இன நெருக்கடித் தீர்வு முயற்சிக்கு வெளிநாட்டு உதவி தேவையில்லை
[29 - August - 2007]
* சர்வ கட்சியூடாகவே யாவும்; பிரதமர் அறிவிப்பு
எம்.ஏ.எம்.நிலாம்
இலங்கை இன நெருக்கடித் தீர்வு விடயத்தில் இனிமேல் வெளிநாட்டு உதவியை பெற்றுக் கொள்வதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கா, பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அரசியல் கட்சிகளைக் கொண்ட சர்வகட்சி மாநாட்டின் மூலமே தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அதேசமயம், முழு உலகுக்கும் சவால் விடுத்துக் கொண்டிருக்கும் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட அனைத்து நாடுகளும் ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குவதற்கு ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் மியன்மார் நாட்டின் பதில் பிரதமர் லெப்டினன் ஜெனரல் தெயின் ஷெயினுடனான உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையில் பாதுகாப்பு, கல்வி, கலாசார விவகாரம் தொடர்பில் இரண்டு முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா கூறியதாவது;
" இலங்கையில் தொடரும் யுத்தத்துக்கும் இனநெருக்கடிக்கும் யுத்தத்தின் மூலம் மட்டும் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை. பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வொன்றைக் காண்பதிலேயே அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அதன் பொருட்டு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி மாநாட்டிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார்.
சகல கட்சிகளும் ஒன்றுபட்டு நிரந்தரமானதொரு சமாதானத் தீர்வை எட்ட முடியுமென்ற நம்பிக்கை இன்னமும் வீண் போகவில்லை. முரண்பாடுகளுக்கு மத்தியில் உடன்பாடு காணும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இனிமேலும் வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொள்வதில்லையென்ற உறுதியான முடிவுக்கு அரசு வந்துள்ளது.
இதேவேளை, முழு உலகையும் ஆட்டிப் படைக்கின்ற பயங்கரவாதச் சவாலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விடயத்தில் உலக நாடுகள் ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படக்கூடிய விதத்தில் ஒன்றுபட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. முக்கியமாக இதுவிடயத்தில் பௌத்த நாடுகள் ஒன்றாக கைகோர்த்துச் செயற்பட முன்வர வேண்டும்.
பயங்கரவாதிகள் தங்களின் செயற் பாடுகளுக்காக நிதியைத் தேடிக்கொள்ளும் பொருட்டு ஆயுதம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்திலீடுபட்டு வருகின்றனர்.
இவற்றை முறியடிப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் சகல நாடுகளும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் விக்கிரமநாயக்கா குறிப்பிட்டார்.
மியன்மாருக்கும் இலங்கைக்குமிடையில் பௌத்த தர்மம் காரணமாக நீண்டகால நட்புறவு இருப்பதாகத் தெரிவித்த பிரதமர், இதனால் இரு நாடுகளதும் பழக்க வழக்கங்களும் கோட்பாடுகளும் சமாந்தரமாகவே காணப்படுவதாகவும் இதனைத் தொடர்ந்து வளர்த்தெடுப்பதில் இரு நாடுகளும் மேலும் நெருக்கமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த மியன்மார் பதில் பிரதமர்;
"பௌத்த கோட்பாட்டின்படி செயற்படும் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு, அபிவிருத்தி, சமய விழிப்புணர்வுகளுக்காக மியன்மார் அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
பயங்கரவாதிகள் ஆசியப் பிராந்தியத்தை ஆயுத, போதைவஸ்து பரிமாற்றத்துக்கான தளமாக பயன்படுத்துவது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது.
இந்தப் பிராந்தியத்தை இப்பேராபத்திலிருந்து மீட்டெடுப்பது எம்மெல்லோரதும் கடப்பாடாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்திக் கூறினார். இதன் பொருட்டு மியன்மார் அரசு நீண்டகால திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, சமல் ராஜபக்ஷ, ரோஹித போகொல்லாகம, மகிந்த யாப்பா அபேவர்தன, பந்துல குணவர்தன, டலஸ் அழகப் பெரும, பண்டு பண்டாரநாயக்கா ஆகியோரும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, பிரதமரின் செயலாளர் மகிந்த பந்துசேன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment