இராமநாதன் முகாமுக்கும் ஆனந்தகுமாரசாமி முகாமுக்கும் பாதை அமைத்த இரு அகதித் தமிழன் சிறீலங்கா அரசபடைகளின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி!
வவுனியா அகதி முகாம்களில் அதிகரிக்கும் நோயாளர்கள்: இராணுவக் கெடுபிடிகளால் சிகிச்சை பெறமுடியாது மக்கள் திண்டாட்டம் [வெள்ளிக்கிழமை, 03 யூலை 2009, 01:09 பி.ப ஈழம்] [வி.குணரட்ணம்]
வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்கள் அங்குள்ள சுகாதாரச் சீர்கேடு மற்றும் காரணங்களினால் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்ற போதிலும் மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடுமையாக நோய்வாய்ப்பட்ட இரண்டு சிறுவர்களை வவுனியா அரச மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு படையினர் மறுத்ததால் குறிப்பிட இரண்டு சிறுவர்களும் பரிதாபகரமாக
மரணமடைந்ததாகவும் தெரியவருகின்றது.
போதிய மருத்துவ வசதிகள் முகாம்களில் செய்துகொடுக்கப்படாத அதேவேளையில், வவுனியா அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் செல்வதற்கும் நோயாளர்களுக்குப் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா முகாம்களில் காணப்படும் சுகாதாரச் சீர்கேடுகள அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்ற அதேவேளையில், நோய் வாய்ப்படும் அகதிகளைப் பராமரிப்பதிலும் அவர்களுக்கான மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் படையினரின் கெடுபிடிகளால் பாதிக்கப்படும் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கெடுபிடிகளால் மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே பலர் இருப்பதாக தெரியவந்திருக்கின்றது.
முகாமில் உள்ளவர்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுகின்ற போதிலும், இவர்களை வெளிநோயாளர்களாகப் பார்வையிடுவதற்கு ஒரு சில மருத்துவர்கள் மட்டுமே செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட வரிசையில் மருத்துவ சிகிச்சைக்காகக் காத்திருக்கும் அக்களை இவர்கள் ஒவ்வொருவராக அழைத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற போது இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ஒருவரும் இவை அனைத்தையும் மிகவும் அருகில் இருந்தே அவதானித்துக் கொண்டிருப்பதால் நோயாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பெரும் சிரமம்
ஏற்படுகின்றது.
மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நோயாளி ஒருவருக்கு மேலதிக சிகிச்சை தேவை என அல்லது அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என மருத்துவர் கருதினால், குறிப்பிட்ட நோயாளிக்கு 'இடமாற்றப் பத்திரம்' ஒன்றை வழங்கி குறிப்பிட்ட முகாமின் மருத்துவ இணைப்பாளரிடம் அனுப்பிவைப்பார்.
இவ்வாறு இடமாற்றப் பத்திரத்துடன் வரும் ஒரு நோயாளியை வவுனியா அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதா இல்லையா என்பதை குறிப்பிட்ட மருத்துவ இணைப்பாளரே தீர்மானிப்பார். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.
இந்த மருத்துவ இணைப்பாளர்கள் சிங்களவர்களாக இருப்பதுடன், மருத்துவக் கல்வியை முடித்துவிட்டு நியமனத்துக்காகக் காத்திருக்கும் அனுபவமற்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.
மருத்துவர்களின் இடமாற்றக் கோரிக்கையை இவர்கள் பெரும்பாலும் நிராகரித்துவிடுவதாகக் கூறப்படுகின்றது. இராணுவ அதிகாரிகளும் இவ்வாறு வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையை முடிந்தளவுக்குக் குறைக்குமாறே இவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அதேவேளையில் இந்த மருத்துவ இணைப்பாளர்கள் இடமாற்ற அனுமதியை வழங்குவதற்காக அகதிகளிடம் 500 ரூபா முதல் 1,000 ரூபா வரையில் கையூட்டாகப் பெற்றுக்கொள்வதாகவும் நோயளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அனுமதியைப் பெற்றுக்கொண்ட பின்னர் நோயாளர் காவு வாகனம் மூலமாக அல்லது பேருந்துகள் மூலமாக இவர்கள் வவுனியாவுக்கு
கொண்டுசெல்லப்படுகின்றனர். வவுனியாவுக்குச் செல்லும் பாதையில் பிரதான இராணுவச் சோதனைச் சாவடி ஒன்றுள்ளது.
இந்த இராணுவச் சோதனைச் சாவடியில் இராணுவ மருத்துவர் ஒருவரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்படும் நோயாளர்களை அவர் அங்கு வைத்து மீள் பரிசோதனைக்கு உட்படுத்துவார். உண்மையில் அவர் போதிய மருத்துவ அறிவைக்கொண்டவர் அல்ல. குறிப்பிட்ட நோயளர்களை வவுனியாவுக்குக் கொண்டுசெல்வதா இல்லையா
என்பதையிட்டு அவர்தான் இறுதி முடிவை எடுப்பார். மருத்துவ இணைப்பாளரின் உத்தரவை நிராகரித்து நோயாளி ஒருவரை திருப்பி அனுப்புவதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.
நிமோனியாவினால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களை வவுனியா மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான மருத்துவ இணைப்பாளரின் உத்தரவுடன் கடந்த மாத தொடக்கத்தில் இந்தப் பகுதியால் கொண்டு செல்லப்பட்டபோது குறிப்பிட்ட இராணுவ மருத்துவரால் 'மீள் பரிசோதனைக்கு' உட்படுத்தப்பட்டனர். பரிசோதனையின் பின்னர் அவர்களை வவுனியாவுக்குக் கொண்டுசெல்லத் தேவை இல்லை எனத் தீர்ப்பளித்த குறிப்பிட்ட மருத்துவர், அவர்களை முகாமுக்குத் திருப்பிக்கொண்டு செல்லுமாறும் உத்தரவிட்டார்.
மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இந்த இரு சிறுவர்களும் முகாமுக்குத் திருப்பிக் கொண்டுவரப்பட்ட பின்னர் பரிதாபகரமாக மரணமடைந்தனர். இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்ற பின்னரும் முகாமில் உள்ளவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கான நடைமுறைகள் மாற்றப்படவில்லை.
வடபகுதி முகாம்களின் நிலை மிக மோசம், பாலியலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள்: அவுஸ்திரேலிய நாளேடு தகவல்
[வியாழக்கிழமை, 02 யூலை 2009, 08:34 மு.ப ஈழம்] [வி.குணரட்ணம்]
வடபகுதியில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழ் அகதிகளின் நிலை மிகவும் மோசமானதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான நாளேடான 'த அவுஸ்ரேலியன்', அங்குள்ள பெண்கள் அகதிகளுக்காக என அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் பலாத்தகாரமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள 'த அவுஸ்திரேலியன்', புல்மோட்டையில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண்களே அதிகாரிகளால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றது.
இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமும், உதவி நிறுவனங்களும் இணைந்து விசாரணைகளை நடத்திவருவதாகவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இருந்த போதிலும் யாரும் இது தொடர்பாக எதனையும் செய்யவில்லை" என தனது
பெயரைக் குறிப்பிட விரும்பாத உதவி நிறுவனப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
"இந்த அகதி முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரம் ஒன்றில் சராசரியாக மூன்று குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. இந்நிலையில் அவர்கள் மற்றவர்களுடைய இடையூறுகள் இல்லாமல் அவற்றில் வசிக்க முடியாது. இந்நிலையில் அங்கு வரும் இராணுவத்தினர் அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கோ அல்லது மேலதிக இடத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கோ கைமாறாக எதனையாவது எதிர்பார்க்கின்றார்கள்" எனவும் அந்த உதவி நிறுவனப் பணியாளர் சுட்டிக்காட்டுகின்றார்.
"இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் முற்றிலும் தவறானவை" என திட்டவட்டமாக மறுக்கும் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன, இருந்தபோதிலும் இது தொடர்பாக அரசு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதையும் உறுதிப்படுத்தினார்.
"படையினர் இந்தப் போரில் வெற்றிபெற்றுள்ளார்கள். அவர்கள் விரும்பியிருந்தால் அவர்கள் சென்ற பாதையில் ஒவ்வொரு பெண்ணையும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியிருக்க முடியும். ஆனால் எந்த ஒரு பாலியல் வல்லுறவுச் சம்பவமும் இடம்பெறவில்லை" எனவும் 'த அவுஸ்திரேலியன்' நாளேட்டுக்கு அவர் தெரிவித்தார்.
இந்த முகாம்களில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர், இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் என நம்பப்படும் ஆண்களும், பெண்களும் அங்கிருந்து வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.
இருந்தபோதிலும் அவர்கள் தனியாகக் கொண்டுசெல்லப்பட்டமை தொடர்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படுவது போன்ற இதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் பேணப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்தப் பிரச்சினைகள் தம்மைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய கவனத்துக்கு உரியவையாக இருப்பதாகத் தெரிவித்த அவர், நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பது சிறிலங்கா அரசியலமைப்பின் கீழேயே மனித உரிமையை மீறும் ஒரு செயலாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பது முகாம்களில் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு எதிராக மக்களும் கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக வெவ்வேறு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதால் தமது இரத்த உறவுகளைச் சந்திப்பதற்காக அவர்கள் மற்றைய முகாம்களுக்குச் செல்வதற்கு
முற்படுகின்றார்கள். ஆனால் இதற்கு படையினர் அனுமதி மறுப்பது பதற்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறான ஒரு சம்பவத்தின் போதே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு அகதிகள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக 'தமிழ்நெட்' இணையத்தளத்தில் வெளியான செய்தியையும் 'த அவுஸ்திரேலியன்' தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இருந்தபோதிலும் இச்சம்பவத்தில் படையினர் வானை நோக்கியே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், இதில் அகதிகள் யாரும் கொல்லப்படவில்லை எனவும் உதவி நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும் இச்சம்பவத்தையடுத்து இராமநாதன் முகாம் மற்றும் ஆனந்தக்குமாரசாமி முகாம் ஆகியவற்றுக்கிடையே அகதிகள் சென்றுவருவதை அனுமதிப்பது என்ற உடன்பாட்டுக்கு அதிகாரிகள் வந்திருக்கின்றனர்.
இதேவேளையில் இந்த முகாம்களின் நிலைமை படிப்படியாக அபிவிருத்தியடைந்து வருவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான தூதுவர் நெயில் பூனே, இருந்தபோதிலும் அகதிகள் முகாம்களில் இருந்து வெளியே சென்று வருவதற்கு அனுமதிக்கப்படாமல் முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டிருப்பதுதான் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது" எனவும் குறிப்பிட்டார்.
"இந்த முகாம்களில் உள்ள மக்களில் 80 வீதமானவர்கள் இந்த வருட இறுதிக்குள் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பியனுப்பப்பட்டுவிடுவார்கள் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவிக்கின்றது எனச் சுட்டுக்காட்டும் அவர், இருந்தபோதிலும் அது மிகவும் கடினமான ஒரு இலக்காகவே இருக்கின்றது எனவும் குறிப்பிடுகின்றார்.
செட்டிகுளம் தடுப்பு முகாமில் சிறிலங்கா படையினர் துப்பாக்கிச் சூடு: இரு அப்பாவித் தமிழர்கள் கொலை
[புதன்கிழமை, 01 யூலை 2009, 09:14 மு.ப ஈழம்] [வி.குணரட்ணம்]
வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வன்னி மக்களுக்கான தடுப்பு முகாமில் சிறிலங்கா படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இரண்டுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இராமநாதன் முகாமுக்கும், அனந்தக்குமாரசாமி முகாமுக்கும் இடையில் கட்டப்பட்டுள்ள முட்கம்பி வேலிகளுக்கு இடையில் பாதை ஒன்றை அமைப்பதற்கு முகாமில் உள்ளவர்கள் முயற்சித்ததாகவும், அதனைத் தடுப்பதற்காக படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலிலேயே முகாமில் இருந்த அப்பாவிப் பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து முகாமில் உள்ள பொதுமக்களுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று உருவாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட இருவரது உடலங்களும் படையினரால் அப்பகுதியில் இருந்து தூக்கிச் செல்லப்பட்டுவிட்டன.
வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு வெளித்தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்கிருந்து செய்திகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. அதனால்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான தகவல்களை இப்போதுதான் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கின்றது.
இருந்தபோதிலும் கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.
இராமநாதன் முகாமையும், ஆனந்தக்குமாரசாமி முகாமையும் பிரிக்கும் வகையில் முட்கம்பி வேலி ஒன்று படையினரால் அமைக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் இரண்டு முகாம்களிலும் இருப்பவர்கள் மற்றைய முகாமில் உள்ள தமது குடும்பத்தவர்களைச் சந்திப்பதற்காக இந்த முட்கம்பி வேலிகளுக்கு இடையில் பாதை ஒன்றை அமைத்துப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைக் கண்டுபிடிக்கும் படையினர் முகாமில் உள்ளவர்களை எச்சரிப்பதுடன், அந்தப் பாதையைப் பயன்படுத்த முடியாதவாறு உடனடியாகவே அடைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்ந்தமையால் குறிப்பிட்ட பகுதியில் சீமெந்து தூண்களை அமைத்த படையினர் முட்கம்பி வேலிகளைக் இறுக்கமாகக் கட்டியுள்ளனர்.
இருந்தபோதிலும் தடுப்பு முகாமில் உள்ளவர்கள் இதனையும் வெட்டி அதற்கு ஊடாக பாதை ஒன்றை அமைத்து மற்றைய முகாமுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தியுள்ளர். இதனை அவதானித்த படையினர் முட்கம்பிகளைப் பெருமளவுக்குப் பயன்படுத்தி அவற்றுக்கு இடையால் செல்ல முடியாதவாறு செங்குத்தாகவும் முட்கம்பிகளைக் கட்டியுள்ளனர்.
இதனால் தமது உறவினர்களைச் சந்திக்க முடியாததால் ஆத்திரமடைந்த மக்கள், அந்த முட்கம்பி வேலிகளுக்கு இடையாகவும் பாதை ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட போதே படையினர் சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தி இருவரைக் கொன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த இடத்திலேயே இருவரும் கொல்லப்பட்டதாகவும், அவர்களுடைய உடலங்கள் படையினரால் அங்கிருந்து உடனடியாகவே அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து குறிப்பிட்ட இரண்டு முகாம்களிலும் பெரும் அச்ச நிலை காணப்படுகின்றது.
No comments:
Post a Comment