[செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2008, 05:59 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் சமாதான முன்னெடுப்புக்களையே விரும்பி நிற்கிறது என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலிருந்து வெளிவரும் "த ஐலன்ட்" ஆங்கில நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் சமாதான முன்னெடுப்புக்களையே விரும்பி நிற்கிறது என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலிருந்து வெளிவரும் "த ஐலன்ட்" ஆங்கில நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல்:
கேள்வி: கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்: சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு செயற்படுகின்றது.
இதுவொரு வெளிப்படையான உண்மை. அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை என்றோ அல்லது அவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை
என்றோ கூறுவதில் அர்த்தம் இல்லை. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் வாக்களிக்கக் கூட
இந்த ஆயுதக்குழு அனுமதிப்பதில்லை. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தப்படுகின்றனர்.
இறுதியாக நடைபெற்ற வரவு-செலவுத் திட்ட நாடாளுமன்ற வாக்கெடுப்பில் எமது கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து
கொள்ளவில்லை.
தமது சொந்தங்கள் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக அவர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக நாம்
அனைத்துலக சமூகத்திடம் முறைப்பாடு செய்தோம், எனினும், அரச தலைவர் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இல்லை என அனைத்துலக
சமூகத்திடம் தெரிவித்தார்.
இன்று வரையில் எமது கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் தொகுதிகளுக்குச் செல்ல முடியாது நிலை தோன்றியுள்ளது.
இவர்களுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவை கருணா
குழுவினர் கடத்திச் செல்ல முற்பட்டனர். இது தொடர்பாக அவர் காவல்துறை, சிறப்பு அதிரடிப்படையினரிடம் முறைப்பாடு செய்தார். எனினும், சிறப்பு
அதிரடிப்படை முகாமிற்கு வந்த கருணா குழுவினர் சந்திரநேருவை கடத்திச் செல்லப் போவதாக தெரிவித்தனர்.
இந்த விடயங்கள் தொடர்பாக நாம் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தோம் எனினும் எவ்வித பயனும் கிட்டவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் கடத்தல்கள் மற்றும் கொலைச் சம்பவங்களின் பின்னணியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
அமைப்பே செயற்படுகின்றது.
இந்தச் சூழ்நிலையின் கீழ் நாம் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் களமிறங்கியிருந்தால் எமது கட்சி வேட்பாளர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இருந்திருக்காது.
அரசாங்கம் இந்த நிலைமையை கட்டுப்படுத்துமா என்பது சந்தேகத்திற்குரிய நிலமையாகவே தோன்றுகிறது.
இரண்டு காவல்துறை அதிகாரிகளை மாத்திரம் பாதுகாப்பின் பொருட்டு அளிக்கப்படுதல் எமது வேட்பாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை
உருவாக்கும். இதனால் நாங்கள் தேர்தல்களில் போட்டியிடவில்லை.
நாங்கள் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் களம் இறங்கியிருந்தால் பல்வேறு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கும்.
எங்களது போட்டியாளர்களைச் கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உண்மையில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் வன்முறைச் சம்பவங்களின் வீதம் வெகுவாக அதிகரித்திருக்கும்.
கேள்வி: ஆயுதக்குழுவொன்று தேர்தலில் குதித்திருக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. 1988 ஆம் ஆண்டு முதலாவது முறையாக தேர்தலில் நீங்கள்
போட்டியிட்ட போது நீங்கள் ஒரு ஆயுதக் குழுவின் உறுப்பினர். அப்போது உங்களது கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் ஆயுதங்களை
களைந்திருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டியே நீங்கள் ஆயுதங்களை வைத்திருந்தீர்கள். இந்த நிலையிலா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும் இன்று காணப்படுகிறது?
பதில்: நாங்கள் வேட்பாளர்களை தேர்தல்களில் போட்டியிடாது தடுக்க முயற்சிகளை மேற்கொள்ளவில்லை*. எவர் வேண்டுமானாலும் தேர்தலில்
போட்டியிட முடியும் என்ற நிலைமையே காணப்பட்டது. எனினும், குறைந்தபட்சம் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கேனும் பாதுகாப்பை
வழங்கக்கூடிய நிலையில் அரசாங்கம் காணப்படுகிறது.
நாங்கள் நாடாளுமன்றத்தில் பல தடவைகள் பாதுகாப்பு கோரியிருந்தோம், சபாநாயகருக்கு இந்த விடயம் தொடர்பாக பல தடவைகள் எழுத்து மூலம்
அறிவித்துள்ளோம் மற்றும் அரச தலைவருக்கு இந்த விடயம் தொடர்பாக அறிவித்தோம்.
எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் தேர்தல்களில் போட்டியிட்டிருப்போம். பிள்ளையான் தரப்பு அல்லது வேறும் தரப்புக்களும்
தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக எமக்கு ஆட்சேபனை இல்லை.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசைத் தவிர்ந்த ஏனைய அநேகமான கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவான கட்சிகளாகவே காணப்பட்டன.
குறிப்பாக வரதராஜப்பெருமாள் குழு, புளொட் மற்றும் ஈ.பி.டி.பி. ஆகியன அரசாங்கத்திற்கு சார்பான கட்சிகளே.
கேள்வி: அமரர் தி.மகேஸ்வரன் வட பகுதிக்குச் செல்லும் போது அவருக்குச் சிறப்பு மேலதிக பாதுகாப்பு வழங்கப்படும். உங்களின் நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு இவ்வாறான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லையா?
பதில்: இதனையே நாங்கள் விரும்பினோம். நீங்கள் குறிப்பிட்டதனைப் போன்று மகேஸ்வரன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற போதிலும்
அரசாங்கத்துடன் நெருக்கமானவர். அவர் ஒரு வர்த்தகர். எனவே அரசாங்கத்துடன் அவர் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தார். இருந்த
போதிலும் அவர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
எனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றன. நான் பிக்கப் வாகனமொன்றை கோரியிருந்தேன். இது தொடர்பாக
சபாநாயகரிடம் கலந்தாலோசிக்குமாறு பாதுகாப்பு தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
எனினும், சபாநாயகர் போதிய நிதி வசதி இல்லாத காரணத்தினால் வாகன வசதி வழங்க முடியாது எனத் தெரிவித்தார். இவ்வாறே எமக்கு பாதுகாப்பு
வழங்கப்படுகிறது. அண்மையில் எமது கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவரை
கருணா தரப்பினரால் கொலை செய்யப்பட்டது எல்லோருக்கும் தெரியும்.
கேள்வி: வடக்கிலும் கிழக்கிலும் ஒரே மாதிரியான பிரச்சினையே நிலவுகிறது. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
கிழக்கிற்குச் செல்ல முடியாது அதே போன்று ஆனந்தசங்கரி போன்ற அரசியல்வாதிகளுக்கு வடக்கிற்குச் செல்ல முடியாது. இது பற்றி?
பதில்: யாழ். மாவட்டத்தை நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். கடந்த ஒருவருட காலமாக என்னால் யாழ்ப்பாணத்திற்குச் செல்ல முடியவில்லை.
உண்மையில் உரிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலேயே என்னால் அங்கு செல்ல முடியவில்லை.
இதே நிலைமையே கிழக்கிலும் காணப்படுகின்றது.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே தமது சொந்தப் பிரதேசங்களில் வசிக்கின்றனர். இப்போது அந்தச் சாத்தியமும்
அற்றுப் போயுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். கொழும்பில் வசிப்பதும் சற்று அச்சுறுத்தலாகவே காணப்படுகிறது.
எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
இதற்கு எங்களால் எதனையும் செய்ய முடியாது என அரசாங்கம் மிகச் சுலபாக கூறிவிடலாம்.
80-களில் ஜே.வி.பி. ஆயுதமேந்திய சந்தர்ப்பத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பிக்கப் வாகனங்களை
வழங்கியது.
எனினும், அந்த நிலைமை தற்போது இல்லை. அரசாங்கத்திற்கு எதிராக எவரேனும் குரல் கொடுத்தால் உடனடியாக அவரது பாதுகாப்பு குறைக்கப்படும்.
வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக அமரர் மகேஸ்வரன் வாக்களித்த காரணத்தினால் அவரது பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை
குறைக்கப்பட்டது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இதே நிலைமையே ஏற்பட்டது. அவர் எதிர்க்கட்சியில் சென்று அமர்ந்த பின்னர் அவரது
பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டது.
இவ்வாறானதொரு அழுக்கான பாதுகாப்பு விளையாட்டையே அரசாங்கம் விளையாடி வருகிறது.
கேள்வி: அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதாக ஒருவர் தர்க்கிக்கலாம். தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு சிவநேசனை இழந்தது, அரசாங்கம் டி.எம்.தசநாயக்கவை இழந்தது, இருவரும் கிளைமோர் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி
உயிரிழந்தனர். ஒருவர் மீதான தாக்குதல் அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும், மற்றையது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும்
நடைபெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்புகளைப் பேணி வருகிறது. எனவே உங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு
எதுவும் தேவையில்லை என்று எவரேனும் வாதிட முடியும் அல்லவா?
பதில்: விடுதலைப் புலிகளுடன் நாங்கள் தொடர்புகளைப் பேணி வருகின்றோம். உண்மையில் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு அவர்களை
அழைப்பதற்காகவே நாங்கள் அவர்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் சமாதான முன்னெடுப்புக்களையே விரும்பி நிற்கிறது.
இந்தப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே எமது பிரதான குறிக்கோளாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளே இந்த நிலைமையின் யதார்த்தம் என்பதனை எல்லோரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
அவர்களிடம் சில படகுகளே இருக்கலாம். ஆனாலும் அவர்களிடம் ஒரு கடற்படை உள்ளது. அவர்களிடம் சில விமானங்களே இருக்கலாம். எனினும்,
அவர்களிடம் ஒரு வான் படை உள்ளது.
அவர்கள் ஒரு பிரதேசத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர் மற்றும் அவர்களுக்கு உரிய முன்னரங்குகள் காணப்படுகின்றன. எனவே
விருப்பமோ இல்லையோ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு யதார்த்தம் என்பதனை சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
நீங்கள் அவர்களோடு பேச வேண்டும். எல்லோரும் அவர்களோடு எதிரிகளானால் யார் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது? நாங்கள் தமிழ்
மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என கரிசனையின் காரணமாக நாம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உறவுகளைப்
பேணுகின்றோம்.
நாட்டின் கிழக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினருடன் இணைந்து ஆயுதமேந்திய குழுவொன்று செயற்பட்டு வருகின்றது. அரசாங்கத்திற்கு தேவை
என்றால் இவர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளலாம். அதற்கு நாங்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
எனினும், இந்தக் குழுவினர் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அவர்களின் உறவினர்களையும் கடத்திச் செல்கின்றனர் அல்லது கொலை
செய்கின்றனர்.
மேலும், வர்த்தகர்களை கடத்திச் சென்று பாரியளவில் பணத்தை கப்பமாக பெற்றுக்கொள்கின்றனர்.
எமக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான வேறுபாட்டை மக்கள் நன்கு அறிவர்.
விடுதலைப் புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மனித உரிமை மீறல் மற்றும் அப்பாவி பொதுமக்கள்
கொல்லப்படுவதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.
மறுபுறத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிக்கும் நாம் எதிர்ப்பு
தெரிவிக்கின்றோம்.
கேள்வி: வடக்கு-கிழக்கில் தமிழ் சுயாட்சி பற்றி நாம் குறிப்பிடுகின்றோம். கிழக்கு உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்க் கட்சிகளே அதிக ஆட்சி
அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதில் என்ன பிழை இருக்கிறது. ஏனைய அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளிலும் யாழ். தமிழர்களே ஆதிக்கம்
செலுத்துகின்றனர். நீங்கள் ஒரு யாழ். தமிழர், ஆனந்தசங்கரி ஒரு யாழ். தமிழர், டக்ளஸ் தேவானந்தா மற்றும் புளொட், ரெலோ தலைவர்களும் யாழ்.
தமிழர்களே. இதேபோன்று கிழக்கை மையமாகக் கொண்ட ஓர் அரசியல் அமைப்பு உருவாவதில் என்ன குற்றம்?
பதில்: கிழக்கை மையமாகக் கொண்டவர்கள் மாத்திரமே கிழக்கில் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டுமானால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
ஏன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்?. இவர்கள் எல்லாம் கிழக்கைச் சேர்ந்தவர்களா? ஜனநாயக தேர்தலில் எவரும் எந்த இடத்திலும்
போட்டியிடலாம். என்னால் அம்பாந்தோட்டையில் போட்டியிட முடியும். அம்பாந்தோட்டை மக்கள் வடக்கில் போட்டியிட முடியும். எவராலும் அதனை
மறுக்க முடியாது. இதுவே ஜனநாயகம்.
கேள்வி: தெற்கிலும் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது. கராவ வாக்காளர்கள் கராவ வேட்பாளர்களுக்கு வாக்களிப்பர். துராவ வாக்காளர்கள் துராவ
வேட்பாளர்களுக்கு வாக்களிப்பர். இதேபோன்றே தமிழர்களுக்கு இடையிலும் வடக்கு மற்றும் கிழக்கு என வேறுபாடுகள் இருக்கலாம். தமிழீழ
விடுதலைப் புலிகள் எவ்வளவு யதார்த்தமோ அதேபோன்று இந்த வேறுபாடுகளும் யதார்த்தமாயாகும். இந்த நிலைமையின் கீழ் கிழக்கை
அடிப்படையாகக் கொண்டு ஒரு அரசியல் பிரவாகம் உருவெடுப்பதில் என்ன குற்றம் இருக்கிறது.?
பதில்: இதனை நான் மறுக்கவில்லை. கிழக்கு அரசியல் சக்திகள் இருக்க வேண்டும். எனினும் நியாயமானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெற
வேண்டும். எனினும், இங்கு நிலைமை வேறு. குறித்த அதே அரசியல் பிரவாகம் ஒரு ஆயுதமேந்திய துணை இராணுவப் படை, இவர்களுக்கு அரசாங்கம்
ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இவர்கள் ஏனைய அரசியல் கட்சிகளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துகின்றனர்.
கேள்வி: இதனை இவ்வாறு கூற முடியுமா? பிள்ளையான் கிழக்கில் செய்வதையா? பிரபாகரன் வடக்கில் செய்கின்றார்?
பதில்: நாங்கள் இந்த நிலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிளிநொச்சியில் ஒரு அலுவலகம்
இல்லை.
கேள்வி: அப்படியானால், மற்றைய கட்சிகளைப் போட்டியிடாமல் தடுப்பது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் கிளர்ச்சிகள் எழ
வேண்டும் அல்லவா?
பதில்: ஆரம்ப காலம் முதலே தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய கட்சிகளுடன் நெகிழ்வுப் போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை. இது
எல்லோரும் அறிந்த ஒன்றே. அவர்கள் போராட்டத்தை முன்னெடுப்பதால் வேறு எவரும் அதில் தலையீடு செய்யக்கூடாது என அவர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
எனினும், மீட்டெடுத்த பகுதியாகவே அரசாங்கம் கிழக்கை அடையாளப்படுத்துகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்கும் பொறுப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு உள்ளது.
அரசாங்கம் என்பது ஒரு பொறுப்பு வாய்ந்த நிறுவனமாகும். கெரில்லா அமைப்புக்கள் அவ்வாறில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளையும்,
அரசாங்கத்தையும் ஒப்பீடு செய்ய முடியாது.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுக்கு சார்பான அமைப்பு என அடையாளப்படுத்தப்படுகிறது. இவ்வாறான ஒரு நிலைமையின்
கீழ் உங்களது கட்சியின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? சுயாதீனமான கட்சியாக இயங்குவதனை உறுப்படுத்த என்ன செயற்பாடுகளை இதுவரையில் முன்னெடுத்தீர்கள்?
பதில்: ஊடகங்களில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. அரச தலைவர் முதல் அனைவரும் இதனையே
தெரிவிக்கின்றனர்.
இதனை நாங்கள் எவ்வளவு தெளிவுபடுத்த நாங்கள் முயற்சித்தாலும் அதில் எந்தளவு பயன் இருக்கும் என்பது தெரியவில்லை.
எனினும், எங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்கள் மீது அதிக கரிசனை காணப்படுகிறது. பொதுவாக தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி
குரல் கொடுத்தால் உடனடியாக விடுதலைப் புலி முத்திரை குத்தப்படும். இதுவே இந்த நாட்டின் பிரச்சினை.
நான் இதனைப் பற்றி கவலைப்படவில்லை. உங்களுக்கு என்னை ஒரு விடுதலைப் புலி என்று அடையாளப்படுத்த வேண்டுமாயின் அதனைச்
செய்யுங்கள்.
எனினும், எனது மக்களின் உரிமைகளுக்காகவே குரல் கொடுக்கின்றேன் என்பதனை நான் நன்கு உணர்வேன் என்றார் அவர்.
பிற்குறிப்பு: *1987 இல் சுரேஸ் கும்பலை வைத்து இந்திய விஸ்தரிப்புவாத அரசு நடத்திய 'யாழ் கச்சேரித்தேர்தல் ஜனநாயகத்தைத்தான்', இப்போதும் இந்தியா பக்ஸ பாசிஸ்டுக்கள் மூலமாக பிள்ளையான் கும்பலை வைத்து கிழக்கில் செய்கிறது. சுரேஸ் பிரேமச்சந்திரனின் கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம் இங்கே அம்மணமாகி நிற்கிறது!-ENB
Source: Puthinam
No comments:
Post a Comment