சமாதான முயற்சியில் அதிக பங்கு வகிக்குமாறு
இந்தியாவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார்!
பஸில் தலைமையில் புதுடில்லிக்கு தூதுக்குழு
விரையும்!
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நோர்வே, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் அதிக பங்கு வகிக்குமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டுக்கு உத்தியோக பூர்வ அழைப்பு விடுப்பதற்கு முடிவு செய்துள்ளார் என்று அறியப்படுகிறது. அதன் பொருட்டு, ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு ஒன்று இன்னும் சில நாள்களில் புதுடில்லிக்கு விரையவுள்ளது. மாவிலாறு இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் 26ஆம் திகதி ஒரு வருடம் பூர்த்தியாகிறது. அன்றைய தினம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார்.அந்த வகையில், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சமாதானப் பேச்சை ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் விருப்பத்தையும், திட்டத்தையும் அவர் உத்தியோகபூர்வமாக வெளியிடுவார்.அதற்கு முன்னர், சமாதான முயற்சிக்கு அதிக அள வில் தீவிரமாக உதவுவதற்கான இந்தியாவின் சம்மதத்தையும் பெற்று அதனையும் தமது விசேட உரையில் வெளி யிட ஜனாதிபதி விரும்புவதாகச் சொல்லப்படுகிறது.இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா பெரும் பங்காற்ற வேண்டும் உதவ வேண்டும் என்பதில் ஜனாதிபதி வெகு அக்கறையாக உள்ளதாக உயர் அரச வட்டாரங்கள் தெரிவித்தன. நோர்வே அமைச்சர் சொல்ஹெய்மை கடந்த மாதம் 15ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் ஸ்தாபன உச்சி மாநாட்டின் போது சந்தித்துப் பேசிய வேளை கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் விடுதலைப் புலிகளிடம் இருந்து முற்றாக மீட்டு முடிந்ததும், சமாதானப் பேச்சுக்களை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சொல்ஹெய்ம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். நோர்வேத் தூதுக்குழு ஒன்றும் கிளிநொச்சிக்குச் சென்று, விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சு வார்த்தை மேசைக்குத் திரும்புமாறு கேட்க உள்ளதாகவும் அறியப்படுகிறது.
No comments:
Post a Comment