''சமாதான வழிமுறை ஒன்றினூடாக அமைதி வழியில் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம் என்று ஐந்து ஆண்டுகள் நாம் பொறுமையுடன் கடைப்பிடித்து வந்த சமாதான முன்னெடுப்புகளை இன்று ஷ்ரீலங்காவின் அரச பயங்கரவாதம் விழுங்கி ஏப்பமிட்டு நிற்கின்றது. அதன் சுவடுகள் தமிழ் மக்களின் குருதி கொண்டே கழுவித் துடைக்கப்பட்டுவிட்டன.''
தமிழ்ச்செல்வன்
தேசத்தின் விடுதலைக்காக உலக அரங்கில் எழுந்து வரும் உரிமைக் குரல் தமிழ் மக்களுக்கு தெம்பையும் திடத்தையும் கொடுத்து வருவதாக விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். சுவிஸில் திங்கட்கிழமை இடம்பெற்ற `வெல்க தமிழ்' பேரணிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது;
"தேச விடுதலைப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்கும் தேசப்பற்றானது காலத்திற்கும் இடத்திற்கும் அப்பால் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் ஆட்கொண்டு நிற்கும் ஒரு அபூர்வமான சக்தி" என்ற எமது தலைவரின் எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதுபோல தாயக தேசத்தின் மீதான பற்றுதலை மனதிலே தாங்கிக்கொண்டு அதனது விடிவிற்காக அயராது உழைக்கின்ற எம் உறவுகளுக்கு வணக்கங்கள். `வெல்க தமிழ்' என்னும் எழுச்சிப் பேரணியில் பங்குகொண்டு தாயக பாசத்துடன் தேசத்தின் விடுதலைக்காக, உலக அரங்கில் நீங்கள் எழுப்பிவரும் உரிமைக்குரல் ஒடுக்கப்பட்டு வரும் எமது மக்களிற்கு தெம்பையும் திடத்தையும் கொடுத்து நிற்கின்றது. எமது தலைமைக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த உலகத்தில் நாம் தனித்து நிற்கவில்லை என்ற தன்னம்பிக்கையையும் எமக்குத் தருகின்றது.
உலகிலேயே எந்த இனத்திற்குமில்லாத எந்த இனமுமே சம்பாதித்திராத அரும்பெரும் சொத்தாகிய உங்களின் பேராதரவும், தீராத விடுதலை முனைப்புமே இன்று தாயகத்தில் பெரும் வெற்றிகளை குவித்து தமிழினத்தை வீறுநடைபோட வைத்திருக்கின்றது என்பதனை யாருமே மறுத்துவிட முடியாது. தாயகத்திலிருந்து வெகு தொலைவு சென்ற துயரம் மனதை அடைக்கின்றபோதும் தாங்க முடியாத கலாசார பண்பாட்டுச் சுமைகளை ஒரு தோளிலும், தாயகத்தின் உறவுகளின் வாழ்வாதாரத்தை மறு தோளிலுமாகச் சுமந்துகொண்டு மண்ணின் விடுதலை நோக்கி உங்களது தார்மீக ஆதரவை நல்கும் அரும்பணி காலத்தால் நினைவு கூரப்படும். தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றபோதெல்லாம் பொங்கியெழுந்து உலக மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டி நியாயம் கேட்கும் உங்கள் தாயகப் பற்றை மெச்சுகின்றோம்.
சமாதான வழிமுறை ஒன்றினூடாக அமைதி வழியில் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம் என்று ஐந்து ஆண்டுகள் நாம் பொறுமையுடன் கடைப்பிடித்து வந்த சமாதான முன்னெடுப்புகளை இன்று ஷ்ரீலங்காவின் அரச பயங்கரவாதம் விழுங்கி ஏப்பமிட்டு நிற்கின்றது. அதன் சுவடுகள் தமிழ் மக்களின் குருதி கொண்டே கழுவித் துடைக்கப்பட்டுவிட்டன. பயங்கரவாத அரசு முன்னெடுத்த மூர்க்கத்தனமான போர் தமிழ் மக்கள் வாழ்வில் சொல்லொணாத் துயரங்களை விதைத்துவிட்டது.
தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள், எறிகணை வீச்சுகள், விமானக் குண்டு வீச்சுகள் என்பவற்றால் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள், குழந்தைகள், பெண்கள் என்ற வேறுபாடின்றிக் கொல்லப்பட்டார்கள். பல இலட்சக்கணக்கான மக்கள் தமது சொந்த நிலங்களை விட்டு இடம்பெயர்ந்து இன்றும் அகதி முகாம்களில் ஒருவேளை உணவுகூட கிடைக்காதா என ஏங்கித் தவிக்கின்றார்கள்.
எமது மக்களின் இத்தகைய அவல நிலைகளைப் போக்க நாமும் ஓர் தற்காப்பு யுத்தத்தில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டோம். எமது பதில் நடவடிக்கைகள் மூலம் மக்களை ஆக்கிரமிக்க முயலும் இராணுவத்தைத் தடுத்து நிறுத்தவும் அவர்களின் இராணுவ வலிமையை சிதறடிக்கவும் தொடங்கினோம். இந்த நிலையில் எமது பலமான எதிர்த் தாக்குதல்களினால் எதிரிகள் பாரிய பின்னடைவுகளைச் சந்திக்கத் தொடங்கினார்கள். இராணுவ முன்னரங்குகளில் ஏற்பட்ட பாரிய தோல்விகளும், எமது தந்திரோபாயத் தாக்குதல்களினால் ஏற்பட்ட பாரிய பொருளாதார அழிவுகளும் ஷ்ரீலங்கா அரசினை ஆட்டங்காண வைத்தது. இதனால் செய்வதறியாது திகைத்த ஆளும் வர்க்கம் தமிழ் மக்களின் தேச மீட்பு நோக்கிய முன்னெடுப்புகளை முறியடிப்பதற்காக சர்வதேச அளவில் எமது போராட்டத்தை நசுக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியது.
அரசு எமது விடுதலைப் போராட்ட அமைப்பிற்கு பயங்கரவாத முத்திரை குத்தி அதன் வாயிலாக சர்வதேச நாடுகளின் உதவியினை எமக்கெதிராக ஒன்றுதிரட்டி எம்மை அழித்துவிடலாம் எனக் கனவு காண்கிறது. அத்துடன் தமிழ் மக்களை இலங்கைத் தீவிலிருந்து முற்றாக அழித்தொழிக்கும் நோக்கிலான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளிலும் இறங்கிவிட்டது. இதன் ஒரு கட்டமே அண்மையில் கொழும்பிலிருந்து தமிழர்களைத் துரத்திய நிகழ்வு. அத்துடன் அரச படைகள் நாளுக்கு நாள் தமிழ் மக்களை படுகொலை செய்து தெருக்களிலும் ஆறுகளிலும் வீசி வருகின்றன. இவையனைத்தையும் பார்த்துக்கொண்டும் சர்வதேச சமூகம் மௌனித்திருக்கின்றது.
தனியரசை நிறுவும் பயணத்தை வேகமாக முன்னெடுப்போம் என உறுதி எடுத்துக்கொண்ட எமது தேசியத் தலைமையும், போராளிகளும் மக்களும் தாயகத்திலே என்றைக்குமே இல்லாதவாறு ஒன்றுதிரண்டு நிற்கின்றனர். எதிரியின் இராணுவ முனைப்புகளை முறியடித்து அவர்களை எமது தாயகத்திலிருந்து முற்றாக வெளியேற்றி விடுவது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதற்கான தந்திரோபாயங்களை வகுத்து தக்க நேரத்தில் நகர்வுகளை மேற்கொள்ளவல்ல தலைமையும், தரை- கடல்- வான் என எங்கும் எதையும் செய்து முடிக்கும் வல்லமை கொண்ட அர்ப்பணிப்பு மிக்க முப்படையையும் கொண்ட தமிழர் படையை எந்த ஆக்கிரமிப்பு சக்திகளாலும் அழித்துவிடமுடியாது. சர்வதேச அளவில் இத்தகைய போரினை எதிர்கொள்வதற்கு உங்களது அயராத உழைப்பும் தாயகம் மீதான நேசிப்புமே அவசியமாகும். தமிழர் பரந்து வாழும் நாடுகள் எங்கிலுமாக எமது எதிர்கால சந்ததிக்கு போராட்டத்தின் தேவை பற்றியும் அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் இன்றைய நிலை தொடர்பாகவும் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஒவ்வொரு தமிழ் பிரஜைகளும் செயற்படவேண்டும். எதிரி எமக்கெதிராக அந்தந்த நாடுகளில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை எமது ஒட்டுமொத்த ஜனநாயக பலத்தையும் கொண்டு எதிர்த்து முறியடிப்போம் என உறுதியெடுத்துக்கொள்வோம்.
உலகின் எந்தப் பகுதியில் எந்தச் சூழலில் எந்தத் தகுதியுடன் நீங்கள் வாழ்ந்தாலும், தமிழீழத்தில்தான் அந்த தாயக பூமியில்தான் உங்களது வேர் ஆழப்புதைந்து கிடக்கின்றது. இந்த மண்ணில்தான் உங்களது இனத்தனித்துவத்தின் அடையாளம் பதிந்து கிடக்கின்றது. இந்த மண் உங்களது இரத்தத்தோடும் ஆன்மாவோடும் உங்களது வரலாற்றோடும் ஒன்று கலந்து கிடக்கின்றது என்கிறார் எமது தலைவர்.
இத்தாயக தேசம் எதிரியின் ஆதிக்கப்பிடிக்குள் சிக்கி அழிந்து போகாது பாதுகாப்பதில் உங்களுக்கும் உயரிய பொறுப்பிருக்கின்றது. உலகத் தமிழரின் ஒருமித்த குரலும் உறுதியான முன்னெடுப்புகளுமே எமது வெற்றிக்கு வழிவகுக்கும். எமக்குச் சிறந்த உதாரணமாக உலகிலேயே தமக்கென்று ஓரடி நிலம் கூட இல்லாது அடிமைப்படுத்தப்பட்டு கொன்றழிக்கப்பட இருந்த யூதர்களை எடுத்துக்கொள்ளலாம். பெரும் இன அழிப்புக்கு முகங்கொடுத்து அதிலிருந்து மீண்டு சர்வதேச நாடுகள் பலவற்றின் அழுத்தங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அவர்கள் போராடத் தொடங்கினர். அவர்கள் உறுதியோடு போராடினார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. எதிர்ப்புகளுக்கு முகம்கொடுத்த போதெல்லாம் அவர்கள் தேசம் மீதான நம்பிக்கை இன்னும் இன்னும் அதிகரித்தது. வரித்துக் கொண்ட இலட்சியத்தில் அவர்களுக்கு இருந்த பற்றும் தாயகம் மீதான அவர்களது கனவுமே இறுதியில் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தது
எவருமே தீண்டுவாரற்று இருந்த ஓர் இனம் இன்று எவராலுமே சீண்ட முடியாத அளவிற்கு தன்னை வளர்த்து நிற்கிறது.
இதுபோலவே தமிழினமும் மாற்றார் எவரின் உதவியுமின்றிப் போராடி தமது தாயகத்தை மீட்கும் அளவிற்கு எமது பலத்தையும் வளத்தையும் நுட்பமாகப் பயன்படுத்தி எமது பலம் சிதைந்து போகாமல் சாதுரியமாகப் போரிட்டு எதிரிக்குப் பெரும் சவாலாக எழுந்து நிற்கின்றது. எமது சொந்தத் தாயகத்திலேயே அடக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்டு அங்கிருந்து துரத்தப்பட்டவர்கள் நாங்கள். ஆனால், அந்த வரலாற்றை மறந்து அந்நியரிடம் மண்டியிட்டு வாழாது விடுதலைப் போர் ஒன்றை முன்னெடுத்து அதனை முப்படைப் பலம் கொண்ட பெரும் மரபு வழி இராணுவமாக கட்டிவளர்த்து அதன் மூலமாக இழந்த நிலங்களை மீட்டு அங்கு நடைமுறை அரசொன்றை செயற்படுத்தும் அளவிற்கு நாம் வந்துவிட்டோம். எமது தாயகத்தில் விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் இந்நிலையில் நாம் சர்வதேச அளவில் எதிர்கொண்டு நிற்கும் பிரசாரப் போரினையும் முறியடிக்க நம்பிக்கையோடு இருக்கவேண்டும்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அவர்களின் தாயகத்தை மீட்பதற்கும் அங்கு எவரது தலையீடும் இன்றி சுதந்திரமாகவும் கௌரவமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கும் ஆனதே. தவிர வேறு எந்தத் தேசியத்தவரையும் இடையூறு செய்வதையோ அவர்களைக் கோபமூட்டுவதையோ நாம் முற்றாக வெறுக்கின்றோம். இலங்கை அரசு புலம்பெயர் நாடுகளில் புதிதான பல சட்டங்களின் மூலம் எமது நடவடிக்கைகளை முறியடிக்கும் சதியினை முன்னெடுத்து வருகின்றது. நாம் எமது ஒருங்கிணைந்த ஆதரவையும் எமது தேசத்திற்கான வேண்டுதலையும் வெளிப்படுத்துவதற்கு யாரையும் குறுக்கிடத் தேவையில்லை. சர்வதேச அளவில் எமது எதிரியை எதிர்கொள்ள நாம் ஜனநாயக ரீதியிலான முன்னெடுப்புகளையே முன்னெடுத்து வருகின்றோம். அத்தகைய முயற்சிகளுக்கு எந்த ஜனநாயக நாடும் முட்டுக்கட்டை போட இயலாது.
எமது மக்கள் தாயகத்தில் அனுபவிக்கும் பெரும் மனித அவலங்களை சர்வதேசம் எங்கும் வெளிப்படுத்துவோம். இலங்கை அரசின் அரச பயங்கரவாதத்தையும் அதன் உண்மைக்கு மாறான பிரசாரத்தையும் முறியடித்து எமது விடுதலையை மிக விரைவில் வென்றெடுப்பதற்காக எமது தலைவரின் கீழ் ஒன்றாக அணிதிரள்வோம்.
வீரகேசரி 14-06-2007
No comments:
Post a Comment