Wednesday, 29 August 2007

வரிக்கு வரி அபத்தம்! ENB

புதிய நூற்றாண்டிலும் தோட்டத் தொழிலாளர் சமூகத்தை 19 ஆம் நூற்றாண்டு நிலையில் வைத்திருப்பது தேசிய வெட்கக்கேடு

[29 - August - 2007]
*சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சின் எதிர்கால வேலைத் திட்டங்களை உருவாக்குவதற்கு அடிப்படையான கொள்கைகளை இனம் காண்பதற்கான செயலமர்வு இலங்கை மன்றக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற போது கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல் பீடாதிபதி பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஆற்றிய சிறப்புரை அமைச்சர் பெ. சந்திரசேகரம் அவர்களுடைய அமைச்சின் பிரதான பணியும் இந்த கருத்தரங்கின் நோக்கமும் சமூக அநீதியை இல்லாதொழித்தல் என்பதால் நியாயத்தன்மை என்னும் எண்ணக்கரு பற்றிய சில விளக்கங்களை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன். பொருளியலாளர்களின் நிலைப்பாட்டின்படி நியாயத்தன்மை என்பது முறையான வருமான பங்கீட்டில் தங்கியிருக்கின்றது. கல்வியாளர்களின் நோக்கில் பின்தங்கிய பாடசாலைகள், பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த பிள்ளைகள் ஆகியோரின் தேவைகளை கருத்தில் கொண்டு விசேட ஒதுக்கீடுகளைச் செய்வதையே இது குறிக்கின்றது. சட்ட அறிஞர்களைப் பொறுத்தவரையில் சட்டவிதிகளை கண்டிப்பான முறையில் பிரயோகிப்பதால் ஏற்படும் நியாயமற்ற விளைவுகளை குறிக்கின்றது.
உலகின் எல்லாச் சமயங்களுமே நியாயத்தன்மையை வலியுறுத்தி வந்துள்ளன. தொன்றுதொட்டு இவ்விடயத்தில் அதிக அக்கறையை சமயங்கள் செலுத்தி வந்துள்ளன. சமூக அநீதி வறியோரை பொறுத்தவரையிலான மற்றவர்களின் கடப்பாடு என்பன பற்றி எல்லா சமயங்களும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளன. பல்வேறு பண்பாடுகளும் சமயங்களும் பல அம்சங்களில் வேறுபட்டாலும் நியாயத்தன்மை பற்றிய அவற்றின் கருத்து ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இதிலிருந்து உலகளாவிய ரீதியில் மனிதகுலமானது நியாயத்தன்மையில் அடிப்படையான அக்கறையை செலுத்தி வந்துள்ளது என்பது விளங்கும். அண்மைக்கால ஆராய்ச்சிகளின்படி தனி நப ர்கள் பெருமளவில் நியாயத் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர் என அறிய வந்துள்ளோம்.
தத்துவ சிந்தனைகளிலும் மரபுகளிலும், நியாயத்தன்மையே ஒரு பிரதான விடயமாக இருந்துவந்துள்ளது. பிளேட்டோவின் கருத்தின்படி ஒரு அரசு மிக மோசமான வறுமையையும் தேசிய சிதைவையும் தவிர்க்க வேண்டுமாயின் செல்வம் ஒரு சிலரிடம் குவியும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அது ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்.
நவீன காலத்தில் மேலைநாட்டுச் சிந்தனை பெருமளவிற்கு பயன்வழி வாதத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டது. இதன்படி சமூக குறிக்கோள் பெருந்தொகையானவர்களுக்கு பெருமளவு மகிழ்ச்சியை வழங்குவதாக இருத்தல் வேண்டும். இந்த சிந்தனையை முன்வைத்தவர் ஆங்கில அறிஞர் பென்தம் ஆவார். இவரது கருத்துகள் சமத்துவ சிந்தனைகளை பிரதிபலித்தன.
அண்மைக்காலங்களில் இந்தியப் பேராசிரியர் அமார்த்தியா சென். ஜோன் ராவ்ஸ், ஜோன் றோமேர் போன்ற அறிஞர்கள் சமூக நீதியை ஏற்படுத்த வேண்டுமாயின் சகல தனிநபர்களுக்கும் சுதந்திரங்களும் வளங்களும் கிடைக்கத்தக்கதாக இருத்தல் வேண்டும் என்றனர். சகல மக்களுக்கும் முதல்நிலைப் பொருட்கள் கிடைக்கத்தக்கதாக இருத்தல் வேண்டும். இதிலிருந்தே நியாயத்தன்மை உருவாகும். வறியவர்களின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட விடயங்களில் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படல் வேண்டும் என்பதே நியாயத்தன்மையின் அடிப்படை. சம வாய்ப்புகளின் அடிப்படையிலேயே நியாயத்தன்மை உறுதிப்படுத்தப்பட முடியும். நியாயத்தன்மை என்பது குடும்பப் பின்னணி, இனம், சாதி, பாலினம் என்பவற்றிற்கப்பால் சுய முயற்சியின் மூலம் மேம்பாடடைவதற்கான வாய்ப்புகளை இவர்கள் முன்வைத்தனர்.
தேசிய இனம், இனம், பாலினம் என்பவற்றிற்கேற்ப வாய்ப்புகள் வழங்கப்படுமாயின் அடிப்படையில் அது நியாயமற்றது. இதனால், மனித ஆற்றல் விரயமாகின்றது. அபிவிருத்திக்கான வாய்ப்புகள் தவறவிடப்படுகின்றன. நீண்டகால அபிவிருத்திக்கு நியாயத்தன்மை மிகவும் அவசியமானது. சமூக அநீதி ஒழிக்கப்பட்டால் சகலரும் சமூக ரீதியாக இயங்க முடியும். அரசியல் செல்வாக்குடன் விளங்க முடியும். உற்பத்தித்திறன் வாய்ந்தவர்களாக மாற முடியும். அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்ய முடியும்.
சமத்துவம் இல்லாவிடின் அரசியல் குழப்பம், நெருக்கடி பொருளாதார ஆற்றலின்மை என்பது ஏற்பட வழியுண்டு. சமூக நீதி பேணப்படுவதால் வறுமை பொழிப்பதற்கான வாய்ப்பு, ஏற்படுகின்றது. வறியவர்கள் அபிவிருத்தி செயற்பாட்டில் பங்குகொள்ள முடிகின்றது. சமூகத்தின் வளங்கள் சிறப்பாக பயன்படுத்தப்பட வாய்ப்பு ஏற்படுகின்றது. சமூக முரண்பாடுகள் தீர்க்கப்பட வாய்ப்பு ஏற்படுகிறது. செல்வாக்கும் வருமானமும் அற்ற வறியவர்கள் நியாயத்தன்மையுள்ள சமூகத்தில் பல வாய்ப்புகளைப் பெறுகின்றார்கள். எனவே, முன்பிள்ளைப்பருவ வளர்ச்சி, பாடசாலைக்கல்வி, சுகாதார சேவைகள், சமூகப் பாதுகாப்பு என்பவற்றில் நியாயத்தன்மையை ஏற்படுத்தி மனித ஆற்றல்களை அதிகரிப்பதால் வாழச்செய்ய முடியும்.
இலங்கையில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, சமூக அபிவிருத்தி, சமூக அநீதியை ஒழித்தலுக்கான அமைச்சு என்பவை இந்நாட்டின் பல்வேறு சமூக, பொருளாதார துறைகளில் நிலவி வரும் அநீதிகள் சமத்துவமின்மை என்பவை காரணமாகவே ஏற்படுத்தப்பட்டன. அரசாங்க நடவடிக்கைகள் குறைதீர் பாரபட்ச நடவடிக்கைகள் (கணிண்டிணாடிதிஞு ஈடிண்ஞிணூடிட்டிணச்ணாடிணிண) என்பவற்றினூடாக சமூக அநீதி பற்றிய பிரச்சினையை கையாள முடியும். இலங்கையில், இப்பிரச்சினையைத் தாமதமின்றி கையாளாவிட்டால், சமூகத்தில் விரக்தியும், வேதனையும் அதன் விளைவாக சமூகக் கிளர்ச்சிகளும் ஏற்படுவது சாத்தியமானது. எனவே, எங்கெங்கு சமூக அநீதி காணப்படுகின்றது என்பதை இனங்கண்டு அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.
கல்வித்துறையை இதற்கு உதாரணமாக கொள்ள முடியும். சகலரையும் பாடசாலைகளில் அனுமதித்து விட்டால் மட்டும் போதாது. சகல பிள்ளைகளும் சம அளவான கற்றல் தேர்ச்சிகளை பெறுதல் வேண்டும்.அத்துடன், பாடசாலைக் கல்வியின் விளைவாக சம அந்தஸ்துடைய வாழ்க்கைத் தராதரங்களையும் சமூக அந்தஸ்தையும் அரசியல் அதிகாரத்தையும் அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். சமத்துவத்தின் இப்பல்வேறு அம்சங்களின் ஊடாகவே நியாயத்தன்மையை பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் சகல சமூகங்களும் வறுமை எழுத்தறிவின்மை, சுகாதார வசதிகளின் பற்றாக்குறை, பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கொள்கையாக்கம் தேவையென்றாலும் பெருந்தோட்ட மக்களின் நிலைமை விசேடமாக கவனிக்கப்படல் வேண்டும்.
இச்சமூகத்தின் ஒரு முக்கியமான பண்புக்கூறு அதன் மக்களில் 70 வீதமானவர்கள் பெருந்தோட்டங்களுக்குள்ளேயே வாழ்கின்றனர். இதனால், பெருந்தோட்டத்துடன் இணைத்து இம்மக்கள் பெருந்தோட்ட சமூகம் என இனம் காணப்படுகின்றனர். பிற சமூகங்களுக்கு இப்படியான அடையாளங்கள் இல்லை. அவர்களது 170 ஆண்டுகால வரலாறு பெருந்தோட்டங்களிலேயே கழிந்துள்ளது. மலேசிய பெருந்தோட்டங்களில் வாழ்ந்த இந்தியர்கள் பெரும்பாலும் அங்கிருந்து வெளியேறி நகர்ப்புற தொழில்களை நாடி விட்டார்கள். இவ்வாறான சமூக நகர்வு இலங்கையில் ஏற்படவில்லை. அதேவேளை, இலங்கையில் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் படிப்படியாக விரிவடைந்து வந்த பாடசாலைக் கல்வியானது பிற சமூகங்கள் மத்தியில் தாராளமான சமூக நகர்வை ஏற்படுத்தியுள்ளது.
பின்தங்கிய மக்களின் கல்வி மேம்பாட்டை இலக்காகக் கொண்ட பல அரசாங்க நடவடிக்கைகளினால் (இலவசக்கல்வி, மத்திய பாடசாலை, புலமைப்பரிசில்கள்) இம்மக்களின் உயரிய பலனை அடையவில்லை.
நவமாக்ஸிய சிந்தனையாளர்கள் இன்றைய பாடசாலைக்கல்வி பற்றிச் செய்துவரும் கடுமையான விமர்சனம் இம்மக்களுக்குப் பொருந்தும் போலத் தெரிகின்றது. பாடசாலைக் கல்வியானது சமூக மேம்பாட்டை ஏற்படுத்துவதில்லை. இதற்கு மாறாக சமூக வகுப்பு வேறுபாடுகளை மீள் உற்பத்தி செய்வதில் பாடசாலைக்கல்வி திறம்பட செயற்படுகின்றது என்பது அவர்களுடைய கருத்து. அதாவது, கீழ்மட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களைத் தலைமுறை தலைமுறையாக அதேமட்டத்தில் இருக்கச் செய்வதே பாடசாலைக் கல்வியின் தொழிற்பாடு என்ற முறையில் இக்கருத்து அமைந்தது. பல தலைமுறைகளாகத் தொடர்ந்து பெருந்தோட்டங்களிலேயே கட்டுப்பாடான வாழ்க்கையை நடாத்தும் இப்பெருந்தோட்ட மக்கள் சமூக ரீதியான அநீதிக்கு உள்ளாகி உள்ளனர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அயலிலும், தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ஏற்பட்டுவரும் பொருளாதார விஞ்ஞான, தொழில்நுட்ப, அரசியல் மாற்றங்களை கருத்திற் கொள்ளாது எதுவித மாற்றத்திற்கும் உட்படாத வாழ்க்கை முறையை இவர்கள் பின்பற்றி வருகின்றனர். வெளியுலக மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு உள்ளவர்களும் அதற்காகக் கிளர்ந்தெழாது பொறுமை காத்து வருகின்றனர். இது ஒரு அபாயகரமான நிலைமையை குறித்து நிற்கின்றது.
குறைந்த எழுத்தறிவு, குறைந்த சுகாதார வசதி, குறைந்த போஷாக்கு, அதிகரித்த சிசுமரணவீதம், கௌரவமான மனித வாழ்க்கைக்கு சற்றேனும் பொருத்தமற்ற லைன் வீடுகள் எனும் பாதகமான சூழ்நிலையில் மனிதர்கள் எவ்வாறு வாழலாம் என்பதற்கான ஒரு முன்மாதிரியை இவர்கள் உலகிற்கு வழங்கியுள்ளனர். கடந்த 40 ஆண்டுகாலமாக அடிப்படை உரிமைகள், குடியுரிமை, வாக்குரிமை, அரசாங்க மட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளும் உரிமை என எதுவுமின்றி பொறுமை காத்து வாழ கற்றுக்கொண்டவர்கள் இம்மக்கள். புதிய நூற்றாண்டில் சவால்களை எதிர்கொள்ள தேவையான தகவல் தொழில்நுட்ப திறன்களோ ஆங்கில மொழியறிவோ இன்றி மிக எளிமையான எதுவித உயர் அபிலாசைகளும் அற்ற சமூகமாக வாழ்ந்து வருகின்ற இவர்கள் உலகத்திற்கு ஒரு சிறந்த படிப்பினையாகவும் அமைகின்றார்கள். வாழ்ந்து காட்ட விரும்பினால் இம்மக்களின் வாழ்க்கை வரலாறு அதற்கான ஒரு படிப்பினையாக அமையக்கூடும்.
சென்ற நூற்றாண்டுகளில் ஆங்கில ஆட்சியாளர்கள் இந்தியர்கள் நாட்டைவிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களாக வெளியேறுவதற்கான சமூக பொருளாதார நிலைமைகளை இந்தியாவில் ஏற்படுத்தினர். வேலைவாய்ப்புக்களை வழங்கக்கூடிய புடைவைக் கைத்தொழிலை ஒழித்துக்கட்டினர். சுதந்திர இலங்கையும் இதில் தளர்ச்சி காட்டாது தனது பங்களிப்பிற்கு இலங்கையில் ஏற்படுத்திய பாதகமான நிலைமையின் காரணமாக, சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் காரணமாக பல இலட்சம் இந்திய தமிழர்கள் தாயகம் திரும்ப நேர்ந்தது.
எமது நாடு ஏன் இன்று ஏனைய தென்கிழக்காசிய நாடுகளை விடப் பின்தங்கி இருக்கின்றது? அபிவிருத்திப் பாதையில் ஏன் வீழ்ச்சியைக் கண்டு வருகின்றது? 1950 களில் தாய்லாந்து, மலேசியாவை விட முன்னிலை வகித்த இலங்கைக்கு ஏன் இந்த நிலை? எனது, நண்பரான ஒரு பொருளியல் அறிஞர் கூறிய பதில் இதுதான். இந்நாட்டின் வளர்ச்சிக்கு தமது கடும் உழைப்பைத் தந்து காடுகளை செல்வம் சுரக்கும் களனிகளாக மாற்றப் பல தசாப்தங்களாக பாடுபட்ட இப்பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிகளின் காரணமாகத்தான் இந்நாடு இவ்வாறு சபிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது என்பதுதான் அவர்தந்த விளக்கம்.
இப்பின்புலத்தில் இச் செயலமர்வு இச் சமூகத்தின் சீர்கேடுகளை உள்ளடக்கி அவர்களின் சமூக, பொருளாதார நிலைமைகள் பொறுத்தவரையிலான சமூக அநீதி என்பவற்றை கருத்திற் கொண்டு பொருத்தமான கொள்கையாக்கத்தில் தீவிரமான ஈடுபாட்டை செலுத்தும் என நம்புகின்றேன். புதிய நூற்றாண்டிலும் இச் சமூகத்தை தொடர்ந்து 19 ஆம் நூற்றாண்டு நிலைமையில் வைத்திருப்பது தேசிய ரீதியாக ஒரு வெட்கத்திற்குரிய விடயம் மட்டுமல்ல தேசிய அபிவிருத்திக்கான ஒரு தடைக்கல் எனவும் நான் கருதுகின்றேன். இத்தனை இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் சோதனைகளுக்கும், சுரண்டல்களுக்கும் உட்பட்ட இச்சமூகம் தனக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழவில்லை. என்பது சமூகவியல் ஆய்வாளர்களுக்கான ஒரு நல்ல ஆய்வுத்தலைப்பு.

No comments: