Tuesday, 12 February 2008

இலங்கையில் தமிழர்கள் "பிரஜைகள்'' அல்ல, தனித் தேசத்தவர்.

தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகளேயாவர். சிங்களவர்கள் அனுபவிக்கும் அனைத்து அதிகாரங்களும் உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் உண்டு.
புலிகளை அழிக்கும் வரை யுத்தம் நிறுத்தப்படாது - பிரதமர்.

2/12/2008 12:06:23 AM வீரகேசரி இணையம்

விடுதலைப்புலிகளை அழிக்கும் வரையில் யுத்தம் நிறுத்தப்படமாட்டாது. இலங்கையில் மனித உரிமை மீறப்படுகின்றது என்று
குரல்கொடுக்கும் வெளிநாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் புலிகளின் செயற்பாடுகள் குறித்து கருத்தில் கொள்வதில்லை என்று பிரதமர்
ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
தமிழ் மக்களும் இந்த நாட்டின் பிரஜைகளேயாவர். சிங்களவர்கள் அனுபவிக்கும் அனைத்து அதிகாரங்களும் உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் உண்டு.
13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்தி பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கியே
தீருவோம். இதற்காக சவால்களை எதிர்கொள்ளவும் அரசாங்கம் தயார் என்றும் அவர் மேலும் கூறினார்.
கொரியாவின் நிதியுதவியுடன் ஹோமாகமையில் அமைக்கப்பட்ட ஒரு தொகுதி வீடுகளை அரச ஊழியர்களுக்கு கையளிக்கும் வைபவம் நேற்று
ஹோமாகமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில் கொரியாவின் இலங்கைக்கான தூதுவர் க்வோன் யன்டால், வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் மற்றும் அதிகாரிகளும்
கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது:
நாட்டை சூறையாடிக்கொண்டிருக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராகவே அரசாங்கம் யுத்தத்தை மேற்கொண்டு வருகின்றது. இது பயங்கரவாதத்துக்கு
எதிரான யுத்தமே தவிர தமிழர்களுக்கு எதிரானது அல்ல.
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை வைத்துக்கொண்டு இங்கு வருகின்ற ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை
ஸ்தாபனங்களின் உறுப்பினர்கள் இலங்கையில் மனித உரிமை மீறப்படுவதாக கூறுகின்றனர். ஆனால் இன்று நாட்டின் பல பகுதிகளிலும் பதற்ற
சூழ்நிலை தோன்றியுள்ளதை மக்கள் நன்கு அறிவர். போக்குவரத்துக்கான பஸ் மற்றும் ரயில்களில் குண்டுகள் வெடிக்கின்றன. மக்கள் நடமாடும் பொது
இடங்களில் குண்டுகள் வெடிக்கின்றன. இதன் விளைவு அப்பாவி பொதுமக்களே பலியெடுக்கப்படுகின்றனர்.
இவ்வாறான படுபாதக கைங்கரியங்களில் ஈடுபட்டு வருவது புலிப்பயங்கரவாதமேயாகும். இதற்கு எதிராகவே அரசாங்கம் போராடி வருகின்றது.
அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பதற்றத்தை தோற்றுவித்து அசாதாரண சூழ்நிலைகளை
உண்டுபண்ணி வரும் புலிகளின் செயற்பாடுகள் குறித்து இந்த மனித உரிமை அமைப்புகளும் அது குறித்து பேசும் வெளிநாடுகளும் கருத்தில்
கொள்வதில்லை.
அரசாங்கத்திற்கு பொது மக்களை பாதுகாப்பதற்கான கடமையும் உரிமையும் உள்ளது. அதனால் பயங்கரவாதத்தின் அதிகாரத்திற்கு அடிபணிய
முடியாது.

யாழ் உதயன் செய்திகள்
பொருளாதாரம் போகும் போக்கு

பொருத்தமற்ற பொருளாதாரக் கொள்கைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் தற்போதைய அரசினால் நாட்டின் பணவீக்கம் எகிறுகின்றது.கடந்த வருடம் சராசரிப் பணவீக்கம் 21.6 வீதமாகும். நவம்பரில் மாத்திரம் அது 26. 2 வீதத்தைத் தொட்டு நின்றதாக அதிர்ச்சித் தகவல்.2008 இல் நாட்டின் பணவீக்கத்தை பத்து முதல் பதினொரு வீதத்துக்குள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் போவதாக மனக்கோட்டை கட்டிய இலங்கை
மத்தியவங்கி அந்த நம்பிக்கையை வருடம் பிறந்து ஒன்றரை மாத காலம் முடிவதற்குள்ளேயே கோட்டை விட்டுவிட்டது.இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் பணவீக்கம் 16 முதல் 20 வீதமாக இருக்கும் என்று இப்போதே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு அது வந்து
விட்டது. ஆனால் உண்மையில் யதார்த்தத்தில் அந்தப் பெறுபேறு நிச்சயம் இருபது முதல் இருபத்தியைந்து வீதத்தைத் தாண்டும் என்று உறுதி
கூறுகின்றன பொருளாதார நிபுணத்துவ வட்டாரங்கள்.இந்தப் பிராந்தியத்தில் தெற்காசிய பிரதேசங்களில் ஆகக் கூடுதலான பண வீக்கத்தை வெளிப்படுத்தும் மோசமான பொருளாதார நிலையில் இருக்கும்
தேசம் என்ற பெருமையை இலங்கையே தட்டிச் செல்கின்றது.இத்துணை சனத்தொகையையும், பின்தங்கிய கிராமங்களையும் கொண்ட இந்தியா கூட தனது பணவீக்கத்தை 6 வீதத்துக்குள் கட்டுப்படுத்தி
வைத்திருக்கின்றது.இப்பிரதேசத்தில் இலங்கைக்கு அடுத்து மோசமான பணவீக்க அதிகரிப்பைக் கொண்ட நாடாக பங்களாதேஷ் விளங்குகின்றது. அங்கு கூட பணவீக்கம்
11 வீதம்தான். ஆனால் அதன் இரட்டிப்பு மடங்கில் முன்னிலை வகிக்கின்றது இலங்கை. ஒரு புறம் கண், மண் தெரியாமல் யுத்தத்துக்கு போர்வெறித் தீவிரத்துக்கு நாட்டின் பொருளாதார வளத்தைக் கபளீகரம் செய்யும் செயற்பாடுகள்.மறுபுறம், எங்கும் ஊழல், எதிலும் மோசடி, எவற்றிலும் லஞ்சம் என்று அதிகாரத் துஷ்பிரயோகங்கள், குளறுபடித்தனங்கள்.இன்னொரு புறம் தவறான பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்ற அவலம். தனிநபர்களின் விருப்பு, வெறுப்புக்காக வகுக்கப்படும்
பொருளாதாரக் கொள்கைகள் தீர்க்க தரிசனத்துடனும், யதார்த்தப் புறநிலைகளுக்கு அமைவாகவும் நடைமுறைப்படுத்தப் படுவதேயில்லை.உதாரணத்துக்கு, தேவைப்படும் போதெல்லாம் கணக்கு வழக்கின்றி பணத்தை புது ரூபா நோட்டுக்களை கண் மண் தெரியாமல் அச்சிட்டுத்தள்ளி,
அவற்றை சர்வசாதாரணமாகப் புழக்கத்துக்கு விடும் கோமாளித்தனத்தைக் குறிப்பிடலாம்.இவையெல்லாம் சேர்ந்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையின் மைய நாணையே சிதறடிக்கச் செய்துவிட்டன.வெளிநாட்டு முதலீடுகளை நட்புறவுடன் அரவணைக்கும் போக்கு இல்லாத காரணத்தாலும் அதற்கான அரசியல், களநிலை யதார்த்தங்கள்
காணப்படாமையாலும் புதிய முதலீடுகள் இல்லாமற் போகின்றன. பழைய முதலீடுகளும் வாபஸ் பெறப்படும் அலங்கோல நிலைமை."செல்லும் செல்லாததற்கொல்லாம் செட்டியார் பொறுப்பு' என்பது போல உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பாலேயே இங்கு இந்த இக்கட்டு
என்ற சாக்குப் போக்கு வேறு.இதேபோன்ற சர்வதேச எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்கொள்ளும் இந்தோனேஷியாவினாலும், தாய்லாந்தினாலும், பிலிப்பைன்ஸினாலும் கூட
பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமானால், அதையே காரணம் காட்டி பணவீக்கத்தை தவிர்க்கமுடியாதது எனக் கொழும்பு அரசு
நியாயப்படுத்துவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.நாட்டில் ஒரு பக்கத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு. மறுபக்கத்தில் மின் உற்பத்திக்கான மானியம் வெட்டப்பட்டதால் சராசரி 40 வீத மின் கட்டண
அதிகரிப்பு இன்னும் மூன்று வார காலத்துக்குள் நடைமுறைக்கு வரப்போகின்றது. தவிரவும் அரிசி, மா, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களின்
விலைகளும் எக்கச்சக்கமாக உயர்ந்து விட்டன. போரினால் பொருளாதார அபிவிருத்தி செத்துவிட்டது.இந்தப் பின்னணியில் வருடாந்தப் பணவீக்கம் 25 வீதத்தைத் தாண்டுவது நிச்சயமாகத் தவிர்க்க முடியாத நிதர்சனமாகப் போகின்றது.இதேவேளை, தன்னுடைய போர்வெறிப் போக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகத் தினசரி அறுபது கோடி ரூபாவை யுத்தத்தின் பெயரால்
நாசமாக்குகின்றது அரசு. அதாவது ஒவ்வொரு நிமிடத்துக்குச் சராசரி 40 லட்சம் ரூபா வீணே செலவாகிக் கரைந்து கொண்டிருக்கின்றது.ஆனால் இந்த நெருக்கடியெல்லாம் தற்காலிகமானவை, விரைவில் "வடபகுதிப் பயங்கரவாதிகளை' கூண்டோடு அழித்து, அமைதியை மீட்டு,
சமாதானத்தை எட்டி, பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி விடுவோம் என்று சூளுரைத்துக் கொண்டிருக்கின்றார் நாட்டின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ.கையில் கிடைத்த பொரிமாத்தோண்டியையும் கனவு கண்டு போட்டுடைத்த ஆண்டி மாதிரி, நாடும் அவரது இந்தக் கனவு நனவாகும் வரை காத்திருந்து
ஏமாற வேண்டியதுதான்.

தெற்கு, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் இலங்கையிலேயே பணவீக்கம் மிக மோசமாக அதிகரிப்பு
[11 - February - 2008]
கொழும்பு தினக்குரல் செய்திகள் தெற்கு, தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் இலங்கையிலேயே பணவீக்கம் மோசமாக அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்தவருடம் சராசரி பணவீக்கம் இலங்கையில் 21.6 சதவீதமாக காணப்பட்ட அதேசமயம் நவம்பரில் 26.2 சதவீதமாக படுமோசமாக
அதிகரித்திருந்தது.
கடந்தவருடம் இறுதி காலாண்டில் இந்தோனேசியாவின் பணவீக்கம் 7 சதவீதமாகும். தாய்லாந்தில் 2.6 சதவீதமாகவும் மலேசியாவில் 2 சதவீதமாகவும்
சிங்கப்பூரில் 2.9 சதவீதமாகவும் பிலிப்பைன்ஸில் 3 சதவீதமாகவும் இந்தியாவில் 6 சதவீதமாகவும் பங்களாதேஷில் 11.2 சதவீதமாகவும் இருந்ததை
சுட்டிக்காட்டியுள்ள லிர்னே ஏசியாவின் பிரதம பொருளியலாளரும் புத்திஜீவியுமான ஹர்ஷா டி சில்வா, "நாங்கள் மக்களை துன்பத்திற்கு இட்டுச்
செல்வதில் சம்பியன்களாக இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிதிக் கொள்கைகள் தொடர்பான தமது பிந்திய கட்டுரையிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
அதிக விலை கொடுத்து எண்ணெய் இறக்குமதி செய்வதே பணவீக்கம் அதிகரிப்புக்குக் காரணமென அரசாங்கம் கூறுகின்றது.
ஆனால், எரிபொருள் விலை அதிகரிப்பு ஒரு காரணமாக இருந்தால் எண்ணெய் இறக்குமதி செய்யும் ஏனைய தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளிலும்
பணவீக்கம் அதிகரித்து இருக்க வேண்டுமே என்று கேள்வி எழுப்புகின்ற?ர். பங்களாதேஷை தவிர்த்து ஏனைய நாடுகளில் பணவீக்கம் மிகத் தாழ்ந்த
மட்டத்தில் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொருத்தமான கொள்கைகளை நடை முறைப்படுத்துவதால் இந்த நாடுகள் பணவீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் ஆனால்,
இலங்கையில் அந்த நிலைமை இல்லையென்றும் பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பணவீக்கம் மோசமான அளவுக்கு அதிகரிப்பதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தேவையற்ற
அபரிமிதமான செலவினமும் வரவு செலவுத்திட்டத்தில் துண்டுவிழும் தொகையை ஈடுகட்ட மத்திய வங்கியால் அச்சிடப்படும் பாரிய தொகை
பணமுமே காரணமென ஹர்ஷா டி சில்வா கூறுகின்றார்.
2007 மே மாதத்திற்கும் செப்டெம்பர் மாதத்திற்கும் இடையில் மத்திய வங்கி 4900 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை ஆகஸ்ட் மாத காலப்பகுதியில் நாணய இறுக்கத்தை நிறுத்தியமை பணவீக்கம் அதிகரித்ததற்கு பங்களிப்பை செலுத்தியுள்ளதென்று
2007 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொடர்பான அறிக்கையில் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் நிதித்தேவைகளில் அதிகமானவை மத்திய வங்கி பணத்தை அச்சிடு வதன் மூலமே பூர்த்தி செய்யப்படுவதால் இலங்கையில் பணவீக்கம்
அதிகமாக இருப்பதாக எச்.எஸ்.பி.சி.யின் உயர்மட்ட பொருளியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
அதிகளவு பணத்தை வெளியிடுவதை மத்திய வங்கி மறுத்துள்ள போதும் கடந்த அக்டோபரில் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் அமைச்சர் பந்துல
குணவர்த்தன வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பணத்தை அச்சிடும் நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டதை ஏற்றுக்கொண்டார்.
இதனால், மேலதிகமாக பணவீக்கம் ஏற்பட்டதென்பதையும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
பணத்தை அச்சிடுவதைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு தெரிவு இல்லையெனவும் 2007 டிசம்பரில் அமைச்சர் குணவர்த்தன கூறியிருந்தார்.
வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணை அண்மையில் அரசாங்கம் மறுசீரமைப்புச் செய்திருந்தது. நடைமுறையிலிருக்கும் சுட்டெண் முறை
காலாவதியானதொன்று என்று அரசு தெரிவித்திருந்தது.
புதிய வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணின் பிரகாரம் 2007 இல் பணவீக்கம் 20.8 சதவீதமெனவும் 21.6 சதவீதமல்ல எனவும் அரசாங்கம்
தெரிவித்திருந்தது.
பழைய வாழ்க்கைச்செலவு சுட்டெண் பலவழிகளில் காலத்திற்கு பொருத்தமானதாக இல்லையென்பதை ஏற்றுக்கொள்ளும் பொருளியலாளர்கள்,
அதேசமயம், புதிய வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணும் யதார்த்தபூர்வமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர். செலவினத்தின் முக்கிய
விடயங்கள் இந்தப் புதிய சுட்டெண்ணில் சேர்க்கப்படவில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு ஹர்ஷா டி சில்வா உதாரணமொன்றைக் கூறியுள்ளார். இலங்கையில் சராசரியாக வருமானத்தில் 2.2 சதவீதம் மதுபானம், சிகரெட்டுக்காக
செலவிடப்படுகின்றது. புதிய சுட்டெண்ணில் இது உள்ளடக்கப்படவில்லை என்று ஹர்ஷா டி சில்வா கூறுகிறார்.
இத்தொகையானது கல்விக்காக குடும்பமொன்று தனது வருமானத்தில் செலவிடப்படும் தொகைக்கு ஏறக்குறைய சமமானதாகும். கல்விக்காக
குடும்பமொன்று சராசரியாக வருமானத்தில் 2.3 சதவீதத்தை செலவிடுகிறது.

மார்ச் - 1 முதல் மின்கட்டணம் 40 சதவீதத்தால் அதிகரிப்பு
[11 - February - 2008]
மின்சாரக்கட்டணம் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து 40 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. மின்சாரக் கட்டணம் தொடர்பாக திறைசேரி மேற்கொண்டுள்ள தீர்மானத்தின்படி பல மின்கட்டண மானியங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது இலங்கை மின்சாரசபை அனல் மின்சார உற்பத்திக்காக எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக பெருமளவு பணத்தை செலவிட்டு
சாதாரண விலையிலேயே பாவனையாளருக்கு மின்சாரத்தை வழங்கி வருகிறது. இதனால் அது நஷ்டமடைய வேண்டிய நிலை காணப்படுகிறது.
அத்துடன் உலக சந்தையில் கடந்த வருடம் ஒரு லீற்றர் 55 ரூபாவாக இருந்த டீசல் தற்போது 85 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதுவரைகாலமும்
இலங்கை மின்சார சபை எதுவித இலாபமுமின்றி உற்பத்தி விலையிலேயே பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்கி வருகிறது.
தற்போது இந்த எரிபொருள் விலையதிகரிப்பு சுமை பாவனையாளர் மீது சுமத்தப்படுகிறது. இக்கட்டண அதிகரிப்பின்படி அனைத்துப்
பாவனையாளர்களும் 20 சதவீத எரிபொருள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதுவரை காலமும் 90 அலகுகளுக்கு அதிகமாகப் பாவித்தவர்களே இந்த
எரிபொருள் கட்டணத்தை செலுத்தி வந்தனர். 180 அலகுகளுக்கு மேல் பாவிப்பவர்கள் அதிகளவாக சுமார் 88 வீத கட்டண அதிகரிப்பை
எதிர்கொள்கின்றனர். 181 அலகுகளைப் பாவித்த வாடிக்கையாளர் இதுவரை 2323 ரூபாவை கட்டணமாக செலுத்தியிருப்பர். ஆனால் இனி அவரது
கட்டணம் 3783 ரூபாவாக இருக்கும். சுமார் 1460 ரூபா அதிகமாக செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.
180 - 181 இடைப்பட்ட அலகு பாவனையாளர்களுக்கு இதுவரை விதிக்கப்பட்ட கட்டண முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அலகுப்
பாவனையாளர்களுக்கு இதுவரைகாலமும் 7 வெவ்வேறு அடிப்படையில் கட்டணங்கள் விதிக்கப்பட்டிருந்தன. ஆலயங்கள், தேவாலயங்கள்,
பள்ளிவாசல்கள் போன்ற மத நிறுவனங்களுகக்கு இப்புதிய எரிபொருளுக்கான கட்டணங்கள் இதுவரை அதிகரிக்கப்படவில்லை.
இக்கட்டண அதிகரிப்பு தொடர்பாக இலங்கை மின்சாரசபைத் தலைவர் உதய காரியவசம் கருத்துத் தெரிவிக்கையில்;
"இந்த எரிபொருள் விலை அதிகரிப்பை ஈடு செய்வதற்கு இலங்கை மின்சாரசபைக்கு இதைவிட வேறு வழியில்லை. இவ்வருடம் ஜனவரியில் இருந்து
அனல் மின்சாரமே அதிகளவில் விநியோகிக்கப்படுவதால் எரிபொருளுக்காக எந்தவித மானியத்தை வழங்குவதையும் அரசு நிறுத்தியள்ளது. இக்கட்டண
அதிகரிப்பையும் அமைச்சரவையே தீர்மானித்தது.
கடந்த 5 வருடங்களாக அரசு இலங்கை மின்சார சபைக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 5 மில்லியன் ரூபாவை நிதியுதவியாக வழங்கியுள்ளது. 2005
ஆம் ஆண்டு மாத்திரம் 11 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இப்புதிய மின்கட்டண திட்டப்படி ஹோட்டல் துறையினருக்கு எந்தவித சலுகையும்
வழங்கப்படவில்லை. எனினும் ஏனைய சிலவகை நிறுவனங்களுக்கான சலுகைகள் தொடர்ந்தும் வழங்கப்படும் இந்த மின் கட்டண அதிகரிப்பானது
எல்லாத் தரப்பினரதும் வாழ்க்கைச் செலவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
இக்கட்டண அதிகரிப்பின் படி 30 அலகுக்கான கட்டணம் 150 ரூபாவிலிருந்து 198 ரூபாவாகவும் 31 அலகுக்கான கட்டணம் 184 ரூபா 70 சதத்திலிருந்து
276 ரூபாவாகவும் 60 அலகுக்கான கட்டணம் 321 ரூபாவிலிருந்து 450 ரூபாவாகவும் 61 அலகுக்கான கட்டணம் 358 ரூபாவிலிருந்து 639 ரூபாவாகவும்
90 அலகுக்கான கட்டணம் 576 ரூபாவிலிருந்து 846 ரூபாவாகவும் 91 அலகுக்கான கட்டணம் 780 ரூபாவிலிருந்து 1400 ரூபா 40 சதமாகவும்
அதிகரித்துள்ளது.
அதேபோல் 180 அலகுக்கான கட்டணம் 2239 ரூபாவிலிருந்து 2682 ரூபாவாகவும் 181 அலகுக்கான கட்டணம் 2323 ரூபாவிலிருந்து 3782 ரூபாவாகவும்
360 அலகுக்கான கட்டணம் 6576 ரூபாவிலிருந்து 7866 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. 600 அலகுக்கான கட்டணம் 12279 ரூபாவிலிருந்து 21,690
ரூபாவாகவும் 601 அலகுக்கான கட்டணம் 12,302 ரூபாவிலிருந்து 31,848 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
இம்மின்கட்டண அதிகரிப்புக்கு பாவனையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் அதேவேளை நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில்
தமது தொழில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இம் மின்கட்டண அதிகரிப்பால் தாம் பாரிய பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டியள்ளதாக
ஹோட்டல் உரிமையாளர்களும் சுற்றுலாத் துறையினரும் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோல் தனியார் வைத்தியசாலை உரிமையாளர்களும்
இம்மின்கட்டண அதிகரிப்பு தம்மையும் பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மட்டு. தேர்தலில் 4 ஆயிரம் பொலிஸார்
[11 - February - 2008]

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி தேர்தல் பணியில் 4 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மட்டு.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்
எச்.எம்.டி. ஹேரத் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் இடம்பெறவுள்ளது.
தேர்தல் வாக்களிப்பின் போது 4 ஆயிரம் பொலிஸார் படையினருடன் இணைந்து பாதுகாப்பு பணியிலீடுபடுவார்கள். தேர்தல் சுதந்திரமாகவும்
நீதியாகவும் இடம்பெறுவதை உறுதிப்படுத்தவே 4 ஆயிரம் பொலிஸாரை படையினருக்கு உதவியாக கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக ஹேரத் மேலும்
தெரிவித்தார்.

Posted on : Tue Feb 12 2:05:00 2008

அரசும் புலிகளும் மீண்டும் பேசுமாறு நோர்வேப் பிரதமர் வலியுறுத்து புதுடில்லியில் வைத்துக் கருத்து இலங்கையின் இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு சாத்தியமேயில்லை என வலியுறுத்தியிருக்கும் நோர்வேப் பிரதமர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க்,
இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் மீண்டும் பேச்சுகளை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்தியாவிற்கான தனது விஜயத்தின் போது நோர்வே பிரதமர் புதுடில்லியில் வைத்துச் செய்தியாளரிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கை நெருக்கடிக்கு இராணுவ வழிமுறையூடாகத் தீர்வு சாத்தியமென நோர்வே கருதவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில வருட
மோதல்களுக்குப் பின்னர் இருதரப்பும் மீண்டும் பேச்சு மேசையில் சந்திக்கவேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையின் தசாப்தகால இன மோதலிற்குத் தீர்வைக் காண்பது குறித்து நோர்வே தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஸ்டொல்டென்பேர்க்
கருத்து வெளியிட்டுள்ளார்.இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும், சகல சமூகத்தவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அர்த்தபூர்வமான பேச்சு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு
தான் வேண்டுகோள் விடுக்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் முன்வைத்துள்ள அதிகாரப் பகிர்வு யோசனைகளுக்கு ஆலோசனைகள் எதனையும் வழங்க விரும்புகின்றீர்களா
என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ""தீர்வு இப்படித்தான் உருவாக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை வழங்குவது நோர்வேயின் பணியல்ல''
என பிரதமர் ஸ்டொல்டென்பேர்க் பதிலளித்தார்.

தமிழருக்கு சிறப்பு அடையாள அட்டை
ஹெல உறுமய அரசிடம் வலியுறுத்தும்
[11 - February - 2008]
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தனியாக சிறப்பு அடையாள அட்டைகளை வழங்குமாறு ஜாதிக ஹெல உறுமயக் கட்சி அரசிடம்
வலியுறுத்தவுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பேச்சாளர் நிசந்த ஷ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளதாவது;
தமிழர்களுக்கு சிறப்பான அடையாள அட்டைகளை வழங்குமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்கவுள்ளோம். இது தொடர்பான திட்டத்தையும் நாம்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளோம்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக நாம் இதனைக் கோரி வருகின்றோம். தற்போதுள்ள நிலைமையில் இது மிக அவசியமானது.

சுடான் அகதிகளை இனியும் உள்வாங்க இயலாது: சாட் பிரதமர்
சுடானின் தார்புர் பிராந்தியத்திலிருந்து வருகின்ற அகதிகளை சாட் தேசத்தால் இனி உள்வாங்க இயலாது என்று சாட் நாட்டின் பிரதம்ர் நூர்தீன் டெல்வா
கஸ்ஸீர் கூறியுள்ளார்.
அகதிகளாக வருவோர் சாட்டில் பிரச்சினைகளை உருவாக்குவதாகவும், புதிதாக வருவோரைத் திருப்பியனுப்பதிலும் அவர்களை வேறு நாட்டுக்கு
அனுப்புவதிலும் சர்வதேச சமூகம் ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றால், தாங்கள் அவர்களை தமது நாட்டிலிருந்து வெளியேற்றுவோம் என்று
பிரதமர் கஸ்ஸீர் கூறியுள்ளார்.
தார்பூர் அகதிகள் சுமார் இரண்டரை லட்சம் பேர் சாட்டின் கிழக்குப் பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
சுடான் அரசாங்கப் படைகள் மற்றும் மேற்கு தார்பூர் கிளர்ச்சிப் படைகள் இடையில் சென்ற வாரக் கடைசியில் மோதல்கள் உக்கிரமடைந்ததை அடுத்து,
சுமார் 12000 பேர் புதிதாக எல்லை கடந்து சாட் வந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

சுடப்பட்ட கிழக்குத் தீமோர் அதிபர் நிலை 'கவலைக்கிடம்'

அதிபர் ஜோஸ் ராமோஸ் ஹோர்ட்டா கிழக்குத் தீமோரின் அதிபரான ஜோஸ் ராமோஸ் ஹோர்ட்டா அவர்கள், தலைநகர் டிலிக்கு அருகில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட
தாக்குதலின் போது, வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த நாட்டு அதிகாரிகள், அங்கு இரவு நேர ஊரடங்கை
பிறப்பித்துள்ளார்கள்.
அவரது நிலைமை மோசமாக இருப்பதாக விபரிக்கப்பட்டது, ஆனால், ஆரம்பக்கட்ட அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நிலைமை ஸ்திரமாக இருப்பதாகக்
கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது பிரதமர் ஷானா குஸ்மாவோ மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது, ஆனால், அவர் பாதிக்கப்படவில்லை.
இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட கிளர்ச்சிக்குழுத் தலைவரான அல்பிரட் ரெய்னடோ அவர்கள், ஒரு சதிப்புரட்சிக்கு முயற்சித்ததாக அவர்
கூறியுள்ளார்.
மேலும் 150 அமைதிகாப்புப் படையினரை கிழக்குத் தீமோருக்கு அனுப்பியுள்ளதாக ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

இராக் திருப்பித் தரவேண்டிய கடன்கள் பெரும்பான்மையானவற்றை ரஷ்யா ரத்துசெய்துள்ளது

இராக் எரிசக்தித் துறையில் ரஷ்யா முதலீடுகள் செய்ய விரும்புகிறது ரஷ்யாவுக்கு இராக் திருப்பித்தர வேண்டிய கடன்களில் பெரும்பான்மையானவற்றை ரத்துசெய்வதற்கு ரஷ்யா உடன்பட்டுள்ளது.
முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் முன்னாள் இராக்கிய அதிபர் சதாம் உசேன் இடையில் நெருக்கமான உறவுகள் நிலவிய காலத்தில்
வழங்கப்பட்ட கடன்களும் இதில் அடங்கும்.
மாஸ்கோ வந்துள்ள இராக்கிய வெளியுறவு அமைச்சர் ஹொஷ்யார் ஜெபாரி கெயெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தில், இராக் திருப்பிசெலுத்த வேண்டிய
சுமார் 1300 கோடி டொலர்கள் மதிப்புள்ள கடன்களை ரத்துசெய்து, மீதமுள்ள 90 கோடி டாலர்களை அடுதத 17 ஆண்டுகளில் இராக் திருப்பிசெலுத்த
இடமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 400 கோடி டொலர் தொகையை இராக்கில் முதலீடு செய்யத் தயாராகிவருவதாகவும் ரஷ்யா கூறுகிறது. இந்த முதலீட்டில் பெரும்பங்கு
எரிசக்தித் துறையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இராக்கிலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறுவதில் 'இடைவேளை' வரலாம்: ராபர்ட் கேட்ஸ்

பாக்தாத்தில் அமெரிக்க தளபதியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளின் ஆரம்பக்கட்ட வெளியேற்றம் ஜூலை மாதத்தில் பூர்த்தியடைந்த பின்னர், மேலதிக வெளியேற்றத்தில் ஒரு
தற்காலிக இடைநிறுத்தம் தேவை என்பதை தான் ஆதரிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத்துறைச் செயலர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
பாக்தாதில் உள்ள அமெரிக்கத் தளபதிகளின் மத்தியில் உரையாற்றிய பின்னர் பேசிய கேட்ஸ் அவர்கள், ஜூலை மாதத்துக்குப் பின்னர், படை
ஸ்திரப்படுத்தலும், மறுஆய்வும் செய்வது பலன் தரும் என்று தெரிவித்தார்.
அடுத்த 6 மாதத்தில் இராக்கில் இருந்து ஆயிரக்கணக்கான படையினர் வெளியேறவுள்ளனர்.
அதன் மூலம், அதிபர் புஷ் அவர்களின் படையினரை அதிகரிக்கும் உத்திக்கு முன்னதான அளவை, அதாவது ஒரு லட்சத்து முப்பதாயிரத்தை
படைகளின் எண்ணிக்கை அடையும்.

No comments: