Thursday, 21 June 2007

ஈழச்செய்திகள் 220607


வெள்ளைவான்*


போர் நிறுத்த உடன்பாடு மீறல்கள் தொடர்பாக
கண்காணிப்புக் குழு இனிமேல் தீர்ப்பு வழங்காது
[21 - June - 2007] தினக்குரல்

போர் நிறுத்த உடன்பாடு மீறல்கள் தொடர்பாக தீர்ப்பு வழங்குவதைத் தாங்கள் நிறுத்தியுள்ளதாக போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது முதல், இந்த உடன்பாடு மீறப்படும் போது அதற்கு காரணமானவர்களுக்கு எதிராக கண்காணிப்புக் குழு தீர்ப்பு கூறி வந்தது.
எனினும், கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடும் மோதல்கள் வெடித்து போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் சமாதான முயற்சிகள் பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டன.
இந்த நிலையிலேயே போர் நிறுத்த மீறல்கள் தொடர்பாகத் தீர்ப்புக் கூறுவதைத் தாங்கள் நிறுத்தியுள்ளதாக கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த கிறிஸ்ரினி பேர்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தங்கள் முடிவைத் தாங்கள் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடந்த மே மாதம் 12 ஆம் திகதி அறிவித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், போர் நிறுத்த மீறல்கள் தொடர்பாக எந்தத் தரப்பிடமிருந்து வரும் முறைப்பாடுகளையும் தாங்கள் பெற்றுக் கொள்வோமெனவும், இது குறித்த மீறல்களைத் தங்களுக்குத் தெரிவிக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்துவதாகவும் தெரிவித்த கிறிஸ்ரினி பேர்க், எனினும் தங்களுக்கு கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பாக தாங்கள் தீர்ப்பெதனையும் வழங்கப் போவதில்லையெனவும் தெரிவித்தார்.
போர் நிறுத்த உடன்பாடு தொடர்பான தங்களது கடைசித் தீர்ப்பு கடந்த ஏப்ரல் மாதம் இரு தரப்பிடமும் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அரச சமாதான செயலகப் பணிப்பாளரை கண்காணிப்புக் குழுவின் தலைவர் சந்தித்த மறு நாள், கண்காணிப்புக்குழு இதனைத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
========================
அநீதியான யுத்தம் ஒழியாமல் அகதி வாழ்வு ஒழியாது!நீதியான யுத்தம் இல்லாமல் அநீதியான யுத்தம் ஒழியாது!! ENB
=========================

யாழ் உதயன்:

மட்டக்களப்பில் அகதிகள் பேரணி

சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு நேற்று மட்டக்களப்பில் அமைதிப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியம் இந்த அமைதிப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.மட்டக்களப்பு புனித காணிக்கை மாதா தேவாலயத்துக்கு முன்பாக ஆரம்பமாகிய இந்த அமைதிப் பேரணி அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூத ரக அலுவலகம் முன்பாக முடிவடைந்தது. அங்கு அகதிகளும் பொதுமக்களும் கையொப்பமிட்ட மகஜர் ஒன்று தலைமைப் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டது. அமைதிப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் ""அகதி வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்'' "நிம்மதியாக வாழ்வதற்கு சொந்த இடங்களில் மீளக்குடியமருங்கள்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர்.இந்த அமைதிப் பேரணியில் பல நூற்றுக்கணக்கில் அகதிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

உயர் பாதுகாப்பு வலய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறார் பிரதமர்

சம்பூர், மூதூர் கிழக்குப் பிரதேசங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமா கப் பிரகடனப்பட்ட அரசின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எக்காரணம் கொண்டும் ரத் துச் செய்யப்படமாட்டாது.பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.சம்பூர்மூதூர் கிழக்குப் பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக்கும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத் திற்குப் பதில் அளித்துப் பேசுகையில் அவர் இப்படிக் கூறினார்.""தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே சம்பூர் அதி உயர் பாதுகாப்பு வலயமாக அரசால் பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழர்களை வெளியேற்றவேண்டும் அவர்களுக்குத் தொல்லை கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் அரசு இதைச் செய்யவில்லை''கொழும்பு கொலன்னாவை மற்றும் கட்டுநாயக்க போன்ற பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாகவே உள்ளன. இருந்தும் அந்தப் பகுதிகளில் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். அரசால் அவர்களுக்கு எந்தத் தொல்லையும் ஏற்படுத்தப்படுவதில்லை அவ்வாறே தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே சம்பூர் மற்றும் மூதூர் பாதுகாப்பு வலயங்களாக அரசால் பிரகடனப்படுத்தப்பட்டன. இந்தத்திட்டம் மூலம் யாரையும் இடம்பெயரச் செய்யவேண்டும் என்ற திட்டம் எம்மிடமில்லை. அந்த நோக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தை நாம் பிரகடனப்படுத்தவில்லை என்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் குறுக்கீடு செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அந்தப் பகுதியில் உள்ள எவரும் சொந்த இடங்களை இழக்கக்கூடாது. அவர்கள் அங்கேயே குடியமர்த்தப்பட வேண்டும் என்றார்.அதற்குப் பதிலளித்த பிரதமர், அங்கிருந்து எவராவது இடம்பெயர்ந்திருந்தால் அவர்கள் முறையான திட்டத்தின்கீழ் குடியமர்த்தப்படுவார்கள். அந்தப் பிரச்சினை தொடர்பாக நாம் பேசி முடிவெடுக்கலாம் என்றார் பிரதமர்.
இரு செய்தித்தலைப்புகள்

1) பருத்தித்துறைக் கடலில் செவ்வாயன்று 5 மணிநேரம் கடும் மோதல் நடைபெற்றது டோறா சேதம் என்று புலிகள் அறிவிப்பு

2) யுத்த நிறுத்த உடன்படிக்கையை அரசு தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகிறார்

குடாநாட்டில் கோதுமை மா இன்று முதல் கிலோ 55 ரூபா

குடாநாட்டில் கோதுமை மாவின் விலை ஒரு கிலோ 55 ரூபாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. யாழ். அரச அதிபர் கே.கணேஷ் நேற்று இதனை அறிவித்தார்.இன்று தொடக்கம் புதிய விலை நடைமுறைக்கு வருவ தாகவும் அவர் தெரிவித்தார்.இதுவரை ஒருகிலோ கோதுமை மா 53 ரூபாவாக விற் பனை செய்யப்பட்டுவந்தது."இந்துருவலி' கப்பல் மூலம் எடுத்துவரப்பட்ட கோதுமை மா, ப.நோ.கூ.சங்கங்களுக்கு செயலகத்தால் தற்போது விநியோகம் செய்யப்பட்டுவருகின்றது.

தமிழ் நெற்றை பார்வையிடலாம்
[21 - June - 2007]
தமிழ் நெற் இணையத்தளத்தை அரசாங்கம் தடை செய்துள்ள போதும், அதனை மாற்று வழிகளூடாக பார்வையிடலாமென தமிழ் நெற் நிர்வாகம் அறிவித்துள்ளது. www. freeproxy.ca எனும் இணையத்தளத்திற்கு சென்று, பின்னர் அங்கு www. tamilnet . comஎன தட்டச்சு செய்வதன் மூலம் இலங்கையில் தமிழ் நெற் இணையத்தளத்தை பார்வையிட முடியும்.

3 மாதமாக உணவுமுத்திரை வழங்கப்படவில்லை வவுனியாவில் இடம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டம்
[21 - June - 2007]

வவுனியா கச்சேரி வளாகத்தினுள் நேற்று புதன்கிழமை நண்பகல் இடம் பெயர்ந்த மக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் முந்நூறுக்கும் மேற்பட்டோர் நண்பகலளவில் வவுனியா கச்சேரி வளாகத்தினுள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் உலருணவுக்கான உணவு முத்திரை கடந்த மூன்று மாதங்களாகியும் வழங்கப்படவில்லையெனக் கூறியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களையெழுப்பி கச்சேரிக்கு முன்பாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அப் பகுதியில் சில மணி நேரம் பதற்றம் நிலவியது.
இதேநேரம், இந்த உணவு முத்திரை விநியோகத்தில் கடந்த காலத்தில் பெரும் மோசடிகள் நடைபெற்றதாகவும் இதனைத் தடுக்கும் விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வழிசெய்வதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் சற்று தாமதமேற்படுவதாலேயே உணவு முத்திரைகளை உரிய நேரத்தில் விநியோகிக்க முடியாதிருப்பதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய நடைமுறைப்படி, உணவு முத்திரைக்குரியவர் குடும்ப அட்டை, அடையாள அட்டை அல்லது பொலிஸ் பதிவுடன் நேரில் வரவேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
*http://kirukkall.blogspot.com/

No comments: