Tuesday, 8 April 2008

ஈழச்செய்திகள்:080408

Posted on : Tue Apr 8 9:00:00 2008
தமிழ்த் தேசத்தின் புனித ஸ்தலமான மடுத் தேவாலயம் அழிக்கப்படுவதை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்குக!
நோர்வேயிடம் விடுதலைப் புலிகள் அவசர கோரிக்கை
மத வேறுபாடின்றித் தமிழ் மக்கள் அனைவராலும் வணங்கப்படும், தமிழ்த்தேசத்தின் புனித ஸ்தலமான மடுமாதா தேவாலயத்தை இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி அழிப்பதிலிருந்து தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவும். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சமாதான அணுசரணையாளரான நோர்வேக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.இக்கோரிக்கையை முன்வைத்து நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்முக்கு அவரச கடிதம் ஒன்று நேற்று அனுப்பிவைக்கப்பட்டது. உலகத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்களைப் பாதுகாப்பதில் அக்கறையுள்ள சர்வதேச சமூகத்தையும் சர்வதேச நிறுவனங்களையும் இணைத்துக்கொண்டு நோர்வே அரசு, சரித்திரப் பிரசித்தி பெற்ற தேவாலயத்தின் மீதான தாக்குதல் களை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் என நாம் நம்புகின்றோம். என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது. அமைச்சர் எரிக் சொல்ஹெய்முக்கு பா.நடேசன் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஒரு வருட காலமாக வன்னியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் ஒரு பெரும் போரைச் சிங்கள அரசு எம்மீது தொடுத்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.வன்னியின் மேற்குப் பகுதியான மன்னார் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க மடுத் தேவாலயப் பகுதியைக் குறியிலக்காகக் கொண்டு சிங்களப் படைகள் இராணுவ நடவடிக்கையைச் செய்து வருவதை உலகமே அறியும்.மடுத் தேவாலயம் நூற்றாண்டு காலப் பழைமை வாய்ந்த ஒரு திருத்தலம். மத வேறுபாடில்லாமல் தமிழ் மக்கள் அனைவராலும் வணங்கப்படும் புனிதத் தலமாக மடுத் தேவாலயம் இருந்து வருகின்றது.அதனாலேயே போரால் இடம்பெயர்ந்த மக்கள் மத வேறுபாடு இல்லாமல் தஞ்சமடையும் ஒரு பாதுகாப்பு இடமாகவும் மடுத் தேவாலயம் இருந்து வந்தது.தேவாலயத்தின் மீது குண்டு மழைமத நல்லிணக்கத்தினதும் மக்களின் சகிப்புத் தன்மையினதும் சின்னமாகத் தமிழர் நிலத்தில் இருந்துவரும் இந்தப் புனிதத் தலத்தைச் சிதைத்து அழிக்கும் வெறித்தனத்துடன் கடந்த சில வாரங்களாக இதன் மீது சிங்களப் படைகள் குண்டுமழை பொழிகின்றன.ஒரு புனித ஆலய வளாகம் இராணுவ இலக்காகச் சிங்களப் படைத் தலைமையினால் இனங்காணப்பட்டு அதனை நோக்கிப் படைநகர்வும் குண்டுத் தாக்குதல்களும் நடைபெறுகின்றன. எனினும், உலக நாடுகள் இந்த அராஜகத்தை தடுத்து நிறுத்தவோ, கண்டிக்கவோ முன்வராதிருப்பது தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.பல்குழல் பீரங்கிகள் கொண்டும், ஆட்லறி, மோட்டார்கள் கொண்டும் டாங்கிகள் மூலமாகவும் சிங்களப் படைகள் புனித வளாகப் பகுதிமீது தாக்குதலை நடத்துகின்றன.கண்மூடித்தனமாக நடத்தப்படும் இக் குண்டுத் தாக்குதல்களால் அங்கு தஞ்சமடைந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களும் ஆலய மதகுருமார்களும் புகழ்மிக்க மடு மாதா சிலையுடன் இடம் பெயர வேண்டிய வரலாற்றுத் துயரம் நடந்தேறியுள்ளது.மடுமாதா ஆலய வளாகம் அழியும் அபாயம்புனித ஆலயத்தின் ஒருபகுதி சிங்களப் படைகளின் குண்டுத் தாக்குதல்களால் சிதைந்துவிட்டது. சிங்களப் படைகளின் குண்டுத்தாக்குதல்கள் தொடர்வதால் ஆலய வளாகம் அழிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.இந்நிலையில், சமாதானத் தூதரான உங்கள் ஊடாக நோர்வே அரசுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன்.மடு புனித ஆலயப் பகுதி மீது சிங்களப் படைகள் நடாத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்த நோர்வே அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். உலக நாடுகளுடனும் வரலாற்றுப் புனித வழிபாட்டுத் தலங்களைப் பேணி பாதுகாக்கும் அமைப்புகளுடனும் ஒன்றிணைந்து ஆலயம் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை நோர்வே அரசு எடுக்கவேண்டும் என எமது இயக்கம் எதிர்பார்க்கிறது.பௌத்த சின்னங்களையும், பௌத்த விகாரைகளையும் பாதுகாப்பதிலும் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் அவற்றை நிறுவுவதிலும் பெரும் முயற்சி எடுக்கும் இலங்கை அரசு, ஏனைய மதங்களின் மதச் சின்னங்களைச் சிதைக்கவும், அந்த மதங்களைத் தழுவியுள்ள மக்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் பௌத்த அடிப்படைவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதிலும் தீவிரம் காட்டி நிற்கின்றது.நோர்வேயின் அனுசரணைப் பாத்திரத்தைநாம் இன்னமும் மதிக்கிறோம்எமது இயக்கத்தைப் பொறுத்தவரையில் நோர்வே அரசு வகிக்கும் அனுசரணைப் பாத்திரத்தை இன்னமும் நாங்கள் ஏற்றுக்கொண்டு மதிக்கின்றோம். இத்தகைய கோரிக்கையை நோர்வே அரசிடம் விடுப்பதற்கு எங்களுக்கு உரிமையுள்ளது என்றும் நம்புகிறோம்.எனவே, ஈழத் தமிழர்களின் புனிதத் தலமான மடுத் தேவாலயம் மீது சிங்களப் படைகள் தொடுத்துள்ள தாக்குதல்களை உடனடியாக நிறுத்த, உலக நாடுகளின் துணையுடன் நோர்வே அரசு தேவையான முயற்சிகள் எடுக்கத் தூண்டும்படி உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். என்று உள்ளது.

படுகொலைக்குக் கண்டனம்
யாழ் உதயன் ஆசிரியர் தலையங்கம்.08-04-08
இனப்பூசல், கோர யுத்தமாக உள்நாட்டுக்குள் வெடித்திருக்கையில், அதன் கொடூரத்தில் மற்றொரு அரசியல்வாதி பலியாகியிருக்கின்றார்.தமிழ் பேசும் வல்லமையுடைய அரசுத் தரப்பின் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமானவரான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே குண்டு வெடிப்பில் பலியாகியிருக்கின்றார்.தற்கொலைத் தாக்குதலே அவரைப் பலிகொண்டுள்ளதாக அறிவித்துள்ள அரசு, அதற்கான முழுக் குற்றச்சாட்டையும் விடுதலைப் புலிகள் மீதே எடுத்த எடுப்பில் சுமத்தியிருக்கின்றது.நடந்தது தற்கொலைத் தாக்குதல்தான் என்றால் விடுதலைப் புலிகள் தவிர வேறு யாரும் இதை நடத்தியிருப்பார்கள் என்று கருதுவதற்கு இடமேயில்லை.ஈழத் தமிழர்களின் மிதவாதத் தலைமைகள் ஐம்பதுகளில் இருந்து எண்பதுகள் வரை மூன்று தசாப்த காலம் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளுக்காகவும் நீதி வேண்டியும் அஹிம்சை வழியில் அனைத்து வெகுஜனப் போராட்ட வடிவங்களிலும் சளைக்காது போராடி, கடைசியில் சலித்துப் போனபோது அத்தகைய நாடாளுமன்றத் தலைவர்களின் உரிமைப் போராட்டம் ஆயுத வழியில் படைப்பலாத்காரம் மூலம் தென்னிலங்கை பௌத்த, சிங்கள அரசுகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட போது வேறு வழியின்றி ஈழத் தமிழ் இளைஞர்கள் புரட்சிகர அரசியல் கோட்பாட்டையும் செயற்பாட்டையும் தழுவி அதன் அடிப்படையில் வன்முறை அரசியல் பாதையில் குதித்தனர். அதன் விளைவாக இன்றுவரை இலங்கைத் தீவில் வன்முறைப் புயல் பெரும் சூறாவளியாகத் தொடர்கின்றது. போர்ப் பூகம்பத்தால் நாடே அதிர்கின்றது. அந்த வரிசையில் அன்று அல்பிரட் துரையப்பா என்ற அரசுத் தரப்பு ஆதரவு அரசியல்வாதியின் படுகொலையுடன் தொடங்கிய வன்முறை வழியிலான அரசியல் கொடூரம், இன்று பல அரசியல் தலைவர்களினதும் அப்பாவிப் பொதுமக்களினதும் உயிர்களைக்காவுகொண்டு முடிக்கக் காலாயிற்று.இந்த வரிசையில் கடைசியாக இப்போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஒரு மனித வெடிகுண்டுக்கு இரையாகியிருக்கின்றார்.அண்மைக்காலத்தில் ஜோஸப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், ரி. மகேஸ்வரன், கே. சிவநேசன் ஆகிய தமிழ் நாடாளுமன்ற எம்.பிக்கள் படுகொலை செய்யப்பட்டமையை எவ்வளவு சூடாகவும், கடுமையாகவும் கண்டித்தோமோ அதே கடுமையோடு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கொலையையும் கண்டிக்கிறோம்.தமிழர் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் அமைச்சர் ஜெயராஜ் பழகுவதற்கு இனியவர். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசத் தெரியாத பண்பாளர். அதுவே அரசியலில் அவருக்குப் பெரிய பின்னடைவும் கூட.என்றாலும் அவர் குறித்தும் தமிழ்மக்களுக்கும் ஆதங்கங்கள் நிறையவே உண்டு. ஈழத் தமிழரின் இனப்பிரச்சினையைப் பேசித் தீர்க்கும் எண்ணமின்றி, தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தும் மேலாதிக்கத் திமிரோடும், போர் வெறியோடும் தமிழர் தேசம் மீது தற்போதைய மஹிந்த அரசு யுத்த சந்நதத் தீவிரம் கொண்டு நிற்கையில், அதற்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டு வந்த தமிழ் அமைச்சர் அதுவும் அரசின் மூத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே."வீடெரிக்கும் இராசாவுக்கு நெருப்புக்கொள்ளி எடுத்து வழங்கும் மந்திரி' போலவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவரது சகோதரர்களுக்கும் நெருங்கி நின்று விசுவாசமாகச் செயற்பட்டவர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே.தமது விசுவாசத்தை அவர்களுக்குக் காட்டுவதற்காக, தமிழ் பேசும் மக்களின் நலனைப் புறக்ணிக்க கிஞ்சித்தும் பின்நிற்காத "தமிழ் பேசும்' தலைவர் அவர்.கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அப்பாவிகள் பல நூற்றுக் கணக்கில் பலவந்தமாகப் படையினரால் கைது செய்யப்பட்டு அள்ளிச் செல்லப்பட்டபோது அதனை உயர்நீதிமன்றமே சகித்துக் கொள்ளாத போது அதற்காக அரசின் சார்பில் பிரதமரே நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரியபோது அக்கருத்துக்களைத் துச்சமாகக் கருதி ஒதுக்கிவிட்டு, இவ்வாறு தமிழர்களை "நாய்கள் பிடிப்பது போல' பிடித்து ஏற்றிச் சென்ற அராஜகத்தை நியாயப்படுத்தியவர் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே. அதன் மூலம் "ராஜபக்ஷ பிறதர்ஸ் அண்ட் கம்பனி'க்கு தமது விசுவாசத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டவர்.ஆனாலும் தென்னிலங்கையில் தாம் எந்தச் சமுதாயத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி நாடாளுமன்றத்துக்கு வந்தாரோ அந்தச் சமூகத்துக்காக அயராது பாடுபட்டவர் அவர்.தென்னிலங்கையில் பௌத்த சிங்களப் பெரும்பான்மையினரால் நிறைந்த ஒரு மாவட்டம் தமிழ்க் கத்தோலிக்கரான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேக்குத் தொடர்ந்து பெருவாரி வாக்குகளை அள்ளி வாரி வழங்கி அவரைத் தமது பிரதிநிதியாகத் தெரிவுசெய்து ஏற்றுக் கொண்டாடியது என்றால் அவரது சமூகம் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்குப் புரிந்துகொள்ளத்தக்கது. என்றாலும் சிறுபான்மையினரைப் பலவீனப்படுத்தும் எத்தனத்துக்கான ஒத்துழைப்புக்குரிய, பெரும்பான்மையினரின் வெகுமதியாகவும் பரிசாகவும் கூட இந்த ஆதரவையும் செல்வாக்கையும் அர்த்தப்படுத்த முடியும் என்பதையும் நாம் புறக்கணிக்க இயலாது.எதிரணி அரசியல்வாதிகளுடனும் நல்ல நட்புறவைப் பேணி உரிமையுடன் பழகியவர் பெர்னாண்டோபுள்ளே.அவர் சார்ந்த தென்னிலங்கை அரசு இப்போது வரித்துக் கொண்டிருக்கும் யுத்த வெறிப்பாதை இத்தகைய படுகொலைக் கொடூரங்களுக்குத்தான் வழி செய்து நிற்கின்றது. பழிக்குப்பழி, இரத்தத்துக்கு இரத்தம் என்ற பேரழிவு நிலைக்கு மஹிந்த அரசின் இந்தப் போக்கு நாட்டை வழிப்படுத்துகின்றது.எனவே இத்தகைய கொடூரங்களுக்காக படுகொலைகளுக்காக அவற்றின் சூத்திரதாரிகளைக் கண்டிக்கும் அதேசமயம், "பயங்கரவாதத்தை அழித்தல்' என்ற பெயரில் நாட்டைப் பெரும் அரச பயங்கரவாதத்துக்குள் மூழ்கடித்து இத்தகைய கொடூரப் பாதையை நாட்டுக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கும் அரசியல் தலைமைகளும் கண்டிக்கப்படவேண்டும்.இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் பேசி, ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்வதன்மூலம் சமாதானத் தீர்வு காண்பதை விட்டொழித்து விட்டது அரசு. தமிழர்கள் அடிமைப்பட்டு அடங்கி வருவதற்கு மட்டுமே அடக்குமுறைக் கதவு திறந்திருக்கின்றது என்ற பாணியில் செயற்படும் கொழும்பு, அதனால் சமாதான முயற்சிகளுக்கான கதவுகளை இறுக மூடி அடைத்துக்கொண்டுவிட்டது. இந்த அடைப்புக்குள் வெளிப்படும் இத்தகைய கொடூரக் கொலைகள் சகிக்க முடியாதவைதான்.

ஜெயராஜ் குறித்து அரசியல் பிரமுகர்கள் [09 - April - 2008]
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் சேவைகள் மற்றும் அவரின் குணநலன்கள் தொடர்பாக அரசியல் பிரமுகர்கள் நேற்று திங்கட்கிழமை வெகுவாக பாராட்டி கருத்துத் தெரிவித்தனர். பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஜெயராஜின் பூதவுடல் நேற்று திங்கட்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இங்கு சபாநாயகர் வி.ஜே.மு.லொக்கு பண்டார கருத்து தெரிவிக்கையில்;
சபாநாயகர்
பாராளுமன்ற அனுபவம் கொண்ட சிறந்த வாதத்திறமையுடையவராக ஜெயராஜ் விளங்கினார். ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்த அவர் ஏனைய எம்.பி.களின் நலன்குறித்தும் கரிசனை கொண்டிருந்தார். ஆளும்கட்சியின் பிரதம கொரடாவாக நியமிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை கற்றறிவதில் ஈடுபாடு காட்டிய அவரின் மறைவு பேரிழப்பாகும் என்றார்.
ஆர்.சம்பந்தன்
ஜெயராஜ் கபடமற்ற ஒருவராக விளங்கினார். அரசாங்கத்திற்கு ஆதரவாக மிகத்துணிவாக குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.
இது அரசாங்கத் தரப்புக்கு பாரிய இழப்பாகும்.
ரவூப் ஹக்கீம்
ஜெயராஜின் படுகொலையை எவ்விதத்திலும் ஏற்கமுடியாது மூன்று தெழிகளிலும் பரிச்சயம்பெற்று விளங்கிய அவர் அரசாங்கத் தரப்பின் சிறந்த பாதுகாவலனாக விளங்கினார். ஜனநாயகவாதியாக செயற்பட்ட அவரின் இழப்பு சுதந்திரக் கட்சிக்கு மாத்திரமல்ல, சகலருக்கும் பேரிழப்பாகும். அவரின் குடும்பத்தினருக்கு முஸ்லிம் காங்கிரஸின் அனுதாபங்கள் என்றார்.
விமல் வீரவன்ச எம்.பி.
நட்புடன் பழகிய அந்த அரசியல் வாதியின் இழப்பு பயங்கரவாதத்திற்கெதிரான பேராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது. படுபாதகமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன,மத, மொழி பேதங்களுக்கு அப்பால் செயற்பட்ட ஜெயராஜிக்கு எம் வீரவணக்கங்கள் உரித்தாகட்டும் என்றார்.
அமைச்சர் டக்ளஸ்
கோரமான முறையில் ஜெயராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளார் மற்றுமொரு சேவையாளனை படுகொலை செய்ததன் மூலம் எட்டப்பட்ட நன்மைகள் யாவை? சிறந்த ஜனநாயகவாதியாக செயற்பட்ட அவர் ஜனநாயக விரோதசக்திகளின் பழி வாங்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பிரதியமைச்சர் சச்சி
நடுநிலையுடன் பிரச்சினைகளை அணுகும் அவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸீடன் நெருங்கிச் செயற்பட்டதுடன், எமக்கு சிறந்த அறிவுரை நல்குபவராகவும் விளங்கினார்.
பசில் ராஜபக்ஷ
சிறந்த தோழன், புத்திக்கூர்மை வாதாட்டத்திறன், தூரநோக்கு, சேவை மனப்பான்மை, பற்றுறுதி என ஜெயராஜின் தனித்துவம் நீளமானது. எனக்கும், எனது கட்சிக்கும், நாட்டுக்கும் இது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்றார்.
அமைச்சர் டிலான்
அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பிய ஜெயராஜ் துணிவுடனும் வாதத்திறமை பெற்றும் விளங்கினார். தமிழ் சமூகத்தின் பாலும் அவர் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டார்.

12 ஆவது அகவையில் தினக்குரல்
[06 - April - 2008]
இலங்கைத் தீவிலுள்ள தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒலிக்கும் `தினக்குரல்' தனது பயணத்தில் 11 வருடங்களைப் பூர்த்திசெய்து இன்று 12 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. தினசரிப் பத்திரிகை ஒன்றின் வரலாற்றில் 12 வருடங்கள் என்பது மிகவும் குறுகியதுதான். இருந்த போதிலும் இந்தப் பன்னிரண்டு வருட காலத்துக்குள் தினக்குரல் இலங்கையிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் உள்ளங்களிலும் நிரந்தரமான ஒரு இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் தமிழ் சமூகத்தில் தினக்குரலுக்கு ஸ்திரமான ஒரு இடம் கிடைத்துள்ளது. `தினக்குரல்' ஒரு செய்திப் பத்திரிகையாக மட்டும் தனது பணியை முன்னெடுக்கவில்லை கல்வித்துறைக்காக தினக்குரல் ஆரம்பித்த இலவச இணைப்புகள், மாணவர் சமுதாயத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளைப் பொறுத்தவரையில் இவ்விடயத்தில் தினக்குரல் தான் முன்னோடி! மாணவர்களுடைய கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், அவர்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்துவதிலும் இதன் பங்கு அளப்பரியது.
அதேவேளையில் அரசியல், இராணுவ, பொருளாதார விடயங்களுடன், விஞ்ஞானம், கலை, இலக்கியம் என அனைத்து அம்சங்களையும் தாங்கிய ஒரு வார இதழாக ஞாயிறு தினக்குரல் வெளியிடப்படுகின்றது. அத்துடன் சுவாரஸ்யமான ஜனரஞ்சக அம்சங்களுடன் புதன் வசந்தம் வெளிவருகின்றது.
இவை அனைத்தும் இணைந்துதான் முக்கிய காலத்துக்குள் நிரந்தரமான ஒரு இடத்தை தினக்குரல் பெற்றுக் கொள்வதற்குக் காரணமாகியது.
மக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவது, அதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது என்பவற்றுடன், மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிப்பதும் தினக்குரலின் பணியில் ஒன்றாகும்.
இவ்வகையில் கடந்த 12 வருட காலத்தில் பல தடைக்கற்களைக் கடந்து சாதனைகளை நிலைநாட்டிய தினக்குரல், எதிர்வரும் வருடங்களிலும் இந்தப் பாதையில் செல்வதற்கு உறுதி பூண்டுள்ளது.

அன்பான தமிழ் பேசும் மக்களுக்கு...
[06 - April - 2008] தினக்குரல் இன்று அதன் 12 ஆவது வருடத்தில் காலடி வைக்கிறது. கடந்த 11 வருடங்களிலும் சமுதாய நலனுக்காகவும் நலமார்ந்த இதழியலின் மேம்பாட்டுக்காகவும் தினக்குரல் செய்துவந்திருக்கும் பங்களிப்பு குறுகியதொரு காலகட்டத்திற்குள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கதொரு நாளேடாக அதை மிளிரவைத்திருக்கிறது. முன்னைய காலங்களைப் போலன்றி மிகவும் கூடுதலான அளவுக்கு அரசியல் பிரச்சினைகளை முனைப்புறுத்த வேண்டிய சமகாலத் தேவை காரணமாக இதழியல்துறை இன்று எதிர்நோக்கவேண்டியிருக்கும் சகல விதமான நெருக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் தினக்குரல் நிதானமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வந்திருப்பதை எமது வாசகர்கள் நன்கு அறிவார்கள்.
தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் இன்னொரு தமிழ்ப் பத்திரிகை என்ற நிலையிலிருந்து இன்று தினக்குரல் தேசிய இனப்பிரச்சினைக்கு சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் சகலதையும் பூர்த்திசெய்யக்கூடிய பேச்சுவார்த்தை மூலமான இணக்கத் தீர்வொன்று காணப்பட வேண்டியதன் அவசியத்தை துணிச்சலுடன் வலியுறுத்தும் ஒரு பத்திரிகையாக மாறியிருக்கிறது.
ஏனைய சிறுபான்மை இனங்களின் நலன்களுக்கு குந்தகமில்லாத வகையில் தமிழ்க் கருத்துக்கோணத்தை, தமிழ்த் தேசிய அரசியலின் கருத்து நிலையை வெளிப்படையாகத் துணிவாற்றலுடன் முன்வைக்க வேண்டிய காலத்தின் தேவைக்கு ஈடுகொடுக்கும் பணியை தினக்குரல் அதன் ஆரம்பம் முதலிருந்தே அர்ப்பணிப்புடன் செய்துவந்திருக்கிறது.
எந்தவொரு அரசியல் இயக்க நிலையிலும் இருந்து அல்லாமல் தமிழ்த் தேசியத்தின் நியாயபூர்வமான கோரிக்கைகளை உரத்துப் பிரசாரப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை கொழும்பை மையமாகக் கொண்ட ஏனைய தமிழ் பத்திரிகைகளுக்குக் கொடுத்தது தினக்குரலின் வரவேயாகும்.
தமிழ்த் தேசியத்துக்கான பங்களிப்புப் பரப்பெல்லைக்குள் ஏனைய சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்காகவும் குரல்கொடுக்கும் பணியில் தினக்குரல் சமநிலை தவறியதில்லை.
செய்தி எடுத்துரைப்பில் அறிவியல் ரீதியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற நிதானத்தை விட வெறும் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விடக்கூடிய செயற்போக்கு இன்றைய ஊடகவியலாளர்கள் மத்தியில் வியாபகமடைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த ஆரோக்கியமற்ற போக்கை தடுத்து நிறுத்துவதென்பது நலமார்ந்த இதழியலுக்கு உண்மையில் ஒரு பாரதூரமான சவாலாகவே இருக்கிறது. இச்சவாலை எதிர்கொள்வதற்கு தினக்குரல் வெகு நிதானத்துடன் இயன்றவரை பாடுபட்டுவந்திருக்கிறது.
ஒரு குறுகிய காலகட்டமான 11 வருடங்களுக்குள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க ஒரு தினசரியென்று பெயரெடுத்த தினக்குரலின் வளர்ச்சி நாம் தூரதரிசனத்துடன் சமுதாயத்தின் நலன்களை முன்னிறுத்தி பிரச்சினைகளை அணுகியிருக்கிறோம் என்பதற்குத் தெளிவான சான்று.
இதழாசிரியப் பெறுமானங்களுக்கு (Editorial Values) முதன்மை கொடுக்க வேண்டுமென்பதில்நாம் காட்டிய உறுதிப்பாடு, தெளிவாக வரையறுக்கப்பட்ட பத்திரிகைத்துறை வீச்செல்லைக்குள் வாசகர்களினதும் சந்தையினதும் தேவைகள் தொடர்பில் நாம் காட்டிய பிரதிபலிப்பு ஆகியவை தினக்குரலின் இன்றைய வளர்ச்சி நிலைக்கு முக்கியமான காரணிகள்.
ஒரு செய்திப் பத்திரிகைக்கு நம்பகத்தன்மையைக் கொடுப்பதும் ஏனைய வர்த்தக உற்பத்திப் பொருட்கள் மற்றும் சரக்குகளில் இருந்து பத்திரிகையை வேறுபடுத்துவதும் ஆசிரியர் பீடத்தின் முதன்மையை வலியுறுத்தும் கோட்பாடுதான் (DOCTRINE OF EDITORIAL PRIMACY) என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் நாம்.
எந்தக் கட்டத்திலும் நம்பிக்கையீனம் எமது செயற்பாடுகளில் ஊடுருவுவதற்கு நாம் கிஞ்சித்தும் இடமளிக்கவில்லை. தொடர்ந்தும் ஆரோக்கியமான அணுகுமுறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவோமென்று தமிழ் பேசும் மக்களுக்கு உறுதி கூறுகின்றோம்.
தினக்குரலின் வளர்ச்சிக்காக பாடுபட்டுழைத்த அனைவருக்கும் எமது நம்பிக்கைக்கு உரமூட்டிய தமிழ் பேசும் மக்களுக்கும் நன்றி கூறிக் கொண்டு அவர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை எதிர்பார்த்து மனத் தைரியத்துடன் அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.

யாழ் குடாநாட்டில் விதவைகள்: கவனிக்கப்படாமலே உருவாகிவரும் மற்றுமொரு சமூகம்.
மதியம் தாண்டியும் அந்த வரிசை அசையாது நின்ற இடத்திலேயே நிற்கிறது. பெரும்பாலான பெண்களின் முகங்களில் இனி ஏதுமில்லையென்ற வெறுமை மட்டுமே பரவிக்கிடக்கிறது. உள்ளூர் உபதபாலகத்தில் வழங்கப்படப்போகும் அரசின் உபகார உதவிக்கொடுப்பனவிற்காகவே அந்த விதவைகள் காத்திருக்கின்றனர். உள்ளூர் மக்களால் ‘பிச்சைக்காசு’ என்றழைக்கப்படும் அந்த உதவித்தொகை உண்மையிலேயே அரசாங்கம் போடும் பிச்சைதான் என்று சொன்னாலும் அது மிகைப்படுத்தல் அல்ல. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இவ்வாறான விதவைகளுக்கு அரசாங்கம் உபகாரத்தொகையாக மாதமொன்றிற்கு நூறு ரூபாவை வழங்கிவருகின்றது. இத்தொகையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அக்கறையற்றே இருக்கின்றது.யாழ்.குடாநாட்டில் தொடரும் யுத்த அவலம், விதவைகளது எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க வைத்துள்ளது. அதிலும் அண்மைக்காலங்களில் தொடரும் படுகொலைகளால், கணவன்மாரை இழந்துள்ள இளம் விதவைகளது எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இவற்றைவிட 1996 முதல் இன்று வரை தொடரும் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களால் கணவரை இழந்த பெண்கள் எந்தவொரு வகைப்படுத்தல்களுக்குள்ளும் அடங்காத வாழ்வொன்றையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.தொடரும் படுகொலைகள், இயற்கை அனர்த்தங்கள் என குடாநாட்டு விதவைகளின் எண்ணிக்கை இவ்வாண்டின் முற்பகுதியுடன் 30 ஆயிரத்தினை தாண்டிவிட்டது. அதிலும் 50 வயதிற்கும் குறைவான இளம் விதவைகளின் எண்ணிக்கை மட்டும் ஏழாயிரத்தினைத் தாண்டிவிட்டதாக யாழ்.செயலகத்தின் அண்மைய புள்ளி விபரங்கள் கூறுகின்றன.குடாநாட்டிலுள்ள விதவைகள் முக்கியமாக ஐந்து வகைகளாகப்பிரிக்கப்பட்டுள்ளனர். வன்முறைகளால் கணவரை இழந்தோர், விபத்துக்கள், இயற்கை அனர்த்தங்கள் நோய்களால் கணவரை இழந்தோர் மற்றும் தற்கொலை செய்து கொண்டமையால் விதவைகளானோர் என அது உள்ளடங்குகின்றது. இவ்வாறு விதவைகளென அடையாளங்காணப்பட்டோரில் சுமார் 11 ஆயிரம் பேர் பிறரது எந்தவொரு உதவியும் இன்றியே வாழ்ந்து வருகின்றமையும் அதிர்ச்சி தரும் செய்தியாகும்.குடாநாட்டில் இரண்டு தசாப்பதங்களுக்கு மேலாக நீடிக்கும் யுத்தம், விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வழிகோலியது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் ஆகஸ்ட் 2006 இன் பின்னரான காலப்பகுதி, நாளுக்கு குறைந்தது ஒரு விதவையென்ற அடிப்படையில் புதிய விதவைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றது. இவர்களுள் காணாமல் போன கணவர் இதுவரை வீடு திரும்பியிராதவர்களும் உண்டு. ஏனெனில் காணாமல் போன எவருமே இதுவரை வீடு திரும்பியதற்கான வரலாறு எதுவும் குடாநாட்டில் நடந்ததேயில்லை.யாழ்.குடாநாட்டில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் வேகத்திற்கு நேர் எதிராக அவர்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளோரது எண்ணிக்கையும் குறைவடைந்து வருகின்றது. இறுதியாக நடாத்தப்பட்ட ஆய்வொன்றின் படி இவ் விதவைகளுள் 21 ஆயிரம் பேர், தமது குடும்பங்களுடன் மாதாந்தம் வெறும் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானத்துடன் வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.சுமார் 3 ஆயிரத்திற்கும் குறைவான விதவைகளே ஓய்வூதியம் மூலம் மாதாந்தம் ஜயாயிரம் ரூபாவிற்கும் மேற்பட்ட வருவாயுடன் குடும்பத்தை நடாத்தியும் செல்கின்றனர்.குடாநாட்டில் தொடரும் யுத்தம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்கள் மீது தாக்கங்களைச் செலுத்தியே வருகின்றது. அதிலும் அண்மைக்காலங்களில் என்றுமில்லாத அளவில் அதிகரித்துள்ள பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதுவும் ஊரடங்கு அமுலில் உள்ள வேளையில் இவ்வாறான பாலியல் வல்லுறவுகள் தொடர்வது அவதானிப்பிற்குரியது.குறிப்பாக தென்மராட்சிப் பகுதியில் இவ்வாறான பாலியல் வல்லுறவுகள் அதிகளவில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் ஒரேதரப்பை நோக்கியதாகவே இருக்கின்றன. ஆனாலும் உள்ளூர் பழமொழிபோல ‘விதானையும் அவனே கள்வனும் அவனே’ எனும் நிலைதான். விசாரிக்கின்றோம். உரிய தண்டனை வழங்கப்படும் என்ற உறுதிமொழியுடன் எந்தவொரு நிவாரணமுமின்றி அது ஓய்ந்து போய்விடுகின்றது.அண்மையில் வடமராட்சிப் பகுதியில் இவ்வாறு இளந்தாய் ஒருவர் அதிகாலை வேளை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். கணவரும், ஒரு வயதான அவரது சிறு குழந்தையும் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில், தனித்திருந்தவேளை இச்சம்பவம் நடந்துள்ளது. அருகிலுள்ள பனங்கூடலுக்குள் கடத்திச் செல்லப்பட்டே இவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். சம்பவம் பற்றி முறைப்பாடு செய்த கணவர் பின்னர் படையினராலேயே தாக்கப்பட்டுமிருந்தார். இவ்வாறான சம்பவங்கள் சமூக கௌரவம் கருதி மூடிமறைக்கப்பட்டே வருகின்றது.ஆனாலும் குடாநாட்டில் கூடுதலாக இவ்வாறான பாலியல் வல்லுறவுக்குள்ளாவோர் இளம் விதவைகளாக உள்ளதாக உள்ளூர் பெண்கள் அமைப்பொன்று கூறுகின்றது. ஏற்கனவே சமூகப்பாதுகாப்பற்றதோர் சூழலில் குடும்பத்திற்கான தலைவனான ஆண் பாதுகாப்பு இன்மையும் இவ்வாறான சம்பவங்களுக்கு வழிகோலி விடுகின்றது. ஆண் பாதுகாப்பற்ற குடும்பங்கள் இலகுவான இலக்குகளாவதாக அவ்வமைப்பு மேலும் கூறுகின்றது.குறிப்பாக அண்மைய இருவருட காலப் பகுதியினுள் கணவனை படுகொலைகளால் இழந்த பெரும்பாலான விதவைகள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டேயிருக்கின்றனர். சோதனைச் சாவடிகளிலும், காவலரண்களிலும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்வதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் பல புகார்கள் செய்யப்பட்டு வருகின்றது. மறு புறத்தே படைத்தரப்புகளுடன் தொடர்புபடுத்தி எதிர்த்தரப்புக்களாலும் சொல்லிக்கொள்ளத்தக்க அளவினில் குடும்பத்தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அந்தவகையில் கணவரை இழந்த விதவைகளை சமூகமும் ஒதுக்கி வைக்கும் அவலமும் தொடர்கின்றது. இத்தகையதோர் வாழ்வு காணாமல் பொன குடும்பத்தலைவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கும் இருக்கின்றது.தொடரும் யுத்த அவலம் விதவைகளின் எண்ணிக்கையை அதிகரித்தே செல்கின்றது. வலிகாமத்தின் ஆனைக்கோட்டை, சாவற்காடு கிராமத்தில் மட்டும் ஒட்டு மொத்தப் பெண்களில் 30 சதவீதமானவர்கள் விதவைகள். அவர்களுக்கு எந்தவொரு தரப்புமே உதவுவதுமில்லை. பெரும்பாலான விதவைகள் மோசமான உளவியல் நோய்களிற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு விரைந்து உரிய சிகிச்சை அளிக்கப்படவேண்டும். இல்லாவிடின் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றார் உளவள வைத்திய நிபுணர் சி.யமுனானந்தா. இதே நிலை தீவகம் மற்றும் தென்மராட்சியின் பல கிராமங்களிலும் தொடர்கின்றது.விதவைகளை குடும்பத்தலைவிகளாகக் கொண்ட குடும்பங்களிற்கு அரசு வழங்குவது வெறும் பிச்சைக்காசு உதவியே. அதையும் கூட 18 ஆயிரத்திற்கும் குறைவான குடும்பங்களே பெறுகின்றன. எஞ்சிய 12 ஆயிரம் குடும்பங்களிற்கு அது கூட இல்லை. உள்ளூர் அரச அதிகாரிகளது பரிதாபப் பார்வைக்குட்பட்டு ஒரு பகுதி குடும்பங்கள் சில வேளைகளில் உலர் உணவு நிவாரணத்தையோ அல்லது சமுத்தி நிவாரணத்தையோ பெற்றுக்கொள்கின்றன. அதுவும் கூட வெறும் ஆயிரத்தி இருநூறிற்கும் குறைவான பணப் பெறுமதியை மட்டுமே மாதாந்தம் கொண்டுள்ளது.பெண்களுக்கான உதவிகளுக்கென பல அமைப்புக்கள் செயற்படுகின்ற போதும் அவர்கள் விதவைகள் தொடர்பில் கூடிய கரிசனை எடுப்பதாகத் தெரியவில்லை. இடையிடையே விதவைகளுக்கு தையல் இயந்திரங்களையோ அல்லது நல்லின ஆடொன்றையோ வழங்குவதோடு மட்டும் தமது பணியை நிறுத்திக் கொள்கிறார்கள். விதவைகளுக்கு நீண்ட காலத்தில் உதவக் கூடியவாறான எந்தவொரு உதவியும் இப் பெண்கள் அமைப்புகளிடமிருந்து கிடைப்பதாகத் தெரியவில்லை.கிராமங்களுக்கு நாங்கள் போகின்ற போதெல்லாம் உதவி கேட்டு பெருமளவில் விதவைகள் வருகின்றார்கள். எல்லோருக்கும் முழுமையாக உதவ எம்மிடம் நிதி இல்லை. அனைத்து உதவி அமைப்புக்களும் இணைந்து பொதுவான திட்டமொன்றை வகுத்துச் செயற்படுத்த வேண்டும் என்கின்றார் யாழ். மாவட்ட அரச சார்பற்ற அமைப்பக்களின் இணையத்தினைச் சேர்ந்த க. சுப்பிரமணியம். உண்மையிலேயே உரிய திட்டமிடல்கள் இல்லாத அரைகுறை உதவிகளே இவர்களைக் கிட்டி வருகின்றன என்hது மறுக்கப்படமுடியாத ஒன்று.இத்தகைய நெருக்குவாரங்களின் மத்தியில் யாழ். மாவட்டத்தில் மகளிர் தினக் கொண்டாட்டங்களை நடாத்தவும் பெண்கள் நலன்களுக்கு போராடுவதாக கூறிக்கொள்ளும் சில அமைப்புக்கள் தவறவில்லை. மகளிர் தின கொண்டாட்டங்கள் தேவையில்லை என்பது என் வாதமல்ல. அவை உன்னதமான நோக்கங்களளைக் கொண்டதாக இருக்கவேண்டும். அண்மையில் இவ்வாறான மகளிர் தின கொண்டாட்டத்திற்கென உள்ளூர் மகளிர் அமைப்பொன்றால் செலவிடப்பட்ட விளம்பரச் செலவுகள் மட்டும் நூற்றுக்கணக்காக குடும்பங்களின் மாதாந்த உணவுச் செலவிற்கு போதுமானவை. தன்னைச் சுற்றி புறத்தே என்ன நடக்கிறது என்பது பற்றி அறிந்து கொள்ளவோ அல்லது அதில் ஆர்வம் காட்டவோ இத்தகைய அமைப்புக்கள் தயாரில்லை என்பதே உண்மை.யாழ். செயலக தகவல்களின் பிரகாரம் 19 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகள் முற்று முழுதாக குடும்பத் தலைவர்களது பாரங்களை சுமக்கின்றனர். ஒன்று முதல் ஐந்து வரையான குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் இவர்களை நம்பியே வாழ்கின்றன. ஆனால் இக் குடும்பத்தலைவிகளோ பெரும்பாலும் 1000 ரூபாய்க்கு குறைவான மாத வருமானத்தை மட்டுமே கொண்டுள்ளனர். அதுவும்கூட அரசின் பிச்சைக்காசாகவோ அல்லது நிவாரணக் கொடுப்பனவாகவோ இருக்கலாம். இவ்வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் இவர்களது குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்?
இத்தகைய குடும்பங்களில் பெருமளவில் தற்கொலை முயற்சிகள் அதிகரித்து வருவதாக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பெருமளவிலான சிறார்கள் அனாதை இல்லங்களில் கொண்டவந்து விடப்படுகின்றார்கள். மற்றுமொரு பகுதியினர் சிறுவர் கூலித் தொழிலாளரகள் ஆக்கப்படுகின்றனர். கணிசமான அளவினில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும் அரங்கேற வழிகோலப்படுகின்றது.உண்மையிலேயே குடாநாட்டில் விதவைகளின் எதிர்காலம் என்ன? ஒட்டுமொத்த சனத்தொகையில் 8 சதவீதம் உதவிகள் ஏதுமற்ற விதவைகள் வாழும் தேசம் என்னவாகும்? உண்மையில் விதவைகள் மற்றும் அவர்களை நம்பி வாழும் குடும்பங்களின் எதிர்காலம் தொடர்பில் அனைத்து தரப்புக்களும் இணைந்ததான திட்டமிடலொன்று தேவை. அதுவும் உடனடி மற்றும் நீண்ட கால அடிப்படையில் அத்திட்டமிடல்கள் அமையவேண்டும். பொருளாதார ரீதியான மேம்பாடு மற்றும் சமூக பாதகாப்பு அவற்றினுள் முக்கியமானது.எல்லாவற்றிலும் மேலாக யாழ்ப்பாண சமூககட்டமைப்பில் முக்கிய மாற்றங்கள் தேவை. குறிப்பாக விதவைகளுக்கு மறுவாழ்வளிக்கும் திருமணங்கள் தேவை. அதற்கு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் போதிய விழிப்புணர்வு தேவை. அதன் ஆரம்பம் கிராமமட்டங்களில் தொடங்கப்பட வேண்டும். அவ்வாறு அடித்தளத்தில் திட்டமிடப்படும் எழுச்சியே முழுமையான விழிப்புணர்வையும் வெற்றியையும் தேடித்தரும். ஏனெனில் நேற்று அயல் வீட்டில் நடந்தது. நாளை உன் வீட்டிலும் நடக்கலாம்.

No comments: