கடலில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளதாக இலங்கை கூறுகிறது
இலங்கை இந்திய கடற்படைகள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கூட்டு ரோந்துப் பாதுகாப்பு பணியிகளில் ஈடுபட இந்தியா தனது சம்மதத்தை தெரிவிக்க உறுதியளித்திருப்பதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு கூறியுள்ளது.
சிங்கப்பூரில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் பின்ணணியில், இலங்கை வெளிநாட்டமைச்சர் போகித்த போகல்லாகம தலைமையிலான இலங்கையின் உயர் பாதுகாப்பு குழு ஒன்று, இன்று இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏகே அந்தோணி தலைமையிலான உயர்குழுவுடன் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே, இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு ரோந்து நடவடிக்கையின் ஏற்பாடுகள் குறித்து விரைவில் இருத்தரப்பும் சந்தித்து முடிவு செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்றைய சந்திப்பின் போது, சமீபத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய வான் வழித்தாக்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும், இலங்கையின் வான் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்த இந்தியா மேலும் உதவிகளை வழங்கும் என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏகே அந்தோணி உறுதி கூறியதாகவும் இலங்கை வெளிநாட்டு அமைச்சின் அறிக்கை கூறுகிறது.
இலங்கையில் தொடரும் ஆட்கடத்தல்கள்
இலங்கையின் தலைநகர் கொழும்பில், மருதானை பகுதியில் நேற்று வெள்ளிகிழமை இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்.
தமது கடைகளுக்காக பொருட்களை வாங்கச் சென்ற காதர் பக்கீர் நௌபர் மற்றும் முகமட் சதாத் ஆகிய இருவருமே இனந்தெரியாத நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்களது உறவினர்கள் பொலிஸாரிடமும், காணாமல் போனோரைத் தேடியறியும் குழுவினரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர்களை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியே சிவில் உடையில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவர்களைக் கடத்தியதாக காணாமல் போனோரைக் கண்டறியும் குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
இலங்கையின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்ல கனரக வாகனங்களுக்கு தடை
கனரக வாகனங்கள்
இலங்கையின் வடக்கே வவுனியாவில் இருந்து தெற்கு நோக்கி பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக் வண்டிகளின் போக்குவரத்திற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்..
வவுனியாவிலிருந்து கொழும்பிற்கும் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஏனைய பிரதேசங்களுக்;கும் விவசாயம் மற்றும் மீன் உற்பத்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக் வண்டிகள் அனைத்தும் வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வாகன சோதனை நிலையத்தில் முழுமையாகச் சோதனையிடப்பட்டு, பிரயாண அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தச் சோதனைச்சாவடியில் தென்பகுதி நோக்கிச் செல்லும் ட்ரக் வண்டிகளுக்கு பிரயாண அனுமதி வழங்க வேண்டாம் என மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவையடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
வடக்கிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் ட்ரக் வண்டியொன்று நேற்று குருணாகலை நிக்கவரெட்டிய பிரதேச வீதிச்சோதனை நிலையம் ஒன்றில் பெருந்தொகையான சி-4 வெடிப்பொருட்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பயணிகள் போக்குவரத்துக்களில் எதுவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment