Tuesday 9 June, 2009

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"- புதிய குரல்


இலட்சியம் நோக்கிய பயணம் தொடரட்டும், மனிதாபிமானக் குரல்கள் உரத்து ஒலிக்கட்டும்: விடுதலைப் புலிகள்
திகதி: 09.06.2009 // தமிழீழம்-சங்கதி இணைய தளம்

தமிழீழத் தேசியத்திற்கு உரமூட்டி, அதற்கான குறியீடுகளையும் விழுமியங்களையும் உருவாக்கி அதை உலகத் தமிழர்களுக்கு மாத்திரமன்றி முழு உலக சமுதாயத்திற்குமே எடுத்துக்காட்டி எம்மை நாமே ஆளுவதற்கான சகல தகைமைகளும் வாய்ந்த மக்கள் நாம் என்று முரசறைந்து நாம் மேற்கொண்ட விடுதலைப் பயணம் இன்று ஒரு வரலாற்றுச் சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. இச் சவாலைத் துணிகரமாக எதிர்கொண்டு முறியடித்து ஒருமித்து நின்று விடுதலையை நோக்கிய எமது பயணத்தைத் தொடரவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின்
அனைத்துலகத் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டு அறிக்கை:
தமிழீழ மக்களாகிய நாம் இலங்கைத் தீவில் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை கொண்ட ஒரு தனித்துவமான தேசிய இனம்.
இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கில் எமது பாரம்பரியத் தாயகத்தின் இறைமை பொருந்திய விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற எமது அரசியல் இலக்கை நோக்கி ஒப்பற்ற அர்ப்பணிப்புக்களுடன் போராடி வருகின்ற மக்கள் நாம்.
எமது உரிமைப் போராட்டம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அமைதி முறையில், ஜனநாயக வழிமுறைகளுக்கு உட்பட்டு முன்னெடுக்கப்பட்டதில் நாம் கண்ட பட்டறிவு சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டு எமது அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வை வென்றெடுப்பதற்கு சிங்களப் பேரினவாதம் இலகுவில் முன்வரப்போவதில்லை என்பதே.
இந்தப் பட்டறிவின் விளைவே தந்தை செல்வா அவர்களை இறைமையுள்ள தமிழீழமே எமது அரசியல் விடுதலைக்கான ஒரே வழி என்று தீர்மானிக்கவைத்தது. இதற்கான ஜனநாயக ரீதியிலான மக்கள் ஆணையை நிலைநாட்டியவரும் அவரே. இதைத் தொடர்ந்து மூன்று தசாப்தங்களாக நடைபெற்றுவந்துள்ள தேசிய விடுதலைக்கான ஆயுதப் போரில் இந்த மக்கள் ஆணையை எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும் தேசியத் தலைவருமான மேதகு வே. பிரபாகரன் அவர்கள் முழுமூச்சாக முன்னெடுத்து தமிழீழ அரசை எமது கண்முன்னே நிறுவி, அதன் விடுதலைக்கான போராட்டத்தை ஒப்பற்றஅர்ப்பணிப்புக்கூடாகவலுப்படுத்தி, தமிழீழ மக்களின் ஆணையை சர்வதேசமயப்படுத்தியுள்ளார்.
தமிழீழத் தேசியத்திற்கு உரமூட்டி, அதற்கான குறியீடுகளையும் விழுமியங்களையும் உருவாக்கி அதை உலகத் தமிழர்களுக்கு மாத்திரமன்றி முழு உலக சமுதாயத்திற்குமே எடுத்துக்காட்டி எம்மை நாமே ஆளுவதற்கான சகல தகைமைகளும் வாய்ந்த மக்கள் நாம் என்று முரசறைந்து நாம் மேற்கொண்ட விடுதலைப் பயணம் இன்று ஒரு வரலாற்றுச் சவாலை எதிர்கொண்டு நிற்கிறது. இச் சவாலைத் துணிகரமாக எதிர்கொண்டு முறியடித்து ஒருமித்து நின்று விடுதலையை நோக்கிய எமது பயணத்தைத் தொடரவேண்டும்.
எமது தாயக மண் எதிரியின் முழுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள இன்றைய நிலையில் தமிழீழத் தேசியத்தைப் பிரதிபலித்து அதன் இறைமைக்கும் சுதந்திரத்துக்குமான அரசியல் இலக்கை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியாகப் பெரும்பங்காற்றவேண்டிய நிலையில் உலகத் தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர் ஈழத்தமிழர்களாகிய நாம், எமது வரலாற்றுக் கடமையின் பொறுப்பை உணர்ந்தவர்களாகச் செயலாற்றவேண்டும்.
தாயகத்தில் சொல்லொணாத் துயருறும் எமது உடன்பிறப்புக்களின் துயர்துடைக்கும் மனிதாபிமானக் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்வதற்கும், உலக மனிதாபிமானத்தின் கண்களை எமது மக்களின் இன்னல்களை நோக்கித் திருப்புவதற்கும் முழுமூச்சாக காலதாமதமின்றி உழைக்கவேண்டிய உடனடிக்கடமை எம்முன்னால் உள்ளது.
மனிதாபிமானக் கட்டமைப்புக்களையும், பரப்புரை வேலைகளையும் உரிய முறையில் நெறிப்படுத்தும் வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்தப்பட வேண்டிய காலம் இது. இந்த வரலாற்றுத் திருப்புமுனையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் புலம் பெயர் ஈழத் தமிழ் மக்களின் முழுமையான பங்களிப்பினூடான ஜனநாயகக் கட்டமைப்புக்களைப் பரிணமிக்கச்செய்யும் அரசியல், மனிதாபிமான நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் கிளைகள் இயங்கும் நாடுகளில் துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தத் தயாராகிவருகின்றது.

போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் இலக்கு மாறாது என்ற சிந்தனைக்கமைய, தமிழீழத் தேசிய விடுதலைக்கான போராட்டம் புலம்பெயர் மக்களின் அரசியற் பங்களிப்பினூடாகக் கூர்ப்படைந்துசெல்லவேண்டிய வரலாற்றுத் தேவையை உணர்ந்தவர்களாக, இதயசுத்தியுடன் ஒருமித்த மக்கள் பங்களிப்போடு சங்கமித்து நாம் அனைவரும் ஒன்றிணைந்த ஓர் அனைத்துலகச் சக்தியாய் முன்னெழுவோம்.

இதற்கு முன்னோடியாக, அந்தந்த நாட்டிற்கேயுரிய அரசியற் சிறப்பியல்புகளுக்கு ஏற்ற வகையில் மக்கள் பங்களிப்பை உறுதிசெய்கின்ற நாடு தழுவிய ஜனநாயகக் கட்டமைப்பைப் பரிணமிக்கச் செய்யும் பணியை மேற்கொள்ளுவதற்கும் மக்கள் ஆணையை உறுதிசெய்வதற்குமான வேலைத்திட்டங்களை அந்தந்த நாட்டுக்கிளைகள் முன்னெடுக்கும்.

இந்த ஒழுங்குகளுக்கு தேசியப்பற்றுக்கொண்ட அனைவரையும் பாகுபாடின்றி இதய சுத்தியோடு பங்குகொண்டு ஊக்குவிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் இத் தருணத்தில் வேண்டிநிற்கிறது. இந்த வேலைத் திட்டங்களுக்கான கருத்துப் பரிமாறல்களுக்கும், ஒன்றுகூடல்களுக்கும் கிளைப் பொறுப்பாளர்களை அணுகுமாறு வேண்டுகிறோம்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
இவ்வண்ணம்,
பொ.செம்மலை
தாயக ஒருங்கிணைப்பாளர்
அனைத்துலகத் தொடர்பகம்

No comments: