Thursday, 25 June 2009

ஆவணம்:பிரித்தானிய தமிழர் பேரவையின் கொள்கை விளக்க உரை

பிரித்தானிய தமிழர் பேரவையின் கொள்கை விளக்க உரை:
திகதி: 24.06.2009 // தமிழீழம்
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களே , பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளே,
அனைவருக்கும் வணக்கம்
வரலாறு கண்டிராத பேரழிவு ஒன்றினை நமது தேசம் சந்தித்துள்ளது. தமிழீழம் முழுவதும் அன்னியப்படை ஆக்கிரமித்துள்ளது. இன்னமும் முள்வேலியின் பின்னால் இலட்சக்கணக்கான எமது உறவுகள் புலத்தினைப் பார்த்தவண்ணம் உள்ளனர்.
பாரிய படுகொலைகளுக்கு உள்ளாகி மருந்தின்றி , உணவின்றி வாழ்ந்து பின்னர் முகாங்களுக்குள் அடைபட்டுள்ளனர். இம் மக்களுக்கு இயல்பு நிலை வாழ்க்கையை ஏற்படுத்தித் தரவேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும்.
இத்தருணத்தில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் பேரணி ஒன்றை நாம் பிரித்தானியாவில் நடாத்தியுள்ளோம்.
* காணாமல் போயுள்ளவர்கள் மீட்கப்பட வேண்டும்
* முகாம்களில் வாழும் மக்கள் இயல்புநிலை வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்
* இனப்படுகொலையை நிகழ்த்தியோரும் அதனை மூடிமறைப்போரும் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்
இவையே எமது கோரிக்கைகளாகும்.
எமது சக்தியை ஒன்று திரட்டி நாம் புலத்தில் செய்த போராட்டங்கள் மேற்குலகின் மனச்சாட்சியை தட்டிக் கேட்கத் தொடங்கியுள்ளது. எமது மக்களுக்கு நடந்த, நடக்கின்ற அவலங்களை ஊடகங்கள் அம்பலமாக்கத் தொடங்கியுள்ளன. இன்று நமது போராட்டமானது புலத்தினை நோக்கி நகர்ந்துள்ளது. போர்க்களம் மாறியுள்ளது போர் ஓயவில்லை.
எமது அடிமைச்சங்கிலிகள் இன்னமும் உடையவில்லை.எமது போராட்டத்தின் இன்னொரு அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்காகவே இன்று இங்கு கூடியுள்ளோம். இங்கு கூடியுள்ள ஒவ்வொருவரும் எமது இலட்சிய நெருப்பை தாங்கிச் செல்லும் பாரிய பொறுப்பை சுமந்தவர்களாக நிற்கின்றோம் . இதற்காக நாம் எம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும்.
இப்பின்னணியில் பிரித்தானிய தமிழர் பேரவையின் மீது பாரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.ஆகவே பேரவையானது பிரித்தானியாவிலுள்ள அனைத்து தமிழ் மக்களையும் உள்வாங்கி எமது இலட்சியத்தை நோக்கி நகரத் தயாராகின்றது.மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதிதுவப்படுத்தும் மக்கள் அமைப்பாக பேரவையின் கட்டமைப்பு உள்ளக மற்றும் வெளியக வளர்ச்சியினை அடையவேண்டும்.
விடுதலை எனும் இலட்சிய நெருப்பை சுமந்து செல்லும் அனைத்து அமைப்புக்கள், மற்றும் தனி நபர்களோடு இணைந்து பணியாற்றும் முயற்சிகளில் பேரவை ஈடுபட்டுள்ளது.
நாட்டிலே இன்று உருவாகியிருக்கின்ற புதிய சூழ்நிலையை கருத்திலே கொண்டு பிரித்தானியாவில் ஒரு பலமான அரசியல் கட்டமைப்பை புதிய சவால்களுக்கு முகங்கொடுக்கின்ற வகையில் வளர்த்தெடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.
இந்த அரசியல் கட்டமைப்பு பிரித்தானியாவில் வாழ்கின்ற எமது மக்களை அரசியல் வேலைத்திட்டங்களுக்கு உரிய முறையில் வளர்த்தெடுப்பதற்கும் தாயகத்திலே எமது மக்களின் நியாயமான போராட்டத்துக்கு பிரித்தானியாவில் தமிழர் அல்லாத மக்களின் ஆதரவை வென்றெடுப்பதற்கும் பிரித்தானியாவின் அதிகார பீடத்தினதும் ,மற்றும் அரசியலில் செல்வாக்குச்
செலுத்தும் அனைத்துத் தரப்பினரினதும் ஆதரவை வென்றெடுக்க உரிய முறையில் நேர்த்தியாக திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
சனநாயக,வெளிப்படைத்தன்மை சட்டத்திற்குட்பட்ட செயற்பாடு , பொறுப்புகூறும் தன்மை , மக்களை மையப்படுத்திய , அனைத்து மக்களையும் உள்வாங்கிய அரசியல் கட்டமைப்பை கட்டியெழுப்புதல் , பரஸ்பர மரியாதையோடு கலந்து பேசி கூட்டாக முடிவெடுத்தல் போன்ற அடிப்படை அரசியல் விழுமியங்களை இக்கட்டமைப்பு கொண்டிருக்க வேண்டும்.

இந்த கட்டமைப்பு பிரித்தானியாவில் வாழ்கின்ற தமிழ் மக்களை ஒரு வலிமைமிக்க சமூகமாக வளர்த்தெடுப்பதற்கு தேவையான சமூக பொருளாதார வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் .இவ்வாறான பின்னனியில் பிரித்தானிய தமிழர் பேரவை தற்போது தன்னை மீள் நிர்மாணம் செய்கின்றது. இம் மாற்றத்தில் மக்கள் அனைவரையும் இணையுமாறு பேரவையானது அன்போடு அழைக்கின்றது.
பேரவையானது பிரித்தானிய அரசியல் நீரோட்டத்தில் அனைத்துக்கட்சியினரோடும் கட்சி சார்பற்று இணைந்து செயலாற்றுகின்றது. தமிழர்களின் அபிலாசைகளைப் புரிந்து கொண்டு எமது
தாயகக் கோட்பாட்டை
அங்கிகரித்து எமது மக்களின் இயல்புநிலை வாழ்க்கைக்கு வழி சமைக்க விரும்பும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களோடும் இணைந்து செயலாற்றும்.
தாயகம் , தேசியம் , தன்னாட்சி எனும் கோட்பாடுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டும் , இத் தீவில் தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு நடைபெறுகின்றது என்பதை ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழர் மற்றும் தமிழர் அல்லாதாரோடும் இணைந்து செயற்பட பேரவை பேரவாக் கொண்டுள்ளது.
எமது தாயகத்தை மீட்கும் இப் பணியில் பல ஆண்டுகளாக சுயநலமற்று, அர்ப்பணிப்போடு தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட அனைத்து மக்களையும் நிறுவனங்களையும் , அவர்களின் சிறப்பியல்புகளையும் பேரவை மதிக்கின்றது .
சோகமும் கோபமும் தவிப்பும் நிறைந்த இந்த தருணத்தில் மிகுந்த கவனத்தோடு எமது இலட்சிய தீபத்தை முன்நகர்த்தவேண்டும். ஆயிரக்கணக்கான உயிர்த்தியாகத்தில் மூட்டிவிடப்பட்டது இந்த இலட்சியத் தீ. எம்மை வழிநடத்தும் இலட்சிய தீபம் தொடர்ந்தும் எம்மை வழி நடாத்தும் நாம் எமது வேற்றுமைகளை களைந்து விடுதலை என்ற நோக்கத்திற்காக ஒத்த குரலில் ஒரே சக்தியாக உழைப்போமாக.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
குறிப்பு:அழுத்தம் நமது ENB admin

No comments: