Sunday, 20 January 2008

பொதி தயார்! கழுதை(கள்) யார்??


பீதி அடைந்த மாணவக் குழந்தைகள்! பதறியோடும் மக்கள்!!
கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விமானக்குண்டு வீச்சின்.... காட்சிகள்

கொழும்பு தினக்குரல் செய்திகள்


ஜனாதிபதியிடம் தீர்வுப் பொதி புதன்கிழமை கையளிப்பு
[20 - January - 2008]
* சர்ச்சைக்குரிய விடயங்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு ஏ.ஏ.மொஹமட்அன்ஸிர்
`மற்றொரு பிழையான ஆரம்பத்தை நாங்கள் பார்க்க விரும்பவில்லை, யென்ற சர்வதேச சமூகத்தின் கடுமையான எச்சரிக்கையின் மத்தியில் எதிர்வரும்
புதன்கிழமை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இனநெருக்கடிக்கு தீர்வு காணும் யோசனைகளடங்கிய இறுதி அறிக்கையை ஜனாதிபதி மகிந்த
ராஜபக்‌ஷவிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
தீர்வு யோசனையை தயாரிப்பதற்காக இதுவரை 61 அமர்வுகளை நடத்தியிருக்கும் இக்குழு இன்றும் நாளையும் மேலதிகமாக கூடி முடிவு
செய்யப்படாத விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக குழுவின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையை புதன்கிழமை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க முடியுமென நான் எதிர்பார்க்கிறேன். அதேசமயம்
உடனடியாக தீர்வுகாணப்பட வேண்டிய சர்ச்சைக்குரிய விடயங்கள் அடங்கிய இரண்டாவது ஆவணமொன்றையும் நான் கையளிக்கவுள்ளேன் என்று
கூறிய பேராசிரியர் விதாரண, அரசியலமைப்புக்குட்பட்ட விதத்தில் இந்த சர்சைக்குரிய விடயங்களுக்கு தீர்வு காணமுடியுமென்ற நம்பிக்கையையும்
வெளியிட்டார்.
இதேவேளை உத்தேச அறிக்கையானது குறுகியகாலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நீண்ட காலத்தில் நிறைவேற்றப்
படவேண்டிய செயற்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கியதாக இருக்குமென சர்வ கட்சிக்குழு வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
அதேசேமயம் தற்போதைய அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த வரையறைக்குள்ளேயே யோசனை வரைபு அமையவேண்டுமென ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷ கண்டிப்பான அறிவுறுத்தலை வழங்கியிருப்பதால் சர்வகட்சிப்பிரதிநிதிகள் குழுவும் 13 ஆவது திருத்தத்திற்கு உட்பட்டே யோசனைகளை
தயாரித்துள்ளபோதும் சர்ச்சைக்குரிய விடயங்களை அதாவது 13 ஆவது திருத்தத்திற்குள் உட்புகுத்தப்படாத விடயங்களை தனியான ஆவணமாக
கையளிப்பதென தீர்மானித்துள்ளது.
உத்தேச தீர்வு யோசனை மாகாண மட்ட அதிகாரப்பரவலாக்கத்தையே அதிக உயர்ந்தபட்ச அலகாக கொண்டிருக்கும் நிலையில் மாகாணங்கள்
நேரடியாக நிதிகளைப் பெற்றுக் கொள்ளும் அதிகாரம், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்தல், தேர்தல் முறைமை, சிறுபான்மை சமூகங்கள்
செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு அதிகளவு அதிகாரங்களை பரவலாக்குதல், நிறைவேற்று ஜனாதிபதிமுறைமை ஒழிப்பு, பாராளுமன்றத்திற்கு அதிக
அதிகாரங்களை வழங்குதல், தமிழ்மொழி அமுலாக்கம், மாகாணங்களுக்குரிய பொலிஸ், காணி அதிகாரங்களை பகிர்ந்தளித்தல் போன்ற விடயங்களில்
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவால் இதுவரை இணக்கப்பாடு காண முடியவில்லை. ஆதலால் இவற்றை தனியான ஆவணமாக கையளிப்பதென
சர்வகட்சிக்குழு தீர்மானித்திருக்கிறது. அதேசமயம் இந்தச் சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்கள் ஆணையைப்
பெற்றுக் கொள்ளுமாறும் குழுவினர் பரிந்துரை செய்யவுள்ளனர்.
இதேவேளை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக
வியாழனன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் டாக்டர்
றோவல்ஸ், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் சிபார்சுகள், இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் உரிமைகளைப்
பாதுகாப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகளுக்கு அப்பால் செல்ல வேண்டியது முக்கியமானது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன் சர்வதேச சமூகம் இதனை மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு காத்திருப்பதாகவும் மற்றொரு தவறான ஆரம்பத்தைப் பார்க்க நாங்கள்
விரும்பவில்லை எனவும் கூறியிருந்தார்.
ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் அழுத்தத்துக்கு சர்வகட்சிப்பிரதிநிதிகள் குழு உட்பட்டிருப்பதாக வெளியான செய்திகளையடுத்தே பிரிட்டனிடமிருந்து
இத்தகைய எச்சரிக்கை வெளியாகியிருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இந்திய பிர்லா கம்பனியிடம் ஒப்படைப்பு
[20 - January - 2008]
உலகின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான இந்திய பிர்லா கம்பனி இலங்கையின் காங்கேசன்துறை சீமெந்துத்
தொழிற்சாலையைப் பொறுப்பெடுக்கவுள்ளதாக கட்டுமான மற்றும் பொறியியல் துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இந்நிறுவனத்துடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் உற்பத்தி வேலைகள்
ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேற்படி நிறுவனத்தின் உயரதிகாரிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவைச் சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
`முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் நிபந்தனைகளுக்கமைவாகவே அவர்கள் சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வார்கள். அதற்காக நாம் அவர்களுக்கு அந்த
நிலத்தினை குத்தகைக்கு வழங்க வேண்டும். இந்த நிறுவனம் உலகிலுள்ள சீமெந்து உற்பத்தி நிறுவனங்களின் வரிசையில் 11 ஆவது இடத்தில்
இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் முதலாவது சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலையான காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலை 1980 களில் நாட்டில் ஏற்பட்ட மோதல்
நிலைமைகளின் காரணமாக மூடப்பட்டது.
மீண்டும் தொழிற்சாலையில் சீமெந்து உற்பத்திகள் ஆரம்பிக்கப்படுமானால் இலங்கையின் சீமெந்துத் தேவையில் 40 வீதத்தினை பூர்த்தி
செய்யக்கூடியதாக இருக்குமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தனமல்விலவில் 10 பேர் படுகொலை!
காட்டுக்குள் மேலம் சடலங்கள்? [19 - January - 2008]
* கிளைமோர் தாக்குதலின் தொடர்ச்சியாக சம்பவங்கள் மொனறாகல தனமல்வில பகுதி யில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இரு சம்பவங்களில் பத்துப் பேர் வரை
கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து, அச்சம் காரணமாக அந்தப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறி வருவதுடன் காட்டுப் பகுதியில் மேலும் சடலங்களிருக்கலாமெனவும்
கிராமவாசிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து மொனறாகல பகுதிக்கு மேலதிக படையினர் அனுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தீவிர தேடுதல்களும்
முடுக்கி விடப்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை காலை மொனறாகல ஒக்கம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பயணிகள் பஸ் மீதான கிளேமோர் தாக்குதலின் தொடர்ச்சியாகவே
இந்தச் சம்பவங்கள் நடைபெறுவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் குறித்து மேலும் தெரிய வருவதாவது;
ஒக்கம்பிட்டிய பகுதியில் பயணிகள் பஸ் மீது தாக்குதல் நடத்தியவர்கள், அதனையண்டிய காட்டுப் பகுதியிலிருந்தே செயற்படுவதாகத்
தெரியவந்ததையடுத்து படையினரும், ஊர்காவல் படையினருமிணைந்து காட்டுப் பகுதியில் பாரிய தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக ஒக்கம்பிட்டியவை அண்டிய தனமல்வில ஹம்பேகமுவ கலவல்கல பகுதியில் நேற்று முன்தினம் தேடுதல்கள் நடைபெற்ற
போது இந்தப் பகுதியில் இனந்தெரியாதவர்கள் சிலர் நடமாடுவதாக படையினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கிராமவாசிகளின் உதவியுடன் இரவு பத்து மணியளவில் படையினரும் ஊர்காவல் படையினரும் கிராமவாசிகள் சிலருடன் காட்டுப்
பகுதிக்குள் சென்ற போது அவர்கள் மீது திடீரென பலத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று கிராமவாசிகள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் மூவர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து படையினரும் பலத்த துப்பாக்கிச் சூட்டை நடத்தவே, தாக்குதல் நடத்தியோர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தேடுதலை இடைநிறுத்திய படையினர் கொல்லப்பட்ட மூவரது சடலத்தை எடுத்துக் கொண்டு படுகாயமடைந்தவர்களுடன்
கிராமத்திற்குத் திரும்பினர்.
படுகாயமடைந்த மூவரும் மொனறாகல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் இருவர் பின்னர் அம்பாந்தோட்டை ஆஸ்பத்திரிக்கு
மாற்றப்பட்டனர்.
இதேநேரம், நேற்றுக் காலை தனமல்வில ஹம்பேகமுவ காட்டுப்பகுதியில் படையினர் தேடுதலை நடத்திய போது மேலும் ஆறு சடலங்களைக்
கண்டுபிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடனேயே இந்த ஆறு சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இவை பின்னர் ஹம்பேகமுவ பகுதிக்கு படையினரால் எடுத்துச் செல்லப்பட்டது. கிராமத்திற்கு இந்தச் சடலங்கள் கொண்டு வரப்பட்டபோது அங்கு
பெருமளவில் மக்கள் கூடவே பெரும் பதற்றமேற்பட்டது.
இந்தச் சடலங்களில் ஊர்காவல் படையைச் சேர்ந்த இருவரதும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரதும் ஆசிரியர் ஒருவரது சடலமும் அடங்கும்.
காட்டுப் பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடத்திய படையினர் அங்குள்ள வாவியொன்றின் அருகிலிருந்து மேலுமொரு சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
எனினும், காட்டுப் பகுதியில் ஆங்காங்கே மிதிவெடிகள், பொறி வெடிகள் வைக்கப்பட்டிருப்பதால் தேடுதல்கள் மிகவும் தாமதமடைவதாக படைத்தரப்பு
தெரிவித்துள்ளது.
கண்ணிவெடிகள், பொறி வெடிகளை அகற்றியவாறே தேடுதல்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தேடுதலுக்காக மேலதிக ஊர்காவல்
படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதேநேரம், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாயிருக்கலாமென கிராமவாசிகள் தெரிவிக்கின்ற போதும் பொலிஸார் அதனை
உறுதிப்படுத்தவில்லை.
தேடுதல் நடத்திய படையினர் இந்தப் பகுதிகளில், கைவிடப்பட்ட நிலையிலிருந்த 14 சைக்கிள்களையும் ஒரு மோட்டார் சைக்கிளையும்
கைப்பற்றியுள்ளதாக வனபரிபாலனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் யாருடையது என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
தேடுதலின்போது கண்ணிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது. காடுகளுக்குள் மறைந்திருப்பவர்கள் தாக்குதல் நடத்தலாமென்பதால் தேடுதல்கள் மிக
மெதுவாகவே நடைபெறுகிறது.



மக்கள் வெளியேற்றம்
சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து, அச்சம் காரணமாக மக்கள் வெளியேறி வருகின்றனர். அந்தப் பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கைகளில்
ஈடுபட்டவர்களே வீடு வாசல்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்கின்றனர்.
மக்கள் வெளியேறுவதைத் தடுக்க படையினரும், பொலிஸாரும் முயல்கின்ற போதும் அச்சம் காரணமாக மக்கள் இடம்பெயர்கின்றனர்.
இதேநேரம் சம்பவம் பற்றி அறிந்து இந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்து சில கிலோமீற்றர் தூரத்திலுள்ள, பலாங்கொடை கல்வி வலயத்தைச் சேர்ந்த மெதபெத்த மகா வித்தியாலயத்திற்கு வந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அவசர அவசரமாகக் கூட்டிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அந்தப் பாடசாலை மூடப்பட்டுள்ளது. இதனால் ஊவா மாகாணத்தின் எல்லையிலும் (சப்ரகமுவ மாகாணம்) பதற்றமேற்பட்டுள்ளது.
சடலங்கள் மீட்கப்பட்டதையடுத்து மொனறாகல கிராமப் பகுதிகளின் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. வெளியிடங்களிலிருந்தும்
அங்கு படையினர் அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: