கேள்வி இதுதான்.
* 1972, 1978 பாசிச அரசியல் யாப்புக்களாலும்; பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் போன்ற கறுப்புச்சட்டங்களாலும்,நேரடியாகவே பிரிவினைக் கோரிக்கையை சட்ட விரோதமாக்கியுள்ள 6வது திருத்தச்சட்டத்தாலும்;இவை அனைத்தையும் அணைத்துத்தழுவி இதற்கும் மேலாக இந்திய விஸ்தரிப்பு வாதிகளுக்கு, இலங்கைத்திரு நாட்டை அடகுவைத்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தாலும், அந்நிய நிதிமூலதன ஏஜெண்டுகளால் முழுப்பொருளாதார நடைமுறையும் தீர்மானிக்கப்படுவதை உத்தரவாதம் செய்துகொள்ளும் இலங்கைப் பாராளமன்ற பாசிச அரசு முறைக்குள், இன சமத்துவம் என்கிற ஜனநாயகக் கோரிக்கை எட்டப்படக் கூடியதா?
இந்தக்கேள்வியை சேனாதி எழுப்பவில்லை. ஆனால் அந்த ராசா சொல்கிறார் '' எமது நாடாளுமன்ற(1)* உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதையும் நாடாளுமன்ற உறுப்பினர் தனது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற(2)* தடைகள் ஏற்படுத்தப்படுவதையும் நாடாளுமன்றத்திலும், சபாநாயகரிடமும் பலமுறை முறையிட்டும் பயனற்றதாகிவிட்டது(3)*''.
நாடாளுமன்றம் அவருடையதாம், அங்கு அவர் ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுகிறாராம்!
இது போலிப்பாராளமன்றத்துக்கு ஜனநாயக பூச்சடிப்பதும், போராடும் வேங்கைகளை பயங்கரவாதிகள் என வர்ணிக்கும் வாதத்துக்கு வலுச்சேர்ப்பதும் தவிர வேறென்ன?
மேலும் பயனற்றுப் போனது ''முறையீடுகள் அல்ல'', போலிப்பாராள மன்ற பாசிச அரசுமுறை.
சிவநேசனுக்கு 'சிறப்புரிமை' வழங்காத அரசு, தமிழ்த் தேசத்தின் பிறப்புரிமையை அங்கீகரிக்காது.
செய்தி மூலம்:யாழ் உதயன்
சிவநேசன் எம்.பியின் படுகொலைக்கு அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்து அறிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலை செய்யப்பட்ட சம்ப வத்தை வன்மையாக கண்டித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்படுகொலைக்கான பொறுப்பை அரசு தட்டிக் கழிக்க முடியாது; பதில் சொல்லியே ஆக வேண்டும் என வற்புறுத்தியிருக்கிறது.நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப் பினருமான மாவை சேனாதிராசா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன், இன்று (நேற்று) நண்பகல் மாங்குளத் திற்கு அண்மையில் ஏ9 வீதியில் கிளை மோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி எமக்குப் பெரும் அதிர்ச்சி யையும் ஆழ்ந்த மனவேதனையும் தந்தி ருக்கிறது. இப்படுகொலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண் டிக்கிறது.ஏ9 பாதை மூடப்படிருப்பதால் யாழ்ப் பாணம் கரவெட்டியிலிருந்து தனது மனைவி, பிள்ளைகளுடன் மல்லாவியில் வீடு எடுத்துத் தங்கியிருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்தபோது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்கள் இருந்துள்ளன.நேற்று (நேற்றுமுன்தினம்) நாடாளுமன்றத்தில் அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்த்து வாக்களித்துவிட்டு இன்று (நேற்று)காலை மல்லாவிக்கு சென்று கொண்டிருந்த வேளையில் இக்கொடிய சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. சென்ற ஆண்டு நடுப்பகுதியிலும் இதே இடத்தில் கிளைமோர்த் தாக்குதலில் இருந்து அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியிருந்தார்.இச்சம்பவம் திட்டமிட்டுக் குறிவைத்து தாக்கியழிக்கும் திறன்வாய்ந்த இலங்கை இராணுவப் பிரிவான ஆழ ஊடுருவும் குழுவினாராலேயே செய்யப்பட்டிருக்கிறது என நம்பவேண்டியுள்ளது. இதையொத்த பல சம்பவங்கள் வன்னிப் பிரதேசத்தில் முன்னரும் இடம்பெற்றிருந்தமையைச் சுட்டிக்காட்டவேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பில் ஜோசப் பரராஜசிங்கம், கொழும்பில் நடராஜா ரவிராஜ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு, சிவமகாராசா, வேட்பாளர்களாகவிருந்த விக்கினேஸ்வரன், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் பலர் வடக்கு, கிழக்கு பகுதியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுவருவதை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளோம். தமிழ் இனத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் கொலை செய்யப்படுவது மட்டுமல்ல காணாமல் போவோர், மனித உரிமை ஆணையகத்தில் சரணடைவோர் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்துவருகின்றன.எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதையும் நாடாளுமன்ற உறுப்பினர் தனது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற தடைகள் ஏற்படுத்தப்படுவதையும் நாடாளுமன்றத்திலும், சபாநாயகரிடமும் பலமுறை முறையிட்டும் பயனற்றதாகிவிட்டது. இவ்வாறு தொடர்ந்து எமது உறுப்பினர்கள் கொலைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதன் மூலம் தமிழ் இனத்தின் உரிமைக்காக விடுதலைக்காக குரல் கொடுப்பதை, போராடுவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை இச்சந்தர்ப்பத்திலும் தெரிவித்துக்கொள்கிறோம்.சிவநேசனின் இழப்பு எவ்வகையிலும் ஈடு செய்ய முடியாததாகும். அன்னாரினால் கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்பற்ற தியாகம் ஒருபோதும் வீண்போகாது தமிழ்த் தேசத்தின் விடுதலைக்கே வித்தாகும் என்பதில் ஐயமில்லை.மனைவி, மக்கள், அன்புடையோர், ஆதரவாளர்களின் துன்பத்திலும் துயரத்திலும் கலந்து எமது இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி நிற்கின்றோம்.என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழுத்தம்:enb
No comments:
Post a Comment