Sunday, 20 May 2007

தாயகச் செய்தித் தீகள்

சிறுபான்மை பிரதிநிதித்துவம் இல்லாதொழிக்க சதி முயற்சி
தேர்தல் மறுசீரமைப்புக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் கடும் எதிர்ப்பு
[20 - May - 2007] ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் தேர்தல்

மறுசீரமைப்பென்ற போர்வையில் சிறுபான்மை இனக்கட்சிகளின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கடும் விசனம் தெரிவித்திருக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தேர்தல் முறை சீர்திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கையை ஒன்றுபட்டு எதிர்க்கப் போவதாக தெரிவித்துள்ளன.
இதேவேளை உத்தேச தேர்தல் மறுசீரமைப்பு ஏற்பாடுகளுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி.யிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சிறுபான்மை சமூகங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் அபாயமிருப்பதாக சிறுபான்மைக் கட்சிகள் கூறுகின்றன.
இந்நிலையில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ள தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் கூட்டத்தில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் இவ்விரு கட்சிகளும் சிறுபான்மையினருக்கு நன்மையை பெற்றுத்தராத தேர்தல் மறுசீரமைப்பை ஒன்றுபட்டு எதிர்க்க தீர்மானித்துள்ளன.
இதுபற்றி இ.தொ.கா. உபதலைவர் ஆர்.யோகராஜன் கூறுகையில்;
அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையை ஒருபோதும் ஏற்கமுடியாது. அதை முற்றாக நிராகரிக்கிறோம். சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தேர்தல் மறுசீரமைப்பு யோசனையில் இல்லை. இதன்மூலம் சிறுபான்மையினரை ஓரங்கட்டுவது தெளிவாகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் மறுசீரமைப்பு யோசனைகளை சமர்ப்பித்து பல சந்தர்ப்பங்களில் அதுபற்றி கலந்துரையாட வாய்ப்புக்கேட்டோம். ஆனால் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
எமது கட்சி மலையக மக்களின் சார்பில் முன்வைத்த தேர்தல் யோசனைகள் எதுவுமே இடைக்கால அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. இதுபற்றி நாம் தற்போதே எதிர்ப்பு காட்டாவிட்டால் நாளை எமது சமூக பிரதிநிதித்துவத்திற்கு அபாயமேற்படும்.
சிறுபான்மை சமூகங்கள் ஏற்கக்கூடிய தேர்தல் மறுசீரமைப்பை முன்வைக்காத பாராளுமன்ற தெரிவுக் குழு, சிறுபான்மை சமூகங்கள் அங்கீகாரம் வழங்கும் யோசனைகளை முன்வைத்தால் அதுபற்றி பரிசீலிக்க தயாராகவுள்ளோம் என்றார்.
முஸ்லிம் காங்கிரஸ்
இதுபற்றி முஸ்லிம் காங்கிரஸ் கூறுகையில்;
எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இ.தொ.கா. முக்கியஸ்தர்களுடன் இதுபற்றி நேற்று சனிக்கிழமை முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளை தேர்தல் மறுசீரமைப்பு யோசனைகள் பூர்த்தி செய்யவில்லை. எமது சமூகங்களின் விருப்பு இதில் கவனத்திற்கொள்ளப்படவில்லை. நிரந்தர அரசியல் தீர்வு காணப்படுகையிலேயே தேர்தல் திருத்தமும் அவசியமாகும்.
அரசியல் அமைப்பில் பகுதி பகுதியாக திருத்தங்களை மேற்கொள்வது ஆரோக்கியமற்றது. இனநெருக்கடிக்கு தீர்வுகாண்பதை இழுத்தடிக்கும் அரசாங்கம் தேர்தல் மறுசீரமைப்பை அவசரமாக மேற்கொள்ள துடிப்பதன் மர்மம் எமக்கு புரியவில்லை.
தற்போதுள்ள தேர்தல் முறையின்படி எந்தவொரு பிரதான தேசிய சிங்களக் கட்சியும் தனித்துநின்று அரசாங்கம் அமைக்க முடியாது. இதனால் சிறுபான்மை கட்சிகள் தமது சமூகம் சார்பில் பேரம்பேசும் சக்தியை கொண்டுள்ளன. இப்பேரம் பேசும் சக்தியை நசுக்கவே தேர்தல் மறுசீரமைப்பு கொண்டு வரப்படுகிறது.
பாராளுமன்றத்தில் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் தக்க வைக்கப்படுவது மிக அவசியமாகும். இதனை இழக்க ஒருபோதுமே அனுமதிக்க முடியாது.
புதிய தேர்தல் மறுசீரமைப்பின் படி 140 தேர்தல் தொகுதிகளும், 15 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் முறையும் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகத்தை அடக்கி, உரிமைகளை மறுக்கவே வழிவகுக்கும்.
எனவேதான் உத்தேச தேர்தல் முறைமையை சிறுபான்மை கட்சிகள் ஒன்றுபட்டு எதிர்க்கின்றன. இரு பிரதான தேசிய கட்சிகளும் ஒன்றுபட்டு தேர்தல் மறுசீரமைப்புக்கு ஆதரவு வழங்க முன்வந்தால் அதுவே சிறுபான்மை சமூகங்களுக்கான பாரியதோர் சவாலாக அமையுமென்றார்.
அமைச்சர் தினேஷ் குணவர்தனா
இதேவேளை தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் தினேஷ் குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில்;
நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் உத்தேச தேர்தல் மறுசீரமைப்பு அறிக்கை வெளியிடப்படும்.
கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தேர்தல் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்கப்பட்டு கருத்துகளும் தெரிவிக்கப்பட்டு அவற்றிலிருந்தே உத்தேச தேர்தல் மறுசீரமைப்பு தயாரிக்கப்பட்டது. சிறுபான்மை கட்சிகளுக்கு இதில் இணக்கம் இல்லாவிட்டால் அவர்கள் தெரிவுக் குழு முன்வந்து அதனைக் கூறியிருக்கலாம்.
நான் ஜே.ஆர்.ஜயவர்தன போன்று செயற்படவில்லை. ஆனால் தேர்தல் மறுசீரமைப்பு மிக அவசியம் என்றார்.

அடையாளம் காணமுடியாதவாறு எரிக்கப்பட்ட நிலையில் 2 சடலங்கள்
தொம்பே பகுதியில் கண்டுபிடிப்பு
டிட்டோகுகன்

கம்பஹா மாவட்டம் தொம்பே பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை, கைகள் பின்னால் கட்டப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் இரு ஆண்களின் சடலங்கள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொம்பே, களுகொந்தயாவ பிரதேசத்தில் வீதியோரமாக இந்தச் சடலங்கள் கிடக்கக் கண்டே பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சடலங்கள் இரண்டிலும் கைகள் பின்னால் வளைத்துக் கட்டப்பட்டிருந்ததாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
இதேநேரம், இரு சடலங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரியூட்டப்பட்டு முகம் உட்பட உடற்பாகங்கள் சிதைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.
அத்துடன், வேறொரு பிரதேசத்தில் கொலை செய்து கொலையாளிகள் சடலங்களை இங்கு எறிந்துவிட்டுச் சென்றிருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கும் தொம்பே பொலிஸார், சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினர்.


மலையக பெருந்தோட்ட ஆசிரிய நியமனத்தில்அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக 1650 பேர் முறையீடு
[20 - May - 2007]ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

மலையக பெருந்தோட்ட ஆசிரிய நியமனத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து 1650 பேர் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக சமத்துவமின்மை ஒழிப்பு அமைச்சிடம் எழுத்து மூலமான முறைப்பாட்டை செய்துள்ளனர்.
பெருந்தோட்ட ஆசிரிய நியமனத்தில் முறைகேடுகளும், கையூட்டல் சம்பவங்களும் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், அதனை கல்வியமைச்சும், பிரதிக் கல்வியமைச்சர் எம்.சச்சிதானந்தன் மற்றும் மத்திய மாகாண கல்வியமைச்சர் எஸ்.அருள்சாமி ஆகியோர் முற்றாக மறுத்திருந்தனர்.
இந்நிலையில் மலையக ஆசிரிய நியமனத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதுபற்றிய முறைப்பாடுகளை சமூக அபிவிருத்தி மற்றும் சமூக சமத்துவமின்மை ஒழிப்பு அமைச்சுக்கு அறிவிக்க முடியுமென அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய கடந்த 14 நாட்களுக்குள் 1650 முறைப்பாடுகள் ஆசிரிய நியமனத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.
இதில் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமை நிரூபணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலிருந்தே அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தனியார் கல்விநிலைய ஆசிரியர்களில் சிலருக்கு ஆசிரிய நியமனம் கிடைக்கப்பெறாத அதேவேளை அவர்களிடம் கல்வி கற்பவர்களுக்கு ஆசிரிய நியமனம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஆசிரிய நியமனங்களை சீர்குலைக்கும் எத்தகைய நோக்கமும் தமக்கில்லையென தெரிவித்துள்ள சமூக சமத்துவமின்மை அமைச்சு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜோர்தான் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியபின் அவருடன் இதுபற்றி கலந்துரையாடவிருப்பதாகவும் தெரிவித்தது.
அத்துடன் 200 க்கும் மேற்பட்டவர்கள் ஆசிரிய நியமனத்தை இதுவரை பெற்றுக்கொள்ளாத நிலையில், ஆசிரிய நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வேறு அரச துறைகளிலாவது வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வகட்சி ஆலோசனைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை வீரகேசரி நாளேடு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் தங்களது யோசனைகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. கட்சிகளின் யோசனைகள் சமர்ப்பிக்கப்படும் வரை சர்வ கட்சி ஆலோசனை குழுவை கூட்ட முடியாது என்று சர்வகட்சி ஆலோசனை குழுவின் தலைவரும் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது யோசனையை சர்வகட்சி ஆலோசனைக்
குழுவிடம் சமர்ப்பிக்கும் முன்னர் தங்கள் கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்க போவதில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டன என்றும் கூறினார்.
சர்வகட்சி ஆலோசனை குழுவின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் தயாரிக்கப்பட்டுள்ள யோசனைகள் இன்னும் சர்வ கட்சி ஆலோசனை குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. சுதந்திர கட்சியின் யோசனைகள் ஆலோசனை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே தங்களது கட்சிகளின் யோசனைகள் சமர்ப்பிப்போம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெல உறுமய என்பன தெரிவித்துள்ளன.

No comments: