Saturday, 26 January 2008

ஈழச்செய்திகள்; பொதி(றி) வைத்த பக்ஸவும், பசியெடுத்த பட்சிகளும்!


யாழ் உதயன் செய்திகள்
Posted on : Sat Jan 26 9:40:00 2008
கிழக்கில் மார்ச் பத்தில் வாக்களிப்பு
வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிவு மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று நண்பகலுடன்
முடிவடைந்தது. வாக்களிப்பு மார்ச் 10ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றதுநேற்று நண்பகல் வேட்புமனுத் தாக்கலுக்கான நேரம் முடிவடையும் வரை மொத்தம் 61 வேட்புமனுப் பட்டியல்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இவற்றில்
38 மனுக்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்டவை. எஞ்சிய 23 வேட்புமனுக்களும் சுயேச்சைக் குழுக்களுடையவை.இத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன போட்டியிடவில்லை.ஈ.பி.டி.பி.,பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட் ஆகிய ஒன்றிணைந்து சுயேச்சைப் பட்டியலில் போட்டியிடு கின்றன.பிள்ளையான் குழுவின் "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்' அமைப்பு ஒன்பது சபைகளிலும் போட்டியிடுகின்றது. மட்டக்களப்பு நாடாளுமன்றுக்கு அரசுத்
தரப்பின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து அது போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொழும்பு தினக்குரல் செய்திகள்
காட்டில் மீட்கப்பட்ட 16 சடலங்களும் தமிழர்களுடையவையென சந்தேகம் [26 - January - 2008]
* ஐ.தே.க. தெரிவிப்பு; முழுமையான விசாரணைக்கு வலியுறுத்தல்- எம்.ஏ.எம்.நிலாம்
கெப்பிட்டிக்கொல்லாவ கிராமப் புறக்காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட 16 உடல்களும் தமிழர்களுடையவையென
பலத்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இக்கொலைகள் தொடர்பிலான
முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்கவேண்டுமெனவும் வலியுறுத்திக் கூறியுள்ளது.
நாட்டில் இன்று சட்டமும் ஒழுங்கும் பேணப்படாமல் மக்கள் பெரும் அச்சம், பீதிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் ஐ.தே.க. சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
இப்படுகொலைகள் தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எதுவும் கூறாமல் மௌனம் சாதிப்பது குறித்து எமக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சுமார்
ஏழெட்டு நாட்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டு சனநடமாட்டமற்ற காட்டுப் பகுதியில் இச்சடலங்கள் இரண்டு குழிகளில்
புதைக்கப்பட்டிருக்கின்றனவெனத் தெரியவருவதாகவும் நேற்று முன்தினம் காலையில் அப்பகுதியால் சென்ற முஸ்லிம் வியாபாரி ஒருவருக்கு
பிணவாடை வீசியதையடுத்து அவர் தெரிவித்த முறைப்பாட்டினையடுத்தே இப்புதைகுழிகள் தோண்டப்பட்டபோது கைகள் பின்னால் கட்டப்பட்ட
நிலையில் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
கொலை செய்யப்பட்டவர்கள் உள்ளூர் வாசிகள் அல்லவென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் சூழவுள்ள சிங்களக் கிராமங்களைச்
சேர்ந்தவர்கள் அல்லவென்பதும் தெரியவந்துள்ளது. அந்த வகையில் பார்க்கும்போது மதவாச்சிக்கு அப்பால் எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழ் இளைஞர்களே கடத்திக் கொல்லப்பட்டிருக்கலாமெனச் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இளம் யுவதியெனவும்
ஏனைய 15 பேரும் இளைஞர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்கள் அழுகியிருப்பதால் உடனடியாக அடையாளம் காண முடியாதிருக்கின்றது.
இப்படுகொலைகள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன. அநுராதபுர மாவட்ட எல்லைக் கிராமப் புறங்களில் பாதுகாப்புத் தரப்பின்
பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இந்தக் கூட்டுப் படுகொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. பாதுகாப்புத் தரப்புக்குத் தெரியாமல்
இப்படுகொலைகளோ, காட்டுப் பகுதிக்குள் கொண்டுவந்து புதைக்கப்பட்டமையோ நடந்திருக்கவே முடியாது.
இப்படுகொலைகள் தொடர்பில் அரசு இன்னமும் உரியமுறையில் நடவடிக்கை எடுக்க முற்படவில்லை. இதுகூடப் பலத்த சந்தேகத்தைத்
தோற்றுவித்திருக்கின்றது.
இன்று நாட்டின் சகல பகுதிகளிலும் ஆயுதக் குழுக்கள் பரவலாகவே காணப்படுகின்றன. இராணுவம் மற்றும் படைத்தரப்பினருக்குப் புறம்பாக
சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் தாராளமாகவே காணப்படுகின்றன. சில ஆயுதக் குழுக்களுக்கு ஆளும் தரப்பு ஆதரவு தாராளமாகக்
கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவும் நாளாந்தம் படுகொலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன.
மேற்படி படுகொலைகள் தொடர்பாக அரசு பொறுப்பற்ற விதத்தில் செயற்பட முடியாது. கடும் நடவடிக்கை எடுத்து பூரண விசாரணையை நடத்தி
கொல்லப்பட்டவர்கள் யார், யாரால் இப்படுகொலைகள் செய்யப்பட்டன என்பவற்றை கண்டுபிடித்து பகிரங்கப்படுத்த வேண்டும்.
இப்படுகொலைகள் குறித்து உள்நாட்டில் மட்டுமல்ல இங்குள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் கூட தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். வெளி
உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது.
நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முற்றாகச் சீர்குலைந்து போயிருப்பது தெளிவாகவே தெரிகிறது. காட்டுத் தர்பார் முழுநாட்டிலும் அரசோச்சுவதாகவே காணப்படுகிறது.
ஜனநாயக அரசியலுக்குப் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாகவே தெளிவாகத் தெரிகிறது.
மனித உயிர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது உறுதிப்படுத்தப்படும்போது மனித உரிமைகள் காப்பகம் அமைக்க சர்வதேசம் முனைப்புக் காட்டுவதை
ஏன் தடுத்து நிறுத்தப் பார்க்கின்றனர்.
அநீதி நடக்கும் போது தட்டிக்கேட்கும் உரிமை உலக நாடுகளுக்குக் கிடையாதாவெனக் கேட்கின்றோம். உண்மையிலேயே மனித உரிமை காப்பக
ஆணைக் குழுவை அமைக்க வேண்டிய அவசரம் இன்று ஏற்பட்டுள்ளது.
மேற்படி படுகொலைகள் தொடர்பில் அரசு விசாரணைக் குழுவை அமைத்து காலத்தைக் கடத்தி விவகாரத்தை மூடிமறைக்க முற்படக்கூடாது. கடந்த
காலங்களில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், விசாரணைக் குழுக்களுக்கு நடந்த கதி இப்படுகொலை விவகாரத்தில் இடம்பெறக்கூடாது.
ஜனாதிபதி பொறுப்பை ஏற்று அரசுக்குக் கிட்டும் அவப்பெயரிலிருந்து விடுபட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்
தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் தலைமை குறித்த சிறிலங்காவின் பரப்புரைக்கு இளந்திரையன் மறுப்பு [புதன்கிழமை, 23 சனவரி 2008, 06:45 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
சிறிலங்கா வான் படையினர் இன்று நடத்திய தாக்குதல் குறித்து வெளியிடப்படும் தகவல்களை மலிவுப்பரப்புரை என்று வர்ணித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், இந்த தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்று "புதினம்"
இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் முதன்மை முகாமை அழித்ததாக ஒரு பெரும் பரப்புரையை மக்களைக் குழப்பும் வகையில் சிறிலங்கா அரசாங்கம்
மேற்கொண்டு வருகின்றது.
இது குறித்து விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையனிடம் கேட்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது:
சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல் அப்பட்டமான பொய்யாகும். அதில் எந்தவித உண்மையும் இல்லை. விடுதலைப் புலிகளின் தலைமை
அழிந்தது என்று முன்னர் 1989 ஆம் ஆண்டிலும், 2004 ஆம் ஆண்டும் இடம்பெற்ற ஆழிப்பேரலையின் போதும் மக்களை குழப்பும் வகையில் பெரும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அது பொய் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
சிறிலங்கா அரசாங்கம் இத்தகைய மலிவுப் பரப்புரையில் தீவிரமாக உள்ளது. இத்தகைய மலிவுப் பரப்புரை என்பது சிறிலங்காவிற்கு உள்ள ஒரு
வருத்தம் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
Fri Jan 25 10:00:00 2008
இணைத் தலைமைகள் வரவேற்பு - இலங்கை அரசு
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருக்கும் தற்போதைய யோசனைத் திட்டத்தை இணைத்தலைமை நாடுகள்
வரவேற்றுள்ளன என்றும், இத்திட்டம் மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்குமென்றும் அந்நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன
என்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன்ன நேற்றுத் தெரிவித்தார்.வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை
வருமாறு:தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இந்தத் திட்டம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டவுடன் அத்தீர்வை மிகவும்
ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சர்வதேச நாடுகளுக்கு அதுபற்றி விளக்கம் அளிக்க ஆரம்பித்தோம்.புதன்கிழமை மாலை 7.30 மணியளவில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரைச் சந்தித்து அவருக்கு இத்திட்டம் பற்றி விளக்கினோம்.அதனைத் தொடர்ந்து இணைத்தலைமைகளான ஜப்பான், அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் சந்தித்து
விளக்கம் கொடுத்தோம்.அந்நாடுகள் அனைத்தும் இத்தீர்வு யோசனையை வரவேற்றுள்ளன. இதன்மூலம் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்
என்று அவை நம்பிக்கை தெரிவித்தன.இன்னும் பல நாடுகள் இம்முயற்சி தொடர்பில் சாதகமாகக் கருத்து வெளியிடும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
Posted on : Fri Jan 25 9:40:00 2008
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் சிபாரிசு நல்ல முதல் நடவடிக்கை வரவேற்கின்றது இந்தியா!
இலங்கையின் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ள இடைக்கால சிபார்சை, இந்தியா வரவேற்றிருக்கின்றது."ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து சமூகத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுக்கட்டமைப்பை எட்டுவதற்கான நல்லதோர் முதல் நடவடிக்கை
இது'' என்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நவ்டேஜ் சர்ண தெரிவித்தார்.""இலங்கை அரசமைப்பின் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள்
மற்றும் அரச கரும மொழி ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு இடைக்கால நடவடிக்கையாக சிபாரிசு
செய்த விடயங்களை இலங்கை அரசு எங்களோடு பகிர்ந்து கொண்டது. ""இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டும் நடவடிக்கையில் இலங்கை அரசுடனும், அந்நாட்டு மக்களுடனும் இந்தியா தொடர்ந்தும் பணியாற்றும்'' இப்படி சர்ண மேலும் குறிப்பிட்டார்.
அவசர அவசரமாக இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டது ஏன்?
[25 - January - 2008]
* `ஏமாற்று வித்தை' சிவில் சமூக, சமயப் பிரதிநிதிகள் கடும் அதிருப்தி ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

சர்வகட்சி மாநாட்டு பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால அறிக்கையும் அவற்றை வடக்கிலும், கிழக்கிலும் அமுல்படுத்தப்போவதாக அரசாங்கம்
விடுத்திருக்கும் அறிவிப்பும் காலம் கடந்த நடவடிக்கை எனவும் வெறும் `ஏமாற்று வித்தை' யெனவும் சிவில் சமூக, சமயப் பிரதிநிதிகள் கடும்
அதிருப்தியும் கவலையும் தெரிவித்தனர்.
சர்வ கட்சிப்பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால அறிக்கையானது காலம் கடந்ததொன்று எனவும்`ஆனைப்பசிக்கு சோளப் பொரி' யெனவும் `ஏமா ற்று
வித்தை', `பொய் வேலை'என்றும் அவர்கள் வர்ணிக்கின்றனர்.
இதுகுறித்து மாற்றுக் கொள்கை நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறுகையில்;
"அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த இனிமேலாவது முடியுமாவென்ற சந்தேகம் மேலோங்குகிறது. 1987
ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய காலகட்டம் முக்கியமானதாகும்.
இந்நிலையில், வடக்கில் இடைக்கால ஆலோசனைச் சபையும் கிழக்கில் தேர்தலும் `பொய் வேலை'என்றே கூறலாம். இதனை நடைமுறைப்படுத்த
சர்வதேசத்திற்கு விருப்பமில்லையென்றே தோன்றுகிறது. எனினும், நிலைமைகளை பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.
ஆயர் இராயப்பு ஜோசப்
இதுபற்றி மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் கூறுகையில்;
"தற்போதைய நிகழ்வுகள் வெறும் கண்துடைப்பானவை. யுத்தம் முன்னெடுக்கப்படவே இவை வழிவகுக்கும். தமிழ் இனத்தின் பிரச்சினைக்கு இது
தீர்வாகாது. மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரில் ஒரு தரப்பினர் இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனை ஒரு ஏமாற்று வித்தையென
வர்ணிக்கலாம்.
பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஒரு இடதுசாரி. அவரை மதிக்கிறேன். தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்பதில் அவர் ஆர்வம் கொண்டுள்ளவர்.
விருப்பமின்றியும் அழுத்தங்களுக்கு அடிபணிந்துமே அவசரமாக அவர் 13 ஆவது திருத்தத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
இடைக்கால அறிக்கையின்படி கூறப்பட்டுள்ள வடக்கின் நிர்வாகத்தை கொழும்பைத் தளமாக கொண்டியங்கும் மக்களின் ஆதரவற்ற தலைவர்களிடம்
ஒப்படைப்பது பயனற்றது. எவற்றிலும் புலிகளுக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்.
யுத்த தந்திரம், யுத்த வியூகம் வகுப்பவர்களை பயங்கரவாதிகள் எனவும் அவர்களை ஒழித்துக்கட்டுவதை தேசவிடுதலை எனவும் கூறமுடியாது. இது
வரலாறு எமக்கு கற்றுத்தரும் பாடமாகும். எனவே, உரியவர்கள் தமது சிந்தனைகளை மாற்றியமைத்து நோர்வேயின் ஆதரவுடன் யுத்தத்தை நிறுத்தி,
அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். நாட்டின் மீதும், மக்களிடத்தும் கொண்ட அன்பினால் இதைக் கூறுகிறேன்."
சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்
இதுபற்றி சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் கூறுகையில்;
"வடக்கு இடைக்கால சபை, கிழக்குத் தேர்தலையும் அரசாங்கம் பெரிய விடயமாகக் காட்டுகிறது. இது அரசியல் அமைப்பின் ஏற்கனவேயுள்ள
விடயமாகும்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இனநெருக்கடித் தீர்வுயோசனையில் 90 சதவீதத்தை பூர்த்திசெய்துள்ளது. இந்நிலையில், எதற்காக எங்களிடமிருந்து
அரசாங்கம் அவசரமாக இடைக்கால யோசனையை பெற்றதென்பதில் சந்தேகம் நிலவுகிறது. சிங்கள கடும்போக்காளரை கண்டு அரசாங்கம்
மிரண்டுபோயுள்ளமை தெளிவாகிறது" என்றார்.
சுனந்த தேசப்பிரிய
இதுபற்றி சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதான ஏற்பாட்டாளர் சுனந்த தேசப்பிரிய கூறுகையில்; "இடைக்கால யோசனையில் எவ்வித புதிய விடயமும்
இல்லை. கடந்த ஒன்றரை வருடம் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு எதனைத்தான் சாதித்தது என்ற கேள்வி மேலோங்குகிறது. ஜனாதிபதி
உத்தரவுக்கமையவேதான் இவ்விடயங்கள் அரங்கேறுகின்றமை தெளிவாகிறது" என்றார்.
தீர்வு யோசனை வெற்றுக் காசோலைக்குச் சமம் பிரச்சினைகளும் அதிகரிக்கும் - என்கிறார் விமல்
1/25/2008 12:29:49 PM வீரகேசரி இணையம்
அமைச்சர் திஸ்ஸ விதாரணவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தீர்வு யோசனையானது வங்கிகளில் கொடுக்கப்படுகின்ற
வெற்றுக்காசோலைக்கு சமனானது. இதனால் மேலும் பிரச்சினைகளே அதிகரிக்கும் என்று ஜே.வி. பி.யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச
தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்காக தமது உயிர்களை தியாகம் செய்து கொண்டிருக்கும் முப்படையினர் புலிகளின் தலைவர் பிரபாகரனின்
தளத்தை தாக்கியழித்துள்ள இத்தருணத்தில் பிரிவினைவாத சக்திகளின் கரங்களை பலப்படுத்தும் நோக்கிலமைந்த அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை முன்வைத்திருப்பதிலிருந்து ஜனாதிபதியின் அடிமட்டமான முட்டாள் தனம் வெளிப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
தொழில் பெற்றுக்கொண்ட பட்டதாரிகளின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இரண்டாவது தேசிய மாநாடு மஹரகமையிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள்
மன்ற பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே விமல் வீரவன்ச எம். பி .
இதனைத்தெரிவித்தார்.
நியாயமான அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கும் நாட்டை கட்டியெழுப்ப ஆற்றல் உள்ள உழைக்கும் சக்திகளான பட்டதாரிகளை
அணிதிரட்டும் வகையில் அமைந்த இம்மாநாட்டில் ஜே.வி.பியின் எம்.பி லால் காந்தவும் கலந்து கொண்டிருந்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய
விமல் வீரவன்ச மேலும் கூறியதாவது எமது நாடு சதந்திரமடைந்து 60 ஆண்டுகளையும் பூர்த்தி செய்ய இருக்கின்ற நிலையில் நாட்டில் அபிவிருத்தி மட்டும் மந்த கதியிலேயே உள்ளது காரணம் வெள்ளைகாரன் காட்டி விட்ட வழிகளிலிருந்து இன்னும் விடுபடாமைதான். இன்று வரையிலும்
வெளிநாட்டுக் கொள்கைகள் நமது நாட்டுக்குள் புகுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. இன்னொருபக்கம் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தம் இந்த
யுத்தத்துக்கு முழுமுதல் காரணமே பிரிவினை வாதமாகும். இந்த பிரிவினை வாத்திற்கு துணைபுரிகின்ற ஐக்கிய தேசிக் கட்சி புலிகளுக்கும் புலி
ஆதாரவாளர்களுக்கும் ஏற்ற விதத்திலேயே நடந்து கொள்கின்றது. கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2004 வரையிலான காலப்பகுதியில் இது
இடம்பெற்றதாலேயே அதனை தடுத்து நிறுத்தினோம்.
ஆனால் இன்று நடந்திருப்பது என்ன? அதிகாரப்பரவலாக்கம் என்ற யோசனைத்தீர்வுத்திட்டம் மஹிந்த அரசினால் முன்வைக்கப்பட்டுள்ளது. திஸ்ஸ
விதாரணவினால் முன்வைக்கப்பட்டிருந்த இந்த திட்டமானது வங்கிகளில் வழங்கப்படுகின்ற வெற்றுக் காசோலைக்கு ஒப்பானதாகும். யார்
வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் அதனை நிரப்பிக் கொள்ளமுடியும். இதனால் மேலும் மேலும் பிரச்சினைகளே ஊருவாக வழிவகுக்கும்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவினதும் வெளிநாடுகளினதும் தாளத்துக்கு ஏற்றாற்போல் ஆடிக்கொண்டு இருப்பது மட்டுமல்லாமல் தற்போது
பயங்கரவõதத்துக்கு இராணுவ ரீதியிலான தீர்வு என்றும் நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான அதிகாரப்பரவலாக்கல் மூலம் தீர்வு
என்றும் கூறிக் கொண்டிருக்கின்றார்.
தீவிரவாதத்தை ஆதரிக்கும் அல்லது அதற்கு சாதகமாக நடந்து கொள்ளும் பிரிவினைவாத சக்திகளின் கரங்களே அதிகாரப்பரவலாக்கல் மூலம்
நன்மையடையப்போகின்றன.
கருணாவிற்கு 9 மாதம்
1/25/2008 5:05:08 PM வீரகேசரி இணையம் -
இராஜதந்திரிகள் பயன்படுத்தக் கூடிய கடவுச் சீட்டை போலியாக தயாரித்து அதைப் பயன்படுத்தி ஐக்கிய இராஜ்ஜியத்துக்குள்
நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்ட கருணாவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று 9 மாத கால சிறை தண்டனை வழங்கித் தீர்பளித்துள்ளதாக
பி.பி.சி தமிழோசை செய்தி வெளியிட்டுள்ளது.
கேணல் கருணா கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி லண்டனில் உள்ள அவரது வீட்டிலிருந்து குடிவரவு மற்றும் காவல் துறையினரால்
கைதுசெய்யப்பட்டார்.
அவர் எப்படி ஐக்கிய இராஜ்ஜியத்துக்குள் நுழைந்தார் என்பது குறித்த விசாரணையின் போது, கருணா இராஜதந்திரிகள் பயன்படுத்தும் கடவுச் சீட்டை
பயன்படுத்தி லண்டன் வந்தது கண்டறியப்பட்டது.
இந்த கடவுச் சீட்டை இலங்கை அரசு அதிகார பூர்வமாக வழங்கியதா என்பது குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், கேணல் கருணா மீதான
வழக்கை விசாரித்த லண்டன் ஐசல்வோர்த்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று, சட்டத்துக்கு புறம்பாக அவர் ஐக்கிய இராஜ்ஜியத்துக்குள் நுழைந்ததாக
கூறப்பட்ட வழக்கில் இன்று தண்டனை வழங்கியுள்ளது.
அவர் ஏற்கனவே 32 நாட்கள் சிறையில் இருந்ததன் காரணமாக, அந்த நாட்கள் தண்டனைக் காலத்தில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் என்றும்
நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, கருணா, சிறார்களை படையில் சேர்த்தது உள்ளிட்ட மனித உரிமை மீறல்களை செய்தார் என்றும் அதற்காக அவர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம்னெஸ்டி அமைப்பு உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.
எகிப்திய அரசாங்கம் எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்; அமெரிக்கா வலியுறுத்தல்
[26 - January - 2008]
எகிப்திய அரசாங்கம் தனது எல்லையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை பாலஸ்தீனத்தின் காஸாப் பகுதிக்கும் எகிப்துக்குமிடையிலான எல்லைச் சுவரை போராளிகள் தகர்த்ததையடுத்து ஆயிரக்கணக்கான
பாலஸ்தீனர்கள் தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக எகிப்துக்குள் நுழைந்தனர். இதைத் தொடர்ந்தே அமெரிக்கா இவ்
வேண்டுகோளை விடுத்துள்ளது.
இவ்வெல்லை விவகாரம் கடினமானதென்பதை புரிந்து கொள்ள முடிவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ்
ஆனால், இவ்வெல்லையைப் பாதுகாக்க வேண்டியது அவசியமென வலியுறுத்தியுள்ளார்.
இவ்வெல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான எகிப்தியப் படையினர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதும் இவர்கள் பாலஸ்தீன மக்களைத்
தடுத்து நிறுத்தவில்லையென நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் காஸாவுக்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான விநியோகத்தை இஸ்ரேல் பெருமளவில்
கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து காஸாவில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
கடந்த புதன்கிழமை மட்டும் சுமார் 50,000 பாலஸ்தீனர்கள் எகிப்துக்குள் நுழைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலம்பியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் கொண்டலீசா ரைஸ் இவ் விடயம் தொடர்பில் தெரிவிக்கையில்;
"எகிப்தின் நிலைப்பாட்டை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதுவொரு சர்வதேச எல்லை . அதனால், இதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த
வேண்டியது அவசியம். இது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய முக்கியமான விடயமென்பதை எகிப்தியர்கள் புரிந்து கொள்வார்களென
நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
1.5 மில்லியன் காஸா சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் இவ்வெல்லையைக் கடந்து சென்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
காஸா மக்கள் தமக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக எகிப்துக்குள் நுழைந்துள்ள போதும் இதனைப் பயன்படுத்தி
காஸாவிற்குள் ஆயுதங்கள் கடத்தப்படலாமென இஸ்ரேல் அஞ்சுகிறது.
எனினும், இவ்வெல்லைப் பகுதியின் பாதுகாப்பு வழமைக்குத் திரும்புமெனத் தெரிவித்துள்ள எகிப்திய வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் ஹொசாம் ஷகி
தற்போதைய சூழ்நிலையை தற்காலிக காரணங்களுக்கான ஒரு அசாதாரண நிலைமையென வர்ணித்துள்ளார்.
அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதே தற்போது எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வியென நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: