மனித உரிமை விவகாரத்தில் துஷ்பிரயோகம் வேண்டாம்
[27 - September - 2007]
* சர்வதேச சமூகத்திடம் ஜனாதிபதி வேண்டுகோள்
* சிங்களத்தில் உரையாற்றுவது எனது கடப்பாடு
* நெருக்குதல் கொடுக்கவே இராணுவ நடவடிக்கை
* பயங்கரவாதம் தொடர்பாக சர்வதேச சாசனம் அவசியம்
* சுதந்திர பலஸ்தீனத்துக்கு சர்வதேசம் உதவவேண்டும்
* உறுப்பு நாடுகளுக்கு உதவுவது ஐ.நா.வின் தலையாய கடமை
மனித உரிமை விவகாரத்தை பயன்படுத்தி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளை பலியாக்க வேண்டாம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐ.நா.வில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நியூயோர்க்கில் ஐ.நா.பொதுச்சபையின் 62 ஆவது அமர்வில் கலந்து கொண்டு செவ்வாய்க்கிழமை பின்னிரவு (புதன்கிழமை அதிகாலை) உரைநிகழ்த்திய ஜனாதிபதி ராஜபக்ஷ, பயங்கரவாதத்தின் அபாயத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அற்ப அரசியல் இலாபங்களுக்காக மனித உரிமைகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக பயங்கரவாத அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட நாடுகள் இந்த ஆபத்திற்கு எதிராகப் போராடுவதற்கு உதவியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல் விடுத்தார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
கிரேக்க, உரோம நைல்நதி நாகரிகங்களைப் போன்று முன்னேற்றகரமான பழம்பெரும் நாகரிகத்தை கொண்டது இலங்கையெனப் பெருமை கொள்ள முடியும்.
எமது நாகரிகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த தன்மையாக சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் பலராலும் இன்று பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே, இந்த உன்னத சபையில் சிங்கள மொழியில் உரையாற்றுவது எனது கடப்பாடு என்று கருதுகிறேன்.
சேர் ஐசக் நியூட்டனின் சாசுவதமான வார்த்தைகளுடன் எனது உரையை நான் ஆரம்பிக்கின்றேன். `நாம் பல சுவர்களை அமைத்துள்ளோம். ஆனால், போதியளவு பாலங்களை நிர்மாணிக்கவில்லை' என்று நியூட்டன் கூறியுள்ளார்.
எமது குரல்கள் ஒலிக்கப்படுவதற்கும் வன்முறைகள், பழிவாங்கல்கள், குற்றச்சாட்டுகளூடாக அல்லாமல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களாக நாம் உள்ளோம். ஆனால், பிழை கண்டுபிடிக்கவும் நாடுகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தவும் வழிக்கு வராதோரை தண்டிப்பதற்குமான தன்மையையே நாம் காணக்கூடியதாக உள்ளது. ஒத்துழைப்பு மூலம் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக நாம் அடிக்கடி சந்தேகத்தை உருவாக்கிக்கொண்டு எம்மிடையே சுவர்களை எழுப்பிக்கொண்டும் இரட்டைத்தன்மையான நிலைப்பாடுகளை எடுக்கின்றோம்.
நாட்டின் வடபகுதியில் ஈவிரக்கமற்ற பயங்கரவாத குழுவுடன் மோதல் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தச் சவாலின் மத்தியில் கிழக்கு மாகாணத்தை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்து அங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டியுள்ளோம் என்பதை பெருமையுடன் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
எனது அரசாங்கம் கிழக்கில் புனர்வாழ்வு, புனர் நிர்மாணத்திட்டத்தை பாரியளவில் ஆரம்பித்துவிட்டது. அபிவிருத்தி, புனர்வாழ்வு நடவடிக்கைகளின் முன்மாதிரியாக கிழக்கு மாகாணத்தை கொண்டுவர நாம் உத்தேசித்துள்ளோம். எமது சொந்த முயற்சிகள் இதற்கு அத்தியாவசியமாக இருப்பதுடன் சகல உதவி வழங்கும் சமூகத்தினதும் உதவிகள் இதற்கு அவசியமாகும்.
அடுத்த வருட முற்பகுதியில் மாகாண, உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தி மக்களின் உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அபிவிருத்தியில் கவனம் செலுத்தி வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முக்கியமான பங்களிப்பை சர்வதேச சமூகம் வழங்குவதற்கு தற்போது பொருத்தமான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
யுத்தத்தில் வெற்றி கொள்வது சாத்தியமற்றது என்ற எண்ணப்பாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதிகளுக்கு நெருக்குதலை கொடுப்பதற்கே நாம் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தோம். இந்தத் துரதிர்ஷ்டவசமான மோதலை பேச்சுவார்த்தை மூலமும் கௌரவமான வழியிலும் முடிவுக்கு கொண்டு வருவதே எமது இலக்காகும். இந்த இலக்கை எட்டுவதற்காக சர்வகட்சி பிரதிநிதிகள் குழு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
சுகாதாரம், கல்வி, பால் சமத்துவம், சமூக மேம்பாடு போன்றவற்றை முன்னேற்றுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் இலங்கையும் முன்னணியிலுள்ள நாடுகளில் ஒன்றாகும்.
பொருளாதார சமூக ரீதியில் நாம் அசாதாரணமான முறையில் வெற்றி கண்டுள்ளோம். மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகள் பலவற்றையும் நாம் வெற்றிகரமாக தாண்டியுள்ளோம்.
25 வருடகால கொடூரமான பயங்கரவாதத்தின் மத்தியிலும் சமூக அபிவிருத்தியை எம்மால் தொடர முடிகிறது. சர்வதேச மட்டத்திலான சகல மனித உரிமை விவகாரங்களிலும் ஒத்துழைப்பு மற்றும் வெளிப்படைத் தன்மையை எனது அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது.
பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது இலங்கையின் பழைமை வாய்ந்த நாகரிகமாகும்.
மனித உயிர்களில் அன்பு செலுத்துதல், வாழ்வை மதித்தல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட பௌத்த கோட்பாடுகள் இலங்கையரால் பின்பற்றப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக மனித உரிமைகள் எமது கலாசார பாரம்பரியத்தின் அத்தியாவசியமான அங்கமாக திகழ்கின்றன. ஆதலால் மனித உரிமைகளைப் பாதுகாப்பது எமக்கு புதியதொரு விடயமல்ல. காலனித்துவ ஆட்சிக்கு முன்பாகவே வாரிசு சொத்துரிமைகள் உட்பட சகலவிதமான உரிமைகளையும் இலங்கைப் பெண்கள் பெற்றிருந்தனர். அத்துடன், 1960 இல் உலகிலேயே முதலாவது பெண் பிரதமரையும் ஜனநாயக ரீதியில் இலங்கை தெரிவு செய்திருந்தது.
பௌத்த கோட்பாட்டின் அடிப்படையில் நீண்டகாலமாக நாம் மனிதர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து வருகிறோம். இதனால், உலகளாவிய யுத்தங்கள் அல்லது மரணங்களின் பெறுமதியை அடையாளம் கண்டுகொள்வதற்கான தேவையின் அவசியம் எமக்கு இல்லை.
சாம்ராச்சியத்தைக் கட்டியெழுப்பவோ அல்லது வர்த்தக ரீதியான அனுகூலத்தைப் பெறவோ அல்லது மத ரீதியாகவோ சக மனிதர்களுக்கு துன்பம் விளைவித்த பதிவுகள் எம்மிடம் இல்லை. அரசியல் இலாபத்துக்காக அல்லாமல் மனித உரிமைகள் பேணிப்பாதுகாக்கப்படுவது அவசியமானதாகும்.
நாங்கள் இங்கு அன்று கூடியிருக்கும் போதே பல நாடுகளில் பயங்கரவாதம் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளால் நாடுகளின் இறைமை, சட்டம், என்பவற்றுக்கான அச்சுறுத்தல் அதிகரித்துச் செல்கின்றது.
இவை தொடர்பாக விழிப்புணர்வு அவசியமானதாகும். இந்தப் பிரச்சினைகளை கையாள்வதற்குரிய பல பொறிமுறைகளை ஐ.நா.கொண்டிருந்தாலும் இந்தச் சவால்களுக்கு வினைத்திறனுடன் தீர்வு காணக்கூடிய ஐ.நா.வின் ஆற்றல் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இச்சபையில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் பயங்கரவாதத்தின் கொடுமை குறித்த அனுபவங்களைப் பெற்றுக் கொண்டுள்ளன.
நியூயோர்க்கிலோ, மும்பையிலோ, லண்டனிலோ, கொழும்பிலோ பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றாலும் அவை ஜனநாயக வழிக்கு அச்சுறுத்தலானவையும் எவ்வித தயக்கமுமின்றி கண்டிக்கப்பட வேண்டியவையுமாகும்.
பயங்கரவாதம் எங்கிருந்தாலும் பயங்கரவாதமே. அதில் நல்லதென ஒன்றும் இல்லை. பயங்கரவாதத்தை கையாள உலகம் எடுத்துவரும் முயற்சிகளில் இலங்கை தன்னை முன்னணியில் இணைத்துக்கொண்டுள்ளது. பயங்கரவாதத்தினை நசுக்கும் ஐ.நா.வின் சாசன விதி 11,13 இல் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்பாக விரிவான சர்வதேச சாசனம் ஒன்று அவசியமென நாம் கருதுகின்றோம். இது தொடர்பாக முடிவில்லாமல் தொடரும் பேச்சுவார்த்தைக்கு முடிவுகட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
எந்தக் கண்டத்தில் மோதல்கள் இடம்பெற்றாலும் அவை உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய கிழக்கு சமாதானம் எமது பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்பை ஏற்படுத்தும். பல்வேறு நாடுகளில் காணப்படும் மோதல்களுக்கு சம்பந்தப்பட்ட நாடுகளின் உள்விவகாரத்தை தொடர்புபடுத்தியதாகவே தீர்வுகள் அமைவது அவசியம்.
இல்லாவிடில் சர்வதேச சமூகம் திருப்திபட்டாலும் கூட மோதல்களில் பாதிக்கப்பட்ட நாடுகளின் மக்கள் திருப்தியடைய மாட்டார்கள். அத்துடன், அது ஜனநாயகத்துக்கு பாதிப்பானதாக அமையும்.
இந்த விடயத்தில் சுதந்திர தேசத்துக்காக முயற்சிக்கும் பலஸ்தீனியர் தொடர்பாக எமது கவனத்தை நாம் செலுத்த வேண்டும். தேவையற்ற செல்வாக்குகள் செலுத்தப்படாமல் அவர்கள் தமது நாட்டை நிர்வகிப்பதற்கு சர்வதேச சமூகம் உதவுவது அவசியமாகும்.
சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதற்கு எதிரான ஐ.நா.வின் செயற்பாடுகளை வலுப்படுத்த நாம் தீவிர ஆதரவு வழங்க வேண்டும். இந்த விடயம் தொடர்பாக அதிகளவு வளங்களை செயலாளர் நாயகம் ஒதுக்கீடு செய்வதற்கு நாம் ஊக்குவிப்பு வழங்க வேண்டும்.
சகல அங்கத்துவ நாடுகளினதும் ஆதரவை இந்த நோக்கத்திற்காக பெற்றுக்கொள்வது அவசியம்.
ஈட்டியிருக்கும் வெற்றிகள் தொடர்பாக வேறுபட்ட பதிவுகளையே ஐ.நா. கொண்டுள்ளது. ஐ.நா. பெற்றுக்கொள்ளும் வளங்களும் வரையறைக்குட்பட்டவையாகும். இதனால், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பெறுபேறுகளையே ஏற்படுத்த முடியும்.
அடிக்கடி நாடுகளை வகைப்படுத்துதல், ஒத்துழைப்பு வழங்குவதில் குறைபாடுகள், வினைத்திறனற்ற முறையில் திட்டமிடுதல், போதிய ஊழியர்கள் இல்லாமை, ஒரு பகுதியையே பூர்த்தியாக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள், முகவர் நிறுவனங்களுக்கிடையிலான தேவையற்ற பகைமைகள் என்பவை தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
தனது அங்கத்துவ நாடுகளின் நலனுக்காக உதவுவதே தனது தலையாய செயற்பாடு என்பதை ஐ.நா. எப்போதும் ஞாபகத்தில் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
ஐ.நா. பொதுச் சபை பிரகடனப்படுத்தியிருக்கும் அபிவிருத்தி தசாப்தத்தை நாம் எட்டியுள்ளோம். இந்த இலக்குகளுக்கு அமைவாக 10 வருட தொலைநோக்குடன் கூடிய புதிய இலங்கையை உருவாக்கும் ்மகிந்த சிந்தனை' யை எனது நாடு பிரகடனப்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளிலும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் பின்தங்கிய பிரதேசங்களிலும் நாம் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம்.
வீதி அபிவிருத்தித்திட்டம், கிராம மீள் எழுச்சித் திட்டம் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உழைக்கும் வர்க்கம் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் எரிபொருள் விலை அதிகரிப்பால் கடுமையான பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் உலக சந்தையில் அதிகரித்துள்ளன. இதனைப் போன்றே இயற்கை அனர்த்தங்கள், உலக நிதிச் சந்தையின் நிச்சயமற்ற நிலைமைகளால் நாம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். இவை மில்லேனியம் அபிவிருத்தி இலக்கை நாம் வென்றெடுப்பதற்கு பாரிய சவால்களாக உருவெடுத்துள்ளன.
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கும் மனித நலனோம்பல் தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஜனநாயகத்தை உருவாக்கவும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான பொருளாதார அபிவிருத்தியை தோற்றுவிப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தவும் எம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கான கடப்பாடு உலகத் தலைவர்களாகிய எமக்குண்டு என்று நான் நம்புகின்றேன்.
மற்றொரு அமர்வு நடந்து முடிந்ததாக அல்லாமல் இந்த 62 ஆவது பொதுச் சபை அமர்வானது புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக அமைவதற்கு வழிசெய்ய வேண்டுமென சர்வதேச சமூகத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
மும்மணிகளின் ஆசி கிட்டுமாக.
No comments:
Post a Comment