மாவட்ட மட்டத்தில் அதிகாரத்தை பகிர்வதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு- சுதந்திரக் கட்சியின் யோசனையில் தெரிவிப்பு
வீரகேசரி நாளேடு 01/05/07
மாவட்ட அலகின் மூலம் அதிகாரத்தை பகிர்ந்து இனப்பிரச்சினைக்குத்தீர்வு காணும் யோசனையினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நேற்று முன்வைத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மாவட்டங்கள் தோறும் ஜனாதிபதியினால் முதலமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாவட்ட சபைகளுக்கும் மூன்று நிறைவேற்றுக்குழு நியமிக்கப்படும். இதில் நிதிக்குழு முதலமைச்சரின் கீழ் இயங்கும் என்றும் சுதந்திரக்கட்சியின் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினை தீர்வுக்காண ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தீர்வுத்திட்ட யோசனையினை நேற்றுமாலை கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற பொதுஜனஐக்கிய முன்னணியின் மேதின கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைதிரிபால சிறிசேன வெளியிட்டுவைத்தார். சுதந்திரக்கட்சியினால் வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டயோசனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் சர்வகட்சி குழுவிடமும் சமர்ப்பிப்பதற்காக பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவிடம் பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரமேஜயந்தவினால் கையளிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தீர்வு யோசனையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அதிகாரத்தைப் பகிர்வதன் மூலம் தீர்வு காணப்படும்.
அதிகாரத்தை விரிவாக பகிர்வதற்கு புதிய அலகாக மாவட்ட முறை பிரேரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு அலகு உருவாக்கப்படும். இந்த இரண்டு மாவட்டங்களும் ஒரே பூகோள மைய பிரதேசத்தில் அமைந்திருத்தல்வேண்டும். அம்மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் விருப்பப்படி இது ஒன்றிணைக்கப்படும். அதிகாரப்பரவலாக்கலின் போது பாராளுமன்றத்தின் நிறைவேற்று அதிகாரமும் நீதிமன்றத்தின் அதிகாரமும் பாதுகாக்கப்படும்.
புத்தமதம்
புத்தமதத்திற்கு ஒரு இடத்தை பெற்றுக்கொடுப்பதோடு, புத்தசாசனம் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படும். அத்தோடு தற்போது உள்ள அரசியலமைப்பின் பிரகாரம் இதர மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பாதுகாக்கப்படும்.
அரசியலமைப்பு பாராளுமன்ற அரசியலமைப்பு முறை மீண்டும் நிறுவுவதற்கு சுதந்திரக் கட்சி முன்நிற்கின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழித்து பிரதமருக்கு அமைச்சரவை அதிகாரத்தை வழங்குவதற்கு கட்சி மாற்றுயோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம் முறை ஒழிப்பது தொடர்பாக தேசிய இணக்கத்தை ஏற்படுத்த முடியாவிட்டால் நிறைவேற்று அதிகாரத்தில் மறுசீரமைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதிகார பகிர்வு அதிகாரபகிர்வு தொடர்பாக ஐந்து விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இரண்டு மாவட்டங்கள் ஒன்றிணைக்கப்படல். அவ்வாறு ஒன்றிணைக்கப்படும் மாவட்டங்கள் பூகோள ரீதியில் ஒன்றாக இருக்கவேண்டும். அத்தோடு, பிரதேசங்களுக்கு தொடர்பிருக்கவேண்டும். அந்த மாவட்ட மக்களின் விருப்பத்தின் பேரிலேயே மாவட்டங்கள் இணைக்கப்படும். அதோடு மாவட்டங்களில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் மீது விசேட கவனம் செலுத்தப்படும்.
No comments:
Post a Comment