திருமலை உயர் பாதுகாப்பு வலயத்தில் எவரும் குடியேற அனுமதி இல்லை
[15 - August - 2007] தினக்குரல்
* மாற்றிடம் வழங்க ஏற்பாடு; அரசு அறிவிப்பு
எம்.ஏ.எம். நிலாம்
திருமலை மாவட்டத்தில் அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள எந்தவொரு உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களிலும் எவரும் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவித்திருக்கும் அரசாங்கம் அவர்களுக்கு மாற்று இடங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மூதூர் கிழக்கில் அரபாத் நகரில் தமது சொந்த இடங்களில் குடியமர்வதற்கு முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்படாமை குறித்து நேற்று தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இத்தகவலை வெளியிட்டார். அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
`திருகோணமலை மாவட்டத்தில் சில பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. அதில் மூதூர் கிழக்கிலுள்ள அரபாத் நகரும் ஒன்றாகும். இந்தப் பிரதேசத்திலிருந்து முஸ்லிம்கள் 1985 இல் வெளியேறினார்கள். அன்று 53 குடும்பங்கள் வெளியேறினர். இன்று அந்த எண்ணிக்கை 84 குடும்பங்களாக அதிகரித்துள்ளது.
இந்த முஸ்லிம் குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பத் தயாராகி வருகின்றன. தற்போது இந்த அரபாத் நகரும் இம்மாவட்டத்திலுள்ள வேறுபல பிரதேசங்களும் அரசாங்கத்தினால் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மனித நடமாட்டத்துக்கோ, குடியேறுவதற்கோ அனுமதிக்கப்படமாட்டாது.
1985 இல் வெளியேறியவர்கள் இதுவரையில் தமது பிரதேசங்களை ஏறெடுத்தும் பார்க்காமலிருந்து விட்டு இப்போது அங்கு குடியேற முயற்சிக்கின்றனர். பாதுகாப்பை உறுதி செய்வதில் படைத்தரப்பு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இத்தகையதொரு சூழ்நிலையில் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்த எந்தவொரு பிரதேசத்திலும் எவரும் குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வேறு பிரதேசங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசங்களில் அவர்கள் குடியேறுவதற்கான சகல வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும்" எனவும் அவர் தெரிவித்தார்.
சர்வகட்சிக் கூட்டம் ஜனாதிபதியின் உத்தரவால் இறுதி முடிவெடுக்காது திடீரென ஒத்திவைப்பு
[15 - August - 2007]
ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவிருந்த நிலையில், ஜனாதிபதியின் திடீர் அறிவிப்பையடுத்து சர்வகட்சிப் பிரதிநிகள் குழுக் கூட்டம் எவ்வித முடிவுகளையும் எடுக்காத நிலையில் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சர்வகட்சிப் பிரதிநிகள் குழுக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக மாலை 4.30 மணிக்கு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டத்தில் கூடியது.
இக் கூட்டத்தில் இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக முதல் நாள் கூட்டத்தில் எட்டப்பட்ட விடயங்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கலந்துகொண்ட அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால, அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் கட்சியின் சார்பில் கலந்துகொண்ட பேராசிரியர் நளின் டிசில்வா ஆகியோர் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தை உடனடியாக ஒத்திவைக்க வேண்டுமெனக் கோரியதுடன் இது ஜனாதிபதியின் உத்தரவு எனவும் தெரிவித்துள்ளனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் இதனைக் கடுமையாக எதிர்த்ததுடன் சிங்களக் கடும் போக்காளர்களின் அழுத்தத்திற்கு ஜனாதிபதி அடிபணிந்து விட்டதாக குற்றம் சாட்டியதுடன் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தை ஒத்திவைக்கக் கூடாதெனவும் வலியுறுத்தினர்.
ஆனால், எதனையும் கவனத்தில் எடுக்காத அமைச்சர் விஸ்வ வர்ணபாலவும் பேராசிரியர் நளின் டி சில்வாவும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தைக் காலவரையன்றி ஒத்திவைக்க வேண்டுமென வலியுறுத்தியதுடன் சர்வகட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானிப்போம் எனவும் கூறினர்.
இதையடுத்து, சிறுபான்மைக் கட்சிப் பிரதிநிதிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் சர்வகட்சிப் பிரதிநிதி குழுக் கூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில் முதல் நாளான திங்கட்கிழமை இடம்பெற்ற சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் இன நெருக்கடித் தீர்வுக்கான சாதகமான பல தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஹெல உறுமய கட்சியின் சார்பில் கலந்து கொண்ட சட்டத்தரணி உதய கம்மன்பில இதனைக் கடுமையாக எதிர்த்ததுடன் ஜனாதிபதியுடன் தான் இது தொடர்பாக கலந்துரையாடப் போவதாகக் கூறி சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு எழுந்து சென்று விட்டார்.
இந்நிலையிலேயே இந்த வாரம் இன நெருக்கடிக்கான தீர்வு யோசனைகளை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றபோது ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய திடீரென காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீர்வு யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டமை சிறுபான்மைக் கட்சிகளிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment