தினக்குரல்: ஆசிரியர் தலையங்கம்
மொழிக் கொள்கை அமுலாக்கத்தின் இலட்சணம்
[19 - May - 2007]
தகுதி வாய்ந்த மொழி பெயர்ப்பாளர்களை தற்காலிக அடிப்படையில் பொலிஸ் நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்திருக்கும் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா, தமிழ் பேசக்கூடிய ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களை இந்த நோக்கத்துக்காக ஆட்திரட்டல் செய்யுமாறு சகல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியிருக்கிறார். இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சுற்று நிருபமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார். ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்கள் பொலிஸ் நிலையங்களில் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றத் தயாராயிருக்கிறார்களா என்பதை அவர்களிடம் கேட்டறிந்து அவ்வாறு அவர்களுக்கு விருப்பமிருந்தால் விண்ணப்பங்களை கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு பரிசீலனைக்காக அனுப்பிவைக்குமாறு மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களிடம் விக்டர் பெரேரா கேட்டிருக்கிறார். நியமிக்கப்படக்கூடிய ஒவ்வொரு மொழி பெயர்ப்பாளருக்கும் தினமொன்றுக்கு 500 ரூபா உதவிப் பணம் வழங்குவதற்கும் பொலிஸ் மா அதிபர் சிபாரிசு செய்திருக்கின்றார். பொலிஸ் மா அதிபரிடமிருந்து வந்திருக்கும் இந்த அறிவிப்பு மேலோட்டமாக நோக்குகையில் மொழி புரியாத காரணத்தால் பொலிஸ் நிலையங்களில் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற நெருக்கடிகளைத் தணிப்பதற்கான நோக்கத்தைக் கொண்டதாகவே தோன்றும். ஆனால், அரச கருமமொழிகள் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதில் கடந்த இருதசாப்தங்களாக அரசாங்கங்கள் காட்டிவந்திருக்கும் அலட்சியத்தின் விளைவாகவே இத்தகையதொரு சுற்றுநிருபத்தை அனுப்பவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது அவசியமானதாகும். 1987 இலங்கை- இந்திய சமாதான உடன்படிக்கையை அடுத்து சிங்கள மொழிக்கு இருக்கின்ற அதே அந்தஸ்து தமிழுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழை ஒரு தேசிய மொழியாக அங்கீகரித்து அரசாங்க அலுவல்களில் அதற்கும் சம அந்தஸ்தை வழங்க வேண்டிய கடப்பாட்டை அரசாங்கங்கள் நிறைவேற்றத் தவறிவிட்டன.
முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட அரச கருமமொழிகள் ஆணைக்குழு இருமொழிக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு எண்ணற்ற சிபாரிசுகளை இதுகாலவரை செய்திருக்கிறது. ஆனால், அந்தச் சிபாரிசுகளில் எந்த ஒன்றையுமே முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கங்கள் மானசீகமாக அக்கறை கொண்டது கிடையாது. இலங்கையிலே அண்மைக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களில் எந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகள் கூடுதலான அளவில் கணக்கில் எடுக்கப்படவில்லையென்று ஒரு கேள்வி எழுமானால் அது அரச கருமமொழிகள் ஆணைக்குழுவே என்று எந்த ஐயுறவுமின்றி பதில் அளித்துவிடலாம்.
தற்போது அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக ஷ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் ராஜா கொலூரே பதவி வகிக்கிறார். மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை மிகவும் உன்னிப்பான முறையில் ஆவணப்படுத்துவதில் கொலூரே தலைமையில் ஆணைக்குழு செம்மையாக பணிகளைச் செய்திருக்கிறது. குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான சிபரிசுகளை இந்த ஆணைக்குழு 2005 நவம்பரில் அறிக்கையாக வெளியிட்டிருந்தது. ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, அந்தச் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு ராஜா கொலூரே 2005 ஆம் ஆண்டு அறிக்கைக்கு ஒரு இணைப்பு அறிக்கையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்திருக்கிறார். மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தலை யதார்த்தபூர்வமாகவும் துரிதமாகவும் முன்னெடுப்பதற்கான செயல்முறைகள் தொடர்பிலான சிபாரிசுகள் இந்த இணைப்பு அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சிபாரிசுகளுக்கு என்ன கதி நேரப்போகிறதோ?
அரசியலமைப்பு விவகார, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டியூ குணசேகர கடந்த வருடம் ஜூலையில் அரசாங்க சேவையில் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படுபவர்கள் சிங்களத்திலும் தமிழிலும் தேர்ச்சி பெற்றிருப்பதைக் கட்டாயமாக்குவதற்கான யோசனையொன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரத்தையும் பெற்றிருந்தார். ஆனால், அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக அரசாங்க நிருவாக இயந்திரத்தை தயார் செய்வதென்பது சுலபமான காரியமல்ல. அரசாங்க உயர் அதிகாரிகள் மட்டத்திலேயே அத்தகைய தீர்மானத்துக்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் இழைக்கக்கூடிய தவறு காரணமாக ஒரு பிரஜைக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு பாதிப்புமே அடிப்படை உரிமை மீறலுக்கு சமமானதாகும். ஆனால், அத்தகையதொரு உரிமை மீறல் நிலைவரம் இரு தசாப்தங்களாக தொடருகின்ற போதிலும் எந்தவொரு அரசாங்கமும் அது குறித்து அக்கறை கொள்வதாக இல்லை. அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் நடைமுறைச் சாத்தியமான சிபாரிசுகளை அக்கறையுடன் கவனத்தில் எடுப்பதற்கு அரசாங்கம் தயாராயிருந்தால் மாத்திரமே இரு மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால், அரசாங்கம் அதற்குத் தயாராயிருப்பதற்கான தெளிவான- நம்பகமான அறிகுறிகளைக் காண முடியவில்லை. வெறுமனே அறிக்கைகள் கையளிப்பும் உறுதிமொழிகள் தெரிவிப்புமே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் பரிதாப நிலையை என்னவென்று வர்ணிப்பது?
No comments:
Post a Comment