Saturday 29 March, 2008

'இரட்டை நிலைப்பாடு' என்கிற வாதம் வர்க்கப் போராட்டத்தின் குறிப்பான நலன்களைப் புரிந்துகொள்ளாத குட்டிமுதலாளிய குதர்க்கம்.

'இரட்டை நிலைப்பாடு' என்கிற வாதம் வர்க்கப் போராட்டத்தின் குறிப்பான நலன்களைப் புரிந்துகொள்ளாத குட்டிமுதலாளிய குதர்க்கம்.
முற்குறிப்பு: இந்த இணைப்பில் மூன்று செய்திகள் உள்ளன.
1) ரணிலுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு.
2) விடுதலைப் புலிகளின் தன்னாட்சியை அங்கீகரிக்க இந்தியாவிடம் நடேசன் கோரிக்கை.
3) சர்வதேச சமூகமும், இந்தியாவும் இலங்கையில் கடைப்பிடிக்கும் இரட்டை நிலை.
இந்த மூன்று செய்திகளையும் தொடக்கமாகக் கொண்டு இந்த இரட்டை நிலை(Double Standard) என்கிற கருத்தாக்கத்தை ஆராய்வோம்.

1) ரணிலின் ஜனாதிபதியாகும் ஆசையில் மண் போட்டவர்கள் விடுதலைப் புலிகள்...இப்போது TNA ரணிலுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றது!

2) திம்புக் கோரிக்கைகளை ஏற்கமறுத்து, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை திணிப்பதற்காக ஏவப்பட்டதே இந்திய ஆக்கிரமிப்பு யுத்தம்(1987).இதற்குரிய தண்டனையைத்தான் இந்திய ஆளும் கும்பல் அனுபவித்தது.

அதே இந்தியாவிடம் நடேசன் புலிகளின் தன்னாட்சிக்கு அங்கீகாரம் கோருகின்றார்!

3) இந்திய இலங்கை ஒப்பந்தம் இலங்கைத் தீவை இந்தியாவின் காலடியில் வீழ்த்த காரணமாக இருந்த ,இரண்டு அரசியல் ஸ்தாபனங்களின் இரு பெரும் தலைவர்கள் (சுரேஸ், சம்பந்தன்)- இப்போது 'தமிழ்த்தேசியத்தின் கூட்டுத் தலைவர்கள்' ஆகிவிட்டார்கள்!

மேலும்;

4) ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை மீளக் கட்டியமைக்க இராணுவ சர்வாதிகாரி முஸாராப்புடன் கூட்டணி அமைத்தது அமெரிக்கா!

5) எந்த காரணத்தைக் காட்டி ஈரானுக்கு எதிரான யுத்தத்துக்கு அமெரிக்கா தயார்நிலையில் உள்ளதோ அதை இந்தியாவுக்கு தாராளமனதுடன் கையளிக்கிறது!

6) கொசொவோவை துண்டாடிய அமெரிக்கா, தனது ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்த ஈராக்கில் குர்திஸ் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்காதது மட்டுமல்ல, தமக்கும் துருக்கிக்கும் குர்திஸ் போராளிகள் பொது எதிரிகள் என அறிவித்தது.ஈராக்குக்குள் அவர்களை வேட்டையாட துருக்கியை அனுமதித்தது!

7) உலகச்சந்தை முழுவதும் தமக்காகத் திறக்கப்பட வேண்டும் என நிர்ப்பந்திக்கும் ஏகாதிபத்திய நாடுகள், தமது சந்தையை ஒடுக்கப்படும் நாடுகளுக்கு முற்றாகத் திறப்பதில்லை!

8) உள்நாட்டில் ஜனநாயகம் செழித்தோங்க; காட்டு நாடுகளிலும்
கள்ளத்தீவுகளிலும் பாசிசப் பயங்கரத்தை கட்டவிழ்க்கிறது அமெரிக்கா!
இப்படி இந்தப்பட்டியலை முடிவின்றி தொடர முடியும்.

இவை இருவேறுபட்ட நிலைகளே தவிர முரண்பாடுகள் அல்ல. இரண்டு நிலைகளிலும் வர்க்கம்-கட்சி/அரசு/நாடு- தனது நலன்களைக் காத்துக்கொள்கிறது, அல்லது-சரியாகவோ,தவறாகவோ- காத்துக்கொள்ள முயல்கிறது.

இதன் வழியில் அல்லாமல் 'இரட்டை நிலை' என்கிற கருத்தாக்கத்தைக் கொண்டு இந்நிலமையை விளங்கவும் முடியாது, விளக்கவும் முடியாது. வர்க்கப்போராட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கும் குட்டிமுதலாளித்துவ அற்பவாதிகளுக்கு மட்டுமே இவை முரண்பாடாகத் தோன்றமுடியும்.1983 இல், பங்களாதேசத்தைப் பிரித்தது போல் ஈழத்தை இந்தியா பிரித்துத்தரும் என்கிற மூட நம்பிக்கை 'அமைதிப் படையை'க் கொண்டுவந்து விட்டது.2008 இல் கொசோவோவை அங்கீகரித்தது போல் 'ஈழத்தை அங்கீகரியுங்கள் என மூடத்தனமாக முழங்கப்படுகிறது. இலங்கையின் 'மிலோசோவிச்' ராஜபக்ச அல்ல, ஈழத்தின் முப்படைத் தளபதி பிரபாகரனே என எச்சரிக்க நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.
==================================
ஐ.தே.க. தலைவர் ரணிலுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு தினக்குரல் [28 - March - 2008]
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, ரி.கனகசபை, எஸ்.பத்மநாதன் ஆகியோரும் ஐ.தே.க. சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டனர்.
இதன் போது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகவும் வடக்கில் நடைபெற்று வரும் கடும் மோதல்கள் மற்றும் நாட்டில் இடம்பெறும்
மிகமோசமான மனித உரிமை மீறல்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சந்திப்பில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க. போட்டியிடுவது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவுள்ள முடிவு குறித்தும் ஆராயப்பட்டதாகவும்
தெரிவிக்கப்பட்டது.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
எமது அமைப்பு மீதான தடையினை நீக்கி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் - நடேசன் கோரிக்கை
வீரகேசரி இணையம் 3/28/2008 11:06:11 PM
இலங்கையின் (?) அழிப்பு போருக்கு இந்தியாவும் உறுதுணையாக இருப்பதாகவே தோன்றுகின்றது.
தமிழகத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் எமது ஈழப்போரை ஆதரிக்கின்றனர். இந்த நிலையில் இந்தியா எமது அமைப்பின் மீதான தடையினை நீக்கி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையினை அங்கீகரிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இக்கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார்.

பேட்டியின் விபரம் வருமாறு:
கேள்வி: சமாதான உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசு விலகிய பிறகு ஈழத் தமிழர்களின் நிலை எப்படியிருக்கிறது?

பதில்: கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக போருக்குள் வாழும் ஒரு வாழ்க்கையைத்தான் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு கண்ணிவெடிகளையும், கண்ணீரையும்தான் இந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பரிசளித்து வருகிறது. சிங்கள அரசு தொடுக்கும் இந்த அவலங்கள்தான் தமிழ் மக்களை விடுதலையின் பாதையில் தொடர்ந்து போராடத் தூண்டுகிறது. சுதந்திரத்துக்கான விலையாகவே இந்த கொடுமைகளை தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நீண்டதொரு அமைதி வாழ்க்கைக்குப் பிறகு ஈழ மக்கள் மீது கொடூரமான ஒரு போரை திணித்திருக்கிறது இலங்கை அரசு.
மீண்டும் மீண்டும் அவர்கள் கறுப்பு வரலாற்றை கொண்டு வருகிறார்கள். தினம் தோறும் வான்படைகள் மூலம் தமிழ் மக்களை குண்டு வீசி கொல்கிறது சிங்கள அரசு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈவிரக்கம் இல்லாலாமல் கொல்லப்படுகிறார்கள். இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் வாழும் ஈழ மக்களின் நிலை இதை விட மோசமாக உள்ளது. தாயின் எதிரில் மகளை பாலியல் வன்முறை செய்வது, குழந்தைகளின் முன்னால் பெற்றோரைக் கொல்வது என்ற வழக்கமான தங்களின் சித்திரவதை வடிவத்தை இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது தினம் தினம் செய்கிறது.
இந்த செய்திகள் வெளியுலகுக்கு தெரியாவண்ணம் மூடிமறைத்து பொய்ச் செய்திகளையே பரப்புகிறார்கள். அது மட்டுமல்ல எந்த வெளிநாட்டுப்
பத்திரிகையாளர்களையும் இலங்கை அரசு ஈழத்துக்குள் அனுமதிப்பதில்லை. ஈழ மக்களின் துன்பம் உலகுக்கும் தெரிவதில்லை. தமிழ்நாட்டுத்
தமிழனுக்கும் தெரிவதில்லை.
கேள்வி: சமாதான பேச்சுவார்த்தையிலிருந்து நோர்வே விலகிச் சென்றது புலிகளுக்கு பின்னடைவுதானே?
பதில்: இலங்கை அரசுக்கும் புலிகள்
இயக்கத்திற்கும் இடையிலான சர்வதேச ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளராகச் செயல்படுமாறு இரு தரப்பாலும் அழைக்கப்பட்ட ஒரு
நாடுதான் நோர்வே. ஆனால், ஒரு தலைப்பட்சமாக சிங்கள அரசு உடன்பாட்டிலிருந்து விலகியதால் அனுசரணையாளரான நோர்வே அமைதி
முயற்சியிலிருந்து விலகியிருக்க நிர்பந்திக்கப்பட்டது. எனவே, நோர்வேயின் வெளியேற்றமானது சமாதான வழியில் இனப்பிரச்சினையைத் தீர்க்க
முடியும் என இந்த உலகத்தின் முன் நாடகம் ஆடிக்கொண்டிருந்த சிங்கள அரசிற்கு பின்னடைவே ஒழிய புலிகள் இயக்கத்துக்கு எந்தப் பின்னடைவும்
இல்லை.
கேள்வி: ஈழத்தின் நான்கில் ஒரு பங்கு நிலத்தில் முழுமையாக விடுதலைப் புலிகளின் நீதி, நிர்வாக ஆட்சி நடைபெற்று வந்த சூழலில் இப்போது அந்த
இடங்களை கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை இராணுவம் கைப்பற்றி வருவதாக செய்திகள் வருகிறதே?
பதில்: ஒரு போரில் தனது கட்டுப்பாட்டு நிலங்களை விட்டு பின்னகர்வதை தோல்வியாகவோ பின்னடைவாகவோ பார்க்கக்கூடாது. இது யுத்த
தந்திரங்களுடன் கூடிய இராணுவ விவகாரம். எமது அமைப்பு விடுதலைப் போராட்டத்தின் நன்மை கருதி எங்கள் கட்டுப்பாட்டு நிலங்களில் இருந்து
நாங்கள் பின்னகர்வதும் காலம் கனிந்து வரும் போது எதிரிகளிடம் இருந்து எமது தாய் மண்ணை மீட்பதையும் புலிகளின் போரியல் வரலாற்றை
கவனித்தவர்களுக்கு புரியும். தமிழீழத்தின் தென்பகுதியில் இருந்து புலிகள் ஒரு பின்னகர்வைச் செய்தனர். இதைனையே புலிகளின் தோல்வியாக
உலகிற்குக் காட்டி வெற்றிப் பிரகடனம் செய்கிறது சிங்கள அரசு. அதே வெற்றிக் கனவுடன் வன்னிக்குள் போரைத் துவங்கிய சிங்கள அரசு இப்போது திணறிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள உண்மையான கள நிலவரங்கள் வெளி உலகுக்குக் தெரிவதில்லை.வன்னிப் போரில் புலிகளுடன்
தோற்றுப்போவோம் என்று அஞ்சித்தான் இந்தியாவிடம் இருந்து ஆயுதங்கள் பெற்று தமிழருக்கு எதிரான போரை தீவிரமாக்குகிறது இலங்கை அரசு.
எப்போதெல்லாம் ஈழ மக்கள் மீது கொடூரமான போர் திணிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்திய அரசு கொடுக்கிற ஆயுதங்களை வைத்துத்தான்
அங்கு தமிழ் மக்களைக் கொல்கிறது சிங்கள அரசு. ஆனாலும், எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் போரியல் தந்திரங்களோடு களமாடும்
புலிகள் ஈழ மக்களுக்கு வெற்றியை ஈட்டிக்கொடுப்பார்கள்.

இலங்கையில் அனைத்துலக சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகள் எவை?: ஜெகான் பெரெரா
புதினம் [சனிக்கிழமை, 29 மார்ச் 2008, 06:45 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்]
இலங்கை தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகள் எவை? என்பது குறித்து ஜெகான் பெரெரா தனது கட்டுரையில் விபரித்துள்ளார். இது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (25.03.08) கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேட்டுக்கு அவர் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது:
இந்திய அரசாங்கம் ஒரே கருத்தையே ஆழமாக வலியுறுத்தி வருகின்றது. இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காணப்பட முடியாது என்பதே அந்தக் கருத்தாகும்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியப் பாதுகாப்பு அமைச்சும் அண்மையில் இந்தக் கருத்தையே எடுத்தியம்பியிருந்தது.
தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் ரீதியான தீர்வின் மூலம் சமாதான முன்னெடுப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்தச் செய்தி யாருக்கு சென்றடைய வேண்டுமோ அவர்களுக்கு சேர்ந்ததாக விளங்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்நாட்டு அரசியல் தலைவர் ஒருவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில் "ஒரே இலங்கைக்குள் அனைத்து சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
மேலும், "இராணுவ ரீதியில் தீர்வு காணப்பட முடியாது என்பதை நாங்கள் மிகவும் உறுதியாக நம்புகின்றோம்" என நாடாளுமன்ற ஆண்டறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய இலங்கைக்குள் அரசியல், அரசியல் சாசன மற்றும் ஏனைய விடயங்களுக்கும் அனைத்து இன மக்களும் குறிப்பாக சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில், இந்திய அரசாங்கம் சிறிலங்காவுக்கு இராணுவத் தளபாடங்கள், பாதுகாப்பு ஆலோசனை மற்றும் இராணுவப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அண்மையில் சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்து, சிறந்த வரவேற்பளித்திருந்தது.
இந்தச் செயலை தமிழீழ விடுதலைப் புலிகள் வன்மையாக கண்டித்திருந்தனர். மீண்டும் ஒரு வரலாற்று தவறிழைக்க இந்திய அரசாங்கம் விளைகிறது என அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இதேபோன்றதொரு இரட்டைச் செய்தியையே அமெரிக்கா, சிறிலங்காவிற்கு விடுக்கிறது.
ஒரு புறத்தில் சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமைகளை மீறிவருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாரியளவு கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் கொலைகள் இலங்கையில் நடைபெற்று வருவதாகவும், இதற்கு எதிராக உரிய தண்டனைகள் வழங்கப்படுவதில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறுபுறத்தில், இந்தியாவைப் போன்றே அமெரிக்காவும், இராணுவத் தளவாடங்கள், போர்த் தந்திரோபாய ஆலோசனைகள் மற்றும் இராணுவப் பயிற்சிகளை சிறிலங்காவிற்கு வழங்கி வருகிறது.
இந்த மாறுபட்ட செய்திகளிலிருந்து எது உண்மை என்பதை விளங்கிக் கொள்வது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.
அரசியல் தீர்வு மற்றும் அரசியல் செயற்பாடுகள் குறித்து ஒரு அக்கறை காணப்படும் அதேவேளை, ஒரு தரப்பின் இராணுவ பலத்தை வலுப்படுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகிறது.
எனவே இதற்குப் பதிலளிக்கும் போது மூன்று காரணிகள் குறித்து அவதானிக்கப்பட வேண்டும்.
இலங்கையின் நிலத்துவ எல்லைகளை பாதுகாத்தல்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் நெகிழ்வுத்தன்மையற்ற போக்கு,
இராணுவத் தீர்வுகளில் காணப்படும் நடைமுறைச் சாத்தியப்படாற்ற தன்மை என்பவை குறித்து ஆராயப்பட வேண்டும்.
ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கும் அநேகமான நாடுகள் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரம் சிறிலங்கா அரசாங்கத்தை விட ஓங்காமல் இருப்பதனை உறுதிப்படுத்துகின்றன.
ஆயுதப் போராட்டத்தின் மூலம் தீர்வுப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கருதுவதாகவே இந்த நாடுகள் குறிப்பிடுகின்றன.
உலகின் பலம் பொருந்திய இராணுவச் சக்திகளான அமெரிக்கா, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் மறைமுகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் போருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போராட்டத்தில் உலகின் பலம் வாய்ந்த அநேக நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கே ஆதரவளித்து வருகின்றன.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் இந்த ஒத்துழைப்பு போதுமானதாக அமையும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
அரசாங்கம் மற்றும் அதனுடன் இணைந்து போராட்டத்தை மேற்கொள்ளும் அனைத்து சக்திகளும் இங்கேதான் தப்புக்கணக்கு போடுகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்ச்சக்தி அதிகரிக்காமல் இருப்பதற்காகவே அநேகமான அனைத்துலக சக்திகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.
இதன் மூலம், இராணுவ ரீதியில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது என்ற அழுத்தமான செய்தியை புலிகளுக்கு உணர்த்த முயற்சித்துள்ளன.
எனினும், மனித உரிமைகள் மீறப்படக்கூடாது என்பதிலும், குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதிலும் அனைத்துலக சமூகம் உறுதியான நிலைப்பாட்டிலேயே காணப்படுகின்றது.
மேலும், இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வின் மூலம் முடிவு எட்டப்பட முடியாது என்பதே அநேகமான அனைத்துலக நாடுகளின் ஏகோபித்த கருத்தாக அமைந்துள்ளது.
இராணுவ நடவடிக்கைகளோ அல்லது அழுத்தங்கள் மூலமாகவோ இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொள்ள முடியாது என்பதனையே அனைத்துலகத்தில் நடைபெறும் போராட்டங்களின் மூலம் தெளிவாகியுள்ளது.
இராணுவ ரீதியிலான தீர்வை நோக்கி முன்நகரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இந்த யதார்த்ததையே எடுத்துரைக்கவே அனைத்துலகம் வலிந்து செயற்படுகிறது.
சில விதி விலக்குகளைத் தவிர, அநேகமான சந்தர்ப்பங்களில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் குழுக்களுடன் அரசாங்கமே சமாதான முன்னெடுப்புக்களை ஏற்படுத்த வேண்டும்.
சில வேளையில் இலங்கையில் பல சமாதானப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்துள்ள போதிலும், இலங்கை இந்த விதிவிலக்கு நாடுகளில் உள்டங்காது.
எவ்வளவு துரிதமாக அரசாங்கம் சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பாக அவதானம் செலுத்துகிறதோ அவ்வளவு சீக்கிரம் சமாதானத்தைப் பெற்றுகொள்ள முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: