Wednesday, 16 January 2008

ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்குமாறு அரசிடம் வலியுறுத்த வேண்டும் சர்வதேச சமூகத்திடம் நடேசன் வேண்டுகோள்

22-01-2002----------------16-01-2008

Posted on : Wed Jan 16 10:35:00 2008 .
ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்குமாறு அரசிடம் வலியுறுத்த வேண்டும் சர்வதேச சமூகத்திடம் நடேசன் வேண்டுகோள்
ஈழத்தமிழர் பிரச்சினையை, சர்வதேச சமூகத்தின் உதவியுடன் சுமுகமாக அமைதியாக தீர்க்கமுடியும் என்று நாங்கள் இப்போதும் உறுதியாக நம்புகின்றோம். எனவே சர்வதேச சமூகம் தலையிட்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசும் கடைப்பிடிக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.ஸிக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேச சமூகத்தின் உதவியுடன் சுமுகமாக அமைதியாக தீர்க்கப்பட முடியும் என்று விடுதலைப் புலிகள் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு குறித்து புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் பி.பி.ஸிக்கு செவ்வி ஒன்றினை வழங்கியிருக்கிறார்.அதில் நடேசன் தெரிவித்தவை வருமாறு:கேள்வி: போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்த நிலையில் முழுமையான போர் தொடங்கக் கூடிய நிலையுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் தஸநாயக்க கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.வடக்கில் அரச படைகளின் தாக்குதல்கள் தொடரப்படும் நிலையில் தெற்கில் இதுபோன்ற சம்பவங்கள் தொடருமா?பொதுமக்கள் மற்றும் பொருளாதார இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவீர்களா?பதில்: தெற்கில் நடைபெறும் சம்பவங்களில் நாங்கள் ஈடுபடவில்லை. அதில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுவதை நாங்கள் முழுமையாக மறுக்கின்றோம்.பொருளாதார மற்றும் சிவிலியன்கள் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தமாட்டோம். ஆனால் இராணுவ இலக்குகள் மீது மட்டுமே தாக்குதல்கள் நடத்துவோம் என்றார்.கேள்வி: போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசை விட புலிகள் தரப்புத்தான் அதிகமாக மீறியுள்ளது எனப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளதே? புலிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஆறாயிரம் தடவைகள் மீறியுள்ளனர் என்று போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர் கூறியுள்ளனர் இந்நிலையில் அந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீங்கள் முழுமையாகக் கடைப்பிடிக்கப் போவதாக எவ்வாறு கூறுகின்றீர்கள்?பதில்: விடுதலைப் புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையினை அதிகளவில் மீறியிருக்கின்றனர் என்று கூறப்படும் எண்ணிக்கை இலங்கை அரசு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் அளித்த முறைப்பாடுகளே. கண்காணிப்புக் குழுவால் அளிக்கப்பட்ட தீர்ப்புகள் அவை அல்ல.போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவே மீறல்களைப் பதிவு செய்வதே முறையாகும். ஆனால் கள நிலைவரங்களைப் பிரதிபலிக்கவில்லை என்ற காரணத்தினால் கண்காணிப்புக்குழு, பதிவு செய்யும் நடைமுறையை கைவிட்டது.அரச படைகளால் இழைக்கப்பட்ட மீறல்களின் பாரிய தன்மை எண்ணிக்கையைப் பார்த்தால் போர்நிறுத்த ஒப்பந்தமீறல்கள் எந்த அளவுக்கு இலங்கை அரச தரப்பால் மீறப்பட்டுள்ளன என்று புரியும்.கேள்வி: போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவதற்குக் காரணமாகவிருந்த தற்போதைய இராணுவ நடவடிக்கைகள், விடுதலைப் புலிகள் மாவிலாறு அணையை மூடியதன் விளைவாகவே தொடங்கின என்று ஒரு கருத்து நிலவுகின்றதே. இது குறித்து என்ன கூறுகின்றீர்கள்?பதில்: மாவிலாறு அணைப் பிரச்சினை என்பது இருவேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்களிடையே ஏற்பட்ட சிறு தகராறு. அதைப் பேச்சு மூலம் தீர்த்திருக்கலாம் உண்மையில் அது பேச்சின் மூலம் தீர்க்கப்படும் நிலையில்தான் இருந்தது.அதனை இராணுவத் தாக்குதலுக்கான வாய்ப்பாக இலங்கை அரசுதான் பயன்படுத்திக் கொண்டது.மாவிலாறு திறந்துவிடப்பட்ட பின்னரும் அரசு இராணுவ நடவடிக்கையினைத் தொடர்ந்தது என்று பல பகுப்பாய்வாளர்களும் கூறியிருக்கிறார்கள்.

No comments: