Wednesday, 3 February 2010

நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று நாம் ஒருபோதும் கேட்கமாட்டோம் - சம்பந்தன்

நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கமாட்டோம்.சம்பந்தன்
நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கமாட்டோம். இதனை 1960, 70 களில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட நாம் வலியுறுத்தியுள்ளோம். பிளவுபடாத இலங்கைக்குள் சகல சமூகங்களும் சம உரிமையுடன் வாழக்கூடியதாக அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அந்தக்கோரிக்கையாகும்.
அதனையும் மீறி நாட்டை பிரிக்கவேண்டுமென்ற கோஷத்துடன் யாராவது தமிழ் பேசும் மக்களிடம் ஆணை கேட்டுவந்தால் அவர்களை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டுமென நாம் அன்றே தெரிவித்திருக்கின்றோம்.இந்த நாட்டில் சிங்கள மக்களோடு தமிழ், முஸ்லிம் மக்களும் சம உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழும் விதத்தில் ஒரு காத்திரமான தீர்வு காணப்படவேண்டும். அவ்வாறான சூழ்நிலையைத்தான் எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

===============================================
பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் புரிந்துணர்வுடன் தனித்து போட்டியிட முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு
பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்துப் போட்டியிடுமெனத் தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், அதேசமயம் தமிழ்முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கு பங்கம் ஏற்படாமல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவோம் எனவும் சுட்டிக்காட்டினார்.
தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பாதுகாத்து எமது மக்கள் பெரும்பான்மை சமூகத்தோடு சம உரிமையுடன் வாழும் சூழ்நிலையை உறுதிப்படுத்துவதற்காகவே முஸ்லிம் காங்கிரஸுடன் புரிந்துணர்வு அடிப்படையில் ஒன்றுபட்டிருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து நேற்று திங்கட்கிழமை கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடத்திய கூட்டுச் செய்தியாளர் மாநாட்டிலேயே ஆர்.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையைப் பலமானதாகக் கட்டியெழுப்பும் ஒரேநோக்கத்துடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒன்றுபட்டிருப்பதாகவும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் இதனோடு இணைத்துக் கொண்டு எமது ஒற்றுமைப் பலத்தை உறுதிப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்த அவர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;வரக்கூடிய பொதுத்தேர்தல் தொடர்பில் நாம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாம் தனித்தே போட்டியிடுவோம். இதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. எனினும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் இரு சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்கருதி மிகவும் ஒற்றுமையுடன் இத்தேர்தலைச் சந்திக்கவிருக்கின்றோம்.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே ஒற்றுமையையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பி அதனைத் தொடர்ந்து பேணுவதற்கானதொரு புரிந்துணர்வை நாம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
பொதுத்தேர்தலின் போது தமிழ், முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்குப் பங்கம் ஏற்படாத விதத்தில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட நாம் உறுதிபூண்டிருக்கின்றோம். தமிழ், முஸ்லிம் மக்கள் அதனையே எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். அவர்களின் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காகவே நாம் ஒன்றுபட்டிருக்கின்றோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.ஜனாதிபதித் தேர்தல் முடிந்திருக்கும் ஒரு சூழ்நிலையில், பொதுத்தேர்தலை எதிர்கொள்ளப்போகும் வேளையில் தெற்குச் சிங்கள மக்களுக்கு எவ்வாறானதொரு செய்தியை சொல்லப்போகிறீர்கள்? என்று சிங்கள ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் கூறியதாவது;நாம் எப்போதும் சிங்கள மக்களோடு ஒன்றுபட்டு வாழவே விரும்புகின்றோம். தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்கள் வேறுபட்டு இந்த நாட்டில் வாழக்கூடாது. பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கிருக்கும் உரிமைகள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் இருக்க வேண்டும்.

நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கமாட்டோம். இதனை 1960, 70 களில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட நாம் வலியுறுத்தியுள்ளோம். பிளவுபடாத இலங்கைக்குள் சகல சமூகங்களும் சம உரிமையுடன் வாழக்கூடியதாக அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அந்தக்கோரிக்கையாகும்.
அதனையும் மீறி நாட்டை பிரிக்கவேண்டுமென்ற கோஷத்துடன் யாராவது தமிழ் பேசும் மக்களிடம் ஆணை கேட்டுவந்தால் அவர்களை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டுமென நாம் அன்றே தெரிவித்திருக்கின்றோம்.இந்த நாட்டில் சிங்கள மக்களோடு தமிழ், முஸ்லிம் மக்களும் சம உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழும் விதத்தில் ஒரு காத்திரமான தீர்வு காணப்படவேண்டும். அவ்வாறான சூழ்நிலையைத்தான் எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் சகல சமூகங்களுக்கும் சம உரிமை வழங்கியதால் அந்த நாடுகள் இன்று நல்லமுன்னேற்றம் கண்டுள்ளன. அபிவிருத்தியில் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அவ்வாறானதொரு வழியை நாமும் பின்பற்றினால் அடுத்த 10 வருடங்களில் எமது நாட்டையும் முழுமையாக மாற்றியமைக்க முடியும். இந்தச் செய்தியையே தென்னிலங்கை சிங்கள மக்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன் என்றார்.

No comments: