திருமலை துறைமுகம் யார் வசமோ அவர்கள் பக்கம் சாயப்போகும் சர்வதேசம்
புரட்சி
Saturday, 06 January 2007
இலங்கையின் இனப்பிரச்சினை இப்போது தீர்ந்து விடாது என்ற கருத்து வலுப்பெற்றுள்ள இத்தருணத்தில் கூடவே பாரிய முழுமையான யுத்தத்திற்கான அறிகுறிகளும் வெகுவாக தோற்றம் பெற்று நிற்கின்றது. சமாதானத்திற்கான அறிகுறிகள் தொலைதூரம் சென்றுகொண்டிருக்கும் இவ்வேளை சர்வதேசமும் அப்படியே செல்வதாகவே உணரப்படுகின்றது.
ஏனெனில் இன்றைய சூழலில் நடைபெறும் யுத்த நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் எத்தனையோ மடங்கு சிறியதான அசம்பாவிதங்கள் நடைபெறுகையில் அழுத்தங்களை அழுத்தமாக தெரிவித்த சர்வதேசம் இப்போது அழுத்தங்களை ஊடகங்களுக்கேனும் கொடுப்பது இல்லை.
ஒரு துப்பாக்கி ரவை சுடப்பட்டால் அதனை யுத்தநிறுத்த மீறலாக பதிவு செய்து அறிக்கைகளை வெளியிடும் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு ஆட்லறிகளும் ஆகாய விமானங்களும் அடிக்கடி எச்சமிடுவதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்பது நிலமையை ஊர்ந்து கவனிக்கும் யாவர்க்கும் தெரிகின்றது.
ஐக்கிய நாடுகள் சபை கூட தன் பார்வையை வேறு பக்கம் பார்ப்பது போல இருக்கிறது. இப்போது ஐக்கிய நாடுகள் சபை அதிகமாக ஈரான்அணு விவகாரம் இஸ்ரேல் லெபனான் பிரச்சினை சூடான் விவகாரம் போன்றவை அவர்களின் பெரிய பிரச்சினைகளாக தெரியத்தொடங்கி விட்டன.
இந்த சந்தர்ப்பத்தில் தெளிவான ஒரு பார்வை யாவர்க்கும் வேண்டும். ஓன்று அதாவது சர்வதேச சமூகம்(குறிப்பாக வலிமை வாய்ந்த சமூகம்) இனப்பிரச்சினை விடயத்தில் மட்டுமே விலகி நிற்கின்றது. அல்லது தலையீடுகளை பெருமளவில் குறைத்து நிற்கின்றது.
இரண்டு வலிமை வாய்ந்த சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. அல்லது அவர்களுடனான தொடர்புகளை தவிர்த்துக்கொண்டுள்ளது.
மறுபுறமாக உற்று நோக்கினால் சர்வதேச சமூகம் இறைமையுள்ள இலங்கை அரசுடன் அல்லது உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை தேசத்துடன் தம் கரங்களை மேலும் மேலும் இறுகப் பற்றியே பிடித்துள்ளது. தெளிவாகச் சொல்வதானால் இறைமையுள்ள இலங்கை அரசுடன் வர்த்தக இபொருளாதார முதலீடு சம்மந்தமானஇ பாதுகாப்பு தொடர்பான அனைத்து விடயங்களையும் இந்த சர்வதேச சமூகம் மேற்கொண்டே வருகிறது.
சர்வதேசத்தின் பார்வை இலங்கையிலிருந்து பெருமளவில் விலகி விட்டது என்று அரசியல் சாணக்கியம் மிக்கவர்கள் கூறுகின்ற பொழுது அதனை பலரும் இருதரப்பிற்கும் சமமான விளைவுகளை காட்டும் கருத்தாக உற்று நோக்கக்கூடாது.
இந்தக் கருத்திற்கு அமைவாக சர்வதேசம் செல்லுமாக இருந்தால் அது ஒருதரப்பை சர்வதேசம் தவிர்த்து விடுகின்றது என்றே அர்த்தப்படும். தமிழர் தரப்பு அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளே இந்த தவிர்க்கப்படும் தரப்பாகும். உதாரணமாக அவுஸ்திரேலிய அரசு இலங்கை இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தனது ஈடுபாட்டை செலுத்துவது இல்லை என்றே கூறலாம். இதனால் நட்டமடைவது யார்? அவுஸ்ரேலிய அரசோ இலங்கை அரசாங்கமோ அல்ல. ஏனெனில் இரண்டு அரசுகளுக்குமிடையே அனைத்து உறவுகளும் சுமூகமாக செயற்பாட்டு நிலையிலேNயு உள்ளன.
மறுபுறமாக பார்த்தால் இதிலே தமிழர் தரப்பு அல்லது விடுதலைப்புலிகளே தவிர்க்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட தரப்பாக உள்ளனர். இதே விடயம்தான் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை தடை செய்த பிறகும் நடைபெறுகிறது.
முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் விழுந்தாலும் சேலைக்கே பாதிப்பு என்பதைப்போலவே இந்த விடயத்தை பார்க்க வேண்டும். அதே பழமொழி பாணியில் சொல்வதானால் சேலை முள்ளிலும் வலு குன்றியதாய் உள்ளவரை சேலைக்கே பாதிப்பு தொடரும்.
இப்போது மிக முக்கியமான விடயத்தை பார்ப்போம். ஒரு கேள்வி தமிழர் தரப்ப நியாயங்களை சர்வதேச சமூகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லையா? புலிகளை ஏற்றுக்கொள்ளுமா? என்பதுததான் அந்தக் கேள்வி. தமிழர்கள் உட்பட பலரதும் கருத்து. சர்வதேசம் தமழர் தரப்பு நியாயங்களை புரிந்து கொள்ளவில்லை என்பதுதான்.
அதனால்தான் இந்த கணம் வரைக்கும் தமிழ் மக்களால் (விசேடமாக புலம்பெயர்ந்த மக்களால்) தமிழர் தரப்பு நியாயங்களை சர்வதேச அரசுகளுக்கு அழுத்திக்கூறும் அகிம்சா ரீதியிலான செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.
சர்வதேசமும் அவற்றை கேட்டுக்கொண்டே இருக்கின்றது. இன்னும் எவ்வளவு காலம் தமிழர்கள் தமது நியாயங்களை சொல்வார்கள். இவ்வளவு காலம் சொன்னதை விட வேறு ஏதும் விசேடமான நியாயங்கள் கூறுவதற்கு தமிழர்களிடம் என்ன இருக்கின்றது. எதையும் கூறாமல் விட்டு விட்டார்களா? இன்னுமொன்றை பாருங்கள்.
யாதேனும் ஓர் தமிழர் பகுதியில் ஒரு மோசான படுகொலை நடந்தால் அதனை அறிக்கையாக்கி சம்பவத்தின் புகைப்படங்களையும் இணைத்து மகஜர் வடிவாக அல்லது ஆர்ப்பாட்டம் செய்து சர்வதேச அரசுகளுக்கு தமிழர்கள் தெரியப்படுத்துகிறார்கள். எல்லா விடயமும் சர்வதேசத்திற்கு செல்கின்றது. ஆனால் உரிய பதில் இல்லை. தமிழர்கள் படுகொலை சம்பவத்தின் அறிக்கைகளை சர்வதேச சமூகத்திற்கு வழங்க முன்பே அதே படுகொலைக்காட்சிகளை அசையும் ஒளிப்படங்களாக (வீடியோக்காட்சிகள்) சர்வதேசம் தெளிவாகப்பார்த்து விடுகின்றது. தமிழர்கள் சொல்லித்தான் அவர்களுக்கு தெரியவேண்டும் என்பது இல்லை. நவீன உலகில் சர்வதேசம் கிணற்றுத்தவளைகள் அல்லர். அனைத்தையும் அறிந்தவர்கள் அவர்கள். சொல்லப்போனால் அவர்களுக்கு பலன் கிடைக்குமெனில் நஞ்சையும் உண்பார்கள். பலன் கிடைக்காது என்றால் அமுதையும். உண்ணமாட்டார்கள். இலங்கையின் வரலாறு இனப்பிரச்சினைக்கான காரணம். தமிழர்களின் ஆரம்ப போராட்டம் தமிழினம் திட்டமிட்டு ஒதுக்கப்பட்ட விதம் புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள். தமிழர்கள மோசமாக படுகொலை செய்யப்ட்டமை இ தமிழர் போராட்ட நியாயங்கள் யாவும் தெளிவாக சர்வதேசத்திற்குத் தெரியும். கூறப்போனால் இலங்கையில் இல்லாத பல ஆவணச்சான்றுகளை சர்வதேசத்திடம் கேட்டுப்பெறலாம். அந்த தேசஅரசுகளும் இதை நன்கறியும். இப்போது கேள்விகளையும் பதில்களையும் பாருங்கள்.
01. சர்வதேச சமூகம் இன்னும் தமிழர் தரப்பு நியாயங்களை புரிந்து கொள்ளவில்லையா?
புரிந்துகொண்டுள்ளது.
02. புலிகளின் போராட்ட நியாயங்கள் அவர்களுக்குப் புரிகிறதா? ஆம்
03. அப்படியானால் விடுதலைப்போராட்டத்தை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும் அப்படித்தானே? இல்லை
04. ஏன்?அவர்களுக்கு பலன் கிடைக்குமெனில் நஞ்சையும் உண்பார்கள். பலன் கிடைக்காது என்றால் அமுதையம் உண்ணமாட்டார்கள்.
05. முடிவுதான் என்ன? • கனியிருக்கம் மரத்தை காணவரும் பறவைகள்• வலியவர்களே வாழ்வார்கள்.
இன்றைய உலகில் பொதுவாக ஒரு தனி மனிதன் கூட சுயநலமாகவே வாழ்கிறான். ஏதோ ஒன்று கிடைக்கும் என்றால் தனக்கு எதிரானவர்களோடு சேர்ந்து விடுகிறான். பலன் இல்லை என்றால் தன் நண்பனை கூட ஒதுக்கி விடுகின்றான். பொய்சாட்சி கூட சொல்கிறான். இதே விடயத்தை சர்வதேச நாட்டு விடயத்தில் பார்த்தால் சரி. சாவதேச சமூகம் புலிகள் வலியவர்கள் என்பதையும் அவர்கள் தோற்று விடமாட்டார்கள் என்பதையும் உறுதியாக எப்பொழுது நம்புகிறதோ அப்பொழுதே வலிய நாடுகள் புலிகளின் தடைகளை நீக்கும். இன்று புலிகளுக்கு வெளிப்டையான ஆதரவைத் தெரிவித்து விட்டு நாளை புலிகள் தோற்கடிக்கப்பட்டால் இலங்கையுடன் எப்படி முகம் கொடுப்பது என்கின்ற சங்கடமான நிலை சர்வதேசத்திடம் காணப்படுகின்றது. அரசபடுகொலைகளை தெளிவாகக் கண்டும் அரசிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குவதற்கும் இதை ஒரு காரணமாகக் கூறலாம். இது தவிர கொழும்பில் இனவாதிகளின் எதிர்ப்பு தமது தூதரகங்கள் மீது பாய்ந்து விடும் என்ற பயமும் சர்வதேசத்திற்கு இல்லாமல் இல்லை.
சர்வதேசத்தை பொறுத்தவரை இலங்கையின் வரைபடத்திலே அவர்களுக்கு திருக்கோணமலைமீதே துல்லியமான பார்வை உண்டு. திருமலைத் துறைமுகத்தை நினைத்தாலே அவர்களுக்கு நா ஊறும் . பல வலுமிக்க நாடுகள் இதற்குள் மூக்கை நுழைக்க ஏற்ற வழிகளை கைக்கொண்டுள்ளன. கைக்கொண்டும் வருகின்றன. பிரீமாஆலை இ எண்ணெய்குதம். இ சீமேந்து ஆலை என அவை நீண்டு செல்கின்றது. இது தவிர உலகின் ஒரு சிறப்பான கனிப்பொருள் படிமமாகிய இல்மனைற் இங்கு விளைவது இன்னும் இதன் முக்கியத்துவத்தை உயர்த்துகின்றது.
இது தவிர திருமலை துறைமுகத்தின் இயற்கையான அமைப்பு சர்வதேசத்தை ஈர்த்த ஒன்று. ஏதோ ஒரு காலத்தில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் போர் மூண்டால் துறைமுகத்தை ஆளுகைப்டுத்தும் தரப்பின் கை மேலோங்கி நிற்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இலங்கையின் எந்த மாவட்டத்திற்கும் இல்லாத சிறப்பும் முக்கியத்துவமும் திருகோணமலைக்கு உண்டு. பாரிய கப்பல்களுக்கு இயற்கை அரணும் இதுதான். இப்படியான திருக்கோணமலைத் துறைமுகம் அல்லது திருக்கோணமலை மாவட்டம் வடகிழக்கின் ஏனைய ஏழு மாவட்டங்களையும் ஒன்று சேர்த்தால் கூட உயர்ந்த ஸ்தானத்திலேயே இருக்கும். சொல்லப்போனால் வலிய ஒரு சர்வதேச நாட்டிடம் கேளுங்கள் உங்களுக்கு வடகிழக்கில் ஏழு மாவட்டங்கள் வேண்டுமா? அல்லது திருகோணமலை மட்டும் வேண்டுமா? ஏன்று. நிச்சயமாக திருகோணமலையையே கேட்பார்கள். இப்படியான திருகோணமலை இன்று யார் வசம் உண்டு? அவர் வசமே சர்வதேசம் உண்டு.
நான்காம் கட்ட ஈழப்போர் முழு அளவில் மூளாவிட்டாலும் எப்போதாவது பெரும் போர் வெடிக்கையில் திருமலைத்தறைமுகம் போரின் முதற்தர மையமாக விளங்கும் என்பது உண்மை. இரண்டு தரப்புக்களும் இதன் முக்கியத்துவத்தை தெளிவாக விளங்கி வைத்துள்ளன.
புலிகள் துறைமுகத்தை கைப்பற்றவும் இலங்கை படைகள் துறைமுகத்தை பாதகாக்கவும் தீவிரமான ஈடுபாட்டை காட்டுவர். இதில் யாருடைய கை மேலோங்கும் என்பது அப்போதே தெரியும். இதில் முக்கியமான இன்னொரு விடயம் சம்பூரை படைகள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் துறைமுகத்தின் மீதான புலிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என நினைப்பது தவறு. சம்பூரை மீட்டுத்தான் துறைமுகத்தை கைப்பற்ற முடியும் என புலிகளும் எண்ணுவதற்கு வாய்ப்பில்லை. எது எப்படி இருப்பினும் எப்போதாவது பெரும் போர் மையம் கொள்ளும் போது திருக்கோணமலை துறைமுகம் யார் வசம் இருக்கிறதோ அவர்கள் பக்கம் சர்வதேச சமூகம் சாய்ந்து நிற்கும் என்பது மட்டும் வெள்ளிடைமலை.
ஈழநாதம்: மட்டக்களப்பு பதிப்பு
No comments:
Post a Comment