Tuesday, 5 June 2007

இலங்கைச்செய்திகள்

சிறுபான்மைக் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தேர்தல் மறுசீரமைப்பு அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

[05 - June - 2007] ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று செவ்வாய்க்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்திலிருந்து அகற்றுவதற்கான சதியே இதுவென இவ்வறிக்கையை சிறுபான்மை கட்சிகள் விமர்சித்துள்ள நிலையிலேயே தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான அறிக்கை சபைக்கு வருகிறது.
தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிக்கையை சபையில் சமர்ப்பித்து விஷேட உரையாற்றவுள்ளார். இதனை பாராளுமன்ற வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
எனினும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையை இன்று சபையில் சமர்ப்பிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கமுடியாதெனக் கூறினார்.
அத்துடன் கடந்த வியாழக்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன இணைந்து சமர்ப்பித்த யோசனைகள் தேர்தல் மறுசீரமைப்பு உத்தேச மறுசீரமைப்பு அறிக்கையில் உள்ளடங்கியுள்ளதாவென்பதற்கும் அவர் கருத்துக் கூற மறுத்தார்.
தேர்தல் மறுசீரமைப்பினை ஐ.தே.க, ஜே.வி.பி உட்பட மற்றும் பல கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ள நிலையில் தினேஷ் குணவர்தனா தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையை இன்று சபையில் சமர்ப்பித்தால் அதற்கு எதிராக ஏனைய கட்சிகள் மாற்றுக் கருத்துகளை தெரிவிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.



அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்படிக்கை இன்று சபை ஒத்திவைப்பு வேளை விவாதம்

[05 - June - 2007] ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்

இலங்கை - அமெரிக்கா பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இலங்கை மற்றும் அமெரிக்க நாடுகளிடையே அண்மையில் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் குறித்து விவாதத்துக்கான முன்னறிவித்தலை ஜே.வி.பி. சபாநாயகரிடம் கோரியிருந்தது.
இதற்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார அனுமதியளித்திருந்தார். இதனையடுத்தே பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்று நடைபெறவுள்ளது.
இதேவேளை, நாளை புதன்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
இவ்விவாதத்தின் போது புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தாரென குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் விமான நிலைய சிவில் விமானத்துறை தலைவர் டிரான் அலஸ் குறித்து ஐ.தே.க. சர்ச்சை கிளப்பவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதமகொரடா ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
இதேவேளை, நாளை மறுதினம் வியாழக்கிழமை அரச கருமமொழிகள் நிறுவகம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நாட்டில் தொழிலின்றி 20 ஆயிரம் பட்டதாரிகள் உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை
நாளை வலியுறுத்தல் விடுத்து ஆர்ப்பாட்டம்
ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்

இலங்கையில் 20 ஆயிரம் பட்டதாரிகள் வேலையற்று இருப்பதாக தெரிவித்துள்ள வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நாளை புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தப்போவதாகவும் தெரிவித்தது.
இதுபற்றி வேலையற்றோர் பட்டதாரிகள் ஒன்றிய பிரதான இணைப்பாளர் சுஜீவ குருவிட்ட கூறுகையில்;
"வேலையற்ற பட்டதாரிகள் 20 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நாளை புதன்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளோம்.
கடந்த சில தினங்களாக வேலையற்ற பட்டதாரிகள் மாகாண ரீதியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்த நிலையில் நாளை கொழும்பில் கூடி தமக்கு உடனடியாக வேலை வழங்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது மகிந்த சிந்தனையில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படுமெனக் கூறியிருந்தார். ஆனால், அவர் பதவிக்கு வந்து இதுகாலவரை 1500 பட்டதாரிகளுக்கு மாத்திரமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுமென்றும், 2007 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் 8 ஆயிரம் ரூபா வழங்கப்படுமென்றும் கூறப்பட்டது. ஆனால், இவ்வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அரசாங்கத்துறையில் 9 ஆயிரத்து 500 பட்டதாரிகளுக்கான வெற்றிடம் நிலவுவதாக அண்மையில் பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியிருந்தார்.
எனவே, வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை வாய்ப்பை அரசாங்கத் துறையிலும் தனியார் துறையிலும் வழங்குமாறு நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். இதற்கான பொறுப்பை அவரே ஏற்க வேண்டும்.
பாடசாலைகளில் 13 வருடங்களும் பல்கலைக்கழகத்தில் 4 வருடங்களும் கற்று பட்டம்பெறும் ஒருவர் வேலை வாய்ப்பை பெறத் திண்டாடுவது மிகவும் துர்ப்பாக்கிய நிலையாகும்.
அரசாங்கமானது உடனடியாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலையினை வழங்க முன்வர வேண்டு"மென்றார்.
நன்றி: தினக்குரல்

No comments: