வவுனியா பம்பை மடுவில் கடும் மோதல்
இலங்கையின் வடக்கே வவுனியா நகரை அண்மித்த பம்பைமடு பிரதேசத்திலும், அதற்கு அப்பால் வடமேற்கே உள்ள வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறக் கிராமப் பிரதேசங்களிலும் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றிரவு தொடக்கம் கடும் சமர் இடம்பெற்று வருவதாக இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - மன்னார் வீதியில் உள்ள பம்பைமடு இராணுவ தளத்தின் மீது நேற்றிரவு 9 மணிக்கு எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதல் நடத்தி உட்புகுவதற்கு மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகள் நிர்மூலமாக்கப்பட்டு பலத்த உயிர்ச்சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த மோதலின்போது, 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிக்குளம் பிரதேசத்திலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
வவுனியா பம்பைமடு இராணுவ பீரங்கி தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் விசேட தாக்குதல் அணியினர் நேற்றிரவு மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் படையினருக்கு பலத்த சேதம் ஏற்படுத்தி, ஆயுதத் தளபாடங்களையும் இராணுவ கவச வாகனங்களையும் தாங்கள் கைப்பற்றியுள்ளததாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
வவுனியா மன்னார் மாவட்டங்களின் எல்லைப்புறக் கிராமங்களாகிய விளாத்திக்குளம், பரிசங்குளம், முள்ளிக்குளம் ஆகிய கிராமப்பகுதிகளில் முன்னேறி முன்னரங்க நிலைகளை அமைத்திருந்த இராணுவுத்தினரைப் பின்வாங்கச் செய்து விடுதலைப் புலிகள் தமது முன்னரங்க நிலைகளைப் பலப்படுத்தியுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment