Sunday, 11 October 2009

இலங்கை சென்றுள்ள 'மன்மோகன் சோனியா கருணா கும்பலின்' தூதுக்குழு பக்ச பாசிஸ்டுக்களின் ஊதுகுழலே!

இலங்கை சென்றுள்ள 'மன்மோகன் சோனியா கருணா கும்பலின்' தூதுக்குழு பக்ச பாசிஸ்டுக்களின் ஊதுகுழலே!

இலங்கை வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அரசு அனுப்பவில்லை-தமிழக முதல்வர்

வீரகேசரி இணையம் 10/11/2009 10:36:02 AM -

இலங்கையின் வடக்கே வவுனியாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலை குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு
அரசு சார்பில் அனுப்பப்படவி்ல்லை என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், அரசின் சார்பில் குழு அனுப்புவதாக இருந்தால்தான் அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும், சம்பந்தப்பட்ட துறைகளின்
பிரதிநிதிகளையும் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சென்றுள்ள குழுவில் உள்ள உறுப்பினர்களின் விமானக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளைக் கூட அந்தந்தக் கட்சிகள்தான் ஏற்றுள்ளன என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள இந்தியநாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ள நிலையில், அதற்குப் பதிலளிக்கும
முகமாக முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கைப் பயணத்துக்கு அனுமதியளித்து யார் என்றும், குழுவை தேர்வு செய்தது
யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையிலிருந்து திரும்பியதும் கருணாநிதியிடம் அறிக்கை அளிக்குமா அல்லது நாடாளுமன்றத்திடம் அறிக்கை அளிக்குமா என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார்.
அண்மையில், தமிழர்களின் நிலை குறித்து பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியை சுட்டிக்காட்டியுள்ள ஜெயலலிதா, அந்த முகாம்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
செல்ல அனுமதிக்கப்படுவார்களா என்று கேள்வி எழுப்பியுளளார்.
மதிமுக பொதுச் செயலர் வைகோ, ஆளுங்கட்சி எம்.பி.க்கள் குழுவை மட்டும் இலங்கைக்கு அனுப்புவதன் நோக்கம் குறித்து சந்தேகம் வெளியிட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்துத் தெரிவிக்கும்போது, ஜனாதிபதி ராஜபக்ஷவின் விருந்தினர்களாக எம்.பி.க்கள் அங்கு சென்றிருக்கக் கூடாது எனத்தெரிவித்துள்ளார்

.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாம்களுக்கு செல்ல முடிகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பு [ஞாயிற்றுக்கிழமை, 11 ஒக்ரோபர் 2009, 10:21 மு.ப ஈழம்] [நி.விசுவலிங்கம்]

இந்திய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கி இருக்கும் வன்னி வதை முகாம்களுக்கு செல்வதற்கு
அனுமதிக்கப்படும் அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மக்களைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டு அரசிடம் விண்ணப்பித்திருந்த போதும் இதுவரை
அந்த அனுமதி வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி இருக்கின்றது கொழும்பு வார ஏடான 'சண்டே ரைம்ஸ்'. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்துப் பேசியபோது முகாம்களுக்கு செல்வதற்கு தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று
கோரிக்கை விடுத்திருந்தது.
கோரிக்கை விடுத்து ஒரு மாதமாகி விட்ட நிலையிலும் அவர்களுக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. "முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதி குறித்த எமது கோரிக்கைக்கு
அரசு இன்னும் பதிலளிக்கவில்லை" என்றார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
இதேபோன்றே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாம்களுக்கு செல்வதை அரசு ஏன் தடுக்கிறது என்பது தொடர்பில் விளக்கம் தருமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு
உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. எதிர்வரும் 27 ஆம்
நாள் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு வேற்று நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகையில், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அங்கு செல்ல
அனுமதிக்கப்படாமை அவர்களின் சிறப்புரிமைகளை மீறும் செயல் என்று ஐக்கிய தேசியக் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.

ராஜீவ்காந்தி கொலையை காரணம் காட்டி இன்னும் எத்தனை தமிழ் மக்கள் கொல்லப்படப் போகிறார்கள்?: இந்திய குழுவிடம் யாழ். பல்கலை மாணவர் கேள்வி [ ஞாயிற்றுக்கிழமை, 11 ஒக்ரோபர் 2009, 09:29.33 AM GMT +05:30 ] யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் செய்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் விஜயம் யாழ்ப்பாண மக்களை பொறுத்தவரையில் திருப்தி தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக யாழ்ப்பாண கோட்டையில் ஹெலிகொப்டர் மூலம் வந்திறங்கிய இந்த இந்திய நாடாளுமன்றக் குழுவை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைத்து வந்திருந்தார். அவர்களை
அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உட்பட்டோர் வரவேற்றனர்.
பின்னர் தந்தை செல்வாவின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய அவர்கள், யாழ்ப்பாண பொதுநூலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதன் பின்னர் அங்கு கூடியிருந்தோருக்கும் இந்திய
நாடாளுமன்றக் குழுவினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாநகர உறுப்பினர் முடியப்பு ரெமீடியஸ் உட்பட்டோர், வடக்கில் அபிவிருத்திகளை காட்டிலும் மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவதே
உண்மையான அபிவிருத்தியாக தாம் கருதுவதாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அங்கு வந்திருந்தோரில் பெரும்பாலானோர், மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவே கருத்துக்களை முன்வைத்தனர்.
மீள்குடியேற்றம் தொடர்பாக மக்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் தெரிவித்த போது இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு தலைமை தாங்கி வந்த டி ஆர் பாலு வேறு எந்தப்
பிரச்சினைகளும் இருக்கின்றனவா? என்ற கேள்வியை கேட்டு தமக்கான கேள்வியில் இருந்து நழுவிச் சென்றதை அவதானிக்க முடிந்ததாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வரின மகள் கனிமொழி, இதன் போது கருத்துக்களை முன்வைப்பார் என அனைவரும் எதிர்ப்பார்த்தபோதும் அவர், இங்குள்ள பிரச்சினைகளை தாம் தமிழக அரசாங்கத்தின்
கவனத்திற்கும் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக குறிப்பிட்ட அளவில் தமது கருத்துக்களை நிறுத்திக்கொண்டார்.
இதன் போது யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகமும், யாழ்ப்பாண மீனவர் சங்கமும் பல கேள்விகளை தொடுத்தனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர். இந்திய நாடாளுமன்றக்குழுவிடம் கேட்ட கேள்வி அவர்களை சற்று தடுமாற வைத்தது, ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி
இலங்கையில் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். இன்னும் எத்தனை மக்கள் கொல்லப்படப்போகிறார்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது வன்னியில் சிக்குண்டிருந்த மாணவர்கள்,உட்பட்ட பொதுமக்கள் ஒரு திருப்திகரமான முடிவு ஏற்படாதா என ஏங்கிக் கொண்டிருந்ததாக
தெரிவித்த அவர், அவ்வாறு எதிர்பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பல மாணவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார்.
எனினும் இந்த கேள்விக்கும் கருத்துக்கும் இந்திய தரப்பில் இருந்து எவ்வித திருப்திகரமான பதிலும் வழங்கப்படவில்லை.
இதேவேளை இந்தியக் குழுவில் வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், எந்த ஒரு காத்திரமான கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என
யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்தக் குழுவினர் இன்கு பகல் 12 மணியளவில் வவுனியா மெனிக்பாம் தடுப்பு முகாம்களுக்கு விஜயம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது மக்களுடன் கலந்துரையாடிய அவர்கள், தாம் கொண்டு வந்திருந்த நூல்களையும் விநியோகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முகாம்களுக்குள் இடம்பெற்ற நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடியவில்லை.
இதேவேளை இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு, தாம் இலங்கையில் கண்ட விடயங்களை கொண்டு தாம் அறிக்கை ஒன்றை
தயாரித்து தமிழக அரசாங்கத்திடமும் மத்திய அரசாங்கத்திடமும் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் குழு இன்று யாழ்ப்பாணம் செல்கிறது

வீரகேசரி வாரவெளியீடு 10/11/2009 1:17:31 AM

இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக அரசியல் கட்சிகளின் குழுவொன்று நேற்று இலங்கை வந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
அழைப்பையேற்று நேற்று பிற்பகல் இலங்கை வந்தடைந்த இக்குழுவினரை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, இந்தியாவுக்கான பிரதி உயர்
ஸ்தானிகர் பி.கிருஷ்ணமூர்த்தி, சார்க் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் உயன்கொட ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.
ஐந்து நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமை யில் வந்துள்ள இக்குழுவில் எம்.பி.க் களான என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன
நாச்சியப்பன், கவிஞர் கனிமொழி, ஏ.கே.எஸ். விஜயன், ஜே.எம். ஆரூண், டி.கே.எஸ். இளங்கோவன், தொல். திருமாவளவன், கே.எஸ். அழகிரி, ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இடம்
செய்துள்ளன.
யாழ். பல்கலைக்கழகத்துக்கும் இவர்கள் விஜயம் செய்யவுள்ளனர். அகதி முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு வேலனையில் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களை இவர்கள் சந்தித்துப் பேசுவர்.
இதற்கான ஏற்பாடுகளை சமூக சேவைகள், சமூக நலன்புரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்துள்ளார். இன்று மாலை வவுனியா செல்லும் தமிழக அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் குழு
மெனிக்பாம் முகாமையும் பார்வையிடவுள்ளது.
நாளை திங்கட்கிழமை நுவரெலியாவுக்குச் செல்லும் இந்தக் குழுவினருக்கு அங்கும் பிரமாண்டமான வரவேற்பளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் ஆறுமுகன்
தொண்டமான் தலைமையிலான கலந்துரையாடல்களிலும் இவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். பெருந்தோட்டத்துறை மக்களையும் இவர்கள் சந்திக்கவுள்ளதாக தெரியவருகிறது.
13 ஆம், 14 ஆம் திகதிகளில் இவர்கள் கொழும்பில் தங்கியிருந்து அரசியல் கட்சிப் பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளனர். நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ரணில்
விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர எம்.பி ஆகியோரைச் சந்திக்கவுள்ளனர்.
14 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகமவைச் சந்திக்கும் இவர்கள் அன்று மாலை தமிழகம் திரும்பவுள்ளனர். இதேவேளை கிழக்கு மாகாணத்துக்கான தங்களது
விஜயத்தை இவர்கள் ரத்துச் செய்துள்ளனர்.

சம்பந்தனுடன் திமுக-காங். குழு சந்திப்பு ;இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் குறித்து ஆலோசனை

வீரகேசரி இணையம் 10/11/2009 12:20:58 PM -

நலன்புரி முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை மீளக் குடியமர்த்துவதில் இலங்கை அரசு உள்நோக்கத்துடனேயே தாமதத்தை
ஏற்படுத்தி வருவதாகஇலங்கை வந்துள்ள தி.மு.க. கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் குழுவிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதாக இந்தியச்
செய்திகள் தெரிவிக்கின்றன.
போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்கள் நிலை தொடர்பாக நேரில் ஆராய்வதற்காக சனிக்கிழமை பிற்பகல் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த
எம்.பிக்கள் குழு இலங்கை வந்துள்ளது.
இக்குழு நேற்று கொழும்புக்கு வந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்து கலந்துரையாடியது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இதன்
போது இடம் பெயர்ந்த மக்களின் நிலை குறித்து திமுக கூட்டணிக் குழுவிடம், தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் சம்பந்தன், எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், என்.சிறீகாந்தா , பத்மினி
சிதம்பரநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டதாகத் தெரிவித்த சம்பந்தன், தடுப்பு முகாமில் உள்ள மக்கள்
விரைவில் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "கண்ணிவெடிகளை அகற்றுவதுதான் இந்த மக்களின் மீள் குடியேற்றத்துக்குப் பிரதான தடையாக இருப்பதாக அரசு தெரிவிக்கின்ற போதிலும்,
கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் எங்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்பதை எங்களைச் சந்தித்த எம்.பிக்கள் குழுவிடம் தெரிவித்தோம்.
இதில் தேவையற்ற தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக பெறக்கூடிய உதவிகளைப் பெற்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அந்தப் பணியை மேலும் துரிதமாக
மேற்கொண்டிருக்க முடியும்.
மேலும், சில, பல காரணங்களுக்காக சில மாவட்டங்களில் இந்தப் பணியை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் அரசு செயற்படுவதாக நாம் சந்தேகிக்கப்பட வேண்டியிருக்கின்றது.
கண்ணிவெடிகளையும், இடம்பெயர்ந்த மக்களுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் ஊடுருவியிருப்பார்கள் என்பதனை காரணம் காட்டி மீள் குடியேற்றத்தை காலம்
தாழ்த்தாமல் அதனை அரசு துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.
மக்கள் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.தற்போதைய நிலைமையில் இங்குள்ள் மக்கள் யார் என்பது குறித்து அரசு சரியாக அடையாளம் கண்டுள்ளதாகவே
எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது.
எனவே மக்களை தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். யாராவது இவ்விதம் திரும்பிச் செல்ல முடியாதிருந்தால் அவர்களை தமது உறவினர்கள்
நண்பர்களுடன் தங்கியிருப்பதற்கான வசதிகள் செய்யப்பட வேண்டும்.
இடம்பெயர்ந்த இந்த மக்களை இவ்விதம் அடக்கி, ஒடுக்கி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலைமையில் ஒரு மாற்றம் வரவேண்டும்
என்பதை நாங்கள் தெளிவாக இந்தியக் குழுவினருக்கு விளக்கிக் கூறியிருக்கின்றோம்.
போர் முடிவடைந்த பின் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளரும், பாதுகாப்பு ஆலோசகரும் இடம்பெயர்ந்த மக்கள் 180 நாட்களுக்குள் மறு
குடியமர்த்தப்படுவார் என்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டார்கள்.
ஆனால் இதில் 130 நாட்கள் சென்றுவிட்டது. இன்னும் 50 நாட்கள்தான் இருக்கின்றதன. எமது கணிப்பின்படி இக்காலப் பகுதியில் இந்த முகாமில் இருந்து சுமார் 25 ஆயிரம் மக்கள்தான்
வெளியே வந்திருக்கின்றார்கள்.
இது போதிய முன்னேற்றம் அல்ல. அவர்கள் இந்தியாவுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே, அதனை நிறைவேற்றச் செய்வதற்கு இந்தியா தனது அரசியல் செல்வாக்கைப்
பிரயோகிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்" என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்

No comments: