Wednesday 19 December, 2007

ஈழச்செய்திகள் 201207: ரஷ்ய, இந்திய, இத்தாலிய உயர்மட்ட இராணுவக் குழு கொழும்பில் சந்திப்பு


இலங்கைக்கு மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள இந்திய உயர்மட்ட பாதுகாப்புக் குழு நேற்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை சந்தித்தபோது அவர்களை கோதாபய ராஜபக்ஷ வரவேற்பதை இங்கு காணலாம். ...

கொழும்பு தினக்குரல் செய்திகள்
ரஷ்ய, இந்திய, இத்தாலிய உயர்மட்ட இராணுவக் குழு கொழும்பில் ஒரே நேரத்தில் முக்கிய சந்திப்புக்கள் [19 - December - 2007]
ரஷ்ய, இந்திய மற்றும் இத்தாலிய உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது இலங்கையில் முக்கிய சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். மூன்று முக்கிய நாடுகளின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட படை அதிகாரிகள் ஒரே நேரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும்.
இலங்கைப் படையினருக்கான போர்த்தளபாட மற்றும் இராணுவ உதவிகளை வழங்குவது தொடர்பாகவே மேற்படி மூன்று நாட்டுக் குழுவினரும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் முப்படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேசி வருகின்றனர்.
ரஷ்ய இராணுவ பிரதம தலைமை அதிகாரி கேணல் ஜெனரல் விளாடிமிர் மொல்பென்ஸ் கோய் தலைமையில் ஆறு பேர் கொண்ட உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் தற்போது கொழும்பில் தங்கியிருந்து இலங்கைத் தரப்பினரை சந்தித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இவர்கள் கோதாபய ராஜபக்ஷவை சந்தித்தபோது, இலங்கைப் படையினருக்கு மிக நவீன உயர்தர ஆயுதங்களை வழங்குமாறு இலங்கை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
அத்துடன், இரு நாடுகளுக்குமிடையிலான இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் நீண்டநேரம் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்தியக் குழு
இதேவேளை, இந்திய உயர்மட்ட இராணுவ மற்றும் பாதுகாப்பு அமைச்சக சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பு வந்தது. இக் குழு இன்று இரவுவரை இங்கு தங்கியிருக்கும்.
இந்தக் குழுவில் இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிமல் ஜுல்கா, இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் ரி.எஸ்.திமுத்தி, இராணுவத் தலைமையக தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்.கே.சின்ஹா, இந்திய விமானப் படையின் தென் பிராந்திய கட்டளைத் தலைமையகத்தைச் சேர்ந்த ஏ.வி.எம்.ராஜேந்திர சிங், கடற்படைத் தலைமையகத்தைச் சேர்ந்த கப்டன் எம்.அகர்வால், கரையோரக் காவல் படையைச் சேர்ந்த ரி.பி.சதானந்தன் மற்றும் பாதுகாப்பு அமைச்சைச் சேர்ந்த கப்டன் பிரதீப் சிங் ஆகியோரே கொழும்புக்கு வந்துள்ளனர்.
இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இலங்கையின் முப்படையினருக்குமான ஆயுத உதவிகள் குறித்து இவர்கள் முக்கிய பேச்சுகளை நடத்தி வருகின்றனர்.
விமானப் படையினருக்கான உதவிகள் குறித்தும் விடுதலைப் புலிகளின் வான் புலிகளது அச்சுறுத்தல் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
கடற்படையினருக்கான உதவிகள் மற்றும் கடற்புலிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இத்தாலி குழு
இதேநேரம், இத்தாலியிலிருந்தும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
இந்தக் குழுவினர் நேற்றுக்காலை இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்தித்துப் பேச்சுகள் நடத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான இத்தாலியத் தூதுவர் பியோ மரியானி மற்றும் தூதரக பாதுகாப்பு அதிகாரி கேணல் கியுஸ்பி எம்.ஜியோன்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கைப் படையினருக்கான ஆயுத உதவிகள் குறித்தும் இங்கு பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ் உதயன் செய்திகள் Wed Dec 19 9:20:00 2007
இலங்கைக்கு மீண்டும் இந்தியப் படை வரலாம்; கருணாநிதியை நேற்றுச் சந்தித்தார் நாராயணன்
இலங்கையில் தொடரும் போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாக இந்தியப் படையினரை அங்கு அனுப்பி வைக்கும் திட்டமொன்றை புதுடில்லி திரைமறைவில் மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திலிருந்து வெளிவரும் நாளேடான "தினமணி' இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றது.இது விடயத்தில் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு சென்னை வருகை தந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியபின் மீண்டும் புதுடில்லி விரைந்தார் என "தினமணி' தனது செய்திக்கு மேற்கோள் காட்டியுள்ளது.கலைஞர் கருணாநிதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை சுமார் அரைமணி நேரம் வரை நீடித்த குறித்த சந்திப்பில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் குறிப்பாக இலங்கையில் நிகழும் போர்ச்சூழல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது என"தினமணி' குறிப்பிட்டுள்ளது.தேசிய பாதுகாப்புக் குழுக்கூட்டம் நாளை புதுடில்லியில் நடைபெறவுள்ளது. தேசிய வளர்ச்சிக் குழுவின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டங்களில் தமிழக முதல்வர் கருணாநிதி,மாநில நிதியமைச்சர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்பர். அதற்காக இருவரும் நேற்று புதுடில்லி புறப்பட்டுச் சென்றனர்.இந்நிலையில் தான் "தினமணி' பாதுகாப்புத் தொடர்பான கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள விடயங்கள் குறித்தே தமிழக முதல்வருடன் எம்.கே. நாராயணன் கலந்துரையாடினார். இலங்கையில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் அந்நாட்டு இராணுவத்துக்கு ஆதரவாக இந்தியப் படைகளை அனுப்புதல், சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்தமை ஆகியவை குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.உள்நாட்டுப் போர் காரணமாகத் தமிழகத்துக்குள் ஊடுருவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் இருவரும் விவாதித்தனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. விடுதலைப் புலிகள் மீதான தடை உத்தரவை நீடிப்பது பற்றிய மத்திய அரசின் முடிவு குறித்தும், அது தொடர்பாக அண்மையில் தமிழக டி.ஜி.பி. பிறப்பித்துள்ள "நோட்டீஸ்' குறித்தும் இந்தச் சந்திப்பின்போதுவிவாதிக்கப்பட்டன எனத் தெரிகிறது. எனத் தனது செய்தியில் "தினமணி' குறிப்பிட்டுள்ளது
கொழும்பு தினக்குரல் செய்திகள்
தள்ளாடி முகாம் மீது ஷெல் தாக்குதல்; இருவர் காயம் [19 - December - 2007]
மன்னார், தள்ளாடி இராணுவ முகாம் மீது நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை விடுதலைப் புலிகள் நடத்திய ஷெல் தாக்குதலில் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர். திங்கட்கிழமை காலை 9 மணியளவில் தள்ளாடி இராணுவ முகாமினுள்ளும் அதனை அண்டிய பகுதிகளிலும் அடுத்தடுத்து பல ஷெல்கள் வீழ்ந்துள்ளன.
தள்ளாடி முகாமினுள் வீழ்ந்த ஷெல்லினால் இரு படையினர் படுகாயமடைந்ததுடன் முகாமினுள்ளும் சேதங்களேற்பட்டுள்ளன.
காயமடைந்த படையினர் இருவரும் மன்னார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர்களில் ஒருவர் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
வீரபுரத்தில் விமானப்படையினரின் காவல் நிலைகள் மீது புலிகள் தாக்குதல் [19 - December - 2007]
* 5 பேர் பலி; அண்டிய பகுதிகளில் பதற்றம் வவுனியா, வீரபுரம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ஐந்து விமானப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவுக்கு மேற்கே செட்டிகுளத்திற்கு முன்பாகவுள்ள வீரபுரம் பகுதியிலேயே விமானப்படையினரின் பாதுகாப்பு நிலைகள் மீது நேற்று அதிகாலை 1.30 மணியளவில் விடுதலைப் புலிகள் இந்தத் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சில மணிநேரம் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் ஐந்து விமானப்படையினர் கொல்லப்பட்டதாகவும் ஏனையோர் அருகிலுள்ள சிங்களக் குடியேற்றப் பகுதிக்குள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.
சிங்களக் குடியேற்றப் பகுதியின் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த விமானப் படையினர் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இத்தாக்குதலில் 40 மில்லி மீற்றர் ஷெல் செலுத்திகள் மற்றும் வெடிபொருட்களுட்பட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.
இந்தத் தாக்குதலையடுத்து நேற்றுக் காலை வீரபுரம் பகுதியில் படையினர் நீண்டநேரத் தேடுதலை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, வீரபுரத்தை அண்டிய பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மழை, வெள்ளத்தால் இடம்பெயர்வு
[19 - December - 2007
* `இன்று காலநிலை ஓரளவு சீரடையும்' டிட்டோகுகன்
கடும் மழையாலும் வெள்ளத்தாலும் கிழக்கு மாகாணத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கத்தால் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி அதிகரித்துள்ளதே வெள்ளப் பெருக்கிற்கு காரணமாகும்.
கிழக்கில் நெற்செய்கை நிலங்களை அதிகமாகக் கொண்ட அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை அம்பாறை மாவட்டத்தில் 22,612 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக தேசிய இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ரம்யா சிறிவன்ச நேற்று தெரிவித்தார்.
இடம்பெயர்ந்தோர் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
வெள்ளத்தால் சுமார் 400 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கிவிட்டன.
மலையகத்தில் நுவரெலியாவில் மண்சரிவால் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் 80 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இரண்டொரு நாட்களாக நிலவிவந்த மழையுடன் கூடிய காலநிலை இன்று புதன்கிழமை காலையளவில் பெரும்பாலும் சீரடைந்துவிடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கருகில் வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த தாழமுக்கம் காரணமாகவே கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவியதாகவும், எனினும், தாழமுக்கம் இலங்கையைக் கடந்து செல்வதால் புதன்கிழமை காலைப்பொழுது முதல் காலநிலை பெரும்பாலும் சீரடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான எஸ்.எச்.காரியவசம் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காரணமாகவே இவ்வாறான காலநிலை நிலவி வருவதாகவும், இதன்போது மழை மட்டுமல்லாது, சுழல் காற்று போன்ற பலத்த காற்றும் வீசக்கூடுமென்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த ஓரிரு தினங்களாக வடக்கு, கிழக்கு, மேற்கு என பல பிரதேசங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவியபோதிலும், இன்று காலைமுதல் நிலமை சீரடைந்து விடுமென்று பெரும்பாலும் எதிர்பார்ப்பதாகவும் காரியவசம் மேலும் தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டின் இன்றைய உண்மை நிலைவரங்களை தென்னிலங்கை மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறுவேன்
[19 - December - 2007]
* அராலியில் பத்தேகம சமிந்த தேரர் யாழ். குடாநாட்டு மக்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பதுயரங்களை தென்னிலங்கை மக்களுக்கு உண்மைத்தன்மையுடன் எடுத்துக் கூறி சமாதான முயற்சிகளை மீண்டும் உருவாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்னாலான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தென் பல்கலைக்கழக துணை வேந்தருமான அதிவண. பத்தேகம சமிந்த தேரர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் இரு நாட்கள் நடைபெற்ற இலங்கையின் சமாதானம் தொடர்பான மதத் தலைவர்களின் சர்வதேச மகாநாட்டில் கலந்து கொள்ள வந்த பத்தேகம தேரர் அராலிப் பகுதிக்குச் சென்று அப்பகுதி மக்களைச் சந்தித்தார். அங்கு அம்மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
சுயாதீன மனித உரிமைகள் அமைப்பின் வட மாகாணப் பணிப்பாளர் எஸ்.மோகனின் ஏற்பாட்டில் அராலிக்குச் சென்ற பத்தேகம தேரர் அங்கு மேலும் தெரிவித்ததாவது;
"சமாதானத்தை விரும்புபவர்கள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது இந்நாட்டு மக்கள் தொகையில் 33 சதவீதம்.
யதார்த்தத் தொடர்புகளை வைத்து யுத்தத்தை நடத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர். அவர்கள் இந்நாட்டு மக்களின் தொகையில் சுமார் 42 சதவீததத்தினர். எஞ்சியுள்ள 25 சதவீதத்தினர் நாம் எப்படி வாழ்ந்தாலும் சரி அதாவது, யுத்தம் நடந்தாலும் சரி சமாதானம் மலர்ந்தாலும் சரி நானிருக்க வேண்டும், எனது குடும்பம் இருக்க வேண்டும் அல்லது வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று அங்கு வசதிகளுடன் வாழுவோம் எனும் மனப்பாங்கில் இருக்கின்றனர்.
யாழ்ப்பாண மக்களின் துன்ப துயரங்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பார்த்தும் கேட்டும் அறிந்தவற்றைவிட இங்கு நேரில் வந்து பார்க்கின்ற போது அது மிகவும் மோசமாகத்தான் இருக்கின்றது.
ஒரு காலகட்டத்தில் மாடமாளிகைகள், கோபுரங்கள், என்று நிறைந்து காணப்பட்ட இந்த தேசம் இன்று கொடூரயுத்தத்தின் எச்சங்களாக இருப்பதை நான் நேரில் பார்க்கின்றேன்.
இந்நிலையை நேரில் பார்த்த நான் தென்னிலங்கையிலிருந்து வந்தவன் என்ற ரீதியில் அதுவும் பொறுப்பான ஒரு மதத் தலைவர் என்ற ரீதியில் இங்கு என்ன நடக்கின்றது என்பதை சிங்கள மக்களுக்கும் கொழும்புத் தலைமைக்கும் எடுத்துக் கூறுவேன்.
இனப்பிரச்சினை தீர்ந்து விட வேண்டுமென்று இலங்கைப் பாராளுமன்றத்தில் மாத்திரமன்றி, உலகம் முழுவதிலும் குரல் எழுப்பி வந்தவன் என்ற ரீதியில் நீங்கள் எனக்குத் தரும் இந்தச் செய்தியை இங்குள்ள உண்மைகளை தென்னிலங்கை திரும்பியதும் நிச்சயம் அங்கு எடுத்துக் கூறுவேன்.
உங்களுடைய குழந்தைகள், உங்களுடைய சமூகம் படுகின்ற துன்ப துயரங்களுக்குத் தீர்க்கமானதொரு தீர்வுகாண என்னாலான உதவிகளைச் செய்ய எந்நேரமும் தயாராகவிருக்கிறேன். உங்கள் துன்ப துயரங்கள் நீங்கி நிரந்தர சமாதானமும் சாந்தியும் ஏற்பட மும்மணிகளின் ஆசிர்வாதம் கிட்டுவதாக" என்றார்.
மொனராகலைப் பகுதியில் 10 வயதிற்கு மேற்பட்ட தமிழர்களின் புகைப்படங்களை சமர்ப்பிக்க பணிப்பு
[19 - December - 2007]
* `அப்பட்டமான மனித உரிமை மீறல்;' அரவிந்குமார் விசனம் மொனராகலைப் பகுதியில் வாழும் 10 வயதிற்கு மேற்பட்ட தமிழர்களின் புகைப்படங்களையும் மொனராகலை காவல்நிலைய குற்றப்புலனாய்வுத் துறையிடம் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருப்பது அப்பட்டமான இன ஒடுக்குமுறையும், பகிரங்க மனித உரிமையை மீறும் செயல் என்று ஊவா மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் ஊவா மாகாண அமைப்பாளருமாகிய அ. அரவிந்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது;
"மொனராகலைப் பகுதியிலுள்ள முப்பனாவள்ளி, மரகல, குமாரதொல, நக்கல,உலந்தாவ ஆகிய தோட்டங்களில் வசிக்கும் 10வயதிற்கு மேற்பட்ட சகல தமிழர்களின் புகைப்படங்களையும் தமது சுயவிபரத்தோடு மொனராகலை காவல் நிலைய குற்றப்புலனாய்வு துறையினரிடம் காலதாமதமின்றி ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்டவர்களினால் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
இதில் சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள்,முதியோர் என பாரபட்சமின்றி அனைவரும் புகைப்படங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் அவ்வாறு செய்ய தவறின் கடுமையான தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும் எனவும் அச்சுறுத்தப்பட்டிருப்பதாகவும் அங்குள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒன்றும் அறியாத அப்பாவி சின்னஞ் சிறார்கள் கூட இந்த அவலத்திற்கு உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்கள். இது தமிழ் இனத்தையே கேவலப்படுத்தும் செயல் மாத்திரமல்லாது உளரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மறைமுகமான அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
குற்றப்புலனாய்வு துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்படப்பிடிப்பாளர்கள் தோட்டவாரியாக சென்று நபர் ஒருவருக்கு தலா ரூபா. 60/= கட்டணம் அறவிடப்படுவதாகவும் தோட்டத்தில் தொழில்புரியும் குடும்பத்தவரிடம் இருந்துஅவர்களின் மாதாந்த வேதனத்திலிருந்து அறவிடப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.
வருமானமின்றி பொருளாதார சுமையில் சிக்குண்டிருக்கும் தோட்டப்புற மக்களுக்கு இது சுமக்க முடியாத சுமை என்றும் தமிழ்மக்கள் மாத்திரம் இவ்வாறு வேறாக அடையாளமிடப்பட்டிருப்பது பெரும்பான்மை இனமக்கள் மத்தியில் வாழும் தமக்கு பெரும் அசௌகரியத்தையும் அவர்கள் தங்களை சந்தேகக்கண்ணோடு பார்க்கும் நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அங்கு வாழும் சிங்கள, முஸ்லிம் இனத்தவர்களுக்கு இவ்வாறான அவலம் இல்லையெனவும் தம்மை பயங்கரவாதிகள் என அடையாளப்படுவதற்கான ஒரு முனைப்பே தவிர இதில் வேறெதுவும் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் கிழமைகளில் மொனராகலை பகுதியின் பாராவில மற்றும் கும்புக்கன் தோட்டத்தில் வாழும் சுமார் 1500 நபர்களின் புகைப்படங்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. தமிழன் என்றால் எதையும் செய்யலாம். கேட்பதற்கு ஆளில்லை என்ற எதேச்சதிகாரி போக்கையே இது வலியுறுத்துகின்றது. மேலும், இவ்வாறான செயற்பாடுகள் இதுவரையிலும் மலையகத்தில் ஏற்படவில்லை.
இது ஏனைய பகுதிகளுக்கும் ஒரு கசப்பான முன் உதாரணமாக இருக்கப்போகிறது என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்திருக்கின்றது.
மொனராகலை மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் தமிழர்கள் வாழ்ந்தாலும் இவர்கள் அனைவரும் அரசியல் அநாதைகளாக வாழ்கின்றனர்.
இவர்களை காப்பது நம் அனைவரினதும் தார்மீக கடமையாகும். எனவே, இவ்விடயம் தொடர்பாக அனைத்து மலையக தலைமைகளும் அரசியல் தொழிற்சங்க வேறுபாடுகளை மறந்து எமது சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இவ் அவலத்தை போக்க உடனடியான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றிவளைப்புகள், அநாவசிய கைதுகள், போன்றவற்றோடு ஒப்பிடுகையில், அவர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைவிட இது வித்தியாசமாகவுள்ளது. இது முழு இனத்துக்கும் ஒரு அழுத்தத்தை கொடுத்து, உளரீதியாக அவர்களை முடக்கும் ஒரு திட்டமாகவே இதை கருதவேண்டியுள்ளது. எவராலும் நியாயப்படுத்த முடியாத இச் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளமை அப்பட்டமான இன ஒடுக்கலாகும்.

No comments: