Friday, 27 April 2007

அந்நிய முதலீடுகளின் பாதுகாப்புக்கு விலை தமிழர்களின் சுய நிர்ணய உரிமை அல்ல! - ENB

சமாதானத்திற்கான விலை தேசிய பாதுகாப்பு அல்ல ஜனாதிபதிக்கு கூட மக்கள் இடமளிக்க மாட்டார்கள் -அமைச்சர் ரம்புக்வெல கூறுகிறார்
[26 - April - 2007]
கே.பி.மோகன்-

தேசிய பாதுகாப்பை சமாதானத்திற்கான விலையாகச் செலுத்த நாட்டு மக்கள் ஜனாதிபதிக்குக் கூட இடமளிக்க மாட்டார்கள் என்று பாதுகாப்பு விவகார பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கிராமோதய நிலைய தேசிய பாதுகாப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது;
"புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாரென நோர்வே தூதுவர் மூலம் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசாங்கம் எப்போதும் எந்த வேளையிலும் நிபந்தனையற்ற, `பிளவுபடாத இலங்கைக்குள்' என்ற வரையறைக்குள் நின்று புலிகளுடன் பேச்சு நடத்த தயாரென பதிலளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான புதிய பேச்சுவார்த்தையொன்றின் போது நாட்டின் இறைமையை பாதிக்கும் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெறாது. அரசாங்கம் அவ்வாறானதோர் நிர்ப்பந்தங்களுக்கு ஒரு போதும் அடிபணியாது.
இது மக்கள் ஆணையின் மூலம் அமையப் பெற்ற அரசாங்கம். நிறைவேற்று ஜனாதிபதிக்கு மக்கள் வரம் கொடுத்துள்ளனர். அதனால், அரசாங்கமோ பாதுகாப்பு தளபதியான ஜனாதிபதியோ மக்கள் ஆணையை மீறி தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுத்து நடக்க முடியாது.
ஜெனீவா மற்றும் ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டவர்கள் நாங்கள் அல்ல. நாங்கள் நிபந்தனைகளுடன் பேச்சுக்குச் செல்லவில்லை.
இரண்டாம் கட்ட ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது ஏ-9 பாதையை திறக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டு புலிகள் யுத்தத்திற்கு சென்றார்கள்.
ஏ-9 பாதையை திறக்க 7அம்ச கோரிக்கையொன்றுக்கு புலிகள் வர வேண்டும் என்று அரசாங்கம் கோரியது.
அதற்கு இணங்காத நிலையில் படையினர் மீதும் பொது மக்கள் மீதும் புலிகள் தொடர் தாக்குதல்களை ஆங்காங்கே நடத்தினர்.
ஐந்து மாதங்கள் கடந்த நிலையில், இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்கள். அதுவரை பொறுமையாக இருந்தவர்களை பொங்கி எழச் செய்தார்கள்.
நாட்டில் ஜனநாயகம் நிலைபெற வேண்டும் என்பதற்காக, பதில் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது அவர்கள் படு தோல்விகளுக்கு மத்தியில் பலம் இழந்து பேச்சுக்கு வர அழைப்பு விடுத்துள்ளார்கள். நாம் எப்போதும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்புகின்றோம். அதுவே கட்டாயம் இடம்பெற வேண்டிய விடயம்.
அதற்காக சமாதானம் என்ற பெயரில் நாட்டின் பாதுகாப்பை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது. பாதுகாப்பை அடகு வைத்து பெற முனையும் சமாதானம் ஒன்றை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் கிளிநொச்சிக்கு சென்று புலிகளை சந்தித்து வர மேற்கொண்ட முயற்சியை அரசாங்கம் தடுத்து விட்டதாக தவறான செய்திகள் சில வெளியிடப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக அவரே அங்கு செல்லும் பயணத்தை பின் போட்டுக் கொண்டார் என்பதே உண்மை. வெளிநாட்டு தூதுவர்கள் மட்டக்களப்பிற்கு சென்றபோது, புலிகள் நடத்திய தாக்குதல் அனைவருக்கும் நினைவிலிருக்கும். அதேவேளை, புலிகளின் வான் தாக்குதல் உட்பட அவர்களின் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பாதுகாப்பற்ற நிலைமையும் அரசாங்கத்தினால் பிரட்ஸ்காரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரட்ஸ்கார் வன்னிக்குச் சென்று புலிகளை சந்தித்து வர அரசாங்கம் ஏற்பாடுகளை செய்து கொடுக்கும். அது அவருக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கும் உத்தரவாதமொன்றுடன், இடம்பெறும். அவ்வாறு அவர் சென்று எடுத்து வரும் சமாதான பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை பரிசீலனை செய்து அரசாங்கம் பேச்சுக்கு செல்லும். அரச தரப்பின் சமாதான கதவுகள் எப்போதும் திறந்தேயிருக்கின்றன ".


நன்றி: தினக்குரல்

No comments: