிழீழப் புலிக்கொடி ஏந்திய இளைஞர்களை பொலிஸ் குண்டர்கள் கையையோ காலையோ.. கைவசம் அகப்பட்டதைக் கைப்பற்றி தெருவில் கொர கொரவென இழுத்து வெள்ளை வான்களுக்குள் தூக்கிவீசினர்.சட்டம் ஒழுங்கை மீறியதாகவும், சட்டவிரோதப் புலிக்கொடியை ஏந்தியதாகவும் வழக்குத்தொடுத்தனர்.
3) இதையடுத்து இரண்டு இங்கிலாந்து மாணவர்கள் அநுமதிபெற்று இங்கிலாந்துப் பாராளமன்றத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.
4) இவர்களை நாடி கடந்த சனிக்கிழமை இரண்டு இலட்சம் மக்கள், லண்டன் தெருக்களில் தமிழீழப் புலிக்கொடி பட்டொளி வீசிப் பறக்க அணி திரண்டு பாராளமன்றத்திடலைக் கைப்பற்றினர்.
5) இந்த மக்கள் எழுச்சிகண்டு அஞ்சி நடுங்கிய ஆளும்கும்பல், தனது மக்கள் விரோத பொலிஸ் காடையர்களை ஏவிவிட்டது.போராடும் மக்களின் காலடிகளில் பாராளமன்றத்திடலின் புல்வெளி, தனது பசுமையை இழந்து போகிற புல்லபிமானத்தால் உந்தப்பட்டு பலவந்தமாக மக்களை வெளியேற்றியது.
6)மீண்டும் தமிழ்மக்கள் வீதிமறியலில் இறங்கினர். விடாப்பிடியாகப் போராடினர்.
7) மக்கள் போராட்டத்துக்கு பணிய நிர்ப்பந்திக்கப்பட்ட அரசு எந்திரம், இறுதியாக புல்வெளியை இரும்பு வேலியால் மறித்து சுமார் 12 அடி அகலமான சற்சதுர சுற்றாடலில், ஆக ஒரு பகுதியை மட்டும் மக்கள் ஒன்று கூடுவதற்கு தற்காலிகமாக அனுமதித்துள்ளது.
8) இச் சிறு துண்டைச் சுற்றி சுமார் 20 பொலிஸ் வெள்ளை வான்கள், வான்களுக்குள் சுமார் 300க்கும் மேற்பட்ட பொலிசார், தரையில் சுமார் 50 பேர், போர்க்களத்தின் முகப்பில் ஒரு பொலிஸ் வெள்ளை வான் உள்ளிருந்து படம் பிடித்து துப்பறிய!!
9) எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு எச்சரிக்கை வாசகம், போராடும் மக்களை அச்சுறுத்தி மிரட்டியபடி,இலத்திரனியல் வடிவத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.
அ) ஒரு புலிமுகமும் அதைச்சுற்றி ரவைகளும் குறுக்கே இரண்டு துப்பாக்கிகளுமாய் அமைந்த ஒரு சித்திரம் தடை செய்யப்பட்டுள்ளது
ஆ)) இந்தத் திடலில் அதிகபட்சம் கூடக்கூடிய மனிதர்களின் எண்ணிக்கை 50பது பேரே!
இ)இத்திடலின் புல் வெளிக்குள் பிரவேசிப்பது சட்டத்தை மீறுகிற செயலாகும்.
10) இந்த எச்சரிக்கைகளுக்குள் அடக்கப்பட்டு,500 சதுர அடிக்குள் முடக்கப் பட்டுள்ள மக்கள் உள் நுழையவும், வெளியேறவும் ஒரே ஒரு வாசலே உண்டு அதைச் சுற்றி எட்டுப் பொலிசார்!இவ்வாறு No Freedom Zoneஆகிப்போன பாராளமன்றத்திடல், ராஜபக்சவின் No Fire Zoneஐ நினைவூட்டியவண்ணம் இருக்கிறது!
11) முதலாளித்துவ ஜனநாயகத்தின் முதுகெலும்பான ஆர்ப்பாட்டச் சுதந்திரம், போர்வெறியன் சேர்ச்சிலின் இராட்சத சிலையின் கீழ் நசுங்கி நலிந்து அமுங்கி அழிந்துகொண்டிருந்தது.
12) மக்களை சுற்றிவளைத்துக் கொண்ட இரும்பு வேலிகளில் அரசியல் முழக்கங்களைத் தாங்கிய பதாகைகள தொங்கவிடப்பட்டிருந்தன. அடிப்படையில் இவை இரு கருத்தாக்கங்களை மக்கள்
இடையே எடுத்துச் செல்வனவாய் அமைந்திருந்தன.
அ) இலங்கையில் நடப்பது இனப்படுகொலை.
ஆ) எத்தனை நாள் துயின்றிருப்பாய் எனதருமைச் சர்வதேச சமூகமே.
துரதிஸ்டவசமாக, இலங்கையில் நடப்பது இனப்படுகொலை- என்பதை அம்பலப்படுத்தும் முனைப்பில் ராஜபக்சவை சர்வாதிகாரியென நிரூபிக்கும் ஒரு பெரும் பதாகை பின்வரும் வாசகத்தைக் கொண்டிருந்தது.

ஸ்டாலின், ஹிட்லர், NOW Rajapakse!!

13) சேர்ச்சிலின் பிரித்தானியாவில் கையடக்க ஒலிபெருக்கி உட்பட, ஒலிபெருக்கி தடை செய்யப்பட்டிருந்தது. எனினும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக ஓங்கி ஒலித்த முழக்கத்தால் சுற்றாடல் அதிர்ந்த வண்ணம் இருந்தது.மக்கள் பதில் முழக்கமிட முதல் முழக்கம் இட்டவர்கள் மூன்று குழுக்களாய் பிரிந்திருந்தனர்.இந்த முன்னணி முழக்கக் குழுவினர் பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த இளம் பெண்களும் ஆண்களுமாய் இருந்தனர்.இடையிடையே சிறுவர் சிறுமியர்களும் இக்குழுவில் இணைந்து முழக்கமிட்டு பிரிந்தவண்ணமிருந்தனர். இவ்வாறு மூன்று
குழுக்கள் முதல் முழக்கத்திற்குத் தலைமையேற்றனர்.இவற்றில் இரு குழுக்கள் அணிதிரண்ட மக்களை அரசியல் படுத்தும் வகையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் முழக்கமிட்டனர்.முகப்பில் நின்ற குழு முழு ஆர்ப்பாடத்தினதும் குறிப்பான கோரிக்கையை வெளிப்படுத்தும் குறிப்பிட்ட முழக்கங்களையே மீண்டும் மீண்டும் உரத்து முழங்கியவாறு இருந்தனர்.

14) அவை வருமாறு:

Sri Lanka, Sri Lanka!
Stop the war, Stop the War!!
What do we want?
Cease fire!!
When do we want?
Now!!
Indian Army..?
GO HOME!!
Sri Lankan State..?
Terrorist!!
Our Nation...?
Tamil Eelam!!
Our Leader..?
Pirabaharan!!
Gordon Brown! Gordon Brown...?
Open your eyes! Open your eyes!!
BBC....?
Go to Vanni!!
15) இந்த முழக்கங்கள் உணவூட்ட,கூடியிருந்த மக்கள் கூட்டம் உற்சாகமூட்ட ஒரு சிறிய தற்காலிக ரப்பர் கூடாரத்தினுள் போராளி பரமேஸ்வரன்- Prarameswaran Subramaniam, 28, நாற்காலியில் அமர்ந்தவாறு சில சஞ்சிகைகளைப் புரட்டிக்கொண்டிருந்தார்.இவர் 5 நாட்கள் எதையும் ஏற்றுக்கொள்ளாமல், 5வது நாளில் இருந்து சில துளி நீரை மட்டும் மென்று விழுங்கிய வண்ணம் தனது விடுதலை வேள்வியை 10 நாட்களுக்கு மேலாகத் தொடர்கின்றார்.திலீபன் அண்ணா, பூபதி அம்மா வழியில் தான் விடுதலைப் போருக்கு பங்களிப்பதாக உறுதியான கருத்துக் கொண்டுள்ளார். தொலைக்காட்சி நிருபர் ஒருவர் அவரது உடல் நிலைகுறித்தும், இப்போராட்டம் எப்போது முடியும் எனவும் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அவர் சொன்னார்:''
எனது உடல் நிலை தளர்ந்துதான் உள்ளது ஆனால் மன நிலையைப் பொறுத்தவரையில் திலீபன் அண்ணா, பூபதி அம்மா பாதையில் போராட்டத்தை தொடர்வதில் நான் உறுதியாக உள்ளேன். இப்போராட்டம் எப்போது முடியும் என்பது என் கையில் இல்லை.இலட்சம் இலட்சமாக இத்திடலில் வந்து குவியும் மக்களின் கைகளில் தான் உள்ளது.இங்கிருந்து எம்மை எப்படியாவது வெளியேற்றி விடவேண்டும் என்று நம்மை சுற்றிவளைத்துள்ள பொலிசார் கங்கணங்கட்டி கழுகுக்கண்களுடன் ஒரு வாய்ப்புக்கு காத்திருக்கின்றனர்.அவற்றையெல்லாம் தோற்கடித்து இப்போராட்டத்தை இறுதிவெற்றிவரை எடுத்துச்செல்வது தமிழ்மக்களின் கைகளில் தான் உள்ளது.

16) விடுதலை வேள்விக்காக பாராளமன்றத்திடலை பாவிப்பதற்கான காலக்கெடு வருகின்ற திங்கட்கிழமையுடன் முடிவடைகின்றது.

17) பரமேஸ்வரனுடன் விடுதலைவேள்வியில் ஈடுபட்டிருந்த மற்றமாணவருக்கு -Sivatharsan Sivakumaraval, 20-ஐ.நா.சபை ஆசையைக்காட்டி போர்க்களத்தில் இருந்து பெயர்த்தெடுத்துவிட்டார்கள்.மருத்துவசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ள அவர் அமெரிக்கப் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் பிந்திக்கிடைத்த தகவல்களின் படி இழுபறி நிலையில்
உள்ளன.

18) ஆக ஈழத்தமிழர்கள் பிரித்தானியப் பாராளமன்ற முன்றலில் நடத்திக்கொண்டிருக்கும் சட்டவிரோதப் போராட்டம் ஆள்வோருக்கு பெரும் தலையிடியாய் அமைந்துவிட்டது.சொல்லப்போனால் விடுதலை வேள்வி அமைப்பாளர்கள் கூட இந்நிலையை எதிர்பார்க்கவில்லை! தன்னெழுச்சியின் அதிகபட்ச முழக்கம் யுத்தநிறுத்தமாக இருப்பதாலும்,ராஜபக்ச அரசுக்கு அப்படி ஒரு 'வாழ்வா சாவா'' நிர்ப்பந்தத்தை எவரும் கொடுக்கப்போவதில்லை ஏனெனில் அவர்கள் அனைவரது நலன்களும் தேசிய விடுதலைப் புரட்சிகளின் அழிவைக்கோரி நிற்கின்றன,இந்திய விஸ்தரிப்புவாத அரசோ,பக்ச பாசிஸ்டுக்களோ இவ்வரிய வாய்ப்பை கைநழுவிச்செல்ல அநுமதிக்கப்போவதில்லை. இதனால் இத்தன்னெழுச்சி ஒரு முடிவைத் தவிர்க்க இயலாமல் எட்டும்..எட்டித்தான் தீரவேண்டும்.ஏமாற்றுத்தனமான ஒரு சமரசத்தின் மூலமோ அல்லது சுவிஸ் ஆளும்கும்பல் பிரயோகித்த பலவந்தத்துடன் அடக்குமுறையயும் இணைத்தோ இதுமுறியடிக்கப்படலாம்.

19)எந்தக்கோரிக்கைகளையும் எட்டாமல் இத்தன்னெழுச்சி அடங்கிப்போவதால் அது தோல்வியாகாது.அதன் வெற்றி எதில் அடங்கியிருக்கின்றதென்றால் அது மக்களுக்கு தமது எதிரிகளைதமது சொந்த அநுபவத்தில் உணர்த்திக்காட்டியிருக்கின்றது. 2002 இல் அகசுயநிர்ணய உரிமை என்கிற ஒரு சந்தர்ப்பவாதப் பாதையில் ஆரம்பித்த இப்போக்கு இத்துடன் தன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொள்ளும்.விடுதலை அமைப்பின் பெரும் பலத்தை, ஆயிரக்கணக்கில் விலைமதிப்பற்ற போராளிகளை, பல்லாயிரக்கணக்கான தமிழர்களை காவுகொடுத்து இந்த நச்சுச் சுழலைக்
கற்றுக் கொள்ளவேண்டியிருந்தது தமிழருக்கு.
20) அரசியல் விஞ்ஞானத்தில் இருந்தன்றி, போலிப்பெருமைகளாலும், அநுபவவாதத்தாலும் மட்டுமே இனிமேலும் ஈழத்தமிழரின் விடுதலைப்போர் வழி நடத்தப்படுமானால், ஸ்ராலின் சர்வாதிகாரத்தை எதிர்த்து, சேர்ச்சிலின் ஜனநாயகத்திடம் அடைக்கலம் புகுவதே விடுதலைப் போரின் பாதையாகத் தொடருமானால் இப்பேரழிவு இன்னும் முடியவில்லை என்றே பொருள்படும்,இதைத்தவிர்க்க அல்லது முடிந்தவரையில் தணிக்க போராடுவதே ஜனநாயகவாதிகளின் புரட்சிகரக் கடமையாகும்.

ENB-April-11-2009

No comments: