Friday, 15 February 2008

ஈழச்செய்திகள்:கம்பஹாவில் சிங்கள இளைஞர்கள் கைது

செய்தி மூலம்:கொழும்பு தினக்குரல்
13 ஆவது திருத்த அமுலாக்கத்துக்கு பொருளாதார உதவி வழங்க புதுடில்லி மீண்டும் உறுதியளிப்பு
[15 - February - 2008] * ஜனாதிபதி, பிரதமருடனான சந்திப்பில் இந்திய அமைச்சர் எடுத்துரைப்பு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக அரசாங்கம்
தெரிவித்துவரும் நிலையில் அதற்கான பொருளாதார ரீதியான அத்திபாரத்தை இடுவதற்கான உதவியை வழங்கும் இந்தியாவின் ஈடுபாட்டை ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷவிடம் புதுடில்லி நேற்று முன்தினம் புதன்கிழமை மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
கொழும்புக்கு வருகை தந்த இந்திய வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இந்த உறுதிமொழியை வழங்கியிருக்கிறார்.
ஜனாதிபதி ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது, முக்கியமான பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் இந்தியா பொருளாதார ரீதியாக
வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார்.
பொருளாதார அபிவிருத்தியும் ஒருங்கிணைப்பும் பயங்கரவாத விளைவுகளும் கொடுக்கப்படும் சிறந்த மருந்து என்றும் சகல சமூகங்களும்
திருப்திப்படக்கூடிய விதத்தில் இனநெருக்கடிக்கு தீர்வு காண உதவுமெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமும் பிரதமர் இரட்ணசிறி
விக்கிரமநாயக்காவிடமும் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
கிழக்கில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்வதாகவும் எதிர்வரும் மே மாதமளவில் மாகாண
சபைத் தேர்தல் நடத்தப்படும் சாத்தியம் இருப்பதாகவும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா இந்திய அமைச்சரிடம் கூறியுள்ளார்.
அத்துடன் தேர்தல் நடத்துவதற்கு முன்னோடி நடவடிக்கையாக அரசாங்கம் விரைவில் இடைக்கால மாகாண சபையை அமைக்கும் என்றும் பிரதமர்
தெரிவித்திருக்கிறார். அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட்டில் கண்டியில் இடம்பெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு சகல உறுப்பு
நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பதாக இச்சந்திப்பின் போது பிரதமர் இந்திய அமைச்சரிடம் கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளிப் பகுதியில் 500 மெகாவாட் அனல் மின் உலையை அமைப்பதற்கு இலங்கையும்
இந்தியாவும் இணக்கம் கண்டுள்ளன.
இந்திய தேசிய அனல் சக்தி கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சாரசபையும் இணைந்து 250 மில்லியன் டொலர் செலவில் நிலாவெளிப்பகுதியிலுள்ள
வேலூரில் அனல் மின் உலையை நிர்மாணிக்கவுள்ளன.
250 மெகாவாட் அலகுகளில் இரு உலைகள் அமைக்கப்படவுள்ளன. முதலாவது உலை ஏப்ரல் 2012 இலும் அடுத்த உலை ஜூலை 2012 இலும்
அமைக்கப்படும். இதற்கான கால அட்டவணை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்திய வர்த்தக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இலங்கையின் மின்சக்தி அமைச்சர் ஜோன் செனவிரட்ண ஆகியோர் முன்னிலையில் இதற்கான
உடன்படிக்கையில் இந்திய தேசிய அனல் சக்தி கூட்டுத்தாபனப் பணிப்பாளர் ஆர்.கே.ஜெய்னும் மின்சாரசபை மேலதிக பொதுமுகாமையாளர்
ஆர்.கே.குணவர்த்தனவும் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்து சமுத்திர கரையோரப் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய பிரதமர் வலியுறுத்தல்
[15 - February - 2008]*டில்லியில் 30 நாடுகளின் கடற்படை அதிகாரிகள் கருத்தரங்கு ஆரம்பம் இந்துசமுத்திர கரையோரப் பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று வியாழக்கிழமை
வலியுறுத்தியுள்ளார்.
புதுடில்லியில் இந்து சமுத்திரக் கரையோர நாடுகளின் கடற்படை அதிகாரிகளின் கருத்தரங்கை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய
இந்தியப் பிரதமர், பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், ஆயுதக்கடத்தல், கடல்கொள்ளை, திருட்டு போன்ற குற்றச்செயல்கள் தற்போது அதிகரித்து
வரும் நிலையில் கடல் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியமென அவர் தெரிவித்தார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
இந்து சமுத்திர கரையோர நாடுகளின் கடற்படைகள் மத்தியில் அதிகளவிலான ஒத்துழைப்பு இருக்க வேண்டிய தேவை உள்ளது. குற்றச்செயல்களை
தடுப்பதற்கும் கடல் இயற்கை வளத்தைப் பேணிப் பாதுகாக்கவும் இந்த ஒத்துழைப்பு நடவடிக்கைகள் இன்றியமையாதவையாகும்.
பிராந்தியத்தின் கடல் வழிப்பாதைகள் உலகத் தொடர்பாடல் மார்க்கத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. கொழும்பு, மும்பாய்,
சிட்டாகொல, பாங்கொக், கிளாங் போன்ற துறைமுகங்கள் கொள்கலன்களை கையாளும் தொகை இரட்டை மடங்கு வளர்ச்சி கண்டுள்ளன.
உலக வர்த்தக கப்பல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கணிசமான தொகை கப்பல்கள் ஆசியக் கொடிகளுடன் செல்கின்றன. அதிகரித்த
வர்த்தக நடவடிக்கைகள், பொருளாதார வளர்ச்சி என்பன கடல்மார்க்க பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கருத்தரங்கில் சுமார் 30 நாடுகளின் கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்த போதும் ஈரான் தூதுக்குழுவை அனுப்பவில்லை.
இதேவேளை, இந்த முன்முயற்சியானது இராணுவ ரீதியில் அணியை உருவாக்கும் நோக்கம் கொண்டதல்ல என்றும் பிராந்திய நாடுகளின்
கடற்படையினர் மத்தியில் தொடர்பாடல்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை என்றும் இந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா கூறியுள்ளார்.
பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பயங்கரவாதம் (கடலில்) மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றை கையாள்வதற்கு நாடுகளின்
கடற்படையினர் மத்தியில் பிணைப்புகளை ஏற்படுத்தும் முயற்சியெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

புலிகளை எதிர்கொள்ள இந்திய, இலங்கை கடற்படை இணைந்து செயற்படுவது அவசியம்
[15 - February - 2008] * கடற்படைத் தளபதி வசந்த கரணகொட விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள இலங்கை, இந்திய கடற்படைகள் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமென இலங்கை கடற்படைத் தளபதி
வைஷ் அட்மிரல் வசந்த கரணகொட தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திர கரையோர நாடுகளின் கடற்படை அதிகாரிகளின் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அட்மிரல் கரணகொட
இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்கு புதுடில்லியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அங்கு அவர் மேலும் பேசுகையில்;
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்து சமுத்திரத்தில் பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அவசியம். இலங்கைத் தீவுக்கு
விடுதலைப் புலிகள் மிகப் பெரும் அச்சுறுத்தலாயுள்ளனர்.
இதனை உடனடியாக தடுத்து நிறுத்தாவிடில் ஏனைய நாடுகளுக்கும் அவர்களால் பெரும் அச்சுறுத்தலேற்படும் அபாயமுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கெதிரான நடவடிக்கையில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. அதேநேரம், இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள
நாடுகள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதால் கடல் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது.
பயங்கரவாதம், கடத்தல்கள், கடற்கொள்ளை மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல்களுக்கெதிராக இலங்கை தனது பகுதியில் கண்காணிப்பை
மேற்கொள்ளும் அதேநேரம், இவை தொடர்பாக இந்தியா தனது பகுதியில் கண்காணிப்பை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதேநேரம், இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அட்மிரல் கரணகொட, இந்திய மீன்பிடிப் படகுகள் மத்தியிலிருந்து அண்மையில் இலங்கை கடற்படைப்
படகு மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக இந்திய கடற்படையினருடன் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

யாழ். குடாநாட்டில் மினிமுகாம்கள் காவலரண்கள் படையினரால் விஸ்தரிப்பு
[15 - February - 2008] யாழ்.மாவட்டத்தில் சகல பிரதேசங்களிலுமுள்ள இராணுவக் காவலரண்கள் மற்றும் மினிமுகாம்கள் விஸ்தரிக்கப்பட்டும் புனரமைக்கப்பட்டும்
வருகின்றது. யாழ். குடாநாட்டிலுள்ள படையினர் காவலரண்களைப் புனரமைத்தல், மினி முகாம்களை விஸ்தரித்தல், புதிய வீதித்தடைகளை உருவாக்குதல் மற்றும்
தொடர் பதுங்கு குழிகளை அமைத்தல் போன்ற யுத்த முஸ்தீபு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, திடீர் சுற்றி வளைப்புகள், வீதிரோந்து நடவடிக்கைகள் மற்றும் வீதிச்சோதனை நடவடிக்கைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்து
வருவதையும் காணமுடிகின்றது.

இலங்கைக்கான உதவியை நிறுத்திவிட்டதாக எந்தவொரு நாடும் இதுவரை அறிவிக்கவில்லை
[15 - February - 2008] * போலிப் பிரசாரம் இடம்பெறுவதாக அரசு விசனம் -ரொஷான் நாகலிங்கம்-
சர்வதேச நிதியுதவி நிறுத்தப்பட்டுவிட்டதாக போலிப் பிரசாரம் இடம்பெறுவதாகவும் எந்தவொரு நாடும் உதவியை நிறுத்திவிட்டதாகவோ அல்லது
குறைத்துவிட்டதாகவோ இலங்கைக்கு நேரடியாக இதுவரை அறிவிக்கவில்லையெனவும் அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;
ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு அளிக்கும் நிதியுதவி குறைக்கப்பட்டதாக ஜப்பானின் சமாதானத் தூதுவர் யசூசி அகாஷியால் தெரிவிக்கப்பட்டதாக
சில ஊடகங்கள் தமது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றன.
அதேவேளை, வெளிநாட்டு அரசாங்கங்கள் இலங்கைக்கு அளிக்கும் நிதியுதவியை நிறுத்தியதாக சிலர் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு
வருகின்றனர். இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவரை எந்தவொரு நாடும் எமது அரசுக்கு நிறுத்தப்பட்டதாகவோ குறைக்கப்பட்டதாகவோ
நேரடியாகக் கூறவில்லை.
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறான எந்தவொரு குறைப்பை மேற்கொண்டதாக எமக்குத் தெரிவிக்கவில்லை. எமது அரசாங்கம்
முன்னெடுக்கும் தீர்வுத்திட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்தியா எமக்கு உதவியளித்து வருகின்றது.
எமக்குக் கிடைக்கப்பெறும் நிதியுதவிக்கு அப்பால் வெளிநாட்டு உறவுகளை அரசு வலுப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையில் சுற்றுலா
நடவடிக்கைகளை பாலஸ்தீனம் முதல் தடவையாக முன்னெடுப்பதற்கு நாட்டம் கொண்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக தற்போது ஒரு குழுவினர் இங்கு
வருகை தந்துள்ளனர்.
கிழக்கில் சுதந்திரமான தேர்தல்
கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி தேர்தல் ஜனநாயக ரீதியிலும் சுதந்திரமாகவும் இடம்பெறக்கூடிய சூழல் நிலவுகின்றது. தெற்கில் தேர்தல்
வன்முறையுடன் ஒப்பிடும்போது அங்கு மிகவும் குறைவாகவுள்ளது. ஓரிரு சம்பவங்கள் அதுவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையே இடம்பெற்றுள்ளது.
இதனால் மக்கள் ஜனநாயகமாகவும் சுதந்திரமாகவும் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான சூழல் அங்கு நிலவுகின்ற நிலையில் தேவையற்ற
விதத்தில் அங்கு தேர்தலுக்கான சூழ்நிலை இல்லையெனக் கூறுகின்றனர்.
கிரியெல்லவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு
பாராளுமன்ற உறுப்பினர் ஷ்ரீபதியின் அகால மரணத்தையிட்டு எமது கட்சியும் ஜனாதிபதியும் கவலையடைந்துள்ளதுடன், அவரது குடும்ப
உறவினர்களுக்கு அரசாங்கம் தனது மனவருத்தத்தை தெரிவிக்கின்றது.
இந்த மரணம் குறித்து சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஷ்ரீபதி
பயணம் செய்த கார் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் பாதையை விட்டு விலகி 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து மரத்துடன் மோதியுள்ளது. இதில்
பயணம் செய்த மூவரும் பலியானதுடன், மற்றொருவர் ஒரு நிமிடம் வாக்குமூலம் அளித்து மரணமடைந்தார்.
இது குறித்து பொலிஸார் விபத்து இடம்பெற்ற இடத்துக்கருகிலுள்ளவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். இவரது மரணத்துக்கு காரணம்
விபத்தென யாவருக்கும் தெரிந்த நிலையில் கிரியெல்ல இவ்வாறான சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.
இதேபோல ரணிலின் ஆட்சியின்போது காமினி அத்துகோரள நோய் காரணமாக மரணமடைந்தபோது அவர் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டாரென்று
தகவல் பரவியது. ஷ்ரீபதி பாராளுமன்றத்தினுள்ளும் வெளியிலும் சிறந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். லக்ஷ்மன் கிரியெல்லவின் கருத்தினால்
விசாரணைகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்துக்கும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது. வட, கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட
ஐந்து ஊடகவியலாளர்களின் வழக்குகள் யாழ்ப்பாணம், மல்லாகம் மற்றும் வவுனியா நீதிமன்றங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இப்படுகொலைகள் குறித்து தெளிவான சாட்சியங்கள் அரசிடம் உண்டு. குற்ற விசாரணைத் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம்
ஆகியவற்றிடம் போதிய ஆதாரங்களை நாம் பெற்றிருக்கின்றோம்.
நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு எப்போதும் தயாராகவுள்ளது. ஏ.பி. ஊடக அமைப்பைச் சேர்ந்த கெமுனு அமரசிங்க பாடசாலையினை
படம் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டார். இதற்காக அரசு குரல் கொடுத்தது.
ஊடகவியலாளர்கள் நாட்டின் பாதுகாப்பு நடைமுறைக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும். அரசாங்கம் ஒரு பக்கம் நாட்டின் பாதுகாப்புக் குறித்தும்
மறுபக்கம் ஊடகவியலாளர் எதிர்நோக்கும் சிக்கல் குறித்தும் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளதால் எல்லாப் பக்கமும் அரசே சிக்கலை
எதிர்நோக்கியுள்ளது.
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் போத்தல ஜயந்தவின் வீட்டுக்குச் சென்று பொலிஸார் அச்சுறுத்தவில்லை. பொலிஸார் அவரது
வீட்டுக்கு சென்றது ஒருவர் தொடர்பாக விசாரிப்பதற்கேயாகும். இரவு அவரது வீட்டைத் தட்டியதாலேயே அவர் பயந்து அயலவர்களைக்
கூப்பிட்டுள்ளார்.
இதேநேரம், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் புகுந்த மேர்வின் சில்வா மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விசாரிப்பதற்குக் குழுவொன்று
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அங்குள்ள பாதுகாப்பு நடைமுறை குறித்த குறைபாடுகளை ஆராயவுள்ளதுடன், இரகசியப் பொலிஸார் அங்குள்ள அதிகாரிகளை எந்தப்
பாகுபாடுமின்றி விசாரணைகளை மேற்கொள்வர். ஊடகவியலாளர்களின் சுதந்திரம் குறித்து அரசாங்கம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அமைப்புகளுக்கு
எந்நேரத்திலும் விளக்கமளிக்கவுள்ளது.

மலையக ரயில்கள் தடம்புரள்வதற்கு ரயில் பாதைகள் திருத்தப்படாததே காரணம்
[15 - February - 2008] மலையக ரயில் பாதைகள் மிகவும் பழைமை வாய்ந்தவை என்பதாலேயே அடிக்கடி ரயில்கள் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகின்றன என
புகையிரதப் பகுதி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ரயில் பாதைகள், தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகள் என்பன தேய்வடைந்து வருகின்றன.
இவை முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மழை, மண்சரிவு நேரங்களிலும் இப்பாதை பெரிதும் பாதிக்கப்படுகிறது.
சில ரயில் பாதைகள் அமைந்த மேட்டுப் பகுதி மழை, வெள்ளம் பாய்ந்து சேதமடைந்துள்ளன.
கடந்த வருடம் 42 ரயில் விபத்துக்கள் மலையக ரயில் பாதைகளில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பாதைகள் திருத்தப்படாததால் ரயில்களின் வேகம் குறைந்துள்ளதுடன் அவை தாமதமாகவே உரிய ரயில் நிலையங்களையும்
சென்றடைகின்றன.
இவை மட்டுமல்ல மலையகத்தின் பல ரயில் நிலையங்களிலும் மலசல கூட வசதிகள், குடிநீர் வசதிகள் இல்லை எனவும் பயணிகள்
தெரிவிக்கின்றனர்.
அரசு தென் பகுதி ரயில் சேவைகளை சீராக்க நடவடிக்கை எடுத்து வருவதுபோல மலையக ரயில் சேவைகளையும் நடத்தவேண்டும் எனவும் இவர்கள்
தெரிவிக்கின்றனர்.

கம்பஹாவில் தேடுதல் சிங்கள இளைஞர்கள் கைது
[15 - February - 2008] கம்பஹாவின் சில இடங்களில் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை அதிகாலை மேற்கொண்ட தேடுதலின் போது வெளிமாவட்டத்தில் இருந்து வந்து
தங்கியிருந்த பதினொரு சிங்கள இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். இவர்கள் தமது வதிவிடத்தையும் கம்பஹாவில் தங்கியிருப்பதற்கான காரணத்தையும் சரியாக தெரிவிக்காததால் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 32 பேரும் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்ட 38 பேரும் கைது செய்யப்பட்டனர்.
620 வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 363 சாரதிகள் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டின் மீது வழக்குத்
தொடரப்பட்டுள்ளது.
கம்பஹா பொலிஸ் பிரிவு பெரிய இடமாக இருப்பதால் தொடர்ந்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: