இன்றுள்ள உலக ஏகாதிபத்திய பொதுப் பொருளாதார நெருக்கடியில், இதன் விளைவாக குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மீளமுடியாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ள சாதகமான சூழ்நிலையில் அபரிமிதமான எண்ணை வளத்தைக் கொண்டும், ஆயுத விற்பனையைக் கொண்டும் மீண்டும் தன்னை ஒரு ஏகாதிபத்திய நாடாக வளர்த்துக்கொள்ள பூட்டினின் ரசியா முயன்று வருகின்றது.இப்பலத்தையே உலக மறுபங்கீட்டிற்கான தனது ஆயுதமாகவும் ரசியா பயன்படுத்திவருகின்றது.இந்து சமுத்திரப் பிராந்தியதை இந்தியாவைக் கொண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவது அமெரிக்காவின் யுத்ததந்திரத் திட்டமாக உள்ளது.இதற்குப் போட்டியாக ரசியாவும், சீனாவும், ஈரானும் எழுந்து வருகின்றன.இத்தகைய ஒரு உலக மற்றும் பிராந்திய மேலாதிக்கத்துக்கான - உலக மறு பங்கீட்டிற்கான- சூழ்நிலை இலங்கை போன்ற அரைக்காலனி நாடுகளின் தரகு ஆளும் கும்பலுக்கு பேரம் பேசும் பரப்பையும் ஆற்றலையும் விரிவாக்கிக் கொடுத்துள்ளன.இந்த இடைவெளிக்குள் நடத்தும் பேரத்தைப் பயன்படுத்தித்தான் தான் மேற்குலகத்திற்கு அடங்காத காளையென்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றார் ராஜபக்ச.ரசியா போன்ற சாவு வியாபார அரசுகளின் நலன்களுக்கும், ராஜபக்ச போன்ற இராணுவ சர்வாதிகார பாசிச ஆட்சியாளர்களின் நலன்களுக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.இந்த ஆயுத வர்த்தகத்துக்கு அளிக்கப்பட்ட கெளரவமே இந்த கலாநிதி பட்டம்.
============================================
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM GMT +05:30 ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்த கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது. உலக சமாதானத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் பயங்கரவாதத்தை முறியடிப்பதில் வெற்றியீட்டியமைக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்பல்கலைக்கழகத்தின் பொன்விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதற்கு 100 நாடுகளைச் சேர்ந்த 6000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவுக்கு ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ள இலங்கைக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஊடகத்துறை மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
----------------------
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM GMT +05:30 ]
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார்.
விஜயத்தை மேற்கொண்டு இருக்கும் இலங்கை ஜனாதிபதி, ரஷ்ய அதிபரை சந்தித்து ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்குவதற்கும், சீர் செய்வதற்கான கடன் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிடவுள்ளார்.
ரஷ்யாவை உண்மையான உற்ற நண்பனாக இலங்கை பார்க்கிறது. ஐ.நா பாதுகாப்பு சபையின் மற்றுமொரு நிரந்தர உறுப்பினரான சீனாவுடன் இணைந்து இலங்கை அரசின் மீது போர் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவாதம் வருவதை ரஷ்யா தடுத்து இருந்தது.
பல மாத காலமாகவே, ரஷ்யாவுக்கு நன்றி கூறி இலங்கையில் இருக்கின்ற ரஷ்ய தூதரகத்துக்கு முன்பாக பதாதை ஒன்று தொங்கி வருகிறது.
இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின் போது, சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் இலங்கைக்கு கொடுப்பது தொடர்பான ஒப்பந்தம் கையொப்பமாகும் என்றும், இந்த கடன் ரஷ்ய ஆயுதங்களை வாங்குவதற்கும், சிவில் மற்றும் இராணுவ உபயோகம் கொண்ட பொருட்களை வாங்குவதற்காகவும் கொடுக்கப்படுகிறது என ரஷ்யாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த கடன் ஏற்கனவே இலங்கையிடம் இருக்கும் ரஷ்ய ஆயுதங்களை சீர் செய்யவும் பயன்படும் என்று இலங்கையில் இருக்கின்ற விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதம் மட்டுமன்றி தேயிலை வியாபாரத்திலும் இருநாடுகளுக்கும் இடையில் உறவு நிலவி வருகிறது. இலங்கை தேயிலையை அதிகமாக வாங்கும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா இருக்கிறது.
No comments:
Post a Comment