Tuesday, 24 July 2007

ஈழச்செய்திகள்:240707

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எதிர்வரும் செப்டெம்பரில் அமுலுக்கு வருவதற்கான சாத்தியம்
[23 - July - 2007] தினக்குரல்

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் கடந்த 4 நாட்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் ஒப்பந்தத்தினை அமுல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவின் அணு சக்தி தேவைக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும். அதேநேரத்தில், இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட சில அணு உலைகளை சர்வதேச சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
எனவே, அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்துக்கு இந்திய அரசியல் தலைவர்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதற்கிடையே அமெரிக்கா செய்து கொள்ளும் எந்தவொரு ஒப்பந்தமாக இருந்தாலும் அந்த நாட்டு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டம் ஆகும். இதன் காரணமாக இந்த ஒப்பந்தமும் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டபோது சில திருத்தங்கள் செய்யப்பட்டன.
இதனால் அணுசக்தி ஒப்பந்தம் அமுலுக்கு வருவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது. எனினும் தனது பதவிக் காலம் முடிவதற்குள் ஒப்பந்தத்தை செயற்படுத்துவதில் ஜனாதிபதி புஷ் தீவிரமாக இருக்கிறார். அவரது பதவிக் காலம் இன்னும் 18 மாதங்களே உள்ளன. இதையடுத்து இரு நாட்டு உயர் அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.
இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலேசகர் எம்.கே.நாராயணன் உட்பட இந்திய அதிகாரிகள் அமெரிக்கா சென்று அமெரிக்க வெளியுறவு இணை மந்திரி நிக்கோலஸ் பெர்ன்ஸ் உடன் கடந்த 17 ஆம் திகதி முதல் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.
எதிர்காலத்தில் இந்தியா அணு சோதனை நடத்துவதற்கு இந்த ஒப்பந்தம் தடையாக இருக்குமா என்பது தொடர்பாக முடிவு எடுப்பதில் சிக்கல் நீடித்தது. எனவே கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது.
இதற்கிடையே அமெரிக்க துணை ஜனாதிபதி டிக்செனி, வெளியுறவு மந்திரி கொண்டலீசா ரைஸ், பாதுகாப்பு மந்திரி ரொபர்ட் கேட்ஸ், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஹாட்லீ ஆகியோரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சந்தித்துப் பேசினார்.
இந்தத் தொடர் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே முக்கிய முடிவு எட்டப்பட்டது. எனினும் இருநாட்டு தலைவர்களுக்கு இடையே அடுத்த சுற்று பேச்சு வார்த்தை முடிந்த பின்னரே ஒப்பந்தம் அமுலுக்கு வருவது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும்.
முன்னதாக பேச்சுவார்த்தை முடிந்ததும் இரு தரப்பினரின் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், `பேச்சுவார்த்தை உறுதியாகவும் சாதகமாகவும் அமைந்ததாக' குறிப்பிடப்பட்டது. நிக்கோலஸ் பெர்ன்ஸ் மற்றும் மேனன் ஆகியோர் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டு இருந்தனர்.
இது குறித்து இந்திய அதிகாரி ஒருவர் கூறுகையில், " அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான அடிப்படை அம்சங்களில் முடிவு காணப்பட்டுள்ளது. எனினும் அவற்றை வெளியிட முடியாது" என்றார்.
அணுசக்தி ஒப்பந்தம் அமுலுக்கு வருவது குறித்து இரு நாடுகளும் ஒரே நேரத்தில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவு மந்திரி கொண்டலீசா ரைஸ் எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அநேகமாக அந்த சமயத்தில் ஒப்பந்தம் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகள் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு திரும்பினர்.


கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக தேர்தல்கள் அணையாளர் அலுவலகம் தெரிவிப்பு
வீரகேசரி இணையம்

கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேர்தல்களை ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் நடத்துவது குறித்து திகதியை தீர்மானிப்பதற்கு அதற்கு பொறுப்பான அமைச்சரிடமே இருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டப்பிள்யூ சுமண்சிறி தெரிவித்துள்ளார்
.

பேச்சாளரை பதவி நீக்கும் அரசின் கோரிக்கை குறித்து கருத்து கூற கண்காணிப்புக் குழு மறுப்பு
வீரகேசரி நாளேடு

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொபினூர் ஓமர்ஸனை அப்பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்க சமாதான செயலகம் நோர்வே தரப்புக்கு எழுதியுள்ள கடிதம் தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியாதென கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கேசரிக்கு தகவலளித்த கண்கõணிப்புக் குழுவின் பதில் பேச்சாளர் ஸ்ரெய்னர் செவின்சன், இது மிகவும் சிக்கலானதும், சர்ச்சைக்குரியதுமான விடயமாகும். எனவே, இவ்விடயம் குறித்து தற்போது எவ்வித கருத்துக்களையும் வெளியிட முடியாது என்றார்.
இவ்விடயம் குறித்து நோர்வே தரப்பு ஏதேனும் அறிவுறுத்தல் வழங்கியதா என கேட்கப்பட்டதற்கு பதிலளித்த செவின்சன் இதுகுறித்து தற்போது கருத்து வெளியிட முடியாது. எனவே, இது குறித்து நோர்வே தூதரகத்துடன் வினவுங்கள் என்றார்.
இதேவேளை, இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளரையோ அல்லது அதன் எந்தவொரு உறுப்பினரையோ நீக்குவது தொடர்பாக ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்க முடியாது. அதற்கு அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பும் இணக்கம் தெரிவிக்க வேண்டுமென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொபினூர் ஒமர்சனை அப்பதவியில் இருந்து நீக்கக் கோரி அரசாங்க சமாதான செயலகப் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவா விஜேயசிங்க அனுசரணையாளரான நோர்வேயிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
மூதூர் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களின் படுகொலை மற்றும் கடத்தல் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பாக தொபினூர் ஒமர்ஸன் வெளியிட்ட கருத்துக்களால் அரசாங்கம் அடைந்த அதிருப்தியின் வெளிப்பாடே இதுவென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயம் தொடர்பாக நோர்வே தரப்பிடமிருந்தும் கருத்துக்களைப் பெற முடியவில்லை


Posted on : Mon Jul 23 8:26:52 EEST 2007 யாழ் உதயன்
மல்லாகம் நீதிமன்றத்தில் தத்துக்கொடுக்க மூன்று குழந்தைகள்

மல்லாகம் நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள மூன்று குழந்தைகள் தத்துக் கொடுக் கப்படவிருக்கின்றனர்.தத்துக் கொடுப்பது தொடர்பான நேர்முகப் பரீட்சை நாளை மறுதினம் புதன்கிழமை நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.குழந்தைகளைத் தத்து எடுக்க விரும்பும் பெற்றோர் சமுகமளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Posted on : Sun Jul 22 7:57:34 EEST 2007 யாழ் உதயன்
மண்டைதீவில் தொழிலில் ஈடுபட்டவர்களை நோக்கி நேற்று வேட்டுக்கள்; ஒருவர் காயம்

மண்டைதீவுக் கடற்பரப்பில் நேற்றுக் காலை 9 மணியளவில் தொழிலில் ஈடுபட் டுக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் சூட் டுக்கு இலக்காகிக் காயமடைந்தார்.ஆனைக்கோட்டை, சாவற்கட்டைச் சேர்ந்த சம்பந்தன் யோகேந்திரன்(வயது 39) என்பவரே காயமடைந்து யாழ். ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவ ரது வள்ளத்தை நோக்கி வேட்டுக்கள் தீர்க் கப்பட்டன என்றும் அதனால் அவர் காய மடைந்ததுடன் வள்ளமும் சேதமடைந்தது என்றும் அதே பிரதேசத்தில் தொழில் செய்துகொண்டிருந்தவர்கள் தெரிவித்த னர்.

Posted on : Sun Jul 22 7:56:58 EEST 2007 யாழ் உதயன்
இராணுவத் தளபதி திருமலை விஜயம்

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றுத் திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.சிரேஷ்ட படை அதிகாரிகள் சகிதம் சென்ற இராணுவத் தளபதி கள நிலைமை குறித்துக் கேட்டறிந்தார்.படை அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்களின் சேமநலன்களையும் தளபதி விசாரித்து அறிந்து கொண்டார்.

No comments: