Monday, 29 June 2009
கிழக்குப் பகுதியில் 13 இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள்:
கிழக்குப் பகுதியில் 13 இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள்: ஜூலை 2-க்கு முன்னர் ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு
[ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2009, 07:26 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
கிழக்கு மாகாணத்தில் 13 இஸ்லாமிய தீவிரவாத ஆயுதக்குழுக்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்திருக்கும் காவல்துறையினர், இக்குழுக்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருப்பதாகவும்
தெரிவித்துள்ளனர். இக்குழுக்களில் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்வரும் 2 ஆம் நாளுக்கு முன்னர் தமது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கும் காவல்துறையினர், அதன்பின்னர் தேடுதல்
நடவடிக்கை ஒன்றுக்கு படையினர் தயாராகி வருவதாகவும் அறிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் பல மிகவும் இரகசியமாகச் செயற்பட்டுவருவது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்து சிறிலங்காவின் புலனாய்வுத்துறை
அவற்றின் நடவடிக்கைகள், தொடர்புகளை அவதானித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய அமைச்சர்கள் சிலருடைய ஆதரவுடனேயே இக்குழுக்கள் செயற்பட்டு வருவதுடன், பள்ளிவாசல்களில் அவற்றுக்கு ஆதரவு இருப்பதும்
தெரியவந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய மக்கள் மிகவும் செறிவாக வசிக்கும் ஏறாவூர், காத்தான்குடி, ஒலுமாவடி, சம்மாந்துறை, அக்கறைப்பற்று, கல்முனை, மூதூர், கண்ணியா போன்ற
பகுதிகளிலேயே இக்குழுக்களின் செயற்பாடுகள் பெருமளவுக்கு இடம்பெற்றிருப்பது புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளின் போது தெரியவந்திருக்கின்றது.
இதனைவிட கிழக்கு மாகாணத்துக்கு வெளியே புத்தளத்திலும் மற்றொரு அரசியல்வாதியின் ஆதரவுடன் ஆயுதக்குழு ஒன்று செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் செயற்படும் இந்த ஆயுதக்குழுக்களுடன் கொழும்பில் உள்ள பாதாள உலகக்குழுக்கள் பலவும் தொடர்புகளை வைத்திருப்பதும் காவல்துறையினரின் விசாரணைகளின்
போது தெரியவந்திருக்கின்றது.
கொழும்பில் மாளிகாவத்தை மற்றும் கொம்பனித் தெரு போன்ற பகுதிகளில் செயற்பட்டுவரும் இஸ்லாமிய பாதாள உலகக் குழுக்கள் தமக்குத் தேவையான ஆயுதங்களை கிழக்கு
மாகாணத்தில் உள்ள ஆயுதக்குழுக்களிடம் இருந்தே பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் செயற்படும் இந்த ஆயுதக்குழுக்கள் அனைத்தும் இணைந்து அரசுக்கு எதிரான ஆயுதப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்தால் அரசாங்கம் பெரும் நெருக்கடியைச்
சந்திக்க வேண்டியிருக்கும் என புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் காத்தான்குடிப் பகுதியில் ஏழு இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களே படையினருக்கு இவ்வாறான ஒரு
அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
பெரும் தொகையான ரி-56 ரக துப்பாக்கிகள், கைக்குண்டுகள், கண்ணிவெடி, தொலைத்தொடர்பு சாதனம் (walkie-talkie) உட்பட பல ஆயுதங்களும் வெடிபொருட்களும் இக்குழுவினரிடம்
இருந்து கைப்பற்றப்பட்டதையடுத்தே காவல்துறையினரும், புலனாய்வுத்துறையினரும் விழிப்படைந்திருப்பதாகத் தெரிகின்றது. இவர்களிடம் மேலும் பெரும் தொகையான ஆயுதங்கள்
இருக்கலாம் என புலனாய்வுத்துறையினர் நம்புவதாகத் தெரிகின்றது.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, காத்தான்குடியில் செயற்பட்டுவரும் ஆயுதக்குழுவில் 200 முதல் 250 வரையிலான இளைஞர்கள் இருப்பது
தெரியவந்திருக்கின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா குழுவினர் வெளியேறிய பின்னர் அக்குழுவைச் சேர்ந்தவர்கள் பெருமளவு ஆயுதங்களை இந்த இஸ்லாமியக் குழுக்களுக்கு விற்பனை
செய்ததாகக் கூறப்படுகின்றது.
கிழக்கு மாகாண இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் பலரும் தமது சொந்தப் பாதுகாப்புக்காக இக்குழுக்களைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைவிட வர்த்தகர்கள் சிலரும் தமது வியாபாரப் பாதுகாப்புக்காக இவ்வாறான குழுக்களை உருவாக்கியிருக்கின்றார்கள். இருந்தபோதிலும் இக்குழுக்களின் வளர்ச்சி பெரும்
பிரச்சினைகளை உருவாக்கலாம் என்பதால் இவற்றை இல்லாது ஒழிப்பதில் காவல்துறையினர் தமது கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
இந்த ஆயுதக்குழுக்கள் இஸ்லாமிய சமூகத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதால் எழுந்தமானமாக அவற்றுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்காமல் சமூகத்தின்
முக்கியஸ்தர்களுடன் இது தொடர்பான பேச்சுக்களை பிரதி காவல்துறை மா அதிபர் எட்வின் குணதிலக்க நடத்தியுள்ளார்.
இதன்போது தமது ஆயுதங்களை ஒப்படைக்க இக்குழுக்கள் இணங்காத பட்சத்தில் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதக்குழுக்கள் தமது ஆயுதங்களை எதிர்வரும் 2 ஆம் நாளுக்கு முன்னதாக ஒப்படைத்தால் அவற்றுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர்,
இல்லையெனில் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 2 ஆம் நாள் குறிப்பிட்ட பள்ளிவாசல்களில் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை இந்த ஆயுதக் குழுக்கள் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment