Friday, 8 June 2007

கிழக்கு எவ்வாறு மீட்கப்பட்டதோ வடக்கும் அவ்வாறே மீட்கப்படும்- முப்படைத்தளபதி

வீரகேசரி நாளேடு 08-06-07

வடக்கு மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. கிழக்கு வாழ் மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமை எவ்வாறு பெற்றுக்கொடுக்கப்பட்டதோ, அவ்வாறே வடக்கு வாழ் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்குரிய உரிமையும் பெற்றுக்கொடுக்கப்படும். பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தõர்.

மக்களுக்கு சிறந்த எதிர்காலம் ஏற்படுத்தப்பட வேண்டும். யுத்தம் அரசியல் நோக்குடனோ, அரசியல் இலாபம் கருதியோ முன்னெடுக்கப்படவில்லை. நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அனைத்துப் பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைமூலம் தீர்த்துக்கொள்ள முடியும். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. நேர்மையான பேச்சுவார்த்தைக்கு நாம் எப்போதும் தயார். ஆனால், பயங்கரவாதம் வளர்வதற்கும் அதற்கான நடைமுறைகள் செயற்பாடுகள் கட்டியெழுப்பப்படுவற்கும் எம்மால் இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறினார். நாட்டுக்காக உயிர்நீத்த முப்படைவீரர்களை நினைவுகூரும் தேசிய தினம் கண்டி, மயிலப்பிட்டியவில் அமைந்துள்ள இராணுவப் பூங்காவில் நேற்று மாலை அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முப்படைகளின் தளபதிகள், மாகாண ஆளுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் கூறுகையில், எமது நோக்கம் என்ன? என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. அதற்காக நாம் பாரிய முயற்சிகளை முன்னெடுத்துவருகிறோம். கிழக்கு எவ்வாறு மீட்கப்பட்டதோ, அவ்வாறே வடக்கும் மீட்கப்படும். பயங்கரவாதத்தை தோற்கடிக்க நாம் முழு முயற்சிகளை மேற்கொள்வோம்.

பயங்கரவாதம் வளர்வதற்கு இடமளிக்க முடியாது. பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் முப்படையினர் பாரிய பங்களிப்பு செய்கின்றனர். இந்த நாட்டை பாதுகாத்து, பிரிவினைவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாடு இரண்டாகப் பிரிவதை தடுக்க நாம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். போலியான உடன்படிக்கைகளை நாம் கைச்சாத்திடமாட்டோம். அதற்கான தேவையும் எமக்கில்லை.

No comments: