Wednesday 23 January, 2008

எக்காலமும் இணைக்க முடியாத வடக்கும் தெற்கும்

எக்காலமும் இணைக்க முடியாத வடக்கும் தெற்கும்



















கொழும்பு தினக்குரல் செய்திகள்
கிழக்கில் மாகாணசபைத் தேர்தல் வடக்கில் இடைக்கால நிர்வாகசபை
[22 - January - 2008]
* 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழு யோசனை -எம்.ஏ.எம்.நிலாம், ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்

20 வருடங்களுக்கு முன்னர் கைச் சாத்திடப்பட்ட இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கையை அடுத்து மாகாண சபைகளை
அறிமுகப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற யோசனையை
சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக்குழு நாளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவிருக்கும் அறிக்கையில் முன்வைக்கவிருக்கிறது. இதன்
கீழ் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும். பின்னர் இரண்டாவது கட்டமாக மாகாண சபைகளுக்கு மேலும் கூடுதல்
அதிகாரங்களை வழங்குவதற்கான யோசனையையும் அக்குழு தெரிவித்திருக்கிறது.
நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் நிர்மாண, பொறியியல் சேவைகள் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன
இத்தகவல்களை வெளியிட்டார்.
கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடிய சூழ்நிலை உருவாகும் வரை அங்கு
இடைக்கால நிருவாக சபையொன்றை ஏற்படுத்தவேண்டும் என்றும் சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக்குழு யோசனை முன்வைத்திருக்கிறது என்றும்
அமைச்சர் குறிப்பிட்டார்.
அவர் செய்தியாளர் மகாநாட்டில் மேலும் கூறியதாவது;
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் கூட்டம் நடைபெற்றதாகவும் அதில் 13 ஆவது அரசியல் திருத்தத்துக்கு
அமைவாக கூடுதல் அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய இடைக்காலத் தீர்வைக் கொண்டுவருவதற்கு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக்
கட்சிகளும் உடன்பாடு கண்டதாகவும் ஹெல உறுமயக் கட்சியும் இதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர்
மாநாட்டில் தெரிவித்தார்.
முன்வைக்கப்படவிருக்கும் தீர்வு யோசனையின்படி, அரசிலயமைப்பு மாற்றமோ அரசியலமைப்புத் திருத்தங்களோ எதுவும் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏற்கனவே, கொண்டு வரப்பட்டிருக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைவாகவே யோசனைகள்
முன்மொழியப்பட்டுள்ளன. இதனடிப்படையில் அதிகாரப் பரவலாக்கல் யோசனையை அமுல்படுத்துவதற்கான அறிவிப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
இவ்வார இறுதியில் அல்லது அடுத்தவார முற்பகுதியில் அறிவிக்கவுள்ளார்.
தீர்வு யோசனைப் பொதியை பேராசிரியர் திஸ்ஸ விதாரண நாளை புதன்கிழமை ஜனாதிபதியிடம் கையளித்தவுடன் நாளை இரவே அதனை
நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயவிருக்கின்றார்.
தீர்வு யோசனையை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற கருத்துப்
பிழையானதாகும். இதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
தீர்வுத்திட்டத்தை இரண்டு கட்டங்களில் நடைமுறைப்படுத்தும் விதத்திலேயே யோசனைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டத்தில்
இடைக்காலத்தீர்வை வழங்கி வடக்கிலும், கிழக்கிலும் கூடுதல் அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய மாகாண சபை அதிகாரத்தை அந்த மக்களிடம்
வழங்கப்படவுள்ளது.
இந்த மாகாண சபைகள் மூலம் இரண்டு மாகாணங்களிலும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலையில் அடுத்த கட்டமான இறுதித் தீர்வுத்
திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவிருக்கின்றது. இந்த அடிப்படையிலேயே தீர்வு யோசனைகள்
முன்மொழியப்பட்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமளித்தார்.
இந்தத் தீர்வு யோசனைகள் குறித்து இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் விளக்கிக்கூறப்பட்டு அவற்றின் இணக்கப்பாடும் எட்டப்பட்டிருக்கின்றது.
வடக்கில் அமைதிச்சூழல் ஏற்படும்வரை அங்கு இடைக்கால நிர்வாக அலகை ஏற்படுத்தி அதிகாரத்தை வழங்கும் நிலை உருவாகியிருப்பதாலேயே தீர்வு
யோசனைகள் இடைக்கால யோசனையாக முன்வைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன இங்கு சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் அவசரப்பட்டு விலகிக் கொண்டமை புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை எனத்
தெரிவித்த அமைச்சர் ராஜித அதன் விளைவாகவே உடனடியாக அரசியல் தீர்வை அரைகுறையாக முன்வைக்க வேண்டிய நிலைக்கு அரசு
தள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார்.
போர்நிறுத்த உடன்படிக்கை ஒரு வெற்றுக் கடதாசி தான். ஆனால், தேவையில்லாத ஒரு விவகாரத்தை அரசு விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலைமையிலேயே அரசியல் தீர்வுத் திட்டத்தை தாமதமின்றி முன்வைக்குமாறு அமைச்சர் கரு ஜயசூரிய தலைமையிலான எமது அணி
ஜனாதிபதியிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது எனவும் தெரிவித்தார்.
இணக்கப்பாடு
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தீர்வு யோசனையை அமுல்படுத்தும்வரை இடைக்கால ஏற்பாடாக உடனடியாக அமுலுக்குவரும் வகையில் வடக்கில்
இடைக்கால நிர்வாக சபையினையும் கிழக்கில் மாகாண சபைக்குத் தேர்தலையும் நடத்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் இணக்கம்
காணப்பட்டுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை வடக்கு, கிழக்கில் அமுல்படுத்தினால் இடைக்கால ஏற்பாடாக இதனை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைத்து அங்கு மிகப்பரந்துபட்டளவில் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும்
சிபார்சு செய்திருந்தது.
இவ்வதிகாரங்கள் மத்திய அரசினால், தான் விரும்பிய நேரத்தில் பறிக்க முடியாது. அம்மாகாணங்களை தனது அதிகாரத்தினால் கட்டுப்படுத்த முடியாது.
அம்மாகாணங்கள் சர்வதேச சமூகத்திடமிருந்து விரும்பிய விதத்தில் நிதியைப் பெறலாம் என்பன உட்பட பல அதிகாரங்கள் வட, கிழக்கு
மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் இனநெருக்கடிக்கான தனது தீர்வு யோசனையில் முன்வைத்திருந்தது.
ஆனாலும், 13 ஆவது திருத்தத்தை இவ்வதிகாரங்கள் மீறிச் சென்றுள்ளதை அறிந்துகொண்ட அரசாங்கம் 13 ஆவது திருத்தத்திற்கு உட்பட்டே
நெருக்கடிக்கான தீர்வு காணப்பட வேண்டுமெனவும் பணித்திருந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கூடிய சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு, இனநெருக்கடிக்கான தீர்வு யோசனையை அமுல்படுத்தும் வரை இடைக்கால ஏற்பாடாக, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வடக்கில் இடைக்கால நிர்வாக சபையினையும் கிழக்கில் தேர்தலையும் நடத்த இணக்கம்
கண்டுள்ளது.
இதனை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியதுடன் இந்த யோசனையை ஜாதிக ஹெல உறுமயயினரே முன்மொழிந்ததாகவும் மேலும்
சுட்டிக்காட்டியது.
கொழும்பு வீரகேசரி செய்திகள்
தீர்வு யோசனைகள் புலிகளுக்கல்ல சிறுபான்மை மக்களுக்கேயாகும் - ஜனாதிபதி
1/23/2008 வீரகேசரி இணையம்
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுயோசனைகள் புலிகளுக்கு அல்ல; சிறுபான்மை மக்களுக்காகும். தமிழர் , முஸ்லிம்களுக்கு
மாத்திரமன்றி சிங்களமக்களுக்கும் உரியதீர்வை நாம் முன்வைக்க வேண்டும். அதேவேளை, பயங்கரவாதத்தை வேறு மார்க்கத்திலேயே
கையாளவேண்டியுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளை உடனடியாகத் தடை செய்யும் நோக்கம் எதுவும் கிடையாது. அவர்களின் நடவடிக்கைகளை அவதானித்து வருகிறோம்.
என்றும் கூறிய ஜனாதிபதி, இராணுவ ரீதியான தீர்வில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இதனை நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இனப்பிரச்சினைக்கு
அரசியல் தீர்வே இறுதியானது என்ற நம்பிக்கை எனக்குண்டு. எனினும் பயங்கரவாதத்தை இராணுவ ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும்
சொன்னார்.
தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள், இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு செய்திநிறுவனங்களைச் சேர்ந்த
ஊடகவியலாளர்கள் ஆகியோர் மத்தியில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற
இச்சந்திப்பில் ஊடகவியலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். தீர்வு யோசனைகள்
இதேவேளை சர்வ கட்சி குழுவினர் யோசனைகள் (இன்று) நாளை கையளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவசர அவசரமாக இன்று
ஊடகவிலாளர் மாநாட்டை நீங்கள் கூட்டுவதன் நோக்கம் ஏதேனும் உள்ளதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த
ஜனாதிபதி; அவ்வாறு நோக்கம் எதுவும் இல்லை. வழமையான சந்திப்பு இது. கடந்த இரண்டு மாதங்களாக ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த
முடியவில்லை. அது ஒன்றே காரணம். இந்த மாநாட்டில் நீங்கள் எதைக்கேட்கவேண்டும் எதைக் கேட்கக்கூடாது என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்றார்.
கேள்வி: சர்வக்கட்சிக்குழுவின் யோசனைகள் நாளை (இன்று) சமர்ப்பிக்கப்படும் என்று நம்புகின்றீர்களா? சில ஊடகங்கள் மேலும் இருவார காலதாமதம்
ஏற்படும் என்று கூறியுள்ளனவே என்று கேட்ட கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கையில்;
எனக்குமே அது குறித்து கூறமுடியாதுள்ளது. யோசனைகளை முன்வைக்க வேண்டியது அவர்களின் விடயம். நானும் எதிர்பார்த்த வண்ணமே உள்ளேன்.
அவ்வாறு அவர்கள் முன்வைத்தால் கூடுமானா அளவு விரைவாக அதனை பரிசீலித்து நிறைவேற்றுவேன் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் சர்வகட்சிகுழுவின் யோசனைகள் உண்மையில் புலிகளுக்கு அல்ல. இது அனைத்துப் பொதுமக்களுக்குமாகும். தமிழர்கள்,
முஸ்லிம்களுக்கும் மாத்திரல்ல சிங்களவர்களுக்கும் உரிய தீர்வை நாம் வழங்க வேண்டும். எனவே அதற்கான முழுமையான பொறுப்பு சர்வகட்சிக்
குழுவினரிடமே தங்கியுள்ளது. அதனையே நான் எதிர்பார்த்துக் காத்துள்ளேன். -
யாழ் உதயன் செய்திகள்
Posted on : Tue Jan 22 9:05:00 2008
மொனறாகலையில் ஆயுதங்கள் மீட்பு
மொனறாகலைப் பிரதேசத்தைச் சேர்ந்த தோட்டப் பகுதிகளில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது
வெடிபொருள்கள், ஆயுதங்கள் பல மீட்கப்பட்டுள்ளன என மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.என்.பி.அம்பன்வெல தெரிவித்தார்.மொனறாகலைப் பகுதியிலுள்ள குமாரவத்தை தோட்டத்திற்கும், மரகலை தோட்டத்திற்கும் எல்லைப் புறமாக அமைந்துள்ள கற்குகை ஒன்றிற்குள்
இருந்தே இவை மீட்கப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.கிளைமோர் குண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் 21 டெட்டனேட்டர்கள், 12 கம்பிகள், மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, 9 மில்லிமீற்றர் ரக சன்னங்கள் 46,
ரி56 ரக துப்பாக்கிக்குரிய சன்னங்கள் 146, பட்டரிகள், தூர இடங்களை அவதானிக்கக்கூடிய கருவிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன எனத்
தெரிவிக்கப்படுகின்றது.இத்தேடுதல் நடவடிக்கையின்போது மரகல, சிரிகல, பாலாடுவ, ஜிலோன் ஆகிய தோட்டங்கள் உட்படுத்தப்பட்டன. ஆனால், எவரும் இங்கிருந்து கைது
செய்யப்படவில்லை எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
Posted on : Tue Jan 22 8:55:00 2008
மட்டு உள்ளூராட்சி தேர்தல் இடைக்காலத் தடைவிதிக்க கோரிய மனு உயர் நீதிமன்றத்தால் நேற்று நிராகரிப்பு
கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பிற்போடுவதற்கான இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம்
நேற்று தெரிவித்திருக்கிறது.உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டதை இடைநிறுத்துமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த இரண்டு அடிப்படை
உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பிரதம நீதியரசர் சரத் . என். சில்வா இதனைத் தெரிவித்தார்.மனு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டவேளை சட்டமா அதிபர் எதிர்ப்பை வெளிக்காட்டினார். சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் பிரதிவாதிகளாக
குறிப்பிட்ட அமைச்சர்களினதும் அல்லது தெரிவத்தாட்சி அதிகாரியினதும் பெயர்கள் குறிப்பிடாமல் இந்த மனுவைத் தாக்கல் செய்ய முடியாது.கிழக்கு மாகாணத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யமுடியாமல் விட்டால் அது குறித்து உயர் நீதிமன்றத்திற்கோ அல்லது சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கோ தெரியப்படுத்துமாறும் நீதியரசர் உத்தரவிட்டார். தேர்தல்களில் மோசடிகள் இடம் பெறுமாயின் அது குறித்து நீதிமன்றுக்கு
அறியத்தரவேண்டும். இது குறித்து மனுத்தாக்கல் செய்தால் நீதிமன்றம் விசாரிக்கத் தயாராக உள்ளது என்றார்.இதற்கு அமைய குறிப்பிட்ட மனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளப்பெற்றுக்கொண்டது.
Posted on : Tue Jan 22 8:55:00 2008
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுடப்பட்டு இளைஞன் நேற்றுப் பலி யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் வைத்து நேற்று முற்பகல் 10.30 மணியளவில் 19 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் இனந்தெரியாத
ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட நீதிபதி இ.த.விக்னராஜா சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தினார்.பல்கலைக்கழகத்தின் வடக்குப் பக்க வாசல் ஊடாகச் சென்ற இருவர் பிரஸ்தாப இளைஞனைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர் என விசாரணையில்
தெரிவிக்கப்பட்டது.பிரஸ்தாப இளைஞன் பல்கலைக்கழக மாணவனோ ஊழியரோ அல்லர் என பல்கலைக்கழகத் தரப்பில் விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.இவர் படைத்தரப்பைச் சேர்ந்தவர் அல்லர் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பிரஸ்தாப இளைஞனை அடையாளம் காணக்கூடிய ஆவணங்கள் எவையும் அவர் வசம் இருக்கவில்லை என்று விசாரணையில் கூறப்பட்டது.19 வயது மதிக்கத்தக்க 5 அடி 8 அங்குல உயரமுள்ள இச்சடலத்தை யாழ். ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கும்படியும் சடலத்தை இனங்காண
பத்திரிகையில் தகவல் வெளியிடும்படியும் நீதிபதி யாழ். பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
Posted on : Tue Jan 22 9:05:00 2008
செட்டிபுலம் மீனவர்கள் 16 மாதங்களாகத் தொழிலின்றி பொருளாதார நெருக்கடிக்குள்
கடந்த 16 மாதங்களுக்கு மேலாக வேலணை செட்டிபுலம் மீனவர்கள் கடற்றொழில் செய்ய அனுமதிக்கப் படவில்லை. இதனால் 150 குடும்பங் கள்
பெரும் பொருளாதார நெருக்கடிக் குள்ளும் பட்டினி நிலைக்கும் தள்ளப் பட்டுள்ளனர்.செட்டிபுலம் (வேலணை) கடற் றொழிலாளர் கூட்டுறவுச் சங்க நிர் வாகத்தினர் பிரதேச செயலர் ஊடாக வேலணை கடற்படை பொதுசன தொடர்பு
அதிகாரியின் கவனத்திற்கு இவ்விடயத்தைக் கடிதம் மூலம் அறி வித்துள்ளனர்.அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது;கடந்த 11.08.2006 தொடக்கம் இதுவரை செட்டிபுலம் பகுதி மீனவர் கள் கடற்றொழில் செய்வதற்கு அனு மதிக்கப்படவில்லை.ஏனைய பிரதேசங்களில் குடா நாடு மற்றும் தீவகப் பகுதியில் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.தொழில் அற்ற எமக்கு அரச சமுர்த்தி நிவாரணம் மட்டும் கிடைக் கின்றது. இந்த நிவாரணம் ஒரு சிலசவர்க் காரம், தேயிலை போன்ற பொருள் களை மட்டுமே கொள்வனவு செய்யப் போதுமானது.எமது வறுமையைப் போக்க நலி வுற்றோர் நிவாரணம் அல்லது மீன் பிடித் தொழில் பாதிப்பு நிவாரணம் வழங்க வேண்டும்.கடந்த ஒன்றரை வருட காலமாக எமது பிரச்சனை தொடர்பாக பிரதேச செயலருக்கும், அரசாங்க அதிப ருக்கும் அறிவித்துள்ளோம். எனவே எமது வறுமையை போக்க நிவாரணம் வழங்கி உதவ வேண்டும் என்றுள்ளது.
அரசாங்கத்தின் வீண் விரயங்களே பொருட்களின் விலை அதிகரிப்புக்கு காரணம் - ஜே.வி.பி. குற்றச்சாட்டு; வீரகேசரி இணையம்
பயங்கரவாதிகளுக்கு எதிராக எமது படையினர் முன்னெடுக்கும் யுத்தமே அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு
காரணம் என அரசாங்கம் தெரிவிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கத்தின் வீண் விரயங்களே விலை வாசி அதிகரிப்புக்கு காரணம் என்று
ஜே.வி.பி. யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று 23ஆம் திகதி முதல் 29ஆம்
திகதிவரை நாட்டின் பலபாகங்களிலும் நடைபெறும். இந்தவாரத்தை ஆர்ப்பாட்டவாரமாக நாம் பிரகடனப்படுத்தியுள்ளோம் என்றும் அவர் மேலும்
கூறினார்.
கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது:
அரசாங்கம் யுத்தம் தொடர்பாக அர்ப்பணிப்புக்களை செய்யாத போதும் எமது படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு விடுதலை புலி பயங்கரவாதத்தை
தோல்வியின் விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளனர்.
யுத்தம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், படையினருக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எனவே
அத்தியாவசியப் பொருட்களை அதிகரித்து மக்கள் மீது சுமைகளை அதிகரிப்பதை நிராகரிக்கின்றோம். இது எமது படையினரை கொச்சைப்படுத்தும் கருத்தாகும்.
யுத்தத்தை வெல்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை. இன்று மக்கள் விலையேற்றத்தையும் தாங்கிக் கொண்டு ஆதரவு வழங்குகின்றனர். இந்நிலை தொடருமானால் அந்த ஆதரவையும் இழக்க நேரிடும்.
போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா அரசு வெளியேறியமை அனைத்துலக சமூக- த்திற்கு விழுந்த அடி: பா.நடேசன்
[சனிக்கிழமை, 19 சனவரி 2008, 05:33 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
போர் நிறுத்த ஒப்பந்தத்தி- லிருந்து சிறிலங்கா அரசாங்கம் வெளியேறியமை அனைத்துலக சமூகத்திற்கு விழுந்த அடி என்று தமிழீழ விடுதலைப்
புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (13.01.08) அவர்
வழங்கிய சிறப்பு நேர்காணல்:
கேள்வி: சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைபட்சமாக இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியிருக்கின்றது. இந்த ஒப்பந்தத்திலிருந்து
அதிகாரபூர்வமாக வெளியேறுகின்றோம் என்பதனை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் எப்போது அறிவித்திருந்தது?
பதில்: சிறிலங்கா அரசு நேரடியாக எமக்கு அறிவிக்கவில்லை. ஆனால், நோர்வே அரசாங்கத்திற்கு அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.
நோர்வே அரசாங்கமே எமக்கு அவர்களின் இந்த அறிவிப்பை தெரியப்படுத்தியது.
இது தொடர்பாக நாமும் ஓர் அறிக்கையை அண்மையில் என்னைச் சந்தித்த போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவரின் ஊடாக நோர்வே
அரசாங்கத்திற்கு அனுப்பியிருக்கிறோம்.
சிறிலங்கா அரசின் இந்த அறிவிப்பானது தற்போது அதிகாரபூர்வமாக விடப்பட்டிருந்தாலும் அவர்கள் ஏற்கனவே போர் நிறுத்த மீறல்களில்தான்
தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆரம்பம் முதலே குழப்பினர்
போர் நிறுத்தத்திலிருந்து வெளியேறுகின்றோம் என்று அறிவிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரேயே சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த மீறல்களில்
ஈடுபடத் தொடங்கி விட்டது. அது இங்குள்ளவர்களுக்கும் அனைத்துலகத்திற்கும் நன்கு தெரியும்.
போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட காலத்திலிருந்து அந்த ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு சரத்துக்களையும் சிறிலங்கா அரசு
வேண்டும் என்றே மீறி, அதனைக் குழப்புகின்ற நோக்கத்திலேயே செயற்பட்டு வந்தது.
இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடிப்படையாக வைத்து செய்து கொள்ளப்பட்ட பல்வேறு கட்டமைப்புக்களையோ அல்லது இந்த போர் நிறுத்த
ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற எந்தவொரு விடயத்தையும் சிறிலங்கா அரசாங்கம் மீறியே செயற்பட்டிருக்கின்றது. இதனை அனைத்துலக
சமூகம் தற்போது நன்றாக புரிந்து கொண்டுள்ளது.
உதாரணத்திற்கு வடக்கு-கிழக்கிற்கான உடனடி கட்டுமானப்பணிகள் அதாவது "சிரான்" போன்ற அமைப்புக்கள் போர் நிறுத்தத்தை அடிப்படையாக
வைத்தே உருவாக்கப்பட்டன. ஆனால் அவற்றை செயற்பட விடாமல், அவற்றை இழுத்தடித்து அதனை செயலிழக்கச் செய்தது சிறிலங்கா அரசு.
இதனைத் தொடர்ந்து ஆழிப்பேரலை பேரனர்த்தம் எமது தாயகப் பகுதிகளில் ஏற்பட்டபோது சிறிலங்கா அரசுடன் எமது இயக்கம் செய்து கொண்ட
PTOM என்று கூறப்பட்ட ஆழிப்பேரலைப் பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தத்தைக்கூட சிறிலங்கா அரசு வேண்டும் என்றே தங்களின் நீதிமன்றத்தினூடாக
இல்லாமற் செய்தது.
அது மட்டுமல்ல தென்தமிழீழத்தில் குறிப்பாக திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இராணுவ ஒட்டுக் குழுக்களை
வைத்துக்கொண்டு போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டனர். அந்தப் பகுதிகளில் தொண்டு செய்கின்ற அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள்,
பத்திரிகையாளர்களை கடத்தினர்.
அனைத்துலக சமூகத்தின் அழுத்தத்தின் காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சிறிலங்கா அரசாங்கம் கைச்சாத்திட்டாலும் இப்படியான போர் நிறுத்த
மீறல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டே வந்தது. அதன் இறதிக் கட்டமாகத்தான் தற்போது அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்திலிருந்து
விலகுவதாக அறிவித்திருக்கிறது.
சிறிலங்காவின் தன்னிச்சையான போக்கை அனைத்துலகம் நன்றாக உணர்ந்திருக்கிறது
கேள்வி: போர் நிறுத்த ஒப்பந்தத்தில் மூன்று தரப்பினர் அதிகாரபூர்வமாக தொடர்புடையவர்கள். சிறிலங்கா, தமிழீழ விடுதலைப் புலிகள்,
அனுசரணையாளராக வந்த நோர்வே ஆகியனவே அந்தத் தரப்புகளாகும். இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக சிறிலங்கா
அரசாங்கம் ஏனைய இரண்டு தரப்பிற்கும் முதலில் அதிகாரபூர்வமாக அறிவிக்காது இருந்துள்ளது. அதாவது சிறிலங்காவின் இந்த முடிவை, அது
அமைச்சரவை முடிவாக இருந்தாலும் கூட, ஊடகங்களின் ஊடாகத்தான் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. இது எதனை வெளிக்காட்டுகின்றது?
பதில்: சிறிலங்கா அரசின் தன்னிச்சையான போக்கைத் தான் இது வெளிக்காட்டுகின்றது.
தற்போது இந்த தன்னிச்சையான போக்கை உலக நாடுகள் நன்றாக உணர்ந்திருக்கின்றன. ஏனெனில் இணைத்தலைமை நாடுகள் ஒன்றாகக்கூடி
முடிவினை எடுத்திருக்கின்றன. அதாவது, சிறிலங்கா அரசு தன்னிச்சையாக இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினாலும், கிளிநொச்சியில்
உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளினுடனான தொடர்பிற்கு, தாங்கள் அங்கு சென்று வருவதற்கு, தங்களுக்கான வழி வகைகள் இருக்க வேண்டும்
என்பதனை இணைத்தலைமை நாடுகள் கூட்டாக சிறிலங்கா அரசிடம் அதிகாரபூர்வமாக வலியுறுத்தியுள்ளன.
அது மட்டுமல்ல இணைத்தலைமை நாடுகள் இன்னுமொரு விடயத்தையும் வலியுறுத்தியிருந்தன. அதாவது நாங்கள் அதிகாரபூர்வமாக விட்ட
அறிக்கையில் குறிப்பிட்டது போல, நோர்வேயே தொடர்ந்தும் அனுசரணையாளர்களாக இருக்க வேண்டும் என்பதனையும் இணைத்தலைமை நாடுகள்
சிறிலங்கா அரசிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளன.
சிறிலங்கா அரசின் தன்னிச்சையான போக்கு தற்போது மிகவும் துலாம்பரமாக அனைத்துலக சமூகத்திற்கும் நன்றாக தெரிந்திருக்கின்றது என்பதையே
இணைத்தலைமை நாடுகளின் வலியுறுத்தல்கள் காட்டுகின்றன. அதாவது அரசியல் சூழல் தமிழ் மக்களுக்கு சாதகமான நிலையை
ஏற்படுத்தியிருக்கின்றது.
அனைத்துலக நாடுகளுக்கு விழுந்த அடி
கேள்வி: இலங்கையின் இறமையைப் பாதிக்காது ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு என்று அனைத்துலக சமூகம் மீண்டும், மீண்டும் ஒரு விடயத்தை
தெரிவித்து வந்தன. இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து ஒரு தலைபட்சமாக வெளியேறியிருப்பதனை
அனைத்துலக சமூகத்திற்கு விழுந்த ஒரு அடியாக நாங்கள் பார்க்கலாமா?
பதில்: ஆம், உண்மையில் அனைத்துலக நாடுகளுக்கு விழுந்த அடியாகத் தான் இதனைப் பார்க்க வேண்டும். அனைத்துலக சமூகத்தை
உதாசீனப்படுத்துகின்ற ஒரு செயலாகத்தான் இது இருக்கின்றது. அனைத்துலக சமூகம் தற்போது உணரத் தலைப்பட்டிருக்கின்றது என்றுதான் நான்
நினைக்கின்றேன்.
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளோடு போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர். அவர்களோடு
கைச்சாத்திட்டப்பட்ட ஒப்பந்தம் இப்போது வந்துள்ள புதிய அரசாங்கத்தால் ஒரு தலைபட்சமாக முறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக்
கட்சியோ அல்லது சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் இடதுசாரிக் கட்சிகளோ குறிப்பிடத்தக்க
எதிர்ப்பை தெரிவிக்கவில்லையே. இதிலிருந்து தமிழ் மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய விடயம் என்ன?
பதில்: இந்த ஒப்பந்தத்தை நாம் கைச்சாத்திட்டது கட்சிகளுடன் அல்ல. சிறிலங்கா அரசுடன்தான் கைச்சாத்திட்டோம். அது ஐக்கிய தேசியக் கட்சி அரசாக
இருந்தாலும் சரி, அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாக இருந்தாலும் சரி, அல்லது இந்த கூட்டாட்சி அரசாக இருந்தாலும் சரி, நாம் இந்த
ஒப்பந்தத்தில் சிறிலங்கா அரசுடனேயே கைச்சாத்திட்டோம்.
சிறிலங்காவை ஆட்சி செய்யும் எந்த அரசானாலும் பொதுவாகவே தமிழ் மக்களுக்கு விரோதமான அரசியல் கோட்பாடுகளைக் கொண்டவர்களாகத்தான்
அன்றுதொட்டு இன்றுவரை செயற்பட்டு வந்திருக்கின்றனர். இது வரலாறு எமக்கு புகட்டுகின்ற உண்மை.
கேள்வி: போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் தமிழ் மக்களுக்கே பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் தமிழீழ
விடுதலைப் புலிகள்தான் முதலில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறக்கூடும் என்று அனைவருமே எதிர்பார்த்திருந்த வேளை,
சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைபட்சமாக வெளியேறியிருக்கின்றது. அதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: பேரினவாத சக்திகளின் ஆதரவிலும் பேரினவாத சக்திகளின் தளங்களில் இருந்து கொண்டே சிறிலங்கா அரசு ஆட்சிக்கு வந்தது. பேரினவாதிகளே
இந்த அரசை அமைத்திருக்கின்றனர். எனவே இந்தப் பேரினவாத கொள்கையையும், கோட்பாடுகளையும் இந்த அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கின்றது.
அத்தகையதொரு கட்டமாகத்தான் தமிழர் விரோதப் போக்கையும் கடைப்பிடிக்கின்றனர்.
இது உலகத்திற்கோ எமக்கோ புதிதான ஒன்றல்ல. சிறிலங்காவில் எந்த அரசு வந்தாலும் தமிழர்களுக்கு எதிரான விரோதக் கொள்கைகளையே
கடைப்பிடித்து வருகின்றனர். அந்தக் கோணத்தில் தான் நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்.
தேசியக்கொடி ஏற்றினாலும் அது போர் நிறுத்த மீறல்
கேள்வி: இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் பாலித கோன்ன, அவுஸ்திரேலியாவிற்கு அண்மையில் வந்திருந்தார். இங்கு அவர் தேசிய
தொலைக்காட்சியில் ஒரு செவ்வியை வழங்கியிருந்தார். அதில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, தமிழீழ விடுதலைப்புலிகள்
பாரிய போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களோடு ஒப்பிடும்போது நாங்கள் 600 போர் நிறுத்த மீறல்களில் தான் ஈடுபட்டிருக்கிறோம்.
அதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்தும் பேணுவது பிரியோசனமற்றது. அதனால் தான் நாங்கள் அந்த ஒப்பந்தத்திலிருந்து
வெளியேறியிருக்கிறோம் என்று கூறியிருக்கின்றார். அனைத்துலக ஊடகவியலாளர்கள் சிலரிடமும் இப்படியான கருத்தொன்று இருக்கின்றது. அதாவது
இரு பகுதியினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியிருக்கின்றனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள்தான் கூடுதலாக மீறியிருக்கின்றனர் என்ற
ஒரு கருத்திருக்கின்றது. இதற்கு உங்கள் பதில்?
பதில்: உண்மையில் இங்கே வந்து பார்த்தால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை யார் அதிகமாக மீறினார்கள் என்பது தெரியவரும்.
தென்தமிழீழத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அதற்கு சான்று பகரும். சிறிலங்கா அரச படைகளினால் எம் மீது அபாண்டமாக சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுக்களே இவை ஆகும். இந்த குற்றச்சாட்டுகள் மீது உரிய முறையில் நடுநிலையாக விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல் உண்மையில்
இது குற்றச்சாட்டா அல்லது வேண்டும் என்றே சிறிலங்கா அரசால் புரியப்பட்ட குற்றச்சாட்டா என்பதனைக் கண்டறியாமலேயே இவ்வாறான
எண்ணிக்கைகள் ஊடகங்களின் ஊடாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
உண்மையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது சிறிலங்கா அரசு என்பது சர்வதேச சமூகத்திற்கு தற்போது நன்றாகத் தெரிகின்றது. முதலும்
நன்றாகத் தெரிந்துதான் இருந்தது.
உதாரணத்திற்கு மூதூர், சம்பூர் பிரதேசங்களை பாரிய நடவடிக்கையின் மூலம் கைப்பற்றியதும் அதேபோன்று வலிந்த இராணுவ நடவடிக்கைகளை
மேற்கொண்டு மட்டக்களப்பு- அம்பாறை போன்ற எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை ஆக்கிரமித்திருப்பதும் இதற்கு சான்றாக உள்ளன.
இதனை விட்டுவிட்டு காவல் நிலையங்களில் போய் சின்னச் சின்ன முறைப்பாடுகளைப் போடுவது போல் கண்காணிப்புக்குழு போர் நிறுத்த
மீறல்களைப் பதிவு செய்கிறது.
உதாரணத்திற்கு எமது தேசியக் கொடியை ஏற்றினால் அதனைக்கூட போர் நிறுத்த மீறலாகாக் கருதுகின்றனர். எமது புலிக்கொடியை எமது அரசியல்
செயலகங்களில், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் ஏற்றினால் அதனைக்கூட ஒரு போர் நிறுத்த மீறலாக பதிவு செய்கின்றனர். இப்படி
ஏராளமான முறைப்பாடுகளை பதிவு செய்திருக்கின்றனர்.
அதேபோல் நாங்கள் இசைத்தட்டுக்களை வெளியிட்டாலோ அல்லது எங்கள் இயக்கப் பாடல்களை வெளியிட்டாலோ அல்லது போட்டாலோ
அதனையெல்லாம் போர் நிறுத்த மீறல் முறைப்பாடாகவே அவர்கள் அங்கே பதிவு செய்திருக்கின்றனர். இப்படியான சம்பவங்களை வைத்துக்கொண்டு
பாலித கோகன்ன போன்றவர்கள் அப்பட்டமான பொய்யைப் பரப்பி வருகின்றனர். அது இங்கே இருந்த கண்காணிப்புக் குழுவினருக்கு நன்கு தெரியும்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவிற்கு சிறிலங்கா ஒத்துழைப்பு வழங்கவில்லை
கேள்வி: போர் நிறுத்த ஒப்பந்தத்தின் போது நோர்வேத் தரப்பு அனுசரனையாளர்களாகப் பணியாற்றியிருந்தது. கண்காணிப்புக் குழுவினரும் அங்கே
இருந்தார்கள். ஆனால் அந்த கண்காணிப்புக்குழு போதிய அதிகாரத்தை எடுத்து ஒரு போர் நிறுத்த மீறல் நடைபெறும் போது அதனை விசாரித்தோ
அல்லது அது தொடர்பாக அனைத்துலக சமூகத்திற்கு தெரிவித்தாகவோ இல்லை. அவர்கள் வெறுமனே அது தொடர்பான அறிக்கையை
சமர்ப்பிப்பார்களே தவிர கூடுதலான ஒரு அழுத்தத்தை தெரிவிக்க அவர்கள் தவறி விட்டார்கள் என்று நாங்கள் கருதலாமா?
பதில்: அவர்கள் தவறியது என்று சொல்வதனை விட சிறிலங்கா அரசின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இது அனைத்துலக
சமூகத்திற்கு தற்போது நன்றாக புரிந்திருக்கின்றது. குறிப்பாக இணைத்தலைமை நாடுகளுக்கு இது நன்றாக புரிந்திருக்கின்றது.
உதாரணத்திற்கு கடந்த காலத்தில் போர் நிறுத்த கண்காணிப்புக்குழுத் தலைவர்களாக இரண்டு பேர் இங்கே இருந்தார்கள். திருகோணமலை
மாவட்டத்தில் இருந்த மாவிலாறு நீர் அணைக்கட்டிற்கு கண்காணிப்புக் குழுத்தலைவர் அரச படைகளுக்கு அறிவித்து விட்டே சென்றார். அவர் சென்ற
பின்னர் அங்கே சிறிலங்காப் படையினர் எறிகணை வீச்சுக்களை நடத்தினர்.
அதேபோன்று கண்காணிப்புக்குழுவின் மற்றொரு தலைவர் சிறிலங்கா அரசிற்கும் அரச படையினருக்கும் அறிவித்து விட்டு பூநகரிப் பிரதேசத்திற்குச்
சென்று அந்த இடத்தைப் பார்வையிடச் சென்றபோது அவருக்கும் அங்கிருந்து அவர்கள் ஆட்லெறி எறிகணை வீச்சுக்களை நடத்தினர்.
கண்காணிப்புக்குழுத் தலைவர்களை நோக்கியே போர் நிறுத்த மீறல் சம்பவங்கள் ஏராளமாக நடைபெற்றிருக்கின்றன. ஆகவே சிறிலங்கா அரச
தரப்பிலிருந்து கண்காணிப்புக் குழுவுக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்வேன்.
கேள்வி: போர் நிறுத்த கண்காணிப்புக்குழுத் தலைவரை நீங்கள் கடந்த வாரம் சந்தித்து பேசியிருந்தீர்கள். இந்த சந்திப்பில் என்ன விடயங்கள்
ஆராயப்பட்டன?
பதில்: நாங்கள் மூன்று முக்கிய விடயங்களை வலியுறுத்தினோம். கண்காணிப்புக்குழுத் தலைவரிடம் ஊடாக அதிகாரபூர்வ செய்தியொன்றை நோர்வே
அரசிற்கு நாங்கள் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.
போர் நிறுத்த ஒப்பந்தம் நூற்றிற்கு நூறு வீதம், வரிக்கு வரி சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நோர்வேயே தொடர்ந்தும்
அனுசணையாளர்களாக இருக்க வேண்டும் என்றும், எம்மைத் தடை செய்த நாடுகள் அனைத்தும் எமது தடையை நீக்க வேண்டும் என்றும் மூன்று
முக்கியமான விடயங்களை நாங்கள் அதிலே குறிப்பிட்டிருக்கின்றோம்.
போர் ஏற்கனவே வெடித்து விட்டது
கேள்வி: அனைத்துலக ஊடகவியலாளர்கள் சிலரும் ஆய்வாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் ஜனவரி 16 ஆம் நாள் நள்ளிரவிற்குப் பின்னர் போர்
மிகத் தீவிரமாக வெடிக்கப்போகின்றது என்று எதிர்வுகூறுகின்றனர். அவர்களின் எதிர்வுகூறல் சரியானதா?
பதில்: போர் ஏற்கனவே வெடித்து விட்டது. எம் மக்கள் மீது பல இடங்களில் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்த வண்ணமிருக்கின்றனர். மன்னார் பிரதேசத்தில்
பல இராணுவ நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அவர்களால் முன்னேற முடியவில்லை. அதேவேளை
முகமாலை என்றாலும் சரி, மணலாற்றுப் பிரதேசம் என்றாலும் சரி, வவுனியா மாவட்ட பிரதேசம் என்றாலும் சரி பல முனைகளிலும் சிறிலங்கா அரச
படைகள் முன்னேற முயற்சித்து இழப்புக்களைச் சந்தித்து பின் வாங்கிக் கொண்டிருக்கின்றன.
இராணுவ நடவடிக்கைகளை அவர்கள் ஏற்கனவே தொடங்கி விட்டார்கள் என்பதனையே இது காட்டுகிறது.
கேள்வி: அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு உட்பட்ட ஒரு அதிகாரத் தீர்வுத் திட்டம் என்று இப்போது புதிய ஒரு அத்தியாயம், ஒரு
புதுக்கதை சோடிக்கப்படுகின்றது. இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இது சரியான வழியா?
பதில்: உண்மையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர்கள் இன்னும் சரியான வழிக்கு வரவில்லை. 13 ஆவது சரத்தின் அடிப்படையிலான தீர்வு
என்பது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்றுமுழுதாக நிறைவு செய்யக்கூடிய வகையில் இருக்காது.
அது மட்டுமல்ல, 13 ஆவது சரத்தின் அடிப்படையிலான தீர்வு விடயத்தில் ஒரு சுமூகமான முடிவை எடுப்பதற்குக்கூட அங்கே முடிவு எடுக்கின்ற
அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து இல்லை. முரண்பாடுகள் ஏராளம் இருக்கின்றன.
கேள்வி: சமாதானப் பேச்சுவார்த்தை பல தடவைகள் நடைபெற்றிருந்தாலும் அனைத்துலக சமூகத்தால் இடப்பட்ட ஒரு போர் நிறுத்த உடன்பாடு
இப்போது ஒரு தலைபட்சமாக வெளியேறியிருக்கின்றது. இதனையடுத்து இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளை சமாதான வழியில் தீர்ப்பதற்கான
கதவுகள் மூடப்பட்டு விட்டன என்று கருதலாமா?
பதில்: கடந்த 50 வருட காலத்தில் தற்போதுதான் அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசு தொடர்பான பாடங்களைச் சரியான முறையில் கற்றுக்கொள்ள
ஆரம்பித்திருக்கின்றது என நினைக்கின்றேன்.
கடந்த காலங்களில் செய்து கொண்ட ஒப்பந்தங்களாயினும் சரி அல்லது எந்த பேச்சுவார்த்தைகளாயினும் சரி சிறிலங்கா அரசாங்கம் அதனை
மீறியதுதான் வரலாறு.
தற்போது சிறிலங்கா அரசு தொடர்பான நிலைப்பாட்டை அனைத்துலக சமூகம் புரிந்து கொண்டிருக்கின்றது. இந்தப் புரிதலின் ஊடாக, எமது தடைகளை
நீக்கி, எமது மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை அனைத்துலக சமூகம் வெகுவிரைவில் அங்கீகரிப்பதன் மூலம்தான் இந்தப்
பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்.
அனைத்துலக சமூகத்திடம் எதிர்பார்ப்பது என்ன?
கேள்வி: அனைத்துலக சமூகத்திடம் இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் எதனை
எதிர்பார்க்கின்றனர்?
பதில்: அனைத்துலக சமூகம் எம்மை அங்கீகரிக்க வேண்டும். புலம்பெயரந்துள்ள எமது மக்கள் எமக்கு பக்க பலமாக செயற்பட்டு வருகின்றனர்.
அரசியல் ரதீயாக, பொருளாதார ரீதியாக பல வழிகளிலிருந்தும் எமக்கு பக்க பலமாக அந்த மக்கள்தான் இருந்திருக்கின்றனர்.
கடந்த காலத்தைவிட வேகமாக, பல மடங்கு அதிகமாக அரசியல், பொருளாதார உதவிகளை செய்து எமது விடுதலைப் போரை மிக விரைவாக ஒரு
முடிவிற்கு கொண்டு வருவதற்கான அந்தப் பலமும், சக்தியும் அவர்களிடம் நிறைய இருக்கின்றது.
ஆகவே, அனைத்துலக சமூகம் என்று குறித்துச் சொல்வதனை விட எமது மக்கள் இந்த இடத்தில் பெரியளவு பங்களிப்பைச் செய்வதற்கு உடனடியாக
முன்வர வேண்டும்.
கேள்வி: வெற்றியை ஈட்டும்போது எமது மக்கள் மிகவும் குதூகலிக்கின்றனர். சற்றுப் பின்னடைவோ அல்லது தந்திரோபாய பின்நகர்வுகளோ
நடைபெறும் போது மிகவும் சோர்வடைந்து விடுகின்றனர். எனவே புலம்பெயர்ந்துள்ள மக்கள் சோர்வாகவோ அல்லது வெற்றி பெறும்போது
குதூகலிக்காமல் தொடர்ச்சியாக எந்த வகையில் தங்களது பணியை ஆற்ற முடியும் எனக் கருதுகிறீர்கள்?
பதில்: எந்தவொரு பாதகமான சூழ்நிலையையும் சாதகமான சூழலாக மாற்றக்கூடிய ஆளுமை மிக்க தேசியத் தலைவரின் யுகத்தில் நாங்கள் நின்று,
அவரின் தலைமையில், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
அவரின் தலைமைத்துவம் கடந்த காலங்களில் பல சம்பவங்களையும், வரலாறுகளையும் எமக்கு எடுத்துக் கூறுகிறது. அதாவது மக்கள்
சோர்வடைகின்ற நேரமெல்லாம் பெரிய வெற்றிகள் எமக்கு வந்ததுண்டு. ஒரு காலமும் சோர்வடையக்கூடாது.
ஏனெனில் விடுதலைப் போராட்டத்தில் இவ்வாறு சோர்வடைந்தால் நாங்கள் எங்களின் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க
முடியாது.
சோர்வு வருகின்ற போது நாம் கடந்த காலங்களில் செயற்பட்டதனை விட அதிவேகமாகச் செயற்படுவதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும்.
கிழக்குத் தேர்தல் ஒரு நாடகம்
கேள்வி: கிழக்கில் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கிழக்கில்
தமிழ் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இந்த வேளையில் இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் எந்த வகையிலே அவர்களின் தேவைகளை
நிறைவேற்றும்?
பதில்: உண்மையில் கிழக்கில் தமிழ் மக்கள் மட்டுமல்ல, முஸ்ஸிம் மக்கள் கூட அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டு வருகின்றனர். இந்தவொரு நிலையில்
உள்ளுராட்சி சபைத் தேர்தல் என்பது ஒரு நாடகம். சிறிலங்கா அரசினால் இராணுவத்தை வைத்துக்கொண்டு நடத்தப்படுகின்ற தேர்தல் நாடகம் என்று
தான் இதனைப் பார்க்க வேண்டும்.
கேள்வி: அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக பாராமுகமாகவே இருக்கின்றனர். பெருமளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறும் போது அவர்கள்
அதனைக் கண்டித்ததாகவும் தெரியவில்லை. இப்போது ஒரளவிற்கு நிலைமைகள் மாறி வந்தாலும், அவர்களின் அந்த மாறுதல் மிகவும் ஒரு
மெல்லியதான மிகவும் காலதாமதமான ஒரு மாறுதலாகத்தான் இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: அனைத்துலக சமூகம் கடந்த காலத்தில் சிறிலங்கா அரசின் பல பொய்ப்பிரச்சாரங்களை நம்பியிருந்திருக்கலாம். ஆனால் அனைத்துலக சமூகம்
தற்போது சிறிலங்கா அரசின் கபடத்தனத்தையும் இரட்டை வேடத்தையும் புரிந்து கொள்கின்ற சூழல் வந்து விட்டது.
ஏனெனில் இப்போது பல்வேறு வழிகளின் ஊடாக பல அழுத்தங்கள் வரத் தொடங்கி விட்டதனை எங்களால் பார்க்க முடிகின்றது.
உதாரணத்திற்கு மனித உரிமைகள் விடயத்தில் அவர்களது அண்மைக்கால அறிக்கைகள் அதனைத்தான் காட்டுகின்றன. அதுமட்டுமல்ல
அவர்களுக்கான உதவிகளை அனைத்துலக சமூகம் தற்போது நிறுத்தத் தொடங்கிவிட்டது.
ஒரு நாட்டிற்கான அழுத்தத்தை ஒரே நாளில் கொடுக்க மாட்டார்கள். படிப்படியாகத்தான் அந்த அழுத்தங்களை கொடுப்பார்கள் என நான்
நினைக்கின்றேன். அனைத்துலக சமூகம் வெகுவிரைவில் சிறிலங்கா அரசிற்கு ஒரு பாடத்தை படிப்பிக்கும் என்றுதான் நினைக்கின்றேன்.
எமது போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்கும் காலம் வரும்
கேள்வி: அனைத்துலக நாடுகள் என்று பார்க்கும்போது எமது அயல் நாடான இந்தியா எமது நியாயப்பாட்டை உணர்ந்து எமது போராட்டத்திற்கு ஆதரவு
தெரிவிக்கும் என்ற ஒரு ஏக்கம் தமிழ் மக்களுக்கு நீண்ட நாட்களாகவே இருந்து வருகின்றது. ஆனால் இந்தியா அதற்கு எதிர்மாறாக சிறிலங்கா
அரசிற்கும், இராணுவத்திற்கும் உதவிகளை வழங்குவதனையும், முண்டு கொடுப்பதனையும் தான் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. இதற்கு
முக்கிய காரணம் என்ன?
பதில்: இந்திய அரசு கூட தற்போது அதனை உணர்வதாகத் தான் தெரிகிறது. ஏனெனில் அங்கேயும் பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்திய அரசு
கூட தனது கொள்கையை மாற்றிக் கொண்டு எமது போராட்டத்தை வெகுவிரைவில் அங்கீகரிக்கின்ற காலம் வரும் என நான் நினைக்கின்றேன்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டே நிகழ்வுகளில் பங்குபற்றுகிறோம்
கேள்வி: இன்னுமொரு விடயத்தை புலம்பெயர்ந்த மக்கள் சார்பில் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றேன். அதாவது வன்னியில் வான்குண்டு
வீச்சுக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வான்படையின் வானூர்திகள் அங்கு அதற்காகவே அடிக்கடி வட்டமிட்ட வண்ணமும்
இருக்கின்றன. இத்தகைய ஒரு தாக்குதலில்தான் சு.ப.தமிழ்செல்வன் அண்ணாவைக்கூட இழந்திருக்கின்றோம்.
எனினும், அண்மைய காலங்களில் கிளிநொச்சிப் பகுதிகளில் நடைபெறும் வைபவங்களின் நிழற் படங்களைப் பார்க்கும் போது தலைவர்கள், தளபதிகள்
ஒன்றுகூடி அந்த நிகழ்வுகளில் பங்குபற்றுவது புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஆதங்கத்தை உருவாக்கியுள்ளது.
அதாவது, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கும் போது ஏன் இப்படியான நிகழ்வுகளில் தலைவர்களும், தளபதிகளும் ஒன்றாகக்கூடி நிற்கின்றனர் என்ற
ஆதங்கம் புலம்பெயர் வாழ் தமிழ்ம க்களிடத்தில் எழுந்துள்ளது. இது தொடர்பில் தங்களின் கருத்து என்ன?
பதில்: நாங்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்ட பின்னரே அவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றோம்.
அது மட்டுமல்ல நாங்கள் ஒரு விடுதலை இயக்கம், மக்கள் இயக்கம். மக்களைப் பிரதிநிதிப்படுத்துபவர்கள். உண்மையில் இன்று நாம் எமது
கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஓர் அரசு போன்றே இயங்குகின்றோம். அதனால் ஏராளமான விடயங்களை நாங்கள் மக்கள் மத்தியில் சென்றே
செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது. அத்துடன் மக்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலையிலும் இருக்கின்றோம்.
ஆகையால்தான் பிரதான பொறுப்பாளர்கள், தளபதிகள் வெளிப்படையாகவே வந்து நிகழ்வுகளில் பங்குபற்றி மக்கள் தொடர்பாக சில உரைகளை
நிகழ்த்துகின்றனர். இதற்காக மக்கள் மத்தியில் செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்ட பின்னரே நாங்கள் அப்படியான நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றோம்.
புலம்பெயர் தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன?
கேள்வி: புலம்பெயர் தமிழ்மக்கள் ஆற்றவேண்டிய பணிகள் தொடர்பாக நீங்கள் கூறியிருந்தீர்கள். அந்தப் பணிகளை எவ்வளவு வேகப்படுத்தி
முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?
பதில்: ஒவ்வொரு பணியும் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் எல்லோரினதும் எதிர்பார்ப்பு. எந்தவொரு பணியையும் நாளை
என்று பிற்போடாமல் உடனேயே ஆரம்பிக்கப்பட வேண்டும். ஏனெனில் காலம் சென்று கொண்டிருக்கின்றது.
சிறிலங்கா அரசிற்கு ஒரு சில நாடுகள் நிறைய உதவிகள் செய்து வருவது உங்களுக்குத் தெரியும் என நினைக்கின்றேன். நான் அந்த நாடுகளின்
பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. அவ்வாறான காலகட்டத்திலும் நாம், எமது மக்களின் பலத்தில்தான் அன்று தொடக்கம் இன்று வரை எமது
போராட்டத்தினை நடத்தி வருகின்றோம்.
மக்கள் தொடர்ந்தும் தமது பங்களிப்பை வேகமாகச் செய்கின்றனர். அந்த வேகத்தை இன்னும் பல மடங்கு வேகமாக அதிகரிக்கச் வேண்டும்
என்பதுதான் எங்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.
கேள்வி: புலம்பெயர் தமிழர்கள் சிறு சிறு குழுவாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ புலம்பெயர் நாடுகளில் உள்ள நாடாளுமன்ற
உறுப்பினர்களையும் அணுகி எமது நியாயப்பாட்டைத் தெரிவிப்பது என்ற வகையிலும் அந்தப் பணிகளை ஆற்றலாம் அல்லவா ?
பதில்: ஆம், அரசியல் ரீதியாக நிறைய வேலைகளைச் செய்யலாம். புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்மக்கள் அந்தந்த நாடுகளில் உள்ள அரச
தலைவர்களை, இராஜதந்திரிகளை அணுகி அரசியல் ரீதியாக எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை எடுத்தியம்புவது மிக இலகுவான விடயம்.
ஏனெனில் எங்களின் போராட்டத்தின் பக்கம் நியாயம் இருக்கின்ற படியால் அதனை அந்தந்தத் தரப்பினருக்கு எடுத்துப் புரிய வைப்பது இலகுவாக
இருக்கும்.
ஏராளமான விடயங்களை நாங்கள் விளங்கப்படுத்தலாம். எம்மிடம் நிறைய விடயங்கள் இருக்கின்றன. சிறிலங்கா அரசைப் போல் நாம் பொய்
சொல்லவேண்டிய அவசியம் கூட இல்லை.
புலம்பெயர்ந்திருக்கின்ற மக்கள் தாம் வசிக்கும் நாடுகளில் இத்தகைய பணியை ஏற்கனவே முன்னெடுத்து வருகின்றனர்.
அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் கூட எமது மக்கள் இவ்வாறு செயற்படுகின்றனர். அங்குள்ள எமது மக்களுக்கு அரசியல் தலைவர்களுடன்
தாராளமான தொடர்புகள் இருக்கின்றன. அரசியல் ரீதியாக, கட்சி ரீதியாக, தனிப்பட்ட ரீதியாக அவர்கள் தொடர்புகளைக் கொண்டுள்ளனர்.
அந்தத் தொடர்புகளை எல்லாம் எமது விடுதலைப் போராட்டத்திற்காக அவர்கள் பயன்படுத்தலாம். அது மட்டுமல்ல தமிழ் மக்கள் தமக்குத் தெரிந்த
இராஜதந்திரிகள் அல்லது எந்த அமைப்புக்கள் என்றாலும் சரி அந்த அமைப்புக்களுடன் தொடர்புகளைக் கொண்டு, எமது போராட்டத்தை
அங்கீகரிப்பதற்கான அரசியல் இராஜதந்திர நகர்வுகளை வேகமாக மேற்கொள்வது தான் தற்போது அவர்கள் செய்யக்கூடிய உடனடி பணியாக
இருக்கும்.
தீர்க்கத் தரிசனமிக்க எமது தலைவர்
கேள்வி: தமிழீழத் தேசியத் தலைவர் எதனையும் முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்றாற்போல் இந்த போராட்டத்தை சரியான வழியில் கொண்டு
செல்லும் சாணக்கியம் மிக்க ஒருவராக திகழ்கின்றார். அதனைப் பல தடவைகள் கண்டிருக்கின்றோம். இந்திய இராணுவம் இலங்கைக்கு வரும் போது
இந்திய இராணுவத்தோடு நாங்கள் மோதவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதனை முதலில் தெரியப்படுத்தியவர் அவர்தான். அதற்கு ஏற்றபடி தனது
நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
சிறிலங்காவின் எந்தவொரு அரசும் எமக்கு ஒரு தீர்வையும் தராது என்பதனை அவர் நீண்டகாலத்திற்கு முன்னரேயே மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு
வந்தார். அதனை இப்போது வெளிப்படையாக சாதாரண மக்களே அறிந்து கொள்ளக்கூடிய ஒரு நிலமை ஏற்பட்டிருக்கின்றது.
அதேபோல்தான் அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றது. மூக்குடையப் போகின்றது என்பதனை
அறிந்து வைத்துக்கொண்டுதான் கடந்த மாவீரர் நாள் உரை, அனைத்துலக சமூகத்திற்கான உரையாக நிகழ்த்தியிருந்தார். நீங்கள் தலைவருடன்
அருகிலிருந்து நீண்ட காலம் பழகியவர் என்ற வகையில் தலைவரின் இந்த திறமை குறித்த உங்களின் பார்வை எவ்வாறிருக்கின்றது?
பதில்: எமது தலைவர் மிகவும் தீர்க்க தரிசனமான பார்வை கொண்டவர். எந்த ஒரு நடவடிக்கை என்றாலும் மிக நீண்ட தொலைநோக்குடனேயே
ஒவ்வொரு விடயத்தையும் யோசித்து- ஆழமாகச் சிந்தித்து- அதனால் வரப்போகின்ற அரசியல், இராணுவ விளைவுகளை எல்லாம் எடை போட்ட
பின்னரே- ஒவ்வொரு முடிவும் அவரால் எடுக்கப்படுகின்றது.
அவ்வாறான ஒரு முடிவுதான் அண்மையில் எடுக்கப்பட்டு நாங்கள் அது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றோம். தற்போது
உண்மையில் அனைத்துலக சமூகம் இதனை நன்றாக உணரத் தலைப்பட்டிருக்கின்றது.
கேள்வி: சிறிலங்கா அரசாங்கம் அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் உண்மையில் தமிழர்களின் பிரச்சினைகளைப புரிந்து வைத்திருக்கின்றதா?
பதில்: சிறிலங்கா அரசு அது எந்த அரசாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் தமிழர் விரோதப் போக்கை கொண்டவர்களாகத்தான் இருந்து
வருகின்றனர்.
இது தான் கடந்த கால வரலாறு. சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் எங்களின் பிரச்சினைகளை சுமூகமான முறையில்- அரசியல் பேச்சுவார்த்தைகளின்
ஊடாக- தீர்ப்பதற்கு முன்வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை.
அவர்கள் தற்போது அனைத்துலக சமூகத்தின் முன் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைக்கூட தூக்கியெறிந்து விட்டு கொலை செய்வது
பற்றிய கதைகளையே அளந்து கொண்டிருக்கின்றார்கள். இதன் ஊடாக அவர்கள் என்ன மனநிலையில் இருக்கின்றனர் என்பதனை நாங்கள்
உணரக்கூடியதாக இருக்கின்றது.
சிறிலங்கா அரச தலைவர் இந்தியாவிற்கு ஒரு பேட்டி கொடுத்திருக்கின்றாரே என்று இதற்கு முன்னர் என்னிடம் கேள்வி கேட்ட ஒரு பெரியவர் (நேயர்)
கூறினார். இது ஒரு அநாகரிகமான பேட்டி என்றுதான் நான் நினைக்கின்றேன். நாகரிக உலகம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பேட்டி இது.
ஒரு நாட்டின் அரச தலைவர் என்று இருப்பவர் இவரைக் கொலை செய்வேன் அவரைக் கொலை செய்வேன் என்று கூறுவது நாகரீக உலகத்தால்
ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வார்த்தைப் பிரயோகம் ஆகும்.
சிறிலங்கா அரசு எந்த நிலையில் இருக்கின்றது என்பதை முழு உலக நாடுகளும் புரிந்து கொள்வதற்கு இது இலகுவாக இருக்கும் என்று நான்
நினைக்கின்றேன்.
தகுந்த பாடத்தை புகட்டவே பொறுமை காத்து வருகின்றோம்
கேள்வி: கிழக்குப் பகுதி படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. யாழ்ப்பாணப் பகுதி தொடர்ச்சியாக படையினரின் கட்டுப்பாட்டுக்குள்
இருக்கின்றது. மன்னாரில் தற்போது மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன. வன்னிப் பெருநிலப்பரப்பின் மீதும் பாரிய இராணுவ
நடவடிக்கையை மேற்கொள்ள அவர்கள் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் ஒரு
பாரிய தாக்குதல் ஒன்றை நிகழ்த்தவில்லை அல்லது ஏன் அத்தகைய முன்னெடுப்புக்களை முறியடிக்கும் சமரைக்கூட நடத்தவில்லை என்ற சிறு
ஆதங்கம் தமிழ் மக்களிடத்தில் இருக்கின்றது. இது சரியான ஒரு ஆதங்கமா?
பதில்: அந்த ஆதங்கம் உண்மையில் எல்லோருக்கும் இயல்பாக வரக்கூடிய ஒன்றுதான். போர் நிறுத்த காலத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை
மீறக்கூடாது என்பதற்காகவும் இன்னொரு புறம் நாங்கள் சிறிலங்கா அரசின் சுயரூபத்தை அனைத்துலக சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காகவுமே நாங்கள் பொறுமை காத்து வருகின்றோம்.
அது மட்டுமல்ல நாங்கள் எமது மக்கள் மீது பாரிய இராணுவ நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டால் அவற்றை முறியடித்து அவர்களுக்கு தகுந்த
பாடத்தை புகட்டுவதற்கான ஒரு பலமான நிலையில் இன்று இருக்கின்றோம் என்பதனையும் நான் இந்த கட்டத்தில் உங்களுக்கு கூற விரும்புகின்றேன்.
கேள்வி: போர் நிறுத்த ஒப்பந்தத்தின் போது எந்த விதத்திலும் வலிந்த ஒரு சமரை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளாமல் அமைதி காத்து
வந்தார்கள். எனினும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இருந்த இந்த போர் நிறுத்த ஒப்பந்த அமைதியின் மூலம் நாங்கள் சாதித்தது என்ன?
பதில்: அமைதியின் ஊடாக ஏராளமான விடயங்களை சாதித்திருக்கின்றோம். அத்துடன் அனைத்துலக நாடுகள் சிறிலங்கா அரசை நன்றாக புரிந்து
கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல அரசியல் ரீதியாக, இராஜதந்திர ரீதியாகவும் நாங்கள் நிறைய சாதித்திருக்கின்றோம்.
சிங்கள மக்கள் கூட அரசை இன்று நன்றாக புரிந்து கொள்ளக்கூடிய நிலைக்கு இந்த அரசு தள்ளப்பட்டிருக்கின்றது. இன்று உலக நாடுகள் சிறிலங்கா
அரசின் மீது பல கண்டனக்கணைகளை தொடுத்து வருகின்றன.
போர் நிறுத்தத்திலிருந்து அவர்கள் அதிகாரபூர்வமாக விலகியதனைத் தொடர்ந்து உலகத்தின் பல வல்லரசு நாடுகள் கூட சிறிலங்கா அரசின் மீது
கண்டன அறிக்கைகளை விடுத்தது மட்டுமல்ல இராணுவ உதவிகளைக்கூட நிறுத்தப் போவதாகவும் அறிவித்திருக்கின்றன.
இணைத்தலைமை நாடுகள் கூட அறிக்கையை விட்டிருக்கின்றன. அவர்கள் எல்லா உதவிகளையும் நிறுத்தப் போகின்றனர் என நான் நினைக்கின்றேன்.
ஏனெனில் சிறிலங்கா அரசின் பொருளாதாரம் என்பது வெளிநாடுகளின் தங்கு நிலைகளிலே இருந்து வருகின்றது.
இந்த தங்கு நிலையின் மூலமே இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே உலக நாடுகள் இவ்வாறான பொருளாதார
உதவிகளை நிறுத்துவதன் மூலம் அரசு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்ற ஒரு நிலை வரும்.
தற்போது உலக நாடுகள் மத்தியில் ஒரு கெட்ட பெயரை சிறிலங்கா அரசு சம்பாதித்திருப்பதனை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகவே காலம் கனிந்து
கொண்டு வருகின்ற இந்த நேரத்தில் புலம்பெயர்ந்து இருக்கின்ற மக்களின் கைகளில்தான் நிறைய விடயங்கள் தங்கியிருக்கின்றன.
எமது விடுதலைப் பேராட்டத்தை வெகுவேகமாக வென்றெடுப்பதற்கான சக்தி உங்களிடம் இருக்கின்றது. அதனை நான் சொல்லாமல் உங்களுக்கு
புரியும் என நினைக்கின்றேன்.
கேள்வி: மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் தான் தமிழ் மக்களுக்கு கூடுதலான அழிவு ஏற்பட்டது என்று தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அனுமானம்
உள்ளது. இது சரியான அனுமானமா?
பதில்: உண்மையில் இவர்கள் ஒரு தீவிர தமிழ் விரோதப் போக்கை கடைப்பிடித்திருக்கின்றனர். இவர்கள் மட்டுமல்ல ஏனையவர்களும் தான். சிறிலங்கா
அரசில் வருகின்ற எல்லோருமே தமிழர் விரோதப் போக்கை கொண்டவர்களாகவே உள்ளனர்.
காலக்கெடு விதிப்பது சிறிலங்காவின் வழமை
கேள்வி: வன்னிப்பெரு நிலப்பரப்பு மீதான படை நடவடிக்கையை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. அதேநேரம் சிறிலங்கா இராணுவத்
தளபதியும் அமைச்சர்களும் விடுதலைப் புலிகளை நசுக்கிவிடுவோம் என்று சூளுரைக்கின்றனர். ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பை இத்தகைய ஒரு
காலக்கெடுவை விதித்து நசுக்கிவிட முடியுமா?
பதில்: இது மக்கள் விடுதலைப் போராட்டம். இந்த விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டே காலக்கெடுக்கள் விதிப்பது என்பது
சிறிலங்கா அரசினது வழமையான செயற்பாடாகும். முப்பது வருடங்களுக்கு முன்னர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா யாழ்ப்பாணத்திற்கு வீரதுங்க என்பவரை
அனுப்பி விடுதலைப் புலிகளை ஆறு மாத காலத்தில் முற்றுமுழுதாக அழித்துவிடுவேன் என்று சூளுரைத்தார். இதனைப் போன்றே காலத்துக்கு காலம்
வருகின்ற சிங்கள இராணுவத்தளபதிகளும் அரசியல் தலைவர்களும் காலக்கெடு விதிப்பது வழமையாகும்.
இத்தகைய ஒரு காலக்கெடு விதிப்பது என்பது எமது போராட்டத்திற்கு மட்டுமல்ல வியட்நாம் விடுதலைப் போராட்டம் என்றாலும், தென்னாபிரிக்க
விடுதலைப் போராட்டம் என்றாலும் இத்தகைய காலக்கெடுக்களை விடுக்கப்பட்டன. இது இராணுவச் சண்டியர்களின் கதை வசனங்களே தவிர மக்கள்
விடுதலைப் போராட்டங்களை எந்தவொரு சக்தியாலும் ஒடுக்க முடியாது.
தமிழக மக்களின் பாரிய எழுச்சி
கேள்வி: தமிழக மக்களின் எழுச்சி அவர்களுக்கு ஊடாக இந்திய அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கலாம் என்ற ஒரு பார்வை இருக்கிறது.
இந்த மக்களின் எழுச்சியை அங்குள்ள ஊடகங்கள் சரியாக முன்னெடுத்துச் செல்கின்றதா?
பதில்: தற்போது தமிழக மக்களிடம் பாரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் உணர்வு ரீதியாக எமக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். தமிழக
மக்களின் இந்த எழுச்சியும், உணர்வும் இந்திய மத்திய அரசு எமது விடுதலைப் போராட்டம் குறித்த சாதகமானதொரு நிலைப்பாட்டை எடுக்க உதவும்
என்றுதான் நாங்கள் கருதுகின்றோம்.
புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் பணிகள்
கேள்வி: புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள ஊடகங்கள் எத்தகைய பணிகளை ஆற்றவேண்டும் எனக் கருதுகின்றீர்கள்?
பதில்: புலம்பெயர்ந்துள்ள எமது மக்களை அணிதிரட்டி எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்ப்பதில் இந்த ஊடகங்களின் பங்கு என்பது
மிகப்பெரிய விடயம். அது எந்த நாடாக இருந்தாலும் அங்கே உள்ள ஊடகங்கள் தமிழ் மக்களை அணிதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்தோடு
ஒன்றிணைத்து அவர்களை நிறுவனமயப்படுத்தி எமது விடுதலைப் போராட்டத்தின் பங்காளிகளாக மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
இதே பணியை தொடர்ந்தும் அவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு பெரியளவில் இருக்கிறது.
கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் போராட்டம் குறித்த சரியான அரசியல் அறிவு இருக்கிறதா என்ற ஒரு ஐயப்பாடு நிலவுகின்றது.
அதாவது சரியானதொரு அரசியல் பார்வையில் இந்தப் போராட்டத்தை புலம்பெயர் தமிழ்மக்கள் பார்க்கின்றார்களா? இது குறித்து நீங்கள் என்ன
கருதுகிறீர்கள்?
பதில்: புலம்பெயந்துள்ள மக்கள் அரசியல் ரீதியாக நல்ல தெளிவுடன் இருக்கின்றனர். அவ்வாறான தெளிவான பார்வை இருப்பதால்தான் எமது
போராட்டம் அன்று முதல் இன்றுவரை பலமாக இருந்து வருகின்றது. போர் நிறுத்த காலத்தில் அங்கேயுள்ள ஏராளமான மக்களை சந்திக்கும்
வாய்ப்புக்கள் எமக்கு கிடைத்தன. அங்கே உள்ள முதியோரில் இருந்து சிறியவர்கள் வரை இந்த போராட்டம் குறித்த தெளிவான பார்வையுடன்தான்
இருக்கின்றனர்.
கேள்வி: சிறிலங்கா வான் படையின் தாக்குதலில் தலைவர் பிரபாகரன் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். இதனைப் பற்றி நீங்கள் ஏதாவது
கூறமுடியுமா?
பதில்: இது அப்பட்டமான பொய். ஆழிப்பேரலை வந்தபோது கூட தலைவரை ஆழிப்பேரலை இழுத்துக்கொண்டு போய்விட்டது என்ற பொய்ப்பிரச்சாரத்தை
சிறிலங்கா அரசு மேற்கொண்டது. அது போல் 1987 ஆம் ஆண்டில் இந்தியப்படைகள் இங்கிருந்த போது மாத்தையாவால் தலைவர் பிரபாகரன்
கொல்லப்பட்டு விட்டார் என்ற பொய்ப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
காலத்துக்கு காலம் இந்த ஆக்கிரமிப்பாளர்கள் தமது ஆசைகளை இப்படியான வார்த்தைகளின் ஊடாக, அறிக்கைகளின் ஊடாக வெளிப்படுத்துவது
அப்பட்டமான பொய்ப் பிரசாரமாகவே உள்ளது.
கேள்வி: போராட்டத்தில் தமக்கு எந்தவித அக்கறையும் இல்லை என்று கூறிக்கொண்டிருக்கும் ஒரு சிலரும் புலம்பெயர்ந்துள்ளவர்கள் மத்தியில்
இருக்கின்றனர். அவர்கள் உட்பட ஒட்டுமொத்த புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கும் நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?
பதில்: புலம்பெயர்ந்துள்ள அனைத்து மக்களுமே விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவையும் பங்களிப்பையும் செயற்படுத்தி வருகின்றனர் என்றே
நினைக்கின்றேன். கடந்த காலத்தில் ஒரு சிலர் அப்படி இயங்கியிருந்தாலும் தற்போது அவர்களும் இந்த போராட்டத்தின் பங்காளிகளாக
மாறியிருக்கின்றனர். இது நாம் எல்லோரும் பெருமைப்படக்கூடிய விடயம்.
எமது போராட்டம் வெல்லப்பட வேண்டும் என்பதில் புலம்பெயர்ந்துள்ள எமது உறவுகள் மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கின்றனர். ஆகவே கடந்த
காலங்களை விடவும் தொர்ந்து வரும் காலப்பகுதியில் புலம்பெயர்ந்த மக்கள் எமது போராட்டத்தில் பல மடங்கு பங்காளிகளாக இருக்க வேண்டும்
என்றுதான் எமது தலைவரில் இருந்து போராளிகள், மக்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
கேள்வி: விடுதலை அமைப்பு ஒன்று ஒரு சுதந்திரப் பிரகடனத்தை எந்த வகையில் வெளியிடலாம்? கடந்த வருடம் மாவீரர் நாள் உரையின்போது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு சுதந்திரப் பிரகடனத்தை வெளியிடுவார் என்றும், தைப்பொங்கலுக்கு சுதந்திரதினப் பிரகடனத்தை
வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அது பற்றிய உங்கள் பார்வை என்ன?
பதில்: நாங்கள் எதனையும் உணர்ச்சிவசப்பட்டு அறிக்கைகளாக விடுவதில்லை. காலம் கனிந்து வரும்போது அனைத்துலக நாடுகளின் ஆதரவுடன்
அவ்வாறான பிரகடனத்தை செய்யலாம். ஆனால் பலரதும் ஊகங்கள் பலவிதமாக இருந்தன. ஆனால் அப்படி இல்லை.
காலம் கனிந்து வரும்போது அதற்கான செயற்பாடுகள் இயல்பாகவே இடம்பெறும்.
கேள்வி: கொழும்பில் உள்ள சிங்கள மக்களுக்கும் விடுதலைப் போராட்டம் குறித்த சில தெளிவுபடுத்தல்களை தெரியப்படுத்த வேண்டிய தேவை
கொழும்பில் உள்ள ஊடகங்களிற்கு உள்ளது. அந்த வகையில் சிங்கள மக்களுக்கு எமது போராட்டத்தின் நியாயப்படுத்தல்களை தெரியப்படுத்துவதற்கு
எந்த வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன?
பதில்: நாம் பல்வேறுபட்ட ஊடகங்களின் ஊடாக சிங்கள மக்களிற்கு எமது தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்ல புலிகளின்
குரல் வானொலியில் சிங்கள சேவை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதனூடாக சிங்களத்தில் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு, தகவல்கள் வழங்கப்பட்டு
எமது போராட்டத்தின் நியாயத் தன்மையை சிங்கள மக்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கின்றோம்.
தற்போது சிங்கள மக்கள் எங்களது போராட்டத்தை நியாயப்படுத்துவது போல அரசுக்கு போராட்டங்களைச் செய்கின்றனர். அவ்வாறு அரசுக்கு எதிராக
செயற்பட்டுள்ள சிங்களை மக்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் "சிங்களப் புலிகள்" என்று சொல்வதுமான செயற்பாடுகள் தொடர்ந்த
வண்ணமிருக்கின்றன.
கேள்வி: இறுதியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற வகையில் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு என்ன செய்தியைக்
கூற விரும்புகிறீர்கள்?
பதில்: புலம்பெயர் தமிழர்களின் பலம்தான் எங்களை ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாக வளர்த்தெடுத்திருக்கிறது. அதுபோல எமது தலைவரின்
காலத்திலேயே எமது விடுதலையை வென்றெடுப்பதற்கு புலம்பெயர் தமிழர்கள் கடந்த காலத்தை விட அதிகமாகவும் வேகமாகவும் செயற்பட்டு இந்த
விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்ப்பீர்கள் என்ற எதிர்பார்ப்போடுதான் நாம் இருக்கிறோம் என்றார் அவர்.

No comments: