Thursday 4 June, 2009

ஆவணம்: பத்மநாதன் அறிக்கைகள்-010709

(ஆவணம்: பத்மநாதன் அறிக்கைகள் )
அறிக்கை -12
விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும்: செ. பத்மநாதன் கோரிக்கை
[ புதன்கிழமை, 01 யூலை 2009, 05:27.16 AM GMT +05:30 ]
இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன். அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என புலிகள் அமைப்பின் சர்வதேசப் பிரிவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கோரியுள்ளார். இது குறித்து ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவியதால்தான் விடுதலைப் புலிகள் தோல்வி அடைய நேரிட்டது என்று கூறியுள்ளார் சமீபத்திய போரில், இந்தியா, இலங்கைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. முழு வகையில் உதவிகளைப் புரிந்தது.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு நாங்களும், தமிழ் மக்களும் பலிக்கடாவாகி விட்டோம்.
இலங்கையின் இராணுவ வெற்றிக்கு இந்தியா எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது எங்களுக்கு முழுமையாக தெரிந்தாலும் கூட, இந்தியாவை நாங்கள் வெறுக்கவில்லை.
இந்தியாவின் பிரதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுமையான பாதுகாப்பாக இருப்பார்கள் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம். குறிப்பாக சீனாவை கருத்தில் கொண்டால் நிச்சயம் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுப் பாதுகாப்பாக இருக்க முடியும்.
இதை இந்தியா ஒரு நாள் உணரும், ஈழத் தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை ஆதரிக்க முன்வரும்.
இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன்.
அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்றார் அவர்.


அறிக்கை-11
உலகத் தமிழர் ஆதரவுடன் அரசியல் வழிகளில் இனி நாம் போராட்டத்தை முன்னெடுப்போம்: செ.பத்மநாதன்

[சனிக்கிழமை, 27 யூன் 2009, 07:49 பி.ப ஈழம்] [கி.தவசீலன்]
தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற தமிழர்களின் அரசியல் வேட்கைகளுக்காக எமது இயக்கம் ஒரு புதிய பாதையில் இனிப் போராடும். அரசியல் வழியில் போராட்டத்தைத் தொடரும் வகையில் எமது அமைப்பில் நாம் மாற்றங்கள் செய்து வருகின்றோம். அதனடிப்படையில் - புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டு மக்களதும் ஆதரவுடன் நாம் அனைத்துலக
மட்டத்தில் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்துள்ளார்.
நேற்று முன்நாள் வியாழக்கிழமை 'இந்தியா ருடே' குழுமத்தின் 'ஹெட்லைன்ஸ் ருடே'க்கு அவர் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

பிரபாகரன் அவர்களின் மரணம் பற்றிய உண்மைகள் என்ன?
எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, எமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறிலங்கா படைகளுடனான போரில் மே 17 ஆம் நாள் மாவீரர் ஆனார்.

இறுதி மணித்துளிகள் வரை நீங்கள் தொடர்பில் இருந்தீர்களா? அந்த இறுதி மணித்துளிகள் எப்படியாக இருந்தன?
ஆம், அவரின் தொடர்பு இணைப்புத் துண்டிக்கப்படும் கடைசி மணி நேரம் வரையில் நான் எமது தலைவருடன் தொடர்பில் இருந்தேன். எனது இறுதித் தொடர்பு கேணல் சூசையுடன் இருந்தது.
அந்த நேரத்தில் அவர் சிறிலங்கா படையினருடன் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியை கடைசி மணிவரை வழி நடத்திக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் களத்தில் நடப்பதை விபரமாக அவர் எனக்கு விபரித்தார்.
கடைசி நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் நிறையக் கோரமும் பயங்கரமும் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான எமது மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் இருந்தனர். அங்கே மருத்துவர்களோ, மருத்துவ வசதிகளோ, காயப்பட்டவர்களைக் கவனிப்பதற்கு இருக்கவில்லை. மருத்துவ கவனிப்பு இல்லாமல் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். எமது தலைவர் சிறிலங்கா இராணுவத்துடன் மோதி ஈழத் தமிழ் தேசியத்துக்காக தமது உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கிறார் எனவும் சூசை தெரிவித்தார்.

பிரபாகரனின் குடும்பத்தில் யார், யார் எஞ்சியுள்ளனர்?
எமக்கு கிடைத்த மிக நம்பகரமான தகவல்களின் படி எமது தலைவரின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியும் மகள் துவாரகாவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணியில் இணைந்து சிறிலங்கா படையினருடனான போரில் இறுதி நேரத்தில் அவர்களும் வீரச்சாவடைந்தனர். இந்தக் கணம் வரை தலைவரின் துணைவியார் மதிவதனியும் இளைய மகன் பாலச்சந்திரனின்
கதியும் என்ன என்பது பற்றிய துல்லியமான தகவல் எமக்கு கிடைக்கவில்லை.

'ஹெட்லைன்ஸ் ருடே'க்கு இன்று எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய பேட்டியில் கடைசிப் போரின் இறுதிக் கணங்கள் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் தம்முடன் தொடர்பில் இருந்தனர் என்று சொல்லியிருந்தார். ஏனைய உலகத் தலைவர்களுடனும் நீங்கள் தொடர்பு வைத்திருந்தீர்களா?
ஆம். நான் சில உலகத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். ஆனால் இராஜதந்திரக் காரணங்களுக்காக அத்தகைய தொடர்புகள் பற்றிய தகவல்களை இந்தத் தருணத்தில் எம்மால் வெளியிட முடியாதுள்ளது.

இந்த முயற்சிகள் ஏன் பயன் தராமல் போயின?
போரை நிறுத்த அர்த்தமான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்துள்ளது. ஆயுதங்களை கீழே வைக்கும் முன்பாக ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது தலைமை
இருந்தது.
ஆயுதங்களை கீழே வைப்பதற்குப் பதிலாக நாம் ஒரு போர் நிறுத்தத்தையும் அரசியல் தீர்வையும் தேடினோம். தூரதிர்ஷ்டவசமாக எமது கோரிக்கை சிறிலங்கா அரசுக்கு ஏற்க முடியாத காரணத்தால் அனைத்துலக சமூகத்துக்கு அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இருக்கவில்லை. எனவே போரை நிறுத்த கனதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

கடைசி நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் கடுமையான மிருகத்தனமான தாக்குதல்களின் காரணமாகவும் மருத்துவ வசதிகளும் இல்லாத காரணத்தால் பொதுமக்களினதும் எஞ்சிய வீரர்களின் உயிரைக் காக்கவும் எமது தலைமை துப்பாக்கிகளை அமைதிப்படுத்தியது.
எமது தலைமை துப்பாக்கிகளை நிறுத்தாது விட்டால் அதனை ஒரு சாட்டாக வைத்து சிறிலங்கா அரசு எமது மக்களின் அழிப்பை நியாயப்படுத்திவிடும் எனக் கவலை கொண்டிருந்தது.
துப்பாக்கிகளை அமைதிப்படுத்தும் செய்தி எனக்கு 15 ஆம் நாள் மாலை தெரியப்படுத்தப்பட்டது. அது ஒரு வெள்ளிக்கிழமை. அடுத்த 48 மணி நேரமும் நாம் அனைத்துலக சமூகத்துடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு உடனடிப் போர் நிறுத்தத்தை நடைமுறையாக்க முயற்சித்து அதில் எமக்குச் சாதகமான சில பதில்களும் கிடைத்திருந்தன.
மீதமான நாட்கள் வார இறுதியான சனி, ஞாயிறு நாட்களாக இருந்த போதும் அனைத்துலக சமூகத்தின் உறுப்பினர்கள் சிறிலங்கா அரசை போர் நிறுத்தம் செய்ய முயற்சித்தனர். ஆனால், சிறிலங்கா அரசின் பதில் மறுப்பாகவே இருந்தது. சிறிலங்கா அரசும் அதன் படையினரும் இறுதித் தாக்குதலிலும் தமது மிருகத்தனமான அழிப்பிலும் பிடிவாதமாக இருந்தனர்.

இந்தியாவில் உள்ள வைகோ, நெடுமாறன் உட்பட பல தமிழீழ வீடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் நீங்கள் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற அறிவித்தலை விடுத்தமைக்காக உங்களைக் கண்டித்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள சிலரும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கின்றனர். இவற்றை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் தமிழ் மக்களுக்கு விடுத்த செய்தி மிகவும் கெட்டதும் பெரும் துன்பம் நிறைந்ததும் ஆகும். நிச்சயமாக இச்செய்தியை ஏற்கவும் உண்மை என எடுக்கவும் எனக்குப் பல மணி நேரங்கள் பிடித்தது. சில உறுப்பினரும் பெரும் பகுதியான தமிழ் மக்களும் நான் வெளிக்கொணர்ந்த செய்தியை நம்ப முடியாதுள்ளனர். நான் அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்கிறேன்
அவர்களுக்காக மிகுந்த அனுதாபம் கொண்டுள்ளேன். அவர்களின் நடவடிக்கைகள் உணர்வுகளின் வெளிப்பாடுகளின் காரணமாக உள்ளன. ஓரு பொறுப்பு வாய்ந்த விடுதலை இயக்கமாக நாம் எமது மக்களிடம் இருந்து உண்மைகளை மறைத்து விட முடியாது. அரசியல் ரீதியாகவும் எம் மக்களிடம் இருந்து உண்மைகளை மறைப்பது தவறானதாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வன்முறை வழியை கைவிட்டமை அமைப்புக்குள் பரவலான ஆதரவைக் கொண்டுள்ளதா? இது நிரந்தரமானதா அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீளவும் பின்னால் ஆயுதத்தை எடுக்கும் உரிமையைத் தன்வசம் கொண்டுள்ளதா?
எமது துப்பாக்கிகளின் பாவனையை நிறுத்தும் முடிவு எமது தலைவரால் அவரது மறைவுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகும். நாம் இப்போது ஒரு புதிய பாதையை நோக்கி முன்னேறுகிறோம்.
இந்நிலையானது அமைப்புக்குள்ளே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாடு ஆகும்.
எந்த ஒரு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கொள்கைகளான, தமிழ்த் தேசியத்தின் அங்கீகாரம், வடக்கு - கிழக்கு தமிழரின் வரலாற்றுத் தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரிப்பதாக அமைதல் வேண்டும்.
தமிழ் மக்களின் இந்த அரசியல் வேட்கைகளை அடையும் வரை எமது அரசியல் போராட்டம் தொடரும். நாங்கள் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்போம். நீங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தொடக்கத்தில் ஆயுதப் போராட்டம் தோற்றுவதற்கு அடக்குமுறை, ஆக்கிரமிப்பு, அரசியல் முறையான எதிர்ப்புகளையும் ஜனநாயகப் போராட்ட உரிமைகள் என்பனவற்றை
அடக்கப்பட்ட மக்களுக்கு மறுத்தமையும், மூலகாரணமாக இருப்பதை இலகுவாக அவதானிக்க முடியும்.
இந்நிலை எமக்கும் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தமிழ்த் தேசியத்துக்கு ஏற்பட்ட அநீதிகளின் வரலாற்றுப் பிரதிபலனாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது அரசியல் வழியைத் தெரிவு செய்துள்ளனர். மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் பற்றிய கேள்வி வரலாற்றில் தமிழ் மக்களின் உரிமையாக விட்டுவிட விரும்புகிறேன்.

அமைப்புக்கு உள்ளும் வெளியிலும் உள்ள ஆதரவாளர்கள் மத்தியில் இப்போதும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தமிழ் ஈழம் பெறுவதற்கான ஓரே வழி என நம்பும் மக்களைப் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்ட வழியில் எமது தலைவர் பெரும் சவால்களை எதிர்நோக்கி இருந்தார். அக்காலத்தில் நிலவிய நிலைமைகளுக்குள் பெறக்கூடிய அதிகபட்ச நன்மைகளை பெற்று விட்டார். இலட்சியத்துக்காக மிகவும் பாடுபட்டு உழைத்தவர். சுயநலங்களை அச்சாகக் கொண்டு சுழலும் இந்த உலக இயக்கத்துக்கு எமது ஆயுதப் போராட்டம்
அனுதாபத்தைப் பெற முடியாது போய்விட்டது.
மாறாக சிறிலங்கா அரசு இன்றைய உலக நிலைப்பாட்டினையும் பூகோள அரசியல் கட்டமைப்புகளையும் தனது பக்கம் அணிதிரட்டி விட்டதை நாம் பார்த்துள்ளோம். நாம் எமது கொள்கைகளிலும் கோரிக்கைகளிலும் உறுதியாக நின்று அடுத்தகட்டப் போராட்டத்தை அரசியல் வழியில் தொடருவதே எம்முன் இருக்கும் சிறந்த தெரிவாக உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்குத்துக்குள் பிளவு என்றும் அதற்குள் ஒரு பலப்போர் நடக்கிறது என்றும் கூறப்படும் செய்தி அறிக்கைகள் பற்றி உங்கள் பதில் என்ன?
நான் அதனை மறுக்கிறேன். தலைவரின் மரணச் செய்தி அறிவித்தலால் எமக்குள் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்பது உண்மைதான். இந்த விடயத்தில் நாம் ஒரு ஒற்றுமையைக் காண்பதில் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், உரையாடல் மூலம் அதனைத் தீர்த்துவிட உழைத்து வருகிறோம்.

இனிவரும் காலத்தில் அமைப்பில் உங்களது பங்கு என்னவாக இருக்கும்?
தமிழீழ அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான பிரிவின் தலைவராக நான் எமது அரசியல் இலட்சியங்களை வென்றெடுக்கத் தேவையான அனைத்துலக உறவுகள் எதிர்பார்க்கும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து நடத்துவேன். நாம் அமைப்பில் மறுசீரமைப்புப் பணிகள் பற்றித் திட்டம் இட்டு வருகிறோம். இது முடிவுற்றதும் தமிழ் மக்களுக்கும் உலகத்துக்கும் அறிவிப்போம்.

எதிர்வரும் காலத்தில் புதிய வன்முறைகள் அற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எத்தகைய பங்கை வகிக்கும்?
தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற தமிழர்களின் அரசியல் வேட்கைகளுக்காகப் போராடும். நாம் ஒரு புதிய பாதையைத் தெரிவுசெய்து விட்டபடியால், நாம் எமது அமைப்பை அரசியல் வழியில் போராட்டத்தைத் தொடரும் வகையில் மாற்றம் செய்து வருகிறோம். அதன் எமது ஒரு செயற்பாடாக புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டிலும் உலகின் வேறு பகுதிகளிலும் உள்ள தமிழ் உறவுகளினதும் ஆதரவுடன் எமது அமைப்பின் மீது உள்ள அனைத்துலக தடையை நீக்குவதற்காக உழைக்க வேண்டி உள்ளது.
அனைத்துலக சமூகம் முக்கியமாக இந்தியாவும் மேற்குலக நாடுகளும் எமது புதிய வழியை வரவேற்று அதற்கு வெகுமதியாக எமது அமைப்பின் மீது உள்ள தடையை நீக்கி எமது அரசியல் செயற்பாட்டுக்கான வாசற் கதவுகளைத் திறந்து விடுவர் என நாம் நம்புகிறோம்.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பற்றி எமக்குக் கூற முடியுமா? ஏனைய வெளியக அரசுகள் பெருமளவு பயனளிக்காத நிலையில் இது எப்படி அவற்றில் இருந்தும் வேறுபடுகிறது?
எமது சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த அரசுக்கும் வெளியக அரசுக்கும் இடையில் சில கருத்தியல் வேறுபாடுகள் உள்ளன. இதற்கான குழுவின் ஒருங்கிணைப்பாளர் உருத்திரகுமாரன் இக்கேள்விக்கான மேலதிக பதிலை வழங்கக்கூடிய சரியான நபர் என நான் கருதுகிறேன்.

தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நேரடியாகப் பங்குபற்றுவது பற்றிச் சிந்திக்குமா? நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்பை தேடியிருக்கிறீர்கள். இந்த உறவு எப்படிச் செயற்படும்?
தேர்தலில் கலந்துகொள்வதில் எந்த நியாயமோ தேவையோ இருப்பது எமக்குத் தெரியவில்லை. அரசியல் வழியில் போரிடுவது என்பது கட்டாயமாகத் தேர்தலில் கலந்துகொள்ள வேண்டும்
என்பதல்ல. தமிழர் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற கொள்கைகளின் அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேர்தல்களில் கலந்துகொள்ளாது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நாம் தேடவில்லை. ஆனால் நாம் புலத்திலும் தாயகத்திலும் அரசியல் நடவடிக்களின் இணக்கப்பாட்டின் முக்கியத்துவம் பற்றி உணருகிறோம். எப்படி ஒரு பொதுவான புரிந்துணர்வு உருவாகிச் செயற்படும் என்பது பற்றி கருத்து தெரிவிப்பதற்கு இது ஏற்ற தருணம் அல்ல.
அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து இருக்கலாம். ஆனால், அரசியலில் அல்ல. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான காரணிகள் கவனத்தில் எடுக்கப்படாமலே உள்ளன. சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இலங்கை மக்களாட்சி பலமான சிங்கள பேரினவாத சர்வாதிகார ஆட்சியாக மாறிவிட்டுள்ளது.
தமிழ் - சிங்கள மக்களை அடக்கும் சாதனங்களாக சிறிலங்காவின் நாடாளுமன்றம் அரசு நீதி பரிபாலனம் செயற்பட்டு வருகின்றன. அண்மையில் இலங்கையில் ஒரு தேசம், ஒரு மக்கள் என்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கூற்றானது. அந்தத் தீவில் உள்ள தமிழ் - முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்காது உள்ளதோடு அங்கே எதிர்வரும் காலத்தில் இன இணக்கப்பாட்டுக்கு பாரிய பின் விளைவுகளுக்கு வழிசெய்து விடும்.
சிங்கள மேலாதிக்க செயற்பாட்டில் நாட்டை ஆண்டு வரும் நிலையில் அந்தத் தீவில் பெரும்பான்மை சிறுபான்மை இல்லை. ஆனால், தேசப்பற்றாளரும் தேசத் துரோகிகளும் மட்டுமே உள்ளனர் என்பது அபத்தமாக இருக்கிறது. இலங்கை தனது தேசியக் கட்டுமானத்தில் பரிதாபமான தோல்வியைச் சந்தித்து உள்ளதை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விளங்கிக்கொள்ள வேண்டும்.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் தம்மை இலங்கையர் என அடையாளப்படுத்த விரும்பாது ஈழத் தமிழர்களாகவே அடையாளப்படுத்த விரும்புகின்றனர். சிறிலங்கா அரசை அந்நிய அரசாகவே தமிழர்கள் கருதுகின்றனர்.
இத்தகைய பின்னணியில் தமிழர்களின் அரசியல் வேட்கைகளான தமிழ்த் தேசியம், வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரித்து ஒரு உண்மையான இணக்கப்பாடு காண்பதே எஞ்சியிருக்கும் தனி ஒரு தெரிவாக உள்ளது.
இப்போது மகிந்த ராஜபக்ச மிகப்பலமான மக்கள் ஆதரவைக் கொண்டுள்ளார். அவர் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை ஏற்க முன்வரின் சிங்கள மக்களின் எதிர்ப்பு குறைவாக எதிர்நோக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவர் தம்மை எல்லா இன மக்களையும் சமமாக கருதும் ஒரு உண்மையான தலைவராகக் கருதினால் அவர் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை
அங்கீகரித்து தம்மை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

ஈழப் போர் - 4 என இன்று அழைக்கப்படும் போரில் இந்தியாவின் வகிபாகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்ற இந்தியாவால் அதிக அளவு செய்திருக்க முடியும் என நினைக்கிறீர்களா?
அண்மைப் போரில் இந்தியா உறுதியாக இலங்கையின் பக்கம் நின்று முழுமையான ஆதரவை வழங்கியது. இது இரகசியமானது அல்ல. சிறிலங்கா தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளும் பகிரங்கமாக ஏற்றிருந்தனர். எனினும் நாம் இந்தியாவை வெறுக்கவில்லை.
இந்தியாவின் ஏனைய நாடுகளுடனான குறிப்பாக சீனாவுடனான பூகோள அரசியல் போரில் அதற்குத் தமிழ் மக்களின் உண்மையான நம்பகரமான நட்பு இருக்கும் என நாம் கருதுகிறோம்.
இதனை எதிர்வரும் காலத்தில் இந்தியா உணர்ந்து தமிழ் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை ஆதரிக்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியும் ஏனைய அரசியல் தலைவர்களும் நவம்பர் 2008 ஆம் ஆண்டில் விடுத்த வேண்டுதலை ஏற்று இந்தியா போரை நிறுத்தத் தீர்மானித்திருந்தால் பொதுமக்களைப் பாரியளவில் காப்பாற்றியிருக்க முடியும்.

நீங்கள் இந்தியாவுடன் நேரடித் தொடர்பை மேற்கொள்வீர்களா? நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதில் இந்தியாவுக்கு ஏதும் வகிபாகம் இருக்கிறதா?
ஆம். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவுடன் நேரடித் தொடர்பு மேற்கொள்ள இருக்கிறேன். தமிழீழ மக்களின் அரசியல் வேட்கைகளை ஆதரிக்கவும் கோருவேன். நாடு கடந்த அரசு அமைப்பு கருத்தியல் நிலையில் உள்ளதால் ஏனைய அரசுகளின் ஆதரவைக் கேட்பது ஒரு முன் நிபந்தனையாக இருக்காது. தேசம் கடந்த அளவில் இது ஒரு புலம்பெயர் தமிழ் மக்கள் மயமான செயற்பாடாகும்.
நிச்சயமாக நட்பு அரசுகளின் ஆதரவு நாடு கடந்த அரசுக்கும் அதன் செயற்பாட்டு நோக்கங்களுக்கும் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. தற்காலிக நாடு கடந்த அரசமைப்புக் குழு எல்லா நாடுகளுடனும் முக்கியமாக இந்தியாவுடனும் நாடு கடந்த அரசுக்கான ஆதரவைத் தேடும்.

இலங்கையில் இன்னமும் சில விடுதலைப் புலிகப் போராளிகள் செயற்பாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் கிழக்கில் காடுகளில் செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கேணல் ராம் பிரபல தலைவர் எனச் சொல்லப்படுகிறது. இக்குழுவைப் பற்றிய தகவல் ஏதும் உங்களிடம் இருக்கிறதா? இக்குழுக்களிடம் இனிமேல் உங்கள் தொடர்பு என்னவாக இருக்கும்?
எமக்கு அவர்களுடன் தொடர்பு இருக்கிறது. அவர்கள் தமது துப்பாக்கிகளின் பாவனையை நிறுத்தி எமது தலைமையிலான புதிய வழிக்குத் திரும்பி எனது வழிகாட்டலில் உள்ளனர். எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய எதுவித வழிமுறையும் ஏற்படுத்திக்கொள்ள முடியாத காரணத்தால் அவர்களின் பாதுகாப்பு பற்றிய கவலை எனக்கு இருக்கிறது. இது விடயத்தில் அனைத்துலக சமூகம் இந்த விடயத்தில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

உங்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு அனைத்துலக பிரச்சாரம் செய்து உங்களைக் கைது செய்யக் கோருகிறது. இந்த நடவடிக்கைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் என்ன?
செய்தித் தாள்களில் இச்செய்தியைப் படித்துள்ளேன். தமிழ்த் தேசியம் தனது சட்ட ரீதியான உரிமைகளை வென்றெடுக்கும் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் நானும் பங்காளியாக உள்ளேன். அனைத்துலக சட்டங்களின்படி இப்போராட்டம் நியாயபூர்வமானது. இராணுவத் தோல்வி போராட்டத்தின் நியாயப்பாட்டை அழித்துவிட முடியாது. நான் எந்தக் குற்றமோ மனிதத்துக்கு கெடுதல் செய்யவோ இல்லை.
மேலும் நான் இப்போது எமது அமைப்பை ஒரு அரசியல் அமைப்பாக மாற்றம் செய்து வருகிறேன். இம் மாற்றத்துக்கான முடிவானது எமது தமிழர்களின் தேசிய நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அந்தத் தீவில் உள்ள சிங்கள, இஸ்லாமிய மக்களுக்கும் நன்மையளிக்கக் கூடியது.
அந்தத் தீவினதும் பிராந்தியத்தினதும் உறுதிப்பாட்டிற்கும் அமைதிக்கும் முக்கியமானது. இந்த விடயத்தில் பாத்திரம் வகிப்போர் இந்த விடயத்தை யதார்த்த நிலையில் அணுகுவார்கள் என நான் நம்புகிறேன். எது எப்படி இருப்பினும் தமிழ் மக்களுக்காக நான் எவ்வித ஆபத்தையும் உயிரையும் கூடத் தியாகம் செய்யச் சித்தமாக இருக்கிறேன்.

பொட்டு அம்மானின் உண்மை நிலை என்ன, சிறிலங்கா அரசு சொல்கிறது அவர் இறந்து விட்டார் எனவும் ஆனால் அதற்கான சான்றுகளைத் தர முடியாது உள்ளனர்?
எமக்கு கிடைத்த தகவல்களின் படி மே 17 ஆம் நாளில் 2009 இல் இடம்பெற்ற சிறிலங்கா படைகளுக்கு எதிரான போரில் அவரும் மாவீரர் ஆனார் என்றே தெரிகிறது.


அறிக்கை- (10)
நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி,

திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம்
[செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2009, 06:22 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடர முடியும். எனவேதான் - அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக - தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்கள் தற்பொழுதிற்கான 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசிம் எனக் கருதுகின்றார்கள் என அந்த அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ள செயற்குழுவின் தலைவர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயற்குழுவின் ஆலோசகர்களாக இயங்குவதற்கு முன்வந்துள்ள பல்துறை நிபுணர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மானிடம் பேணும் சட்டநெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்று முழுதாக மீறி, கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாயபூர்வமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது.
வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது.
குறிப்பாகப் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரகப் போர் ஆயுதங்களினாலும் அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக் குண்டுகளினாலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.
இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட சிறை முகாம்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வன்னடைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சார்ந்த நிறுவனங்களும், அனைத்துலக அரச நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ். தீபகற்பம் ஒரு திறந்தவெளி மறியல் சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாக உள்ளது.
சிறிலங்காவின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுதல் நாளாந்த நிகழ்வாக உள்ளது.
தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காவே இவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். நன்கு திட்டமிட்ட கொலைகள், கடத்தல், காணாமல் போதல், வன்மையான அடையாள அழிப்பு, தமிழீழ நிலப்பறிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்றவற்றினால் தமிழ் மக்களின் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்பட்டு வருகின்றது.
இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமல்லாமல் அவர்களது நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை எடுத்துரைக்கும் அரசுரிமை வெளியும் அழிந்து போய் உள்ளது.
மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் உயிராபத்தின் விளிம்பில் வாழ்கின்றனர். திரு யோசப் பரராசசிங்கம் (2005), திரு நடராசா ரவிராஜ் (2006), திரு க.ந.சிவநேசன் (2008) ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உயிர் ஆபத்தை எதிர்கொண்ட போதும் அசாத்தியத் துணிவுடன் பணியாற்றுகின்றனர்.
இவை தவிர இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, தேர்தல் தொகுதிகளின் எல்லைகளைக் கபடமாக மாற்றியமைத்தல் போன்றவற்றினாலும், புதிய வாக்காளர்களைப் பதியாமல் விட்டமை, மற்றும் தொடர்ந்து போரினால் பாரிய அளவில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் ஆகியனவும் நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எண்ணுக்கணக்கில் குறுகச் செய்துள்ளது.
இவை அனைத்துமே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவதை சாத்தியமற்றதாக்கி உள்ளது.
இந்நிலையில் சிறிலங்காவின் அரச அமைப்பிலும் அதன் யாப்பு முறையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஆக்கபூர்வமான, பயன்தரு வகையில் முன்னெடுப்பதற்கான எத்தகைய அரசியல்வெளியும் இல்லை.
இத்தீவில் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழி எதுவுமே இல்லை. எனவே இலங்கைத் தீவுக்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தொடரமுடியும்.
ஆகவே தமிழீழத்தில் வாழும் மக்களும் வெளிநாடுகளில் பரவி வாழும் தமிழீழத்தவர்களும் தற்பொழுதிற்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியமான மிக முக்கிய பணியெனக் கருதுகின்றார்கள்.
சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும் சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவதும் திட்டமிட்டு இன அழிப்பில் ஈடுபடுவதும் இவை போன்ற போர்க் குற்றங்களும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் குழந்தைகளைக் கடத்துவதுமாகிய கொடூரங்களும் இவற்றினூடாக அரசியற் தலைவர்களை புறந்தள்ளலும் ius cogens அடிப்படை சட்டநெறித்தத்துவங்களுக்கு முற்றிலும் முரணானதாகும்.
இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்டபூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு அனைத்துலக சட்ட மரபுநெறிகள் இடம் தருகின்றன.
இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையில் அமைந்தவையாகும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை, பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
1. 1976 இல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985 இல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003 இல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய
- தமிழர் ஓர் தேசிய இனம்- வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்- ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை
போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத் தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது.
2. 2001 ஆம் ஆண்டு, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத் தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.
3. சிங்கள தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.
4. உலகு அனைத்தும் பரவி வாழும் ஈழத் தமிழர் மத்தியில் அனைத்துலக மதிப்பினைப் பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப்பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.
5. ஈழத் தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.
6. அரசுகளுடனும், பல் அரசுகள் சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.
7. உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல்.
8. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கு எதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லிம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.
9. வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன்பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல்.
இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்துமுகமாக அனைத்துலக அரசு சார் நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற அனைத்துலக நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்டுவதனையும் இக்குழு தனது பணியாகக் கொண்டுள்ளது.
இவ்வாறு தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் ஈழத் தமிழரின் உயிர் இருப்பை உறுதி செய்தல் மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தமிழ்ச் சிறுவர்கள் மீதான வன்முறை சித்திரவதைகளையும் சிங்கள அரசும் அதன் இராணுவமும் மேற்கொள்ளாதபடி தடுத்து நிறுத்துதல், பிரிந்த குடும்பங்களை விரைவாக ஒன்று சேர்த்து இன்று கொடுமை முகாம்களில் வதைபடும் மூன்று லட்சம் தமிழ் மக்களையும் அவர்களின் சொந்த வீடுகள், ஊர்களில் குடியமரும்படியான வழிவகைகளை இனம் காணுதல், தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டவர்களையும் மனித நேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைத் திட்டமிட்டுப் புரிந்தவர்களையும் நீதியின்படியாக விசாரணைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதில் இக்குழு கவனம் செலுத்தும்.
தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள அமைப்புக்களுடனும் குறிப்பாக புதிய இளைய தலைமுறையினருடன் இணைந்து செயற்படுதலில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட இச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படும் இச்செயற்பாட்டுக்குழு நாடுகள் தழுவிய ரீதியிலும் துறைகள் சார்ந்த வகையிலும் பல உப குழுக்களை கொண்டு இயங்கும்.
இச் செயற்பாட்டுக் குழுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம்.
இச் செயற்பாட்டுக் குழுவுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஜோசப் ஏ.சந்திரகாந்தன் (கனடா)
பேராசிரியர் சொர்ணராஜா (பிரித்தானியா)
பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா)
பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா)
பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்)
கலாநிதி முருகர் குணசிங்கம் (அவுஸ்திரேலியா)
மருத்துவ கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா)
கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா)
சட்ட அறிஞர் கரன் பார்க்கர் (அமெரிக்கா)
திரு செல்வா சிவராசா (அவுஸ்திரேலியா)
பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்)
ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இச் செயற்திட்டத்திற்குரிய குழுக்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு ஆர்வமுள்ள அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.
இக்குழு 2009 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31 ஆம் நாள் வரை செயற்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத் திகதி வரையிலான செயற்பாடுகளை இக்குழு அறிக்கையாகச் சமர்ப்பிக்கும்.
இத்திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினது ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம்.
மக்கள் தொடர்புக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம்: செ.பத்மநாதன்
[திங்கட்கிழமை, 15 யூன் 2009, 05:26 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம், சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியுள்ளது.
தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்துகொண்டு, நமது விடுதலை இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது.
இதற்காக பொதுக்கொள்கையின் அடிப்படையிலான ஒரு சீரிய வேலைத் திட்டத்தின் முக்கியத்துவத்தினை உய்த்துணர்ந்து, அதற்குரிய ஆலோசனைகளையும் நமது மக்களிடமிருந்து கோரியிருந்தோம்.
நமது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களையும், புலமைசார் அறிஞர்களது ஆலோசனைகளையும் கவனத்திற் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை அமைப்பது (Provisional Transnational Government of Tamil Eelam) எமது அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவசியமானது என உணர்கின்றோம்.
இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு செயற்குழு, சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்குழுவிற்கு முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினயும் வழங்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் தமிழர் அமைப்புக்களையும் வேண்டிக் கொள்கிறோம்.
தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து கட்டப்பட்டவை.
1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 2003 ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாக அதிகார சபைத் திட்டம் ஆகியன ஊடாக வெளிப்படுத்தப்பட்டவை.
இந்த அரசியல் அபிலாசைகள் உயிர்ப்பாகப் பேணப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டியவை.
இதேவேளையில் இன்றைய தாயகச் சூழலில் சிறிலங்காவின் இராணுவ ஆதிக்கப்பிடிக்குள் சிக்கியுள்ள நமது மக்களால் இந்த அரசியல் அபிலாசைகளை ஓங்கி ஒலிப்பது நடைமுறைச் சாத்தியமாகாது.
இந்த யதார்த்த நிலையைப் புரிந்துகொண்டு செயற்படுவது மிகவும் அவசியமானது.
இந்நிலையில் பொதுநோக்குடன் பொது உடன்பாட்டின் அடிப்படையில் தாயகத்திலும் புலத்திலும் இரு சமாந்திரமான செயற்திட்டங்களை தமிழர் தேசம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஜனநாயக முறையில் புலத்தில் அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைக்குரலையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்துலக அரங்கில் இயங்க வேண்டும்.
அதேவேளையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசகைளை தமது அரசியல் அடிப்படைகளாகக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் தாயக நிலைமைகளை பவித்திரமாகப் புரிந்து கொண்டு இயங்கும் வகையிலான தாயகச் செயற்திட்டம் அமைய வேண்டும்.
இந்த இரு செயற்திட்டங்களுக்கிடையில் ஓர் இணைவு இருக்க வேண்டும்.
இப்போது அமைக்கப்பட்டிருக்கும் செயற்குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் கோட்பாடுளை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடிய ஏனைய அரசியல் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தி ஒரு பொது உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
தனது செயற்பாடுகளை ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு சுயாதீனமாக முன்னெடுக்கவிருக்கும் இந்த செயற்குழு தனது செயற்பாட்டுத்திட்ட விபரங்களை மக்களுக்கு அறியத்தந்து மக்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்புகளைப் பேணிக் கொள்ளும்.
இந்த செயற்குழு தனது முயற்சியில் முழுமையான வெற்றி பெற நாம் அனைவரும் இன ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக் கொள்கையின் கீழான வேலைத் திட்டத்துக்கு ஆலோசனை கோருகிறார்
புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்
[வெள்ளிக்கிழமை, 05 யூன் 2009, 08:56 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள புதிய சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டயமாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போதைய சூழ்நிலையில் நமது தாயகத்தினதும் அங்கு வாழும் மக்களினதும் இன்றைய யதார்த்த நிலையினை அடிப்படையாக வைத்து சிந்திப்பதுதான் சரியானதும் நேர்மையானது ஆகும்.
தாயகத்தின் தற்போதைய நிலையில் - சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவர்களின் நலன்களைப் பேணுதல், மக்கள் தமது வாழ்விடங்களில் விரைவாக மீளக்குடியேற வழி செய்தல், அவர்கள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு ஆவன செய்தல், போரில் தமது உடல் உறுப்புக்களை இழந்திருக்கும் மக்களுக்கும் போராளிகளுக்கும் புது வாழ்வளித்தல் என்பவையே எங்கள் முன்னால் இன்று உள்ள தலையாய கடமையாகும்.
அதன் தொடர்ச்சியாக - தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தேசிய தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியதான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வைக் காணுதல் என்பதும் எங்கள் முன்னால் உள்ள வரலாற்றுப் பணியாகும்.
இந்தப் பணிகளை நிறைவேற்றி - நாம் கடந்துசெல்ல வேண்டிய பாதை மிகவும் நீண்டதும் சவால்கள் நிறைந்ததும் ஆகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள இந்தச் சவால்களை வெற்றிகொள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டியது அவசியமானது ஆகும்.
சிறிலங்கா அரசு தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவத்தினை நிராகரித்து - ஒரே நாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் - தமிழீழ மக்களை சிங்களப் பேரினவாத ஆதிக்கத்துக்குள் நிரந்தரமாக சிறைப்பிடிக்கப் பார்க்கிறது.
தமிழ்த் தேசிய இனம் தனது தேசிய இனப் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, தனது தேசிய தனித்துவத்தினைப் பேணிக் கொள்வதற்கே போராட வேண்டிய நிலை இப்போது உருவாகிவிட்டது. சிறிலங்கா அரசின் இந்தக் கொள்கையானது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்குமே ஆபத்தானது.
முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரும் தமது தனித்துவத்தினையும் அடையாளத்தினையும் பேணிக்கொள்வதற்கும் எதிரானது.
சிறிலங்கா அரசின் இந்த பௌத்த சிங்கள மேலாதிக்கத் திணிப்பை எதிர்த்துப் போராட இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டிய அவசியம் இப்போது உருவாகிவிட்டது.
சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக நமது கடந்தகாலச் செயற்பாடுகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்தப் பட்டறிவிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நடந்து முடிந்த இனப் படுகொலையை எம்மால் தடுத்துநிறுத்த முடியவில்லை. உலகம் எங்கும் தமிழ்நாட்டிலும் எழுச்சிமிகுந்த போராட்டங்களை தமிழர்கள் நடத்தினோம். எத்தனையோ இராஜதந்திர நகர்வுகளை நாம் மேற்கொண்டோம்.
இருந்தபோதும் உலக நாடுகளை தமிழர் தேசத்திற்கு ஆதரவாக அசையவைக்க எங்களால் முடியவில்லை.
நமது மக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த கண்டனங்கள் எழுந்தனவே தவிர அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்தவோ அல்லது நமது விடுதலை இயக்கத்தை பாதுகாக்கவோ யாருமே முன்வரவில்லை.
ஆனால் சிங்கள தேசமோ தற்போதைய உலக ஒழுங்கை நன்கு புரிந்துகொண்டு செயற்பட்டது. இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலை அது நன்கு பயன்படுத்தியது. அனைத்துலக முறைமை இயங்கும் நடைமுறையை கருத்திற்கொண்டு உலக நாடுகளை அது தனது பக்கம் அணி சேர்த்தது. இந்த இராஜதந்திர காய்நகர்த்தல்களின் பின்புலத்திலேயே தமிழர் தேசம் மீதான போரையும் சிறிலங்கா நடத்தியது.
தற்போதும் - இதே அணுகுமுறையினைப் பின்பற்றியே - மே மாதம் 27 ஆம் நாள் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு அமர்விலும் சிறிலங்கா அரசு வெற்றி ஈட்டியது.
தொடர்ந்தும் - அனைத்துலக சமூகத்தினை நுட்பமாக கையாண்டவாறு சிங்கள மேலாண்மையை தமிழ் மக்கள் மீது திணிக்கவே சிறிலங்கா அரசு முயல்கிறது.
நமது அடுத்த கட்டப் போராட்டத்தில் நாம் தனித்து நின்று செயற்பட்டு வெற்றி பெற முடியாது. நமது தேசத்திற்கு ஆதரவாக உலகை எவ்வாறு திருப்பப் போகிறோம்?
நமது தேசியத் தலைவர் அவர்கள் முன்னர் சுட்டிக்காட்டியவாறு இந்த உலக ஒழுங்கு தர்மச்சக்கரத்தில் சுழலாமல் தனது நலன்கள் என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கிறது.
இத்தகைய உலக ஒழுங்கில் நமக்கு ஆதரவாக உலக நாடுகளை வென்றெடுப்பது எவ்வாறு?
இதற்கு நமக்கு உள்ள வாய்ப்புக்கள் எவை?
நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எத்தகையவை?
இவை பற்றி நாம் புதிதாய், புதிய சூழலில் சிந்திக்க வேண்டும். வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
இந்த மாற்றங்கள் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக் கதவுகள் திறக்கப்படுவதற்கு ஏற்ற நிலைமைகளை உருவாக்கும்.
அந்த நம்பிக்கையுடன் - நமது விடுதலைத் தாகம் தணிந்துவிடாமல் - நமது விடுதலைச் சுடர் அணைந்துவிடாமல் - தமிழ்நாடு மற்றும் உலகத் தமிழ் மக்களின் துணையுடனும் நியாயத்தின் பக்கம் நிற்கும் உலக மக்களின் ஆதரவுடனும் நமது அடுத்த கட்டப் போராட்டத்தை நாம் முன்நோக்கி நகர்த்த வேண்டும்.
யதார்த்த நிலையினை புரிந்துகொண்டு நாம் கூட்டாகச் சேர்ந்து சிந்திப்பதே இன்றைய காலத்தின் தேவை. அதுவே நம் முன்னுள்ள நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு நாம் முன்னேறுவதற்கான வழியாகும்.
நமது புதிய பாதையை வடிவமைத்துச் செப்பனிட்டுச் செல்வதற்கு நமது மக்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் மிகவும் அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.
இந்தத் தொடர்புக்கு வழிசமைக்கும் முகமாக மக்கள் தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரியொன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த முகவரிக்கு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
மின்னஞ்சல் முகவரி: prdinternational@gmail.com






அறிக்கை- (7)


களத்தில் இறுதியாக நடந்தது என்ன?- தமிழ் மக்கள் முன் இன்றுள்ள பாரிய பணி:


புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்
[புதன்கிழமை, 03 யூன் 2009, 03:16 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழர் தாயக களத்தில் இனப்படுகொலை அரங்கேற்றப்பட்ட அந்த இறுதிக் கணத்தில் நடந்தது என்ன என்பது குறித்தும் தமிழ் மக்கள் முன்னுள்ள தற்போதைய அவசரமான பணி என்ன என்பது குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் விளக்கமளித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய 'செய்தியலைகள்' நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு:
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பிரிவினர் கடந்த 17 ஆம் நாள் படுகொலை செய்யப்படும் அந்த துயரமான வேளையிலும் உங்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் இறுதியாக என்ன விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டனர்?
எனது அண்ணன் நடேசன், தம்பி புலித்தேவன் இவர்களின் மரணம் என்னை மிகவும் ஆழமாக பாதித்தது. எமது மக்கள் மிகவும் கொடுமையாக எதிரிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டபோது - ஒவ்வொரு கணமும் எமது உடன்பிறப்புகள் சுட்டுவீழ்த்தப்பட்டபோது - நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இவர்கள் இருவரும் என்னுடன் கலந்துரையாடினார்கள்.
போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கத்துடன் நாம் பேசினோம். சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் ஊடாக - சிறிலங்கா அரச தலைவரின் ஒப்புதலின்படி - நடேசன், புலித்தேவன் ஆகியோர் இராணுவ முகாமுக்கு சென்று கலந்துரையாடுவற்காக வெள்ளைக் கொடியுடன் சென்றுகொண்டிருந்தபோது சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள்.
அதேபோன்று பொதுமக்கள் சிலரும் வெள்ளைக் கொடியுடன் சென்றபோது சிறிலங்கா அரசாங்கம் தனது வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு அவர்களை சுட்டுக்கொலை செய்தது. இதுதான் உண்மை.
நடேசன், புலித்தேவன் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் சரணடைவது குறித்த தகவல் தமக்கு கிடைத்ததாக சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். இது குறித்து என்ன கூறுகிறீர்கள்?
சரணடைவு குறித்து 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே சிறிலங்கா தரப்புடன் பேசப்பட்டது. முதற்கட்ட நடவடிக்கையாக முக்கிய அமைச்சர் ஒருவரும் எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இரண்டு கத்தோலிக்க ஆயர்களும் அங்கு செல்வதாக இருந்தது. அந்த சம்பவம் ஏதோ காரணத்தினால் நடைபெறாமல் போய்விட்டது.
எனினும் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். புலிகளை நேரடியாக வந்து பேசலாம் என்று சிறிலங்கா தரப்பில் எமக்கு கூறப்பட்டது.
சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு இந்த தகவல் அறிவிக்கப்பட்டதா? இல்லையா? என்பது எமக்கு தெரியாது. ஆனால் சிறிலங்கா அரச தலைவரின் உத்தரவுப்படியே இந்த சரணடைவு நடைபெற்றது என்பது அப்பட்டமான உண்மை.
இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த மக்களை பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் கோரும் நடவடிக்கையில் நீங்கள் இறுதி நாட்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தீர்கள். இதற்கு ஏதேனும் சாதகமான சமிக்ஞைகள் கிடைத்தனவா?
அனைத்துலக ரீதியில் நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் சிறிலங்கா அரசு பல்வேறு காரணங்களை கூறி எமது முயற்சிகளை தட்டிக்கழித்துக்கொண்டே வந்தது.
கடைசித் தருணத்தில் அதாவது மே 16 ஆம் நாளும் நாங்கள் போர்நிறுத்தம் குறித்து பேசுவதற்கு முயற்சிகள் எடுத்தோம். அவர்கள் அதனையும் தட்டிக்கழித்தனர். அனைத்துலக அரசுகள் கூட எவ்வளவோ அழுத்தங்களைக் கொடுத்தும் சிறிலங்கா அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.
சிறிலங்கா படையினரால் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் மக்களுக்காக - அங்கே நாளாந்தம் உயிரிழக்கும் முதியவர்களுக்காக - அங்கே கடத்தப்பட்டு காணாமல் போகும் எமது உறவுகளுக்காக - நாங்கள் உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன?
எமது இனம் ஊனமாக்கப்பட்டுவிட்டது. சிறிலங்கா அரசு அந்த முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் கைகளில்தான் எமது இனத்தின் தலைவிதி இன்று தங்கியிருக்கின்றது. நாம் ஒரு அரசியல் சுனாமியை சந்தித்து, அந்த அழிவின் வருத்தத்தில் இருக்கின்றோம். எனவே புலம்பெயர் வாழ் மக்கள் தமது உடன்பிறப்புக்களை காப்பாற்ற வேண்டிய கடமையில் இருக்கின்றார்கள்.
புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் உடனடியாக அந்தந்த நாடுகளில் அங்குள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு - எந்தவித வன்முறையையும் தொடாமல் - போராட்டங்களை மேற்கொண்டு, எமது மக்களுக்கு உதவும்படி அந்த நாடுகளின் அரசுகளை கேட்க வேண்டும். அந்த அரசுகளின் அனுதாபத்தை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த போராட்டத்திற்கு புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்க முன்வர வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையுடனும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடனும் நாங்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். எமது மக்களுக்குரிய உணவும் மருந்துப் பொருட்களும் சென்றடைய வேண்டும். இந்திய அரசாங்கத்துடனும் இது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோம்.
எமது தலைவர் விட்டுச்சென்ற கடைமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறோம். எனவே, அனைவரும் வேறுபாடுகளை மறந்து முன்வந்து எமது இனத்தை காப்பாற்றுங்கள். முள்வேலிகளுக்கு இடையில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் எமது உறவுகளைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் அனைவரையும் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலை வெற்றிடமாகியுள்ள நிலையில் - தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனை எவ்வாறு நீங்கள் முன்னெடுத்து வருகிறீர்கள்?
மிகவும் கடுமையாக அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இந்த வெற்றிடம் என்பது எதிர்பாராத நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. நாம் அனைத்து தரப்பினருடனும் குறிப்பாக சகல அரசியல் கட்சிகளுடனும், இயக்கங்களுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிகவிரைவில் அந்த முயற்சி வெற்றிபெறும்.
தமிழ் இன அழிப்பின் இறுதிக்கட்ட போரில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் குறித்த ஆதாரங்களை சேர்த்து அவற்றை மனித உரிமை அமைப்புக்களுக்கு வழங்க வேண்டிய வரலாற்று பொறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்த நடவடிக்கை அத்தியாவசியமானது. புலம்பெயர் வாழ் நாடுகளில் உறவுகள் வசித்து வருகின்றனர். எங்களிடம் தங்களது உறவுகள் குறித்து நலம் விசாரிக்கின்றனர். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இந்த தகவல்களை பெற்றுக்கொள்ளவதற்கு நாங்கள் முயற்சித்தபோதும் அதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
எனவே அடுத்த கட்டமாக சட்ட நுணுக்கங்களை ஆராய வேண்டிய தேவை உள்ளது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நான் இது குறித்து பேசியுள்ளேன். அவர்களும் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளிடமும் இது குறித்த உதவிகளை நான் கேட்டிருக்கிறேன். சில அரசாங்கங்களுடனும் இது குறித்து பேசி வருகின்றேன். முடிந்தவரை அவற்றை வெகுவிரைவில் செய்யவேண்டும் என்று விரும்புகின்றேன்.
ஆனால், அதற்கு முன்னர் எமது மக்கள் பசியால் வாடவோ அன்றி உணவின்றி இறப்பதையோ நாங்கள் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே அவர்கள் பட்ட துன்பம் போதும். இனியாவது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுங்கள்.
எனது அன்பு உடன் பிறப்புகளே! அனைத்துலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களே!!
அங்குள்ள உறவுகளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுங்கள். அதுவே அவர்களை வாழ வைக்கும்.
நாங்கள் எந்த உதவியை செய்வதானாலும் சிறிலங்கா அரசுடன் ஊடாகவே மேற்கொள்ளவேண்டியுள்ளது. மாறாக எமது மக்களை இந்த உதவிகள் நேரடியாகச் சென்றடையக் கூடிய பேச்சுவார்த்தைகள் எதையாவது நீங்கள் மேற்கொள்கின்றீர்களா?
சிறிலங்கா அரசு இந்தப் போரில் ஒரு வெற்றியைக் கண்டிருப்பது உண்மை. ஆனால், அவர்கள் அனைத்துலக நிறுவனங்களை அங்கே அனுமதிக்க தயங்குகின்றனர். எமது மக்களுக்கு நேரடியாக பொருட்கள் அங்கு அனுப்பப்பட முடியாவிட்டாலும் - இந்திய அரசாங்கத்துடனும் தமிழக முதல்வருடனும் இது குறித்து கதைத்துக் கொண்டிருக்கின்றோம்.
எனவே எந்த வழியில் சென்றாலும் அது மக்களை சென்றடைந்தால் அது போதும் என்றே நான் கருதுகின்றேன்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பொறுத்தவரை அனைத்துலக நாடுகள் தமிழ் மக்களை கைவிட்டுவிட்டன என்று கருதலாமா?
அனைத்துலக நாடுகள் சிறிலங்கா அரசுக்கு ஓரளவுக்கு அழுத்தமும் கொடுத்திருக்கின்றன. எனினும் சீனா, ரஸ்யா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆசியுடன் இந்த நாடகத்தை சிறிலங்கா அரசாங்கம் ஆடி முடித்திருக்கிறது.
மக்களுக்கான தீர்வு குறித்து ஏதாவது சிந்தனைகள் உள்ளதா?
எமது இனம் மானத்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு ஒரு தீர்வு அவசியம். இது குறித்து நாம் எமது பலதரப்பட்ட பிரிவினர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கின்றோம். எமது மக்களின் அரசியல் அபிலாசையை ஓரளவுக்கேனும் நிறைவேற்றக்கூடிய திட்டத்தை செயலாற்ற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். விரைவில் இது குறித்த முழு விபரமும் வெளியிடப்படும்.
அனைத்துலகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் எந்தவகையிலான முயற்சிகளை நீங்கள் எடுக்கின்றீர்கள்?
அனைத்துலக நாடுகளில் உள்ள தமிழ்மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது யாதெனில் - பாரிய சுமைகளை எல்லாம் எமது தோளில் மட்டும் சுமத்தாதீர்கள். ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உரிய கடமை அது. அந்தந்த நாடுகளில் அந்தந்த அரசுகளுடன் நல்ல உறவைப் பேணும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
இந்திய அரசாங்கத்தின் கவனத்தை எம்பக்கம் திருப்பும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா?
முதல் வேலையாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த வேலைகளை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றோம். சிறிது கால அவசகாசம் தேவைப்படுகின்றது. இது குறித்த மேலதிக விபரங்களை தற்போது வெளிப்படுத்த முடியாது.
நீங்கள் தற்போது முழுக்கவனத்தையும் செலுத்தியிருக்கும் விடயம் எதுவென கூறமுடியுமா?
இராணுவ முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளைக் காப்பாற்றுவதற்கும் பிடிபட்ட போராளிகளை அனைத்துலக சட்டத்திற்கு அமைவாக நிறுத்த வேண்டும் என்றும் அரசியல் தீர்வு குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்துகின்றோம்.
பிளவுகளை மறந்து அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு குடையின்கீழ் அரசியல் தீர்வுக்காக நிற்க வேண்டும். அதுதான் எனது விருப்பம். அதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் எடுத்து வருகின்றேன்.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் துயருக்கும் சோர்வுக்கும் மத்தியிலும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து எவ்வாறு பார்க்கிறீர்கள்?
நாம் கனவில் கூட எண்ணியிராத ஒரு சூறாவளி எமது இளம் தலைமுறையை அடித்து சென்றுவிட்டது. அதில் இருந்து மீள்வதற்கு நாங்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டிய காலம் இது.
கவனயீர்ப்பு போராட்டங்களின் ஊடாக அந்தந்த நாடுகளில் உள்ள ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு நாங்கள் என்ன செய்தியை கூற வேண்டும்?
சிறிலங்காவின் படை முகாம்களுக்குள் எமது இனம் படும் சித்திரவதைகளை - எமது தங்கைகளை படையினர் கொடுமைப்படுத்துவதை - எமது இளம் சிறார்கள் பெற்றோருடன் சேரவிடாமல் பிரிக்கப்பட்டிருப்பதை - முதலில் நாங்கள் அனைத்துலகத்தின் கண்களில் நிறுத்த வேண்டும்.
உங்களைப் பற்றிய வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின 'றோ' உங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கான உங்களது பதில் என்ன?
எமது தேசியத் தலைவருடன் நான் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, அவருடன் ஆத்ம ரீதியாக கலந்துகொண்டவன்.
இதனை எமது போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்துகொள்வர்.
எமக்கு இடையில் எந்தவித அப்பழுக்கற்ற நட்பை பேணிக்கொண்டோம்.
இது சாதாரண குடும்ப - மனித - வாழ்க்கைக்கு சற்று மேலான உறவு.
அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக என்னை நியமித்த அந்த தலைவருக்கு செய்யப்படும் துரோகமாகத்தான் நான் இதனை எண்ணுகின்றேன்.
எமது தலைவர் எமது மக்களின் இதயங்களில் குடிகொண்டவர்.
நான் பணத்திற்காகவோ அல்லது பதவிகளுக்காகவோ விலைபோகக் கூடியவனாக இருந்தால் என்னை அவர் இந்த பொறுப்பிற்கு நியமித்திருக்க மாட்டார்.
இது எமது போராளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துலக நாடுகளுக்கு வந்து வசித்து வரும் போராளிகளுக்கும் தெரியும்.
எனவே எமது தலைவர் அப்படியொரு தவறை செய்ய மாட்டார்.
எனது தலைவர் கூறிய அவரது கனவான -
எமது மக்களுக்கு கௌரவமான, சமனான, மரியாதையுடன் வாழக்கூடிய தீர்வை எடுத்துக்கொடுப்பதற்கு - எனது வாழக்கையை அர்ப்பணித்திருக்கின்றேன்.
சிறிலங்கா அரசு தற்போது தொடங்கியுள்ள போரானது அனைத்துலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் கட்டமைப்பை உடைப்பதாகவே உள்ளது. அதுதான் அவர்களின் அடுத்த இலக்கு.
திருமதி அன்ரன் பாலசிங்கத்தை நாடு கடத்துவதற்கும் அவரை துரோகியாக்குவதற்கும் சிறிலங்கா அரசு முயற்சி எடுத்திருக்கின்றது. எனவே அவர்கள் நினைப்பதை செய்வதற்கு தயவு செய்து துணை போகாதீர்கள்.
நாம் கருத்துகளில் வேறுபடலாம். ஆனால் இலட்சியத்தில் ஒன்றுபட்டவர்கள்.
எனவே அன்பு தம்பிகளே! உறவுகளே!!
எனது அண்ணன் விட்டுச் சென்ற கடைமையை தொடர்ந்தும் செய்வோம்.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தற்போதைய நிலையில் கருத்து வேறுபாடுகளை மறந்து தீவிரமான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து கூற முடியுமா?
நான் ஏற்கனவே கூறியதன்படி இந்த சுனாமியினால் மனம் நொந்திருக்கும் எமது உறவுகள் மீண்டும் எழ வேண்டும். மீண்டும் நாம் எமது கடைமையை ஆற்றுவதற்கு தயாராக வேண்டும். அதனை உடனே செய்ய வேண்டும். காலம் தாமதித்தால் எமது உறவுகள் எமது நாட்டில் மிகவும் கொடுமையான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
நாம் தாங்கொணா துயரத்தை இதயத்தில் தாங்கிக் கொண்டிருக்கிறோம். எமது நெஞ்சம் வெடிக்கின்றது.
இருந்தாலும் எமது உறவுகளுக்காக நம்பிக்கையுடன் இருக்கின்றோம். புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் அந்த கடைமையை செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றாக வாருங்கள்.
ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் எமது உறவுகள் ஒன்றுசேர வேண்டும். உங்களுடைய கடைமை பாரியது.
முதற்கட்டமாக அனைவரும் ஒன்றுகூடி எங்கள் உறவுகளைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையை கொடுங்கள். அந்த நம்பிக்கை அவர்களை வாழ வைக்கும்.
எனவே அதனைச் செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைய நிலையில் தமிழ் ஊடகங்களின் பங்கு எந்தளவுக்கு காத்திரமானதாக இருக்க வேண்டும் என்பது பற்றி கூறமுடியுமா?
ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அங்குள்ள மக்களை காப்பாற்றுவதற்காக இங்கேயுள்ள மக்களை ஒன்றுதிரட்டும் பணியை இந்த ஊடகங்கள் செய்ய வேண்டும்.
வேறுபாடுகளை மறந்து ஒன்று சேருங்கள். எமது பலத்தை காட்டுங்கள். நாங்கள் ஒன்று சேர்ந்து இங்கு எமது பலத்தை காட்டினால் அங்கேயுள்ள எமது மக்கள் கண்ணீர் சிந்த மாட்டார்கள்.
இந்த ஊடகங்கள் அதனை மிகவும் பொறுப்புடன் செய்ய வேண்டும்.

அறிக்கை- (6)

சிறிலங்காவின் கபடத்தனத்தை எதிர்கொள்ளும் அரசியல் கட்டமைப்பை வென்றெடுக்கும் பாரிய தேசியக்கடமை நம்முன் உள்ளது:
புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்
[ திங்கட்கிழமை, 01 யூன் 2009, 06:31.02 AM GMT +05:30 ]

தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் முனைந்திருக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் கபடத்தனத்தை எதிர்கொள்வதற்கும் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பினை வென்றெடுப்பதற்குமான பாரிய தேசியக் கடமை நம்முன் காத்திருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"சிறிலங்கா அரசாங்கமும் அதன் சிங்கள இராணுவ இயந்திரமும் தமிழீழ மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள மனிதப் பேரவலம் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து நிர்க்கதியாக்கி இடம்பெயர்த்து அனைத்துலகத்தின் கண்காணிப்புக்கு அப்பால் சிங்கள இராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குள் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை (27.05.09) நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு வன்னியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நியாயம் வழக்கத் தவறியமை குறித்து எமது விசனத்தையும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.
இராணுவ மேலாதிக்க நிலையின் ஊடாக தாயகத்து மக்களின் வாழ்வு உரிமையினைப் பறித்த சிறிலங்கா அரசாங்கம் தற்போது இராஜதந்திர வழிமுறைகளைக் கொண்டு உலக அரங்கில் நமது மக்கள்மீது போர்ப் பிரகடனம் செய்துள்ளது.
தனக்கு துணையாகும் அனைத்துலக சக்திகளுடன் இணைந்து இராஜதந்திர செயற்பாடுகளின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தகர்த்து எறிவதில் முனைப்பு கொண்டுள்ளது.
அதேவேளையில் தமிழீழ மக்கள் அடைந்துள்ள மனிதப் பேரவலத்தினையும் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளையும் முன்வைத்து அனைத்துலகத்திடம் பெருமளவில் வெளிநாட்டு வளங்களையும் உதவிகளையும் திரட்டுவதில் சிறிலங்கா கொள்கையளவில் வெற்றி பெற்றுள்ளது.
அந்த வளங்களைக்கொண்டு புனர்வாழ்வு, புனரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் நலனில் சிங்கள அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக காட்டி தான் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு பழியில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வழி தேடுகின்றது.
தனது இராணுவ ஆளணியினரால் கட்டுப்படுத்தப்படும் பொது நிர்வாக இயந்திரத்தின் கீழ் மீள்கட்டமைப்பும் அபிவிருத்தியும் என்ற பெயரில் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தின் இனத்துவ சமநிலையினை சிங்கள மக்களின் பெரும்பான்மைக்கு சார்பாக மாற்ற முனைவதோடு தமிழ் மக்களின் சமூக பொருளாதாரக் கட்டமைப்பினை தற்சார்பு நிலையற்றதும் சிறிலங்காவின் தென்பகுதியினால் கட்டுப்படுத்தக்கூடியதுமான தங்கி வாழும் பொருளாதாரமாக மாற்றுவதற்குரிய திட்டங்களையும் முன்நகர்த்தியுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் சிங்கள அரசாங்கம் குறியாகவுள்ளது.
இத்தகைய சவால்களை எதிர்கொண்டு தாயகத்தில் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பினை வென்றெடுப்பதற்கும் தடுப்பு முகாம்களிலும் சிறைகளுக்குள்ளும் சித்திரவதைக் கூடங்களிலும் நிரப்பப்பட்டுள்ள எம்மவர்களை விடுவித்து செழுமையும் சமாதானமும் நிறைந்ததாக அவர்கள் வாழ்வினை கட்டியெழுப்புவதற்கும் செயற்படவேண்டியது நமது தேசியப்பணியாகும்.
கள யதார்த்தத்தின் அடிப்படையிலும் மாற்றமடைந்து வரும் உலக அரசியல் ஒழுங்கினை கருத்திற்கொண்டும் துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்து வன்முறையற்ற வழிகள் ஊடாக போராட உறுதி பூண்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் ஒற்றுமையினையும் அவர்களின் அளப்பரிய ஆற்றல்களையும் அவர்களால் புலம்பெயர் தேசங்களில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நன்மதிப்பினையுமே தங்கள் ஆயுதங்களாக கையில் எடுத்துள்ளனர்.
இன்று நம் முன்னே பாரிய தேசியக் கடமை காத்துக் கிடக்கின்றது. நாம் மிகவும் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயற்படவேண்டியது மிகவும் அவசியமான தருணம் இது.
இக்கடமையினை முழுமையான பலத்துடனும் சிறப்புடனும் நிறைவேற்றுவதற்கு அவதூற்று பிரச்சாரங்களும் வதந்திகளும் தவறான செய்திகளும் இடையூறானவை.
இவற்றைப் புறம் தள்ளி நமது தாயகத்திற்கும் மக்களுக்குமான நமது கடமைகளை ஆற்றுவதற்கு நாம் அனைவரும் உறுதி கொள்வோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை- (5)
பிரபாகரன் உயிரிழப்பு: புலிகள் ஒப்புதல்
புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன் பி.ஒ.கூ.தமிழோசை
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். செல்வராசா பத்மநாதன்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்புடைய சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவராக அறியப்படும் செல்வராசா பத்மநாதன் கையொப்பமிட்டுள்ள அறிக்கை இது.
பிபிசி தமிழோசைக்கு இவர் வழங்கிய ஓர் செவ்வியில், மே பதினேழாம் தேதி பிரபாகரன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார் என்றாலும், அவர் எவ்வாறு இறந்தார் என்பது பற்றிய விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக வன்முறையற்ற வழிகளில் இனி விடுதலைப் புலிகள் போராடுவார்கள் என்றும் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

............................................................................
அறிக்கை- (4)
தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்:

புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2009, 01:56.16 PM GMT +05:30 ]

தமிழீழ தேசியத் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வெளியுறவுத்துறை செயலர் செல்வராசா பத்மநாதன் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு,

தமிழீழ விடுதலைப்புலிகள்தமிழீழம்.
24 வைகாசி, 2009







தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்





தமிழ் மக்க்களின் அணையா விடுதலைச் சுடர்
தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், செழுமையான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை அனைத்துதமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தாங்கொண்ணா துயருடன் அறியத்தருகின்றோம்.
கடந்த 37 வருடங்களாக தமிழீழ மண்ணில் பொங்கிப் பிரவாகித்த விடுதலை வரலாற்றின் ஆன்மாவாகவும் குறியீடாகவும் விளங்கியவர் எமது தேசியத்தலைவர். ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக அடக்குமுறைக்கு முகம்கொடுத்து நின்ற ஒரு தேசிய இனத்தின் வரலாற்றையே மாற்றுகின்ற விருப்போடும் துணிவோடும் நம்பிக்கையோடும் எதிரிக்கெதிரான விட்டுக்கொடுப்பற்ற ஒரு பெரும் விடுதலைப் போரை தலைமையேற்று நடத்தியவர் அவர். கற்பனைக்கு எட்டாத தற்தியாகமும், கட்டுப்பாடும், வீரமும், ஒழுக்கமும் நிறைந்த, உன்னதமான ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பி, பெரும் படையணிகளோடும் ஒரு தனித்த தேசத்திற்குரிய நிர்வாகக் கட்டமைப்புகளோடும் கனரக ஆயுத வல்லமைகளோடும் போராட்டத்தை வழிநடத்தினார்.
அரசியற் போராட்டத்திற்கு இணையாக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். போராட்டக் களங்களில் எமது மகளிர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் எமது சமூகத்தில் பெண்களுக்கிருந்த தனித்துவமான பங்களிப்பை வெளிக்காட்டியவர் அவர்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழக மக்கள மீதும், உலகம் முழுவதும் பரந்து வாழும் உறவுகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்று மிகவும் ஆழமானது. தமிழர் போராட்ட வரலாறு நெருக்கடிகளை எதிர்நோக்கி, மீளமுடியாத கட்டத்தை எதிர்கொண்ட காலங்களில் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு விடுதலையை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகர்த்தியவர் எமது தேசியத் தலைவர்.
தலைவரின் போராட்ட அனுபவமும், தற்துணிவும், வீரமுமே எவ்வித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் உந்து சக்தியாக, எமது போராட்ட சக்கரத்தின் அச்சாணியாக இருந்திருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து, சர்வதேச சக்திகளின் துணையுடன் ஒரு பெரும் யுத்தம் மீண்டும் எம்மீது திணிக்கப்பட்ட போது, தலைவர் அவர்கள் அதனைத்துணிவுடனேயே எதிர்கொண்டார்.
போர் நெருக்கடியான கட்டங்களை எட்டி எமது நிலப்பரப்புகள் எதிரியால் சுற்றி வளைக்கப்பட்டு ஒரு பெரும் யுத்தம் எம்மக்கள் மீது ஏவிவிடப்பட்டபோதும் தலைவர், தான் வாழ்ந்த மக்களுடனேயே நின்றார். மக்களதும் தளபதிகளினதும் தொடர்ச்சியான வேண்டுகோள்களையும் மீறி அவலப்படும் மக்களை விட்டு வெளியேற மறுத்தார். எமது மக்கள் எதிர்கொண்ட அத்தனை வலிகளையும் தானும் சுமந்தார். இறுதியில், விடுதலைக்கான இந்த நீண்டபாதையில், எந்த மக்களுக்காக ஆயுதமேந்தினாரோ அம்மக்களுடனேயே கடைசி மணித்துளிவரை நின்று போராடி வீரச்சாவடைந்தார். ’எம் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுங்கள்’ என்பதே அவரது இறுதி வேண்டுகோளாக இருந்திருக்கிறது.
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போராளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர்என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.
எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.
தலைவரது இலட்சிய நெருப்பை எம் மனங்களில் ஏந்தி அவர் கடைசிவரை போராடிய எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க உழைப்பதே அவருக்கான உண்மையான மரியாதையாகும். எமது தலைவரின் வீரச்சாவையிட்டு தம்மையோ ஏனையோரையோ வருத்திக் கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென அனைத்து தமிழ் மக்களையும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
எமது தேசியத் தலைவரோடு வீரச்சாவைத் தழுவிய அனைத்து தளபதிகளுக்கும் மாவீரர்களுக்கும் மக்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இம் மாவீரர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்பதை அறியத் தருகிறோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
செல்வராசா பத்மநாதன்அனைத்துலக வெளியுறவுச் செயலகம்தமிழீழ விடுதலைப்புலிகள்

00000000000000000000000000000000000000000000000000000000000000
தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார்: விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறை
[ வெள்ளிக்கிழமை, 22 மே 2009, 11:52.35 AM GMT +05:30 ]
தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிவழகன் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு உலகு எங்கும் பரந்து விரிந்து ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஆதரவுக்குரலை அடக்கி ஒடுக்கும் முகமாக சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக உள்ளது என்றார் அவர். 0000000000000000000000000000000000000000000000000000000000000000000

அறிக்கை- (3)
தலைவர் பிரபாகரன் நலம்; மூத்த உறுப்பினர்கள் பலர் வஞ்சகமாக கொல்லப்பட்டுள்ளனர்":
புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்
[செவ்வாய்க்கிழமை, 19 மே 2009, 09:08 மு.ப ஈழம்] [வி.நவராஜன்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். "சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப்பதாகப் பிரகடனப்படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது" எனவும் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.
அவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:
இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா?
சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.
சிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.
தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.
இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும், இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.
இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.
நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?
சிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் தூரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.
'விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்' எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்?
எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.
இதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயறபடுவதற்கு நாம் விரும்புகின்றோம்.
தமிழர்களின் இந்த தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கெளரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்கான இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.

அறிக்கை- (2)
துப்பாக்கிப் பயன்பாடுகளை தாம் நிறுத்தப் போவதாக விடுதலைப்புலிகள் முடிவு:

புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 10:48.34 AM GMT +05:30 ]

வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரம் மக்கள் வீதிகளில் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளையில் கடுமையாக காயமடைந்த 25 ஆயிரம் பேர் மருத்துவ பராமரிப்புக்கள் எதுவும் இல்லாமல் அங்குள்ளார்கள். எமது மக்களைப் பாதுகாப்பதே இப்போதுள்ள அவசரமான பணியாகும் எனவும் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அவசர அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கவனத்திற்கொண்டு எமது மக்களைப் பாதுகாப்பதற்காக எமது துப்பாக்கிகளை மெளனமாக வைத்திருப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்ற எமது நிலைப்பாட்டை உலகத்துக்கு நாம் ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் பத்மநாதன் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:
சிறிலங்காவின் ஆயுதப் படையினரால் எமது மக்கள் ஈவிரக்கம் இன்றிப் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு உலகத்தில் உள்ள நாடுகளை நாம் கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால், எமது இந்தக் கோரிக்கை யாருடைய காதிலும் விழவில்லை.
போர் இடம்பெறும் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பதற்கும் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அனைத்துலக சமூகத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எமது மக்களின் முடிவில்லாத ஆதரவையும் உதவியையும் தவிர எமக்கு எந்த உதவியும் இல்லாத நிலையில் சிங்களப் படையினர் முன்னேறியபோது நாம் பின்வாங்க வேண்டியேற்பட்டது.
எமது மக்கள்தான் இப்போது குண்டுகளாலும் எறிகணைகளாலும் நோய்களாலும் பட்டினியாலும் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மேலும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம். எமது அப்பாவி மக்களுடைய இரத்தம் தொடர்ந்தும் சிந்தப்படுவதை எம்மால் சகித்துக்கொள்ள முடியாது.
விடுதலைப் புலிகள் அமைப்பானது கடந்த மூன்று தசாப்த காலமாக சிறிலங்கா இராணுவத்துடன் போரிட்டு, இந்தத் தீவில் வசிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்களை வைத்திருப்பதற்கான உரிமையைப் பெற்றிருந்தது. 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் தொடங்கிய சமாதான முயற்சிகளில் இருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறிய பின்னர், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவத் தீர்வை நாடியது.
2007 ஆம் ஆண்டில் போர் தீவிரமடைந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மரணமடைந்திருக்கின்றனர். வடபகுதியில் இராணுவம் தனது நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியதையடுத்து பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பட்டினியாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையாலும் மேலும் பலர் மரணமடைந்திருக்கின்றனர்.
"இந்தக் கொடூர நிகழ்வுகளை நிறுத்துவதற்கு எமது வரையறைக்கு உட்பட்ட எதனையும் செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். இது எமது ஆயுதங்களை மெளனிக்கச் செய்வதுடன், சமாதான நடைமுறைக்குள் பிரவேசிப்பதாக இருந்தாலும் அவற்றுக்கு நாம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருக்கின்றோம்.
இன்றைய தருணத்தில் இதுதான் தேவை. இதன் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுடைய உயிர்களைப் பாதுகாக்க முடியுமாயின் அது செய்யப்பட வேண்டும்.
எமது மக்களுக்காகத்தான் நாம் போராடுகின்றோம் என்பதை நாம் மறந்துவிடவில்லை. தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில், எமது மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கு இந்த போரை சிங்கள அரசு பயன்படுத்துவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது.
நாம் எமது துப்பாக்கிகளை மெளனிப்பதற்கு தயாராவிருக்கின்றோம். எமது மக்களைப் பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் தொடர்ந்தும் கோருவதைவிட எம்மிடம் வேறு தெரிவுகள் எதுவும் இல்லை."
இவ்வாறு பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கை- (1)
"இனப்படுகொலை மூலமாக பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது": புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்
[சனிக்கிழமை, 16 மே 2009, 09:05 மு.ப ஈழம்] [கு.பாலசுப்பிரமணியம்]

"பல தாசாப்த காலப் பிரச்சினையை ஒரு மனிதப் படுகொலையின் மூலமாகவோ அல்லது பொதுமக்களின் இரத்தக்களரி மூலமாகவோ 48 மணித்தியாலத்துக்குள் முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியாது" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். "மாறாக இது பிரச்சினையை மேலும் தீவிரமான நிலைக்கு இட்டுச் செல்வதற்கே உதவுவதாக அமையும்" எனவும் தெரிவித்திருக்கும் அவர், "சிங்கள மக்கள் இதனைத் தங்களுடைய நலன்களுக்காக தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களுக்காக அல்ல" எனவும் தெரிவித்திருக்கின்றார்.
வன்னியில் இருந்து தனக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி எண்ணிக்கணக்கிட முடியாதளவு மக்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் பெரும் தொகையானவர்கள் மருத்துவ உதவிகள் இல்லாமல் போராடிக்கொண்டிருப்பதாகவும் பத்மநாதன் மேலும் தெரிவித்தார்.
போரில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சாதாரண பொதுமக்களுக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசத்தையும் காட்டாமல் பாரிய ஒரு இனப்படுகொலையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
"தற்போதைய நிலையில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எந்தவிதமான எதிர்ப்புக் குரலையும் வெளிப்படுத்தக்கூடிய நிலையில் இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் இல்லை. இந்த அரசாங்கம் இந்தப் போக்கை நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் இந்த நிலைமைதான் எதிர்காலத்திலும் தொடரும்.
ஆனால் சிங்கள மக்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்காக சுதந்திரத்தைக் கொண்டிருப்பார்கள் என நாம் கருதுகின்றோம்.
பல தாசாப்த காலப் பிரச்சினையை ஒரு மனிதப் படுகொலையின் மூலமாகவோ அல்லது பொதுமக்களின் இரத்தக்களரி மூலமாகவோ 48 மணித்தியாலத்துக்குள் முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியும் என்ற கொழும்பின் அணுகுமுறை ஒருபோதும் பிரச்சினைக்குத் தீர்வாகாது" எனவும் பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.

No comments: